பி.டி.எஃப் எனும் திருட்டு

ஐயா வணக்கம்

நான் இலங்கையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர் உங்கள் நூட்களை வாசிக்க வேண்டும் என்ற அவாவில் உள்ளேன் ஆயினும் அவற்றைப் பெற்றிட என்னால் முடியாத சூழ்நிலை தங்களால்முடியுமாயின் இலவசமாக pdf வடிவில் தந்துவுமாறு கேட்டுக் கொள்கின்றேன் நன்றி

Fahmiya

அன்புள்ள ஃபாமியா அவர்களுக்கு,

உங்களுக்கு என் படைப்புகளை வாசிக்க ஆர்வமிருப்பது மகிழ்வளிக்கிறது. எவ்வகையிலானாலும் வாசிப்பது நன்று. வாசிப்பவர்கள் மிகமிக அரிதாகிக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே  நான் எந்த வாசிப்பையும் நிராகரிப்பதில்லை. வெறுமே பொழுதுபோக்குக்காக வாசிக்கும் வழக்கம்கூட நல்லது என்பதே என் எண்ணமாக உள்ளது.

என் நூல்கள் மின்னூலாக அமேஸான் இணையப்பக்கத்தில் பெறலாம். இணைப்பு. அவற்றை பணம் கொடுத்து வாங்கமுடியாத நிலையில் இருப்பீர்கள் என்றால் இந்தஇணையப்பக்கப்பக்கத்தில் பெரும்பாலான படைப்புகள் இலவசமாக வாசிக்கக் கிடைக்கின்றன. www.jeyamohan.in .

சிலருக்கு நூல்களை அச்சுவடிவில் வாசித்தால் மட்டுமே இயல்பான வாசிப்பு அமையும். அதற்கு நூலகங்களை நாடலாம். நிறைய நூலகங்களில் என் நூல்கள் உள்ளன.

பி.டி.எஃப் வடிவில் ஏராளமான இலவச நூல்கள் இன்று கிடைக்கின்றன. பழைய அழிந்துபட்ட பல நூல்களை இணைய நூலகம் அவ்வடிவில் அளிக்கிறது. நான் அவற்றை வாசித்துக்கொண்டே இருப்பவன்.  அவற்றை நெடுநேரம் ஆழ்ந்து வாசிக்க முடிவதில்லை. அவ்வடிவம் வாசிப்புக்கு உகந்தது அல்ல. ஆனால் தேவையென்றால் வாசிக்கலாம்

ஆனால் இணையத்தில் ஒரு கும்பல் அச்சுவடிவிலுள்ள, விற்பனையிலுள்ள நூல்களை பி.டி.எஃப் எடுத்து இலவசமாகச் சுழற்சிக்கு விடுகிறது. இது உண்மையில் ஒரு திருட்டு.  உரிமைப்பதிவு உள்ள படைப்புகளை அவற்றின் உரிமையாளர்களுக்கு தெரியாமல் எடுத்துக்கொள்வது. சட்டபூர்வமான தண்டனைக்குரிய குற்றம். அவற்றை வினியோகம் செய்வது மட்டுமல்ல வாசிப்பதும் குற்றமே. இந்தியா போன்ற நாடுகளில் இக்குற்றங்களை பிடிக்க அமைப்புகள் இல்லை. தண்டிக்க சட்டங்களும் போதுமான அளவு இல்லை. ஆகவே துணிந்து இதைச் செய்கிறார்கள். தண்டிக்கப்படுவதில்லை என்பதனால் இது குற்றமில்லாமல் ஆகிவிடுவதில்லை.

நூல்களை வெளியிடுவது  என்பது இன்று ஒரு போராட்டம். அச்சுவடிவ நூல்கள் மெல்லமெல்ல வழக்கொழிந்து கொண்டிருக்கின்றன.  ஆனால் இன்னமும் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு மின்வாசிப்பு வழக்கமாக ஆகவில்லை. ஆகவே நூல்கள் வெளிவந்தாகவேண்டும். தாளின் விலை, அச்சுக்கூலி, கட்டமைப்பில் உள்ள மனித உழைப்பு, வினியோகம் எல்லாமே செலவேறியவை. இருந்தும் நூல்கள் வெளிவருகின்றன என்றால் இங்கே பதிப்புப்பணி குடிசைத்தொழிலாக நிகழ்கிறது என்பதே காரணம்.

இன்று தமிழில் ஒரு நூலில் பெரும்பகுதி உழைப்பு இலவசம்தான். நூறுபக்கம் கொண்ட நோட்டுப்புத்தகத்தின் விலைதான் அதே அளவுகொண்ட நூலின் விலையும். அதாவது அதன் உள்ளடக்கம் முற்றிலும் இலவசம். ஆசிரியருக்கு பதிப்புரிமைத்தொகை அனேகமாக கிடையாது. அட்டை, பின்னட்டைக்குறிப்பு, பிழைநோக்குவது , பிரதி மேம்படுத்துவது எதற்கும் ஊதியம் கிடையாது. இப்படித்தான் நூல்கள் வருகின்றன. இங்கே மின்னூல்கள் பெரும்பாலும் ஒரு டீ குடிக்கும் அளவுக்குக் கூட விலை இல்லாதவை. இருந்தாலும் நூல்களை  திருடி வாசிப்போம் என்பது அநீதி. 

வாசிப்பென்பதே ஓர் அறம்சார் செயல்பாடு. அதை திருடி வாசிப்பது வாசிப்புக்கே எதிரான செயல். அப்படி வாசிப்பதற்கு வாசிக்காமலிருப்பதே நன்று. இங்கே பல ஆயிரம் ரூபாய் செலவில் சினிமா பார்ப்பார்கள், குடிப்பாகள், ஆடம்பரப்பொருட்களை வாங்குவார்கள். நீங்கள் ஆப்பிள் ஐபோன் வைத்திருந்தால் அதன் செலவு என்ன என யோசியுங்கள். ஒன்றரை லட்சம் ரூபாய். மூன்றாண்டு உழைக்கும். ஆண்டுக்கு ஐம்பதாயிரம். எனில் மாதம் நான்காயிரம் ரூபாய். ஆனால் நாம் நூல்களுக்குச் செலவிட தயங்கி இலவச பி.டி.எஃப் இறக்கிக்கொள்கிறோம்

கவனிக்கவும் பி.டி.எஃப் நூல்களை இலவசமாக அளிக்கும் தளங்கள் அளிப்பது  உண்மையான இலவசம் அல்ல. அவற்றை சுழற்சியில் விடுபவர்கள் அதற்கு ஓர் உழைப்பைச் செலுத்துகிறார்கள். ஒரு நூலை பக்கம் பக்கமாக பி.டி.எஃப் எடுப்பது எளிய வேலை அல்ல. அவற்றை வலையேற்றி, வலைமனையை பராமரிப்பதும் உழைப்பை கோருவது. ‘பொதுநலத்துக்காக’ எவரும் ஒரு திருட்டைச் செய்வதில்லை. அவர்கள் உங்களிடமும் திருடுகிறார்கள். உங்கள் ஐபி எண் சேகரிக்கப்படுகிறது. பாலியல்தளங்கள் செய்யும் அதே வேலை. அந்த தகவல் பலவாறாக பயன்படுத்தப்படுகிறது.

பிடிஎஃப் என்பது ஒரு திருட்டு. அதை நாம் ஊக்குவிக்கக் கூடாது.

ஜெ

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர்: அரவின் குமார்
அடுத்த கட்டுரைசியாட்டிலில் ஓர் உரை -’மூன்று அறிதல் முறைகள்’