சென்ற வாரம் ஒரு மதிய நேரம் எனக்கு ஒரு அழைப்பு வந்தது. எடுத்துப் பேசினால், மறுமுனையில் நான் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தில் இருந்து யோகேஸ்வரன் பேசுகிறேன் என்ற குரல். மனம் சிறிது கிளர்ச்சி அடைந்து, சொல்லுங்க சார், நீங்க தலைச்சங்காடு அவர்களின் பையன் தானே.. மிகுந்த சந்தோஷம் சார் என்று பேசிக்கொண்டு இருந்தோம். அவர் தூரன் விழாவில் என்னை கவனித்து பின் என் எண்ணை வாங்கி பேசியது என்பது எனக்கு பெருவியப்பு.
பேசிக் கொண்டு இருக்கும் போதே அவர், நீங்கள் என் அப்பாவிடமும் பேச வேண்டும் என்று அவரிடமும் தந்துவிட்டார். சட்டென உணர்ச்சிவசப்பட்டு ஒரு மாதிரி ஆகிவிட்டேன். மாபெரும் தவில் மேதை, ஒரு சாதாரண ஆளான என்னிடமும் அவர் வாஞ்சையாக பேசினது இந்த வாழ்வின் அரிய தருணம்.
நான் அவர்களிடம் நீங்கள் திருவெண்காடு சுப்பிரமணியபிள்ளையிடம் வாசித்து பற்றி கேட்டேன். ஆமா அவர் என் மாமா தான். மாபெரும் மேதை. திருவெண்காடு கோவிலில் ஆஸ்தான வித்வான் என்று சொன்னார். பின் அந்த கோவிலின் சிறப்பைப் பற்றியும் சொன்னார். அங்கே மூன்று தெப்பக்குளம் இருக்கும் மிகப் பெரிய கோவில். அங்கு சிவனின் அறுபத்து நான்கு மூர்த்தங்களில் முக்கிய மூர்த்தமான அகோரமூர்த்தியின் சிலை உள்ளது. மிகப் பெரிய மற்றும் மிக அழகான சிலை. அங்கே நாதஸ்வர வித்வான்கள் அந்த அகோர மூர்த்தி முன்பு மோகன ராகம் இசைப்பார்கள், அந்தக் கோவிலில் வேறு எங்குமே அந்த ராகத்தை இசைக்க மாட்டார்கள் என்று சொல்லி இப்படி ஒவ்வொரு கோவிலுக்கு தனித்துவம் இருக்கிறது என்று அவர் சொன்ன பின் ஆச்சரியமாக இருந்தது.
லண்டனில் உள்ள முருகன் கோவில் அனுபவம் பற்றி பேசிய போது, நாங்கள் அங்கே வாசித்து விட்டு வரிசையாக நின்றுகொண்டு இருந்தோம். ராணி எலிசபெத் ஒவ்வொரு ஆளாக பார்த்து பாராட்டிக்கொண்டு இருந்தார், நான் கடைசியாக இருந்தேன். என்னிடம் அவர் வரும் போது, நான் சும்மா அவரிடம் கை கொடுத்தேன். முதலில் அவர் எனக்கு கையே கொடுக்கவில்லை. அவர் என் கையை பார்த்து, இது என்ன ஏதோ கையில் மாட்டியிருக்கிறாறே என்று அருகில் உள்ளவரிடம் கேட்டார், அவர் இது தவிலின் சத்தத்தை அதிகப்படுத்தி தெளிவாக கேட்பதற்காக, வாசிக்கும் போது கையில் அணிவது என்று மொழிபெயர்த்து ராணியிடம் சொன்னார். அதன் பின் எனக்கு கை கொடுத்தார். நாங்கள் கிளம்பி விமானம் ஏறும் போது அங்கே எங்களது ஏற்பாட்டாளர் வேகமாக வந்து என் கையில் ஒரு புகைப்படத்தை தந்தார். வாங்கிப் பார்த்தால் ராணி எனக்கு கை கொடுத்த சமயத்தில் எடுத்த புகைப்படம். இப்படி யாருக்கும் பிரிட்டிஷ் அரச பரம்பரையில் கை எல்லாம் தர மாட்டார்கள், ஆனால் உங்களுக்கு தந்திருக்கிறார்கள். இந்தப் புகைப்படத்தை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார், என்று சொல்லி முடிக்கும் போது மனம் வேறு ஒரு நிலையில் இருந்தன…
தூரன் நிகழ்வில் த்வஜாவந்தி ராகத்தை வாசிக்கும் போது எனக்கு இருக்கையில் அமர முடியவில்லை. அந்த ராகம் ஒரு கெஞ்சல் ரசத்தை கோரும் ராகம். உதாரணமாக விஸ்வரூபம் படத்தில் உன்னை காணாது நான் இங்கு நான் இல்லையே என்ற பாடல் இந்த ராகத்தில் அமைந்தது தான். தூரனும் “எங்கு நான் செல்வேனையா” என்ற பாடலையும் இதே ராகத்தில் தான் அமைத்திருக்கிறார். அந்த பாடல் வரிகள் முழுவதும் கெஞ்சல் தான். அதை அவரிடம் சொல்லி மகிழ்ந்தேன்.
திஜா ஒரு கதையில் வெளி நாட்டில் இருந்து வந்த ஒரு இசை ரசிகனுக்கு தமிழக நாதஸ்வரம் கேட்க வேண்டும் என்று ஆசையில் அவரை ஒரு நாதஸ்வர வித்வானிடம் கூட்டிவருவார் ஒருவர். அந்த வித்வான் இவருக்காக சாந்தமு லேகா சௌக்கியமு லேது என்ற புகழ்பெற்ற சாமா ராகத்தில் அமைந்த தியாகராஜரின் கீர்த்தனையை வாசிப்பார். கேட்பவர் இரு கைகளையும் கூப்பி கேட்டுக்கொண்டு இருப்பார். வித்வான் அந்த பாடலை முடித்தவுடன் மீண்டும் இதை வாசியுங்கள் என்று கேட்பார். மீண்டும் முடித்தவுடன் இதை திரும்பவும் வாசியுங்கள் என்று கேட்பார், வித்வான் சோர்ந்து போய் வாசிப்பதை நிறுத்திவிட்டு அவரைப் பார்த்து ஏன் இருகைகளையும் கூப்பி மீண்டும் மீண்டும் இதைக் கேட்கிறீர்கள் என்று கேட்பார். அதற்கு அந்த மேலை நாட்டு ரசிகர் இந்த பாடல் ஒரு வகை அமைதி உணர்வைத் தருகிறது. அந்த சாந்தத்தை நான் இருகரம் கொண்டு ஏந்தி வாங்குகிறேன் என்பார்.
வித்வான் பிரம்மிப்பு அடைந்துவிடுவார். அவரைப் பார்த்து இந்த பாடலின் பொருளும் அதுதான், உலகில் சாந்தம் இல்லை என்றால் சௌக்கியம் இல்லை என்று தியாகப்பிரம்மம் சொல்வதாக அந்தக் கதை முடியும்.
தூரன் இசை நிகழ்ச்சியில் நானும் அப்படித்தான் மனதளவில் இருந்தேன். நாதஸ்வரமும் தவிலும் வாசிக்க வாசிக்க மனம் மேலும் மேலும் உணர்சிவசப்பட்டுக்கொண்டே இருந்தது. அங்கே கேட்ட அத்தனை பேரும் இருகரம் கூப்பி வாங்கிக் கொண்டு தான் இருந்திருப்பார்கள்.
மேலே இருந்து தூரனின் ஆன்மாவும் மகிழ்ந்து இந்த இசையை இருகரம் கூப்பி வாங்காமல் இருந்திருப்பாரா என்ன??? நிச்சயம் வாங்கியிருப்பார்….
உ. முத்துமாணிக்கம்.
கீர்த்தனைகள் இணைப்பு
1) : கீர்த்தனை : கணநாதனே குணபோதனே.ராகம் : சாரங்க (https://www.youtube.
2) : கீர்த்தனை : தாயே திரி்புர சுந்தரி.ராகம் : சுத்தசாவேரி (https://www.
3) : கீர்த்தனை : அன்பே சிவம், அருளே தெய்வம். ராகம் : நளினகாந்தி (https://www.
4) : கீர்த்தனை : முருகா முருகா.ராகம் :சாவேரி (https://www.youtube.
5) : கீர்த்தனை : ஹரிஹர சுதனே ஐயப்பா.ராகம் : ஆபோகி (https://www.youtube.
6): கீர்த்தனை : எங்கே தேடுகின்றாய். ராகம் : ஹரிகாம்போதி
7) : கீர்த்தனை : எங்கு நான் செல்வேனய்யா.ராகம் : திவ்ஜாவந்தி (https://www.youtube.com/
8) : முதன்மை ராக ஆலாபனை : ராகம் ஆபேரி
9) : கீர்த்தனை : முரளிதர கோபாலா. ராகம் : மாண்ட் (https://www.youtube.
10): கீர்த்தனை : கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய் : ராகம் : பிருந்தாவன சாரங்க (https://www.youtube.
11) : காவடி சிந்து: அழகு தெய்வமாக வந்து. (https://www.youtube.
12) :மங்களம்(முடிவு) : சத்தியமே வெல்லும்,தர்மமே ஓங்கிடும். (https://www.youtube.com/