பண்ருட்டி நூர்முகமது ஷா அவுலியா தர்க்கா
இனிய ஜெயம்
அஜ்மீர் யாத்திரை முடிந்து ஊர் மீண்டு நீண்ட நாள் ஆகியும் அதன் அதிர்வில் இருந்து நெடுநாள் நான் வெளியேறவில்லை. அங்கே என்னை உணர்வு ரீதியாக கட்டிப்போட்ட கனவு அம்சங்கள் இரண்டு. முதலாவது அஜ்மீர் தர்கா சுற்றிலும் நிகழும் இரவு நேர திருவிழா சூழல். நாகூரின் தர்காவை சுற்றி உள்ள அதன் இரவு சூழல் அஜ்மீர் சூழல் போலவே ஒரு பத்து சதவீதம் இருக்கும். அங்கே சென்று நீண்ட வருடங்கள் ஆகிவிட்டது. மேலும் அஜ்மீரில் இருந்து நாகூருக்கும், நாகூரில் இருந்து அஜ்மீருக்கும் யாத்திரை செல்வது ஒரு மரபு. சரிதான் அஜ்மீர் போலவே நாகூர் சென்று ஒரு இரவு தங்குவோம் என முடிவு செய்து, ஓரிரவு நாகூர் சென்று இறங்கினேன். இரவு முழுக்க உடலால் நாகூரிலும் கற்பனையால் அஜ்மீரிலும் சுற்றி அலைந்தேன். காலையில் தர்காவுக்குள் போனதுதான் பிழையாகிப் போனது.
ஒடிசாவில் அலைந்து திரிகையில் தற்செயலாக ஒரு கோயிலுக்குள் நுழைந்தோம். உள்ளே நுழைய காசு. காசு கட்டி உள்ளே நுழைந்தால், இரண்டு புறமும் கட்டப்பட்ட வேலிக்குள் நடந்து, அந்த வேலிக்குள் இருந்தபடியே ஒவ்வொரு சன்னதியாக பார்த்தபடி கடந்து போக வேண்டும். ஒவ்வொரு சன்னதிக்குள்ளும் இருந்து பூஜாரி டினோசர் கூட்டம் நம் மீது விழும். எவர் வாயிலும் கடி படாமல் விரைந்து exit கண்டு பிடித்து வெளியேற வேண்டும். இதுவே அந்த புதிர் கோட்டை விளையாட்டு. அஜிதன் ஒரே தம்மில் வளைந்து நெளிந்து எகிறி குதித்து எவரிடமும் சிக்காமல் ஓடி வெளியேறிவிட்டார். நான் என் முன்பு நகர்ந்த ஏதோ ஒரு நாரீமணியை சில வினாடி பராக்கு பார்த்த வகையில் புரோகிதர் படையால் வளைக்கப்பட்டேன். என் உடை கடந்து, உடல் கடந்து, உள்ளம் கடந்தும் கை விட்டு ஆட்டி, இருக்கும் அனைத்தையும் உருவி எடுத்து விட்டே என்னை வெளியே அனுப்பினார்கள். அதே விபரீதத்தில் நாகூர் தர்காவிலும் சிக்கிக்கொண்டேன். சன்னதிக்குள் வைத்து எங்கும் தப்பி ஓட வகை இன்றி ஐந்து பேர் மடக்கி விட்டனர். ஒருவர் என் கைகளை அசையாமல் பிடித்து கொள்ள, எவரோ என் வாயில் புனித நீரை புகட்டிவிட்டு 100 ரூபாய் கேட்டார். ஒருவர் ஞானிக்கு போர்த்திய சிறிய சத்தார் துண்டை கையில் திணித்து 500 ரூபாய் கேட்டார். ஒருவர் என் தலை தொட்டு ஓதி (இப்போதும் என்னால் நம்ப இயலவில்லை) 5000 ரூபாய் கேட்டார். என்னை போன்ற பக்கிரி வசம் 5000 ரூபாய் இருக்கும் என்று ஒருவர் நம்புகிரார் என்றால் அவரை என்ன சொல்வது? இறுதியில் கடுமையான பேரத்துக்கு பிறகு ஒட்டு மொத்தமாக 500 ரூபாய்க்கு என் அடிமைத் தளையில் இருந்து நான் மீண்டேன். இப்படியாக அந்த முதலாவது கனவு குரூர யதார்த்தத்தில் முடிய, இரண்டாவது கனவுக்கான நாளும் வந்தது.
இரண்டாவது கனவு, அஜ்மீர் தினம் முழுக்க கேட்ட கவ்வாலி இசை. கவ்வாலி இசை என்பது இந்தியாவில் சிஷ்டி காதிரி போன்ற தர்கா முறை வழியே 11 ஆம் நூற்றாண்டில் துவங்கி 13 ஆம் நூற்றாண்டில் நிலைபெற்ற ஒன்று. ஞானி நிஜாமுதீன் அவுலியா, அமிர் குஸ்ரு, குவாஜா மொய்னுதீன் சிஸ்டி துவங்கி, புகழ்பெற்ற படே குலாம் அலி சாகேப், நஸ்ரத் அலிகான் சாகேப் வரை, பல்வேறு கரானாக்கள் வழியே வளர்ந்து அந்தந்த பிராந்திய சாரம் வாங்கி நிலைபெற்ற இந்திய இசை மரபு அது. முகமதிய சூஃபி மெய்ஞ்ஞானத்தையும் கவ்வாலி இசை வழியையும் பிரிக்கவே முடியாது. இன்றைய உலகை ஈர்க்கும் வண்ணம் ஏ ஆர் ரஹ்மான் பல சூஃபி பாடல்களை இசைத்திருக்கிரார். அஜ்மீர் தினங்கள் முழுக்க அமனத் அலிகான் சாகேப் துவங்கி பல்வேறு இசை ஆளுமைகளின் கதையை, பல்வேறு கவ்வாலி பாடல்களை அஜிதன் எனக்கு அறிமுகம் செய்து கொண்டே இருந்தார். நுஸ்ரத் அலி சாகேப் பாடிய உள்ளத்தை உடைக்கும் தீவிர வரிகளை கொண்ட உணர்ச்சிகரமான நித்து கெய்ரு மங்கா… என துவங்கும் உருது காதல் பாடலை ( இணையத்தில் அதன் ஆங்கில மொழியாக்கம் கிடைக்கிறது) எத்தனை முறை கேட்டிருப்பேன் என்றே தெரியவில்லை.
முதன்மையாக அல்லாவும், மௌலா அலி அவர்களும்தான் பாடு பொருள். அடுத்ததாக மனம் உருக்கும் தெய்வீக காதல். பாடகருக்கு பக்க வாத்தியமாக ஆர்மோனியம், டோலக், தபலா, கூடுதலாக சில சமயஙகளில் சாரங்கி, எப்போதும் துணையாக தாள கதி கொண்ட கைதட்டல். குவா எனில் உச்சாடனம் என்றும் ஒரு பொருள் உண்டாம். கிட்டத்தட்ட பாடல்கள் பல அவ்விதம்தான். சொல்லி சொல்லி உருவேற்றி உருவேற்றி மெல்ல மெல்ல ஆரோகணம் கொண்டு களி வெறி கூடி இதயம் உடைய செய்யும் வகையில் பாடகர் கைகளை உயர்த்தி கடவுளை நோக்கியோ பார்வையாளரை நோக்கியோ பாடுவார். அந்த நிலையில் யூ ட்யூப் காணொளிகள் வழியே நுஸ்ரத் அலி சாகேப் அவர்களை அவரது உடல் மொழியை வேடிக்கை பார்ப்பதே எனக்கு தனித்த ஒரு பரவச அனுபவமாக இருந்தது.
பண்ருட்டி நூர் முகம்மது ஷா அவர்கள் தர்காவில் ருடம் ஒரு முறை மொகரம் 24 ஆம் தேதி அவர் அடக்க நாள் அன்று அவருக்கு வணக்கம் செய்யும் திருவிழாவான உரூஸ் நிகழும். கடலூர் மாவட்டம் முழுக்க இருந்தும், சாதி மத பேதம் அற்று எல்லா மக்களும் ஒரு 5லட்சம் பேர் வரை அந்த 6 நாள் விழாவில் கலந்து கொள்வார்கள். அதில் ஒரு நாள் வலிமார் புகழ் பாடும் நாள் உண்டு. அதில் சில கவ்வாலி பாடல்கள் இடம்பெறும். முன்பு அதை தவற விட்டுவிட்ட கடந்த வருடங்கள் போல இல்லாத வகையில் இம்முறை அந்த சில கவ்வாலி பாடல்களை கேட்டே தீர வேண்டும் என உன்மத்தம் எழுந்து, நண்பர் இதயதுல்லா வசம், அந்த நிகழ்வு வரும் நாளை நினைவுபடுத்தச் சொல்லி இருந்தேன். சுதந்திர தினத்துக்கு மறுநாள் அந்த நாள் வருகிறது என்று இதயா அழைத்து சொன்னார். புதன் மாலை 6 மணிக்கு இதயா வேலை முடிந்து வர, டூ வீலரில் இருவரும் இரவு 7 மணிக்கு பண்ருட்டி சென்று இறங்கினோம்.
உரூஸ் எனும் அரபி சொல்லுக்கு பல்வேறு பொருள் இருப்பினும் நிலைபெற்றுவிட்ட பொருள் என்பது கொடை. இந்த விழா அடிப்படையில் 5 அம்சங்கள் கொண்டது. முதலாவது சாதி மத பேதம் இன்றி மக்கள் எல்லோரும் விழாவின் பொருட்டு கூட, நிகழும் கொடியேற்றம்.
பத்தர் யுத்தம் முடித்து நபிப் பெருமானார் வெற்றிக் கொடியை ஏந்தியபடி, “பல்வேறு உயிர்த் தியாகம் வழியே நாம் வென்ற இந்தப் போர், ஒரு மிக சிறிய போர் மட்டுமே. ஒவ்வொரு மனிதன் உள்ளும் இருக்கும் தீய இச்சை.அதுவே எப்போதும் நாம் வெல்ல வேண்டி போராட வேண்டிய பெரிய போர்” என்று கூறுகிறார். தர்காவில் அடங்கிய ஞானி அந்த பெரிய போரில் ஈடுபட்டவர் என்பதன் பொருளே அந்த கொடியேற்றம் என்று தர்க்கா வழி போற்றும் மார்க அறிஞர்கள் கூறுகிறார்கள்.
இரண்டாவது, தலத்தில் அடங்கிய ஞானிக்கு ஸியாரத் எனும் வணக்கம் செய்தல். இதுதான் அடிப்படை வாத நோக்கில் மிக கண்டிக்கப்படும் அம்சங்களில் முதன்மையானது. ஆனால்தர்கா வழி வந்த மார்க்க அறிஞர்களில்மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை. போன்ற பெரியோர்கள்(நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: கப்ருகளை ஸியாரத் செய்யுங்கள். ஏனெனில் நிச்சயமாக அது இவ்வுலகத்தில் பற்றற்ற நிலையை உண்டாக்கி மறுவுலக வாழ்வைப் பற்றிய நினைவையும் ஏற்படுத்த வல்லது.
நூல் : இப்னு மாஜா-1569, மிஷ்காத் – 154 போன்ற) நூல்கள் வரிசை வழியே பெருமானார் நபிகள் நாயகம் அவர்களின் பற்பல சொற்களை எடுத்துக்காட்டி அடிப்படை வாதத்தின் எதிர்ப்பை மறுக்கிறார்கள்.
ம்muuன்றாவது இயற்கை எய்தியவர்களுக்காக திருக் குரான் ஓதுதல்.
நான்காவது. விழாவில் கூடிய மக்கள் மத்தியில், பாடகர்கள் வழியே அல்லா, நபிகள் நாயகம், மெளலா அலி, பிற வலிமார்கள், குறிப்பிட்ட தர்க்காவில் அடங்கிய ஞானியின் புகழை கதை போல பாடி பரப்புவது.
ஐந்தாவது. கூடிய ஊர் மக்கள் எல்லோருக்குமான அன்னதானம்.
அடிப்படைவாதிகள் மறுப்பு கடந்து பண்ருட்டி நூர் முகம்மது ஷா அவர்களின் உரூஸ் விழாவுக்கான பக்தர்கள் எண்ணிக்கை பெருகிக்கொண்டே போகிறது. கடலூர் மாவட்டத்தின் எளிய மக்களின் பெரு விழா என்பது எப்போதும் வடலூர் வள்ளலார் தை பூசம் மற்றும் இந்த உரூஸ் விழாதான்.
தர்கா முன் சாலைக்கு பின்னால் பெரிய மைதானமும், உருது அரபி பள்ளி இயங்கும் சிறிய தெருவும் உண்டு. கூட்டம் கடந்து பின் பக்கமாக சென்று உருது பள்ளி வாசலில் வாகனத்தை நிறுத்தினோம். பள்ளி சுவற்றில் ஏதோ ஒரு அரசியல் ஜமாத் கட்சி ” தார்கா வழிபாடு என்று போஸ்டர் ஒட்டி அதை சிவப்பு பெருக்கல் குறி போட்டு அடித்து, தார்கா வழிகேடு என்று எழுதிய போஸ்டரை ஒட்டி இருந்தது. பின்பக்க சாலை வழியே மைதானத்துக்குள் நுழைந்தோம். மொத்த மைதானமும் சந்தோஷம் கொண்ட மக்கள் திரள் வழியே நிரம்பி வழிந்தது.
மைதான இறுதி வரிசை முழுக்க வித விதமான ராட்டினங்கள். ஒரு புறம் மரண கிணறு, நாக கன்னி, (போஸ்டரில் அவ்வளவு பரிதாபமாக இருந்தது பேய்) பேய் மாளிகை அரங்குகள், மற்றொரு புறம் பலூன் துப்பாக்கி சுடுதல், டம்ளர் பிரமிடினை பந்து கொண்டு சரித்தல், ரப்பர் வளையம் எறிந்து, குறிப்பிட்ட எண்ணில் பந்துகளை போட்டு பொருட்களை வெல்லுதல் போன்ற விளையாட்டுகளில் பெண்கள் கீச்சு குரல் சந்தோஷம் பொங்க ஈடுபட்டிருந்தார்கள். பரங்கிப்பேட்டை முதல் மஸ்கோத் வரை அல்வாக்களின் அத்தனை தினுசும் கிடைத்தன. (திருச்சி சாம்பியன் ஜம் ஜம் காமா புஷ்டி அல்வா) சர்பத், பிரம்மாண்ட அப்பள கடைகள், துணி கடைகள், சிறிய சிறிய வீட்டு உபயோக பொருட்கள் கடைகள், இஸ்லாமிய புத்தக கடைகள், எங்கெங்கும் வண்ணம் துள்ளும் ஒளி வெள்ளம் ததும்ப செறிந்து ததும்பிய மக்கள் வெள்ளத்தை இசை முரசு ஹனீபாவின் தெய்வீக பாடல்கள் போர்த்தி அணைத்திருந்தது. ஐஸ்கிரீம் சுவைத்தபடி சுற்றி வந்தோம். பண்ருட்டி மையத்தில் பல கடைகள் நிலங்கள் தர்கா நிர்வாகத்துக்கு சொந்தமானது. இந்து கோயில் நிலத்தில் உள்ள கடைகளில் நிர்வாகம் வாடகை கேட்டால் நிர்வாகம் மீது கேஸ் போட்டு விட்டு அந்த திருட்டில் வாழும் ஆசாமிகள் இங்கே இல்லை. சீராக இயங்கும் பொருளாதாரம். குறைவான ஊழல். மார்க்க சகோதரர்களுக்கு கல்வி முதல் மருத்துவம் வரை குறிப்பிட்ட எல்லை வரை தயக்கமற்ற உதவி செய்வது என நிர்வாக ரீதியாக சிறப்பாக பல வருடங்களாக இயங்கி வரும் தர்கா இது.ஐஸ்கிரீம் தீர சுற்றி முடித்து,கூட்டம் கடந்து தார்கா வளாகம் உள்ளே நுழைகயில், காட்சி மறைக்கும் வாயில் தாண்டி செல்கயில் கண் முன் ஒரு மாயம் போல எழுந்தது தர்கா.
என்னையா இது என்று வியந்து கேட்டேன். ஆமாசார் புது கோயில் வளாகம் வெறும் முன்னூறு நாளில் கட்டி முடிசிருக்காங்க என்று சொன்னார் இதயா. 450 வருடம் மேலான கோயில். இறுதி வடிவத்தை 1942 வருடம் வந்து அடைது போன வருடம் வரை அவ்வாறே நீடித்த அவை மறைந்து, எண்கோண வடிவில் ஐந்து படிகள் கொண்ட தளம் மீது, எண்கோண வடிவ கட்டிடம். நெடிதுயர்ந்த நான்கு வாயில்கள். நான்கு வாயில்கள் மேலும் (கட்டிட மையத்தில் பெரிய கும்மட்டம் அற்ற) முக்கால் பந்து வடிவில் அழகிய கும்மட்டங்கள். அதன் இரண்டு புறமும் அழகிய மினாராக்கள், எந்த திசையில் நின்று நோக்கினாலும் ஒரே போல தோற்றம் என பாரசீக கட்டிட அழகில் வண்ண ஒளி உடை அணிந்த பால் வண்ண தர்கா, சுற்றிலும் நிறைந்த பிரார்த்தனை மாவிளக்கு (ஏந்திய பெண்கள்) ஒளிக்குளதில் மிதந்து கொண்டிருந்தது.
மக்கள் இடையே நீந்தி, தலை வாயில் பூமாலை தோரணம் வழியே நுழைந்து வளாகத்தின் மையத்தில் வெண்மலர்கள் போர்த்தி துயில் கொண்டிருந்த நூர் முகம்மது ஷா அவர்களை தரிசித்தேன். என் பொருட்டும் நண்பர்கள் நல்வாழ்வின் பொருட்டும் வேண்டிக் கொண்டேன். கோயிலை சுற்றி வந்தோம். நிலவொளி சூடிய சாம்பிராணி மணம் கமழும் அழகிய வளாகம். எங்கும் மகிழ்ச்சி கொண்ட எளிய முகங்கள். எவரோ எல்லோருக்கும் இனிப்புகள் வழங்கிக்கொண்டிருந்தார். கோயில் சுற்றி முடித்து வெளியேறி இரவு உணவு முடித்து, கச்சேரி மேடை தேடி முன் வரிசையில் இடம் பிடித்து அமர்ந்தோம். மேடைக்கு அருகே வலிமார் புகழ் பாடுவோம், தர்கா வழிபாட்டினை பாதுகாப்போம் எனும் பதாகை நின்றிருந்தது.
பத்து மணிக்கு கச்சேரி. 9.45 க்கு வாத்திய கலைஞர்கள் வந்து அமர, ஒரு எலக்ட்ரானிக் கீ போர்டு, எலக்ட்ரானிக் ட்ரம்ஸ், தவில், டோலக், ஆர்மோனியம் அனைத்தயும் அமைப்பாளர் ஒலி அளவு சரிபார்த்து அமைக்க, 10மணிக்கு இரண்டு பாடகர்களில் முதல் பாடகர் மும்பையை சேர்ந்த திரு மொய்ன் நாஜான் கருப்பு உடையில் பொன் நட்சத்திரங்கள் மின்ன, சிகப்பு தொப்பியில் வெள்ளி நட்சத்திரங்கள் மின்ன மேடையேறினார். அவர் கால் மணி நேர நீளம் என எடுத்து ஒரு மணி நேரம் பாடிய நான்கு பாடல்களுமே உருது கவ்வாலிதான். கைதட்டும் ஒசைக்காக ஜாப்லா கட்டைகளை பயன்படுத்தினார். முதலில் அல்லாவுக்கான பாடல். அடுத்து மொளலா அலி அவர்களுக்கான பாடல், மூன்றாவது நூர் முகமது ஷா அவர்களுக்கான பாடல், நான்காவது ஹிந்தியில் ஒரு மார்க்க சிற்றுரை, ஐந்தாவதாக புகழ் பெற்ற மஸ்த் கலந்தர் பாடல். ஒலி அமைப்பு கூட்டத்தை நோக்கிய அதிரடி ஒலி வெள்ளம் என அமைந்திருந்தாலும் முதல் பாடல் முடிவிலேயே நான் அஜ்மீர் மனநிலைக்கு சென்று விட்டேன். நாமெல்லாம் எளியவர்கள் நமது பண்ருட்டி நூர் முகம்மது ஷாதான் நமது சுல்தான் என்று பாடகர் பாடும்போது கூட்டம் புரிந்து கொண்டு கை தட்டியது. ஒரு மணி நேரம் கவ்வாலி வெள்ளத்தில் நீந்திவிட்டு அடுத்த பாடகர் மேடையேறும் இடைவெளிக்குள் சென்று ஒரு ஐஸ்கிரீம் உண்டுவிட்டு மீண்டும் இருக்கைக்கு வந்தோம். இம்முறை மேடையேறியது கர்நாடகா நிலத்தை சேர்ந்த ஒரு அழகி. வயது 30க்குள் இருக்கும் பெயர் திரு ராபியா சிஸ்டி.
வில்வ பச்சை உடை அவர் மானிற உடலுக்கு பளிச் என அமைய, கழுத்தில் வைரம் போலும் ஒளிகள் சிதறும் அட்டிகை, உடை முழுக்க நட்சத்திரத் துளிகள் மின்னும் அலங்காரம். மை இட்ட விழிகள். செஞ்சாந்து உதடுகள். வெள்ளி வளை அடுக்கு அணிந்த கரங்கள். வலது கை மோதிர விரலில் வில்வ பச்சையில் மின்னும் பெரிய கல் கொண்ட மோதிரம், இடது கையில் மலர்ந்த மலர் போலும் ஒரு பெரிய மோதிரம். வலது கால் வஜ்ராசனதில், இடது கால் குத்த வைத்து, அதில் இடது முழங்கையை ஊன்றி ஒயிலாக அவர் அமர்ந்த முதல் கணமே காதலில் விழுந்து விட்டேன். புன்னகையோடு சுற்றிலும் உள்ள வாத்தியதாரர்களுக்கு ஏதோ குறிப்புகள் கொடுத்தார். அந்த புன்னகயைத்தான் அவர்கள் இசையாக மொழிபெயர்த்தார்கள் போலும். முதல் பாடலாக கசல் போலும் இசையில் அல்லாவை புகழ்ந்தார். மிளகு காரம் ஒரு துளி, தேன் இனிப்பு ஒரு துளி சரி விகிதத்தில் கலந்த குரல். அடுத்த மூன்று மணி நேரத்துக்கு என்னை இட கால பிரக்ஞையை மறக்கடிக்க செய்த குரல்.
ஹிந்தியில் கதையும் உருதுவில் பாடல்களும் அமைந்த கதா காலட்சேபம் வழியே முதலில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய வணக்க நெறிகளை வாழும் முறைகளை பேசினார். இடையிடையே அராபிய முறை தந்தி முரசு இசை பின்னணி கொண்ட சில பாடல்களை பாடினார். அடுத்து இந்தியாவின் நாற்திசையும் அமைந்த சூஃபி ஞானியர் வரிசையில் இருவர் கதைகளை சொன்னார். அவர்கள் புகழை கவ்வாலி பாடல்கள் வழியே உற்சாகம் ததும்பும் உடல் மொழியோடு புன்னகைக்கும் முகத்தோடு கைகளை வானம் நோக்கி எங்களை நோக்கி (குறிப்பாக என்னை நோக்கி) வீசி வீசிப் பாடினார். மூன்றாவதாக பண்ருட்டி நூர் முகம்மது ஷா அவர்கள் வாழ்வுக் கதையை சொன்னார். அஜ்மீர் ராஜா பிருதிவிராஜ் சவுகான்கும் குவாஜா அவர்களுக்கும் இருந்த தள்ளு முள்ளு போலவே, சத்ரபதி சிவாஜிக்கும் நூர் முகம்மது ஷா அவர்களுக்கும் தள்ளு முள்ளு இருந்ததை முதன் முறையாக அறிந்தேன். நூர் முகம்மது ஷா அவர்கள் குறித்த பாடல் எழும்போது அஜ்மீரில் கண்டதை போலவே அவர் மீது பண மழை பொழிந்து. ஒரு அம்மாள் என் ராபியா தங்கத்துக்கு திருஷ்டி சுற்றி விட்டு போனார் அப்போது எழுந்த ராபியாவின் புன்னகை அடா அடா…
இறுதியாக தனது சிஸ்டி மரபின் காவி துண்டு எடுத்து போர்த்திக்கொண்டு தனது அரசன் குவாஜா மொய்தீன் வாழ்வை கதையாக சொன்னார். கதையை முடித்து உச்ச ஆரோகணத்தில் கவ்வாலியில் அஜ்மீரை ஆளும் அரசன் குவாஜா மொய்தீன் சிஸ்டிஅவர்களின் புகழை பாடினார். கை தட்டு. தாள இசைக்கு சலங்கை பொருத்திய வளையம் ஒன்றை பயன்படுத்தினார். இறுதியிலும் இறுதியாக கண் திறந்திருக்கும் போதே கனவில் ஏறி நான் அஜ்மீருக்கே சென்று விழுந்தேன். பாடலின் இறுதியாக
கரீப் நவாஸே
கரீப் நவாஸே
அஜ்ஜு மீரி
கரீப் நவாஸே
என்பதை உச்சாடனம் போல பாம்பின் மகுடி ஒலி போல திரும்ப திரும்ப சொல்லி மெல்ல மெல்ல அதை அவரோகணத்தில் கொண்டு வந்து மெளனதில் நிறைவு செய்தார்.
அனைவரையும் வணங்கிவிட்டு இங்கே அவரால் பற்றி எறிந்தபடி அமர்ந்திருக்கும் ஒருவன் குறித்த துளி பிரக்ஞையும் இன்றி மேடை விட்டு இறங்கி, நடந்து.. நடந்து… நடந்து… போயே போய்விட்டார்.
நான்கு மணி நேரம் என்னை சுற்றிலும் என்ன நிகழ்கிறது என்ற பிரக்ஞை இன்றி அவரயே பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறேன். எல்லாம் நிறைந்து, இதயா அங்கிருந்தே நடுவீரபட்டு கிளம்ப, நான் வீடு நோக்கி பேருந்து ஏறும்போது இதயா அந்த ராபியாவுக்கு கல்யாணம் ஆகிருக்குமா என்று கேட்டேன். என் உள்ளம் குடி கொண்ட நண்பன், ச்சே ச்சே அப்டில்லாம் இருக்காது சார் என்று என் மனதுக்கு உகந்த பதிலை சொன்னார்.
தேன் துளிக்குள் சிக்கிய எறும்பாக உயிர் தாள இயலா மதுரத்தில் மூழ்கியபடி, துளிக் காதலின் தாள இயலா எடையில் பெருமூச்சு விட்டபடி அதிகாலை 4 மணிக்கு கடலூர் வந்து இறங்கினேன்.
அல் கிஸா – அஜிதன் (நாவல்)
அல்-கிஸா நாவல் மின்னூலாக கிடைக்கும்.
பின்னிணைப்பு:
அறிமுக வாசகர்கள் அஜிதன் அவர்கள் எழுதிய அல் கிசா குறுநாவலின் உணர்வு நிலை சார்ந்து மேலதிகமாக பயணிக்க, கவ்வாலி இசையை அதன் சூழலை அறிமுகம் செய்து கொள்ள நுஸ்ரத் அலி சாகேப் பாடிய மூன்று பாடல்களின் காணொளியை இணைத்திருக்கிறேன். அல்லா குறித்த, மெளலா அலி குறித்த பாடல்களில் அதிலேயே ஆங்கில துணை உரை உண்டு. நித்து ஹெய்ரு மங்கா என்ற உணர்வு தீவிரம் கொண்ட பாடலுக்கு இணையத்தில் ஆங்கில மொழியாக்கம் கிடைக்கிறது.