எழுதுதல் என்பது-கடிதம்

முதன் முதலாய் “ஜெ”வினுடைய புத்தகத்தை வாசித்தேன். அவருடைய ஒரு சொல்லையும் நான் கேட்டதில்லை, ஒரு வரியும் படித்ததில்லை. காரணம் நோயை குணப்படுத்தும் ஒரு கசப்பு மாத்திரையை போல் அவருடைய எழுத்து இருக்கிறதே என்று முன்பு எனக்கு தோன்றியது. இந்த நூலில் அந்த அபிப்பிராயத்தை நான் மாற்றிக் கொண்டுள்ளேன்.

நாவல், சிறுகதை, கட்டுரை எழுதும் கலை பற்றி ஜெயமோகன் ஆற்றிய உரைகள், எழுதிய கடிதங்களின் தொகுப்பு இது. சிறுகதை சமையல் குறிப்புகள் வாசிக்கும் போது நேரம் போவதே தெரியவில்லை, சுவரசியம் ததும்ப சிறப்பான வழிகாட்டுதலாக இருந்தது. கதை எங்கு தொடங்க வேண்டும், அதில் எது முக்கியம், என்னவெல்லாம் அதில் செய்யக்கூடாது, நல்ல கதை எப்போது அமையும் போன்ற என் மனம் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதில்களை தெரிந்து கொண்டேன்.

வாழ்வின் முதல் காதலை முதல் காதலியிடம் சொல்லும் போது உண்டாகிற பேருணர்வை “ஆனந்தம்’ என்று சொல்வார்களே அப்படிப்பட்ட நிலையில் தான் இந்த புத்தகத்தின் கடைசி பக்கத்தை முடிக்கும் வரை எனக்கு இருந்தது.ஜெயமோகன் ஒரு நல்ல வழிகாட்டி, ஒருவேளை அவரை சந்திதித்து பேசும் போது அவர் சொன்னதை போல தர்கத்திற்கு அப்பாற்பட்டு ஜாலியாக பேசலாம் போல, ஆனால் எழுத்தில் அவரை மெல்ல மெல்ல அணுகி அதைவிட மெல்ல மெல்ல கடக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

எழுதும் கலை புத்தகம் தந்தது ஏழாவது சுவை. சுவை தானே நாவிற்கு வேண்டும்!இது ஒரு கலை புத்தகம் சந்தேகங்களை கலைக்கும் புத்தகம்….!

 

கரிகாலன்

 

(சரவண பிரகாஷ்)

வாசிப்பை நேசிப்போம் குழுமம்

முந்தைய கட்டுரைமாயையை காவல் வைத்தல்
அடுத்த கட்டுரைபிரியம்வதா அமெரிக்காவுக்கு…