குமரி, கடிதம்

மனிதர்கள் தங்களைக் கண்டடையும், அகம் உறைந்த தருணங்களால் குழைக்கப்பட்டது குமரித்துறைவி .

என்னதான் தர்க்கப் புத்தியைத் தூக்கி நிறுத்தினாலும் இந்த நூல் செறிவுடன் உணர்த்திய துயில் கனக்கும், கண் நிறைக்கும், தருணங்களை எப்படி விவரிப்பேன்? எல்லாமே ஜீவனற்ற சடங்குகளாக நான் கருதிய நிகழ்வுகளை உயிர்ப்புடையதாக்கி வேறு மன நிலைக்குள் என்னை அமிழ்த்து, ஆராட்டிய ஆனந்தத் தருணங்கள். அந்த இனிமையின் ஒரு துளியையேனும் வரும் எழுத்துக்களில் உங்களுக்குக் கடத்த முடிந்தால் அகம் நிறைவேன்.

15 சிவாச்சாரியார்களின் துணையோடு, கள்வர்கள் காவலோடு, மாலிக்கப்பூரின் படையெடுப்பு காரணமாக வேணாடு வந்து சேர்கிறாள் மீனாட்சி அம்மை. 69 ஆண்டுகள் கழித்து, புக்கரின் மகன் குமாரகம்பண்ணாவின் ராணி கங்கம்மா தேவியின் கனவுக்கிணங்க, மீனாட்சியை மதுரைக்குக் கொண்டு செல்ல தென்குளம் கட்டளைக்காரன் வீரமார்த்தாண்டன் உதயன் செண்பகராமன் தூதுவர, மூத்த நம்பூதிரியின் யோசனைப்படி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் செய்வித்து, ஆரல்வாய் மொழியில் இருந்து மதுரைக்கு மீனாட்சியை அனுப்பி வைப்பது தான் கதை.

நம்மை ஒரு கூட்டு நனவிலிக்குள் இட்டுச் சென்று ஒரு தந்தையாக, திருவிழா பார்க்கும் சிறுமியாக,உதயன் செண்பகராமனாக, திவான் நாகமையாவாக, தளவாய் நாராயணக் குறுப்பாக, மகாராஜாவாகச் செய்வது ஜெமோ மந்திரித்து செய்யும் மாயம்.

இப்புவியின் அத்தனை கோடி நிகழ்ச்சிகளும் இணைந்து விண்ணில் நின்று நோக்கும் தெய்வங்களுக்கு ஒற்றை நிகழ்வாகத் தெரியுமா? வெண்முரசுவில் ஜெயமோகன் எழுப்பும் கேள்வி இது. அதைப்போலவே ஒரு திருமணம், பல சின்னச்சின்ன நிகழ்வுகள். ஒவ்வொருவரும் அவரவர் கடமைகளை தீவிரம் கொண்டு பிறரை மறந்து, மருகி செய்யும் மானுட மாண்பு, இதனூடே அழகழகான வரலாற்று தகவல்கள் ,நம் மக்களின் அறிவு முதிர்ச்சி என விரிகிறது நாவல். ஊட்டுப்புரைக் (உண்ணும் இடம்) கான தண்ணீருக்காக மலையிலிருந்து ஓடை வெட்டி தண்ணீர் ஆவியாகாமல் இருக்க கமுகுப் பாளை பதித்து ஊட்டுபுரைக்கு ஐந்து சின்ன குளங்கள் வெட்டி, அங்கும் கமுகுப்பாளை பரப்பி ஒரு குளத்து நீர் மறுகுளத்திற்கு செல்லுமாறு அமைக்கிறார்கள்.காற்றுக்கு சக்தி உண்டு .ஆனால் அது ஒற்றைச் சக்தி. அதை மூங்கிலிலே வாங்கி பதினாயிரம், பத்து லட்சம், சக்திகளாக உடைத்து பந்தல் அமைக்கும் பாங்கு,ஆனை முட்டினா பாறை உடையும். மணல்மேட்டுக்கு ஒன்றுமாகாது என்ற சூத்திரத்தை அறிந்து, மூங்கிலாலே சிலந்தி வலை பின்னல் என நுண்ணிய அடுக்குகளாய் நுணுக்கமான தகவல்கள்.

குமரித்துறைவி நூல் வாங்க 

குமரித்துறைவி மின்னூல் வாங்க 

ஆதிகேசவன் எப்படி என் மகனாவான் என்ற மகாராஜாவின் கேள்விக்கு சிற மடம் திருமேனி” மகன் மூத்து தந்தை,தந்தை மூத்து மகன். நாம் கூன் போடுறப்ப நிமுந்து நிக்கிற மகன் நமக்கு அப்பன்”, மகன் தந்தையாகிறான். குமரி அம்மையை மகளாக மடியில் இருத்தி திருமணம் செய்விக்கும் மகாராஜாவின் மனநிலை, சீராட்டி வளர்த்த மகள் இனிமேல் தனக்கில்லை என்ற இடத்தில் ஆண் ஒரே நேரத்தில் மகளையும், மகளான அன்னையையும் இழக்கும் உணர்வு பயணத்தில் நெகிழ்ந்த உருக்கம். உலகளந்த அன்னை மகளாக ஆகும் அழகிய தருணம்.

வேணாட்டு அரசர்களிடம் கூடச் சொல்லாமல் தம் வீடுகளில் மீனாட்சியின் வைர நகைகளைப் புதைத்து தலைமுறையாய் ரகசியம் பேணிய கொண்ட கொள்கையில் குவியம் வைத்த சிவாச்சாரியார்களின் கர்மயோகம், உப்பு மேல் சத்தியம் செய்தால் மீறாத கள்வர் என்று ஆங்காங்கே மனித விழுமியங்கள்.

” ஆரல்வாய் மொழியில் இருந்து மதுரைக்கு கிளம்பும் தன் மாபெரும் விளையாட்டை ஆரம்பிக்கிறாள் மீனாட்சி.மனிதனால் இயல்வதெல்லாம் வேண்டிக் கொள்வது ஒன்றுதான் ஆனால் அதை மீறி தன் செயல் முழுமை அடைய வேண்டும் என நினைக்கிறான். பிழை நிகழும். அப்பிழைக்குப் பொறுப்பேற்கவும் வரலாம் .ஆனால் பிழை தன் பிழையல்ல என்று எண்ணும் அளவுக்கு அகம் கனிந்திருப்பதே விடுதலை.” ஐம்பூதங்களையும் சக்தியாக்கி பயன்படுத்தும் மனிதன் அன்னை பராசக்தியிடம் தோற்றுப் போகும், தோற்றுப் போயும் ஜெயிக்கும் தருணம் தான் அந்த குதிரையின் ஒற்றை தும்மல் .குறும்பியாக கனிவுள்ள மீனாட்சி ,பிறந்த வீட்டின் வளம் குன்றாதிருக்க,வைர நகையை கீழே விழச் செய்து செண்பகராமனின் சகலத்தையும் மங்கலமாகச் செய்வேன் அல்லது மடிவேன் என்ற சூளுரையை நிறைவேறச் செய்கிறாள்.

“அம்மையால வேணும்னு நினைச்சாலும் அன்பை குறைத்துக் கொள்ள முடியுமா மார்த்தாண்டா ? அன்பு நாம் அவளுக்கிட்ட அங்குசமும் , சங்கிலியும் இல்லையோ?” என்ற மகாராஜாவின் கேள்வியோடு நிறைகிறது இப் புனைவு.

ஆம் மனிதர்களுக்கும் அன்பு அங்குசமும் சங்கிலியும் தான். ஒரு சிலரைத் தவிர.

உதயன் செண்பகராமனின் பதற்றம், பயம், பக்தி, பொறுப்பு நிறைவின்மை, எல்லாம் நமக்குள்ளும் பரவிப் பயணிக்கிறது. எல்லாவற்றையும் முன் தயாரிப்போடு தேடித்தேடி குறை களைந்து செய்து முடித்து விட்டோம் என்று செருக்கிய

தருணங்கள் சிறு பிசகால் சறுக்கிய தருணங்களாய் நம்மை கர்வ பங்கப் படுத்திய வாழ்வியல் அனுபவங்கள், செண்பகராமனோடு நம்மைத்

தோயச் செய்யும். நம் மன ஆழங்களில் புதையுண்டு இருக்கும் உணர்ச்சிகளை கண்ணீராய் பெருகச் செய்த புத்தாக்கம் இது.

இதையே என்னுடைய podcast ல் பகிர்ந்தேன்.
எவ்வளவு பேசினாலும் எழுதினாலும் தீராதிருக்க உங்களிடம் பகிர்ந்தால் தான் தீரும் என்றெண்ணிப்  பகிர்ந்தேன்.
நன்றி.
அன்புடன்
மீ. சித்ரா
ராஜம்.
முந்தைய கட்டுரைதியானமுகாம், கடிதம்
அடுத்த கட்டுரைக.இராமசாமி