நோய்வளர்ப்பு

Brendan Kelly

விதைசேகரிப்புக்காக ஓர் இந்திய மிதிவண்டிப் பயணம்…
மீள்தல், அமிழ்தல்

ஜெமோ

சில நாட்களாக உங்கள் தளத்திலே வந்துகொண்டிருக்கும் சுயமுன்னேற்ற அறிவுரைகளை பார்க்கிறேன். முழுக்கப் படிக்க எனக்குப் பொறுமையில்லை. அவற்றில் என்னென்ன இருக்கும் என்று எனக்குத்தெரியும். எனக்கு அந்த மாதிரி எழுத்துக்களில் நம்பிக்கையில்லை. அந்த எழுத்துக்களால் ஒரே பயன் எழுதுபவருக்கு புத்தகம் விற்கும், புகழ் கிடைக்கும் என்பது மட்டும்தான்.

ஓர் எழுத்தாளரான உங்களுடைய இந்த எழுத்தை ஒரு கேலிக்கூத்தாகவே பார்க்கிறேன். நல்ல இலக்கியவாதிகள் இதைப்பார்த்துச் சிரிப்பார்கள். இப்படி எளிமையாக வரையறை செய்து சொல்லக்கூடியது அல்ல வாழ்க்கை.

எழுத்தாளர்கள் பலர் மிக ஆழமாக இதையெல்லாம் எழுதியுள்ளனர். அவற்றை வாசியுங்கள். ‘மனிதன் மகத்தான சல்லிப்பயல்’ என்று ஜி.நாகராஜன் சொன்னார். அதுதான் உண்மை. இன்றைய காலகட்டத்தின் கொடூரத்தையும் அபத்தத்தையும் பல எழுத்தாளர்கள் அற்புதமாக எழுதியுள்ளனர்.

நீங்கள் உங்களை அறிவுரை சொல்லும் இடத்தில் வைத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான் அர்த்தம். ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அவருடைய நியாயங்கள் உங்களுக்குப் புரியாது. ஆனால் நீங்கள் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். இது ஒருவகை அத்துமீறல்.

மு.செந்தில் கார்த்திக்

தன்மீட்சி நூல் வாங்க

தன்னைக் கடத்தல் நூல் வாங்க

ஒளிரும் பாதை வாங்க

அன்புள்ள செந்தில்,

என்னை வாசிக்க அறிவுரை சொல்லுமிடத்தில் நீங்கள் உங்களை வைத்துக்கொண்டிருக்கிறீர்கள். அந்த நம்பிக்கையாவது நிலைகொள்ளட்டும் உங்களுக்குள்.

இவை சுயமுன்னேற்ற கட்டுரைகள் அல்ல. வெல்வதைப் பற்றி அல்ல, வாழ்வதைப் பற்றியே இவற்றில் பேசுகிறேன். சுயமுன்னேற்ற நூல்களேகூட பயனற்றவை அல்ல. அவை மொழிவழியே தொகுத்துரைக்கும் நடைமுறை வழிகள் பலகோடிப் பேருக்கு உதவியுள்ளன. எவரும் எந்த சுயமுன்னேற்ற நூலையும் பைபிள் என கொள்வதில்லை. ஆனால் அவற்றுக்கு எதிர்வினையாற்றுகிறார்கள். விளைவாக தங்களுக்கான ஒரு வழியை கண்டடைகிறார்கள்.

நான் சொல்வது சிந்திக்கும் மனிதன் இன்று அடையும் வெறுமை, தனிமை, இலக்கின்மையிலிருந்து மீளும் வழி பற்றி மட்டுமே. இவைகூட அனைவருக்குமானவை அல்ல. சற்றேனும் தன்முனைப்பை கடக்கும் திறன்கொண்டவர்களுக்குரியது இந்த வழி. அறியாமையும் தன்முனைப்பும் இணையாக கலந்து உருவான ஆளுமைகள் உண்டு. அவர்களை நோக்கி எந்தச் சொற்களும் நேராகச் சென்று சேர முடியாது. சிலருக்கு இவை பயன்படலாம். பயன்படுகின்றன என அறிவேன். ஆகவே பேசுகிறேன்.

இவற்றைப் பேசுவதற்கான தகுதி நான் மீண்டேன், என் வாழ்க்கையை நிறைவுற நிகழ்த்தினேன் என்னும் உறுதி. நான் செயலாற்றி வென்றவன், ஆகவே எப்படிச் செயலாற்றுவது என்று சொல்கிறேன். நான் என் நாட்களை வீணாக்காமல் முழுமையுறச் செய்தவன் என்பது என் நம்பிக்கை. அந்நம்பிக்கையை நான் அடைய பிறருடைய ஆதாரம் தேவையில்லை இல்லையா?

வாழ்க்கையின் அபத்தம், கொடூரம் மற்றும் விஷயங்களை எழுதுபவர்கள் உங்களுக்கு உகந்தவர்கள் என்றால் அதை நீங்கள் நம்பி மேலே செல்லலாம். அவற்றை எழுதுபவர்களின் ஆளுமை, தனிவாழ்க்கை. சாதனைகள் ஆகியவை உங்களுக்கு முன்னுதாரணங்கள் என்றால் அவர்களை தொடரலாம். வாழ்த்துக்கள். நான் உங்களை கட்டாயப்படுத்த மாட்டேன். நீங்களும் வாழ்க்கை அபத்தமானது என்னும் உங்கள் கருத்தையும் உணர்ச்சிநிலையையும் என் மேல் சுமத்தக்கூடாது இல்லையா? மேலும் அப்படிச் சுமத்துமளவுக்கு நீங்கள் தகுதிகொண்டவரா என்பதும் எனக்குத் தெரியாது.

தமிழ் நவீன இலக்கியங்களில் பெரும்பாலானவற்றில் ‘வாழ்வின் அபத்தம்’ ‘வாழ்க்கையின் பொருளின்மை’ என்பதுபோன்ற சொற்கள் உள்ளன. அவற்றைச் சொல்பவர்களுக்கும் அர்த்தம் தெரியாது. ஐம்பது அறுபதுகளில் உலகளவில் நவீனத்துவ எழுத்தாளர்கள் அதை மெய்யாகவே நம்பி அப்படி எழுதினர். அது அன்றைய உலகமனநிலை. இன்று அதுவே ஒரு மோஸ்தர் அவ்வளவுதான். நவீன இலக்கியமென்றால் அப்படி இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள். அதை எழுதுபவர்கள் எவரும் அபத்தத்தின் உச்சியில் அந்தரவாழ்க்கை வாழும் சித்தர்கள் அல்ல. ஒவ்வொருநாளும் உற்றாரின், சமூகத்தின் பரிவையும் கொடையையும் அறத்தையும் நம்பி வாழும் மிக எளிய மனிதர்கள்.

‘மனிதன் மகத்தான சல்லிப்பயல்’ என்பது ஜி.நாகராஜனின் ’ஆப்தவாக்கியம்’ அல்ல. பொன்மொழி சொல்பவர்களை கிண்டலடித்து அவர் எழுதிய சில வரிகளிலொன்று. அதை அவர் நம்பியிருக்கவும்கூடும். அவருடைய புனைவுகளிலும் அதுவே உள்ளது. ஆனால் நான் அந்த வரியுடன் இணைத்துக் கொள்வது ‘ஜி.நாகராஜன் ஒரு மகத்தான சல்லிப்பயல்’ என்னும் என் வரியை. அவருடைய வாழ்க்கை அத்தகையது. அதன் வெளிப்பாடே அவருடைய புனைவுலகமும் கருத்தும். அதை தவிர்த்து அப்புனைவை அல்லது கருத்தை பார்க்கமுடியாது.

வாழ்நாள் முழுக்க எவர் மேலும் அன்பில்லாதவராக ஜி.நாகராஜன் இருந்தார். எவருக்கும் எதையும் செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர் அல்ல. ஆனால் பிறரை அண்டியும் சுரண்டியும் வாழ்ந்தார். போதையடிமை. விபச்சார மோகம். பிறரது உணர்வுகளை, செல்வத்தைச் சுரண்டுவதில் எந்த குற்றவுணர்ச்சியையும் அடைந்தவரல்ல. அப்படி ஓர் எழுத்தாளர் இருக்கலாம். அவர் கண்டுசொல்லும் வாழ்க்கையின் ஒரு தளம் இருக்கலாம். ஆகவே எனக்கு ஜி.நாகராஜன் நல்ல படைப்பாளிதான். அவரைப்பற்றி விரிவாக எழுதியுமுள்ளேன்.

’மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்’ என்ற வரியை இன்று இலக்கியமே வாசிக்காதவர்கள்கூட அவ்வப்போது சொல்வதைப் பார்க்கிறேன். அதன் வழியாக அவர்கள் அடையும் உணர்வுகள் என்ன? ஒரு சொற்றொடரைச் சொல்பவன் அதைச்சொல்லுமிடத்தில் தன்னை நிறுத்தி தனக்கான ஓர் ஆளுமையை புனைந்துகொள்கிறான். அந்த ஆளுமை என்ன? “நான் ஒருபடி மேலான நுண்ணுணர்வு கொண்டவன், மனிதன் மகத்தான சல்லிப்பயல் என்று சொல்லி புன்னகைக்கும் அளவுக்கு கொஞ்சம் மேலானவன், மனிதர்களின் அபத்தநிலையை அறிந்து கொண்ட விவேகி, அதை ஏற்குமளவுக்கு உளவிரிவு கொண்டவன்”– இதெல்லாம்தானே?

இந்த தன்நடிப்பின் ஆழமின்மையை, இதிலுள்ள அற்பத்தனத்தையே நான் முதலில் கவனிப்பேன். இப்படி ஒரு வரி கிடைத்ததுமே ஓடிச்சென்று அதைக் கவ்விக்கொள்வதிலுள்ள தாழ்வுணர்ச்ச்சியை. அந்த வரி ஒரு புனைவெழுத்தாளன் அவன் முன்வைக்கும் ஓர் உலகை வகுத்துரைக்க கண்டடைந்தது. அது ஒரு பார்வை, அவ்வளவுதான். ஜி.நாகராஜன் ஓர் உலகைச் சித்தரித்தார். ஆகவே அவர் கலைஞர்.

ஆனால் அவர் எனக்கு முதன்மையான படைப்பாளி அல்ல. அவர் ஓர் இலக்கியத் துளி, அவ்வளவுதான். இலக்கியப் பேராறுகள் உள்ளன. தல்ஸ்தோய் முதல் தாமஸ் மன் வரை. தாரசங்கர் பானர்ஜி முதல் வைக்கம் முகமத் பஷீர் வரை. அவர்களையே நான் முன்னுதாரணமாகக் கொள்வேன். அவர்களின் பார்வை வாழ்க்கையின் ஒரு பக்கத்தை மட்டும் பார்ப்பது அல்ல. வாழ்க்கையை முழுமையாகப் பார்ப்பது. என் எழுத்து அவர்களின் மரபைச் சேர்ந்தது. நான் எழுதியவற்றை பீடமாக்கி ஏறி நின்று நான் உலகுக்கே அறிவுரை சொல்லலாம், அத்தகுதி எனக்குண்டு. மெய்ஞானிகள் அன்றி பிற அனைவருமே என்கீழ் பணிந்து என் சொற்களைக் கேட்டுக்கொள்ளும் நிலையிலிருப்போரே.

உங்களுக்கு இவை பொருட்டு அல்ல என்றால் அது உங்கள் தெரிவு. உங்கள் வாழ்க்கையை அவ்வாறு அமைத்துக்கொள்ளுங்கள். உங்களால் ஏற்கப்படுபவர்களை தொடருங்கள். ஆனால் ஒன்றைக் கவனியுங்கள். ’எனக்கு ஆர்வமில்லை, நம்பிக்கையில்லை’ என நீங்கள் இங்கு வந்து என்னிடம் சொல்கிறீர்கள் இல்லையா? மெய்யாகவே ஆர்வமும் நம்பிக்கையுமில்லை என்றால் பேசாமல் கடந்துசெல்வீர்கள் அல்லவா? உங்கள் உள்ளம் எதிர்வினையாற்றுகிறது. அது போதும்.

மனிதர்கள் தங்கள் நோயை நேசிக்கிறார்கள். அது தங்களுடையது என்பதனாலேயே அது அரியது, பிறருக்கில்லாதது என நினைக்கிறார்கள். பெருமையுடன் அதைப்பற்றிப் பேசிக்கொள்ள விரும்புகிறார்கள். கைக்குழந்தையைப் போல நோயை கொஞ்சிக்கொண்டிருப்பவர்களை நம்மைச் சுற்றிப் பார்க்கலாம். அந்த நோய் ஒன்றும் பெரிய விஷயமல்ல என்று சொல்லுங்கள். சீறிவிடுவார்கள். அந்த நோயில் அவதிப்படுபவர்களே அது குணமானபின் இழப்புணர்வை அடைவார்கள். அதை எண்ணி ஏக்கமும் கொள்வார்கள்.

நோய் என்பது உடலில் மட்டுமல்ல. உள்ளத்தில் மட்டுமல்ல. சிந்தனையிலும் உண்டு. அந்நோயை பெருமையுடன் பேணிக்கொள்பவர்களே பெரும்பாலும் நம்மைச்சுற்றிக் காணக்கிடைக்கின்றனர். அந்நோய் குணமானாலொழிய அதை அவர்களால் மதிப்பிடவே முடியாது.

ஜெ

முந்தைய கட்டுரைஜங்கம பண்டாரம்
அடுத்த கட்டுரைபொதிகை பேட்டி