இரு வாழ்க்கைகள், இரு பாதைகள்- கடிதங்கள்

மீள்தல், அமிழ்தல்

விதைசேகரிப்புக்காக ஓர் இந்திய மிதிவண்டிப் பயணம்…

அன்புள்ள ஜெ,

உங்கள் இணையதளத்தில் ஒரேநாளில் வெளிவந்த இரண்டு கட்டுரைகளை கண்டேன். இரண்டு இளைஞர்களின் வாழ்க்கைக்குறிப்புகள். ஒருவர் அமர். (மனோபாரதி அவரைப்பற்றி எழுதியிருந்தார்) இன்னொருவர் யசோக் (சிவராஜ் எழுதியிருந்தார்) இரண்டு வாழ்க்கைகளும் ஒரு கேள்விக்கு இன்னொன்று பதில் போல அமைந்திருந்தன. திட்டமிட்டுத்தான் இப்படிச் செய்தீர்களா என்று தெரியவில்லை. தற்செயலாக அமைந்ததாகவும் இருக்கலாம்.

அமர் அவர்களின் வாழ்க்கை அர்த்தமற்றதாக ஆகிவிட்டது. வாழ்வு, சாவு இரண்டுக்குமே எந்தப்பொருளும் இல்லை. ஆனால் யசோக் அதற்கிணையான ஒரு பெரிய நம்பிக்கையிழப்பு, தனிமையில் இருந்து தன்னை மீட்டுக்கொண்டிருக்கிறார். ஒரு மகத்தான வாழ்க்கைக்கான தொடக்கத்தில் இருக்கிறார்.அவரைப்பற்றி வரலாறு பேசும். இருவருமே உங்கள் வாசகர்கள். ஒருவரை உங்கள் எழுத்து மீட்டிருக்கிறது. இன்னொருவரை மீட்க முடியவில்லை. மீட்புக்கு அவர் இடமே அளிக்கவில்லை. நீங்கள் சொல்வதுபோல ஊழ் என ஒன்று இருக்கத்தான் செய்கிறது.

ஆ, ராஜ்குமார்

அன்புள்ள ஜெ

உங்கள் தளத்தில் வெளியான இரண்டு கட்டுரைகளையும் இரவே வாசித்தேன். பகலில் மீண்டும் வாசித்தேன். இருட்டு ஒளி இரண்டுமே அருகே இருப்பதுபோல அவை இருந்தன. ஒருவட் டிப்ரஷனில் இருக்கிறார் என்றால் என்ன பொருள்? அவர் ஈகோ மிக்கவர், தனக்காகவே சிந்திக்கிறார் என்றுதான். கொஞ்சம் அந்தப்பிடியை விட்டுவிட்டால் டிப்ரஷனில் இருந்து விடுவித்துக்கொள்ளலாம். இது என் அனுபவம். 2010 முதல் நானும் அதே நிலையில்தான் இருந்தேன்.

எனக்கு உங்கள் தளமும் தன்மீட்சி, பொன்னிறப்பாதை ஆகிய நூல்களும் மிகப்பெரிய அளவிலே உதவிபுரிந்தவை. நான் என்னுடைய வாழ்க்கையை கொஞ்சம் மாற்றிப்பார்க்க ஆரம்பித்தேன். எனக்கு என்ன தேவை, என்னுடைய வெற்றிகள் என்றே நினைத்துக்கொண்டிருந்தேன். சில பணிகளில் வெறிகொண்டு ஈடுபட ஆரம்பித்தேன். நல்ல நட்புகள் அமைந்தன. மீண்டுவிட்டேன். டிப்ரசன் இல்லாமலானதும் வாழ்க்கையும் மாறிவிட்டது. தொழிலும் மாறிவிட்டது. போதும் என்னும் நிறைவும் வந்துவிட்டது. அமர் வாழ்க்கை ஒரு எச்சரிக்கை. யசோக் வாழ்க்கை ஒரு வழிகாட்டி

மகேந்திரன் பழனிச்சாமி

தன்மீட்சி நூல் வாங்க

தன்னைக் கடத்தல் நூல் வாங்க

ஒளிரும் பாதை வாங்க

முந்தைய கட்டுரைநாதஸ்வர இசை, கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிலக்கப்பட்ட கனி- லோகமாதேவி