பேரிலைப் பகன்றை

சங்க சித்திரங்கள் மின்னூல் வாங்க

சங்க சித்திரங்கள் வாங்க

அன்புள்ள ஜெ

தமிழ் என நான் பள்ளியில் பயின்றதெல்லாம் உரை நடை, மனப்பாடப் பகுதி, இலக்கணப் பகுதி, கதைகள், கேள்விகள் இவைதான். ஆனால் ஒட்டு மொத்தமாக எல்லாமும் மனனம் தான். தமிழில் மட்டும் முதல் மதிப்பெண் பெறும் ஒரே ஆள் நான்தான்.

ஒன்றைக் கூட புரிந்து படித்தேயில்லை. அப்படி புரியவைக்கும் ஒரு ஆசிரியரைக் கூட நான் சந்திக்கவேயில்லை. இத்தனைக்கும் தமிழம்மா வீட்டுக்கு சென்று படித்த ஒரே ஆளும் நான்தான்.நான் 6ம் வகுப்பில் படித்த மனப்பாடப் பாடல் இன்னும் நினைவில் உள்ளது. ஆனால் அதன் ஒரு பொருளையும் நான் அறியேன்.

தேனாய் தீம்பழமாய் சுவைசேர் கரும்பாய் அமுதந்தானாய்   அன்பருளே இனிக்கின்ற தனிப்பொருளே வானாய்க் கால்அனலாய் புனலாய்அதில் வாழ்புவியாய் ஆனாய் தந்தனையே அருளால் அமுதந்தனையே

இராமலிங்க அடிகளார் அவர்களின் கடவுள் வாழ்த்துப் பாடல் இது. ஒரு வருடமும் தினமும் காலை இதை சொல்லியதால் இன்றும் எனக்கு மனப்பாடம்.பள்ளியில் ஒருமுறை கூட வள்ளலார் என்ற பெயரைக் கூட யாரும் சொன்னதேயில்லை. அவரின் வரலாற்றை நாங்கள் அறியவேயில்லை.

சங்கச் சித்திரங்கள் புத்தகத்தில் முதல் கட்டுரையை இன்று தான் வாசித்தேன். இதைப் போல ஒரு முறை ஒரே முறை எந்த ஆசிரியரேனும் எனக்கு பாடம் எடுத்திருந்தால், தமிழின் மீது இன்னும் இன்னும் ஆர்வம் வந்திருக்கும்.

பேரிலைப் பகன்றைப் பொதியவிழ் வான்பூ….

இன்று முழுதும் என்னுடன் வரும் வரி..

முதல் முறை அந்தப் பாடலை படிக்கும் போது எனக்கு எதுவுமே விளங்கவில்லை. சொற்கள் பொருள் கொள்ளவேயில்லை. கட்டுரை முடிந்து மீண்டும் படிக்கும் போது எனக்கு மிகப் பிடித்த கவிதையாக மாறிப்போனது. இப்போது என்னால் சொற்களை எளிதாக காட்சிப் படுத்த முடிந்தது. இம்முறை மொழி எனக்கு அந்த படத்தைக் காட்டிவிட்டது.

கட்டுரையின் இறுதி வரிகள் இவை.

“நீரில் பிரியும் துணிச் சுருள் போல கள் மணத்துடன் கட்டவிழும் அம்மலர் எது?எந்தக் கணத்தில் தன் முடிச்சை அவிழ்க்க ஒரு மலர் தீர்மானிக்கிறது?”

கல், கண் திறக்கும் ஒரு கணத்தில் தானே..

கல்லில் விழி எழுமா என்ன? விழி எங்கும் எழும். கல்லில் மரத்தில் சிப்பியில்… எழவேண்டும் என எண்ணினால் எங்கும் விழி மலர்ந்துவிடும். காளான் பூப்பதுபோல…

இவையும் தங்கள் வரிகளே…..

பேரிலைப் பகன்றைப் பொதியவிழ் வான்பூவைக் காட்டியதற்கு நன்றி

தீராத அன்புடன்

சரண்யா

சங்கசித்திரங்கள் -கடிதம்

சங்கசித்திரங்கள்

சங்கசித்திரங்கள்

சங்கசித்திரங்கள்-விமர்சனம்

முந்தைய கட்டுரைதன்மீட்சி நூல்கொடைஇயக்கம்
அடுத்த கட்டுரைந.பெரியசாமி