வெண்முரசின் நிலம்

அன்புள்ள ஜெ

வெண்முரசு என்னும் பெரும் படைப்பை நெருங்கி வாசிக்க ஆரம்பித்துள்ளேன். முதல் நூலான முதற்கனலில் காலத்தை, நிலத்தை, மனிதர்களை மிக நுட்பமாக அணுகி என்னுள் விரித்துக் கொள்ள முடிகிறது. அவ்வுலகம், இந்திய சித்திரத்தை, அதன் ஆறுகள், மலைகள், நிலப்பரப்பு, மனிதர்கள் ஆகியவற்றை ஓர் உள் உலகமாக கட்டமைக்கிறது. இரு கேள்விகள். வெண்முரசு என்னும் புனைவு உருவாக்கும் உலகை, அவ்வுலகில்  உள்ள நிலங்களை, நேரில் பயணம் செய்து என்னுள் விரித்து கொள்வது (Augment) எவ்வகையில் உதவும்? அப்படி ஒரு பயணத்தை திட்டமிடுவது எப்படி?

அன்புடன்
சரவண தியாகராஜன்

Map

அன்புள்ள சரவண தியாகராஜன்

வெண்முரசு பேரும் பெரும்பாலான இடங்கள் மெய்யாகவே இருப்பவைதான். இன்றும் அங்கு செல்ல முடியும். சில இடங்களின் பெயர்கள் மாறியிருக்கும். உதாரணமாக ராஜமகேந்திரபுரி ராஜமந்திரி ஆகியிருக்கும். விஜயபுரி இன்று நாகார்ஜுன கொண்டா என அழைக்கப்படுகிறது. நாகார்ஜுனசாகர் அணைக்குள் இருக்கிறது.

பெயர்களை கூகிளில் இட்டு தேடலாம். அதைவிட நில அடிப்படையில் எந்த இடம் என வகுக்கலாம். நாவல்தொடர் வந்துகொண்டிருந்தபோது

https://venmurasudiscussions.blogspot.com/

தளத்தில் பலர் அவ்விடங்களை பற்றி சுட்டிகொடுத்து எழுதினார்கள். அதில் அக்கால இந்தியாவின் வரைபடங்களும் உள்ளன. இன்று ஆயிரக்கணக்கான கடிதங்கள் அதிலுள்ளன. அதில் தேடியும் கண்டடையலாம்.

அப்படியொரு பயணத்தைச் செய்வது எல்லா வகையிலும் ஊக்கமூட்டும் ஒரு விஷயம்தான். வாழ்த்துக்கள்

ஜெ

முந்தைய கட்டுரைஒரு சிறு வட்டம்
அடுத்த கட்டுரைஆலயக்கலை, ஹம்பி- சாம் ராஜ்