‘நான் விஷ்ணுபுரம் விழா(2021)விற்கு வந்ததும்… ஜெயமோகன் அவர்களை பார்த்ததும் எனக்கொரு பெரிய அகத்தூண்டுதல்’ என்று சந்திக்குபொழுதெல்லாம் சிலாகித்துக்கொண்டு இருப்பார் தெலுங்கு கவிஞர் திரு வாடரேவு வீரபத்ருடு. ‘முகநூலில் இல்லாமல் ஜெ. இவ்வளவு பெரிய வாசக வட்டத்தை சாதித்தது ஒரு பெரிய விஷயம்! அதுவும் 26 ஆயிரம் பக்கங்களை எழுதி இளைஞர்களை வாசிக்கவைத்ததும் இந்தியாவில் பெரும் சாதனைதான். எப்படி இதெல்லாம் முடிந்தது?’ என்று வியந்து கொண்டு இருப்பார்.
கடந்த வருடம் ஐஏஎஸ் அதிகாரியாக ஓய்வு பெற்றபின் முழுநேர எழுத்துப்பணியில் ஈடுபட்டுள்ளார் அவர். ஒய்வு பெறும்போது ஆந்திர முதல்வர் அழைத்து ‘உங்களுக்கு இதைவிடவும் பெரிய பதவி காத்துக்கொண்டு இருக்கிறது. வாருங்கள்’ என்றாராம். இவர் ‘இல்லை சார். நான் இனிமேல்தான் எழுதனும், படிக்கனும்’ என்று சொல்லி மறுத்துவிட்டாராம்… கவிஞரின் நெருங்கிய நண்பர் ஒருவர் சொன்னது இது. வீரபத்ருடு அவர்களை நான் பார்க்க சென்றபொழுது… எந்த வித அதிகார பாவனைகள் இல்லாமல் ஒரு எளிமயான அடுக்குமாடி வீட்டிற்கு குடிபுகுந்து இருந்தார். விஜயவாடாவில் இருந்து இங்கு வந்ததும்… தன் இனைய தளத்தை மிகவும் நேர்த்தியாக புனரமைத்துவிட்டார். நாளுக்கு ஒரு ஓவியமோ, கவிதையோ, புத்தக அறிமுகமோ, கட்டுரையோ, பயணமோ, தான் கலந்துக்கொண்ட இலக்கிய நிகழ்ச்சிகளின் விவரணையோ… என்று வெளியிட்டு அதற்கு புத்துயிர் தந்துவிட்டார்.
‘ஆ வெண்ணெல ராத்ருளு'(அந்த வெண்ணிலா இரவுகள்) என்ற நாவலும், ரோம் தத்துவ அறிஞர் அரேலியஸ்ஸ் ‘மெடிடேஷன்ஸ்’க்கு ஒரு அறிமுகமும், ஜப்பான் கவிஞர் ககுரோவின் கவிதைகள் மொழி பெயர்ப்பும், சீன கன்பூசியஸ் வாழ்விற்கும்- தத்துவதீர்க்கும் ஒரு அறிமுக நூலும்… என்று சுமார் பத்து புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இவை அனைத்தும் வாசகர்கள் இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ள பீடி.எப். களாகவே அளிக்கிறார். எழுத்து மட்டும் அல்லாமல் இதில் வாசகர்களுக்கு கிடைக்கும் இன்னொரு பரிசு… அவருடைய ஓவியங்கள்! ‘நான் ஒரு அமெச்சூர் ஓவியன்-தான்’ என்று சொல்லிக்கொண்டாலும் அவரின் நீர்வண்ண ஓவியங்கள் ஆக சிறப்பானவை. கண் கலங்கும்போதோ, மழையின் ஊடாக பார்க்கும்போதோ ஏற்படும் ஒரு காட்சி நெகிழ்வு அவற்றில் இருக்கும். அந்த ஓவியங்களைக்கொண்டு அவர் உருவாக்கும் பக்கங்கள் மற்றும் புத்தக வடிவமைப்புகள் மிக நேர்த்தியானவை. இந்தியாவின் சிறந்த வடிவமைப்பாளர்களில் ஒருவர் என்று சொல்லிவிடலாம்!
ஜூலை முதல் தெலுங்கு மண்ணிற்கு மழைக்கலாம். இந்த முன்மழை மாதத்தை இங்கு ‘ஆஷாடம்’ என்பார்கள். நிலங்களில் ஏரோட்டம் தொடங்கும் காலம். இந்த மாதத்தில் புதுமணத் தம்பதிகள் பிரிந்து இருக்கவேண்டும் என்பது தெலுங்கு வழக்கம். அதனால்… இது விரகத்தின் காலமும் கூட. இந்த மழைக்கால பிரிவை பற்றி செம்மொழியில் வால்மீகி ராமாயணம் தொடங்கி காளிதாசரின் மேகதூதம், பர்த்ருஹரியின் கவிதைகள், மறைக்கப்பட்ட பெண் கவிஞர்களின் செய்யுல்கள், ஜெயதேவரின் அஷ்டபதி, தமிழ் சங்க இலக்கியம், பிராகிருத ‘காதா ஸப்தசதி’ வரை வந்துள்ள ‘மழைப்பாடல்களை’ தனக்கே உரிய விவரணைகளுடன் மொழிபெயர்த்துள்ளார். கிட்டத்தட்ட உங்களின் ‘சங்க சித்திரங்கள்’ போன்றதுதான்… ஆனால் இதில் வாழ்வனுபவங்களுக்கு பதிலாக இலக்கிய ரசனை அனுபவத்தை முதன்மை படுத்தியுள்ளார். அதில் சரித்திரம், மானுடவியல் என்று தொட்டு சென்றார். சமீபத்தில் தெலுங்கில் பேசப்பட்ட முயற்சி இது. இங்கு- இவர் மட்டுமே செய்யக்கூடியது!
நான் இந்த கடிதத்தை எழுதவந்தது இவரின் இன்னொரு புது முயற்சியை பற்றி சொல்ல. திரு வீரபத்ருடு 2000 களில் புனர்யாணம்(‘மீழ் பயணம்’) என்ற ஒரு நெடுங்கவிதயை எழுதினார். ஒரு நாவலை கவிதை நடையில் எழுதுவதுதான் இது. ஆனால், இதில் தன் சுயசரிதையை அவர் எழுதியுள்ளார். ஆனால், அதை ‘பஞ்சமய கோசங்களாக’ பிரித்துள்ளார். அவர் விஷ்ணுபுரம் விழாவிற்கு வந்தபோது நடந்த அமர்வில் குருஜி சௌந்தர் இதை பற்றி ஒரு கேள்வியை எழுப்பி இருந்தார். அப்பொழுது எனக்கு அது முழுதாக புரியவில்லை. இந்த ஜூலை யோகமுகாமிற்கு பிறகுதான் பஞ்சமய கோசங்கள் என்றால் என்ன என்பது தெரிந்தது- சுய அனுபவத்துடன். அந்த தெளிவு கிடைத்ததும் அந்த கவிதையின் மேல் பெரும் விருப்பமும், வியப்பும் ஏற்பட்டது. நான் யோகமுகாமிற்கு வந்த அதே வாரத்தில் பத்ருடு தன் தளத்தில்- புனர்யாணத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க தொடங்கியது ஒரு ஆனந்தமான அதிர்ச்சிதான்! ஒவ்வொரு கவிதைக்கும் (தெலுங்கில்) சிறு வாழ்வனுபவ குறிப்புடன் இதை ஆங்கிலத்தில் தருகிறார். மிகச் சுவையான மொழிபெயர்ப்பு என்றுதான் சொல்லவேண்டும்… ஆங்கில கவிதைகள் என்றால் பதறும் என்னாலயே அதை ரசிக்க முடிகிறதே!
தங்களின் பார்வைக்காக அவரின் தளத்தில் உள்ள அந்த மொழியாக்கங்களின் லிங்க் கொடுத்துள்ளேன். நன்றி.
மிக்க அன்புடன்,
ராஜு
ஹைதராபாத்
கவிஞர் வீரபத்ருடு – ஆங்கில மொழியாக்கம்