கந்தர்வனின் உலகம் -கடிதம்

படையல் வாங்க

பழையநிலங்களில் முளைத்தெழல்

ய்யய்யோ…அய்யய்யோ…“ – நல்லசிவம் செட்டியார் கூச்சலிட்ட  அந்தக் கணம் அது நடந்து விடுகிறது. நமக்கும் எதிர்பாராத அந்த க்ஷணம் அது. மனது திடுக்கிட்டுப்போகிறது. ஐயோ…இதென்ன விபரீதம்…? என்று.

ஆம். வள்ளியம்மை எழுந்து கை கூப்பியவண்ணம் பாய்ந்து சிதைத்தீயில் புகுந்த  நிமிடம் அது…!

தப்புக்கு மேல் தப்பு. அடுத்தடுத்து….ராஜாவையே ஏமாற்றிய தப்பு.

மன்னர் விஜயரெங்கச் சொக்கநாதரின் கண்களையும் கருத்தையும் மறைத்துச் செய்யப்பட்ட  தந்திரம்.

மதுரை ராசாவே அநியாய வரிகெட்டி சீரளியுதோம் – என்று சொல்லி வரிவிலக்குப் பெற உண்டாக்கிய ராஜகைங்கரிய தந்திரம். வெறும் யுக்தியா அது?  ஒரு ராஜ்யத்தையே ஏமாற்றிய மாதந்திரமல்லவா அது!

நினைத்தது நடந்து போகிறதுதான்.

ஸ்ரீமீனாள் துணையால் வேண்டியவை செய்யப்படும்…இது அரசரின் அறிவிப்பு.

ஆனால் நடந்தது என்றேனும் தெரியாமல் போகுமா? சரித்திரத்தில் உண்மை வெளிவராமலேயே போயிருக்குமா? அது அறியப்படாமலேயே அரசரின், மக்களின் காலம் கழிந்திருக்குமா? கேள்வி தொக்கி நிற்கிறது நம் மனதில்.

சரித்திரங்கள் இப்படி எத்தனையோ கதைகளைத் துணிந்து  பேசுகின்றன. எல்லாக் காலங்களிலும் எல்லாத் தந்திரங்களும் அங்கங்கே நிலவும் மேல் கீழ் அதிகார நிலைகளுக்கேற்ப சாமர்த்தியமாக நிகழ்த்தப்பட்டடிருக்கின்றன திறமையாகக் கையாளப் பட்டிருக்கின்றன என்பதை மறைமுகமாக, ஆணித்தரமாகச் சொல்கிறது இப்படைப்பு.

மாரய்யாக் குட்டி பிள்ளை, நம்பியா பிள்ளை, சண்முகம் பிள்ளை திருவடியா பிள்ளை இப்படிப் பலருக்கும் நடுக்கம்தான்.  ஆனால் ஏற்பாடு செய்து நியமிக்கப்பட்ட அந்த ஆளுக்கு கிஞ்சித்தும் பயமில்லை. அவன் ஊருக்காக, ஊர் மக்களுக்காகத் தன்னைப் பலி கொடுக்கத் தயாராகிவிட்டவன். என் சாவினால்தான் இந்த நல்லது நடக்குமானால் களபலி ஆவதில் என்ன தவறு? என்கிற முனைப்பை மட்டுமே மனதில் நிறுத்திய தியாக ஜீவன்.  இத்தனைக்கு வரி விதிப்புக்கே விதி விலக்கானவன்.  தன்னை முன்னிறுத்தும் தந்திரம் அறியாதவன்.

அந்தச் சந்தேகத்தை அவர்களே தங்களுக்குள் கிளப்பித் தெளிகிறார்கள். பண்டாரமாக்குமே இவன்….சாடிசாவணுமானா இவனுக்கு ஒரு பாதிப்பு வேணாமா? யோசிக்கத்தான் செய்கிறார்கள்.  ஆனாலும் காரியம் நிகழ்ந்ததும் ஆளை மாற்றிப் போட்டு அறிவித்து விடலாம் என்கிற துணிபு. மன்னரின் மனதை மாற்ற காரியம் கை கூட, அங்கங்கே இருக்கும் அதிகார மையங்களின் அதிதீவிர ஆலோசனை, கண்காணிப்பு.

தந்திர வாக்கியம்  கை கூடுகிறது அங்கே.

எலே முருகப்பா…உனக்க களுத்திலே கிடக்குத அந்த வெள்ளிக்  கண்டிகையைக் களட்டிக் கொடு….

அது எங்க குலச்சின்னமாக்குமே பண்ணையாரே….

எலே…சொன்னதச் செய்டே…! – அதிகாரம் அங்கே மையம் கொள்கிறது. தந்திரம் தலை தூக்கி, மக்களையும், மன்னனையும் ஏமாற்றத் துணிகிறது.

இந்தக் கண்டிகையை அணைஞ்ச பெருமாள் களுத்திலே மாட்டு…கோபுரத்திலேருந்து அவன் விளுந்ததும், அடையாளம் காட்டணும்லா… செத்தவன் மாயாண்டி  மகன் முருகப்பன்னு சாட்சி சொல்லிடுவோம்…சாவுதது வரிகெட்டி, வரிகெட்டி நொடிச்சுப் போன முருகப்பனாக்கும்…தெரியுதுல்ல…எல்லாரும் கேட்டாச்சுல்ல…

முதல்ல இது நடக்கட்டும்.  சிக்கல் வந்தா பிறகு இந்த  முருகப்பன் வேற ஆளுன்னு சொல்லிப்போடுவோம்…ஊரிலே நாம சொல்லுததுதானே?

ராஜ காரியம்…ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆச்சுன்னா யாரு பிணை? நாயக்கன் நம்மள குடும்பத்தோடக் களுவுல ஏத்திப்புடுவானே…

நினைத்து அஞ்சியது போல் தவறாக ஏதும் நடவாமல், எல்லாமும் முறையாகவே நடந்தேறியதில் திட்டம் தீட்டியவர்கள் ஆறுதல் கொள்கிறார்கள்.

ஆனால் மனிதர்களின் எல்லாச் செயல்பாடுகளுமா வெற்றி கண்டு விடுகின்றன? யாரை யார் முந்துவது? யாரை யார் வெற்றி கொள்ள தந்திரம் கைக்கொள்வது? தந்திரம் மேற்கொள்வது என்று திட்டமிடுகையிலேயே அதில் தவறுகளும் புகுந்து விடுகிறதுதானே? தெய்வ சாந்நித்யம் என்று ஒன்று யாருமறியாமல் நுழைந்து விடுமல்லவா? மனித மனம் அதை உணரத் தவறி விடுவது என்பதுதான் இன்றைய வரையிலான  இயல்பு.

ஒரு நன்மை கருதி ஒரு தவறு நிகழ்தல், அல்லது நிகழ்த்துதல் எனும்போது அதற்கு பலியாடுகளாவது எளிய மக்களில் ஒருவன்தானா? கால காலமாய்த் தொண்டூழியம் செய்யும் விளிம்பு நிலை மனிதனே  களபலிகொள்ளப்படுகிறான். அணைஞ்ச பெருமாள் சாவை விரும்பி அணைத்துக் கொள்கிறான். ஊருக்காக…மக்களுக்காக…அவன் மேற்கொள்ளும் ஈடு செய்ய முடியாத தியாகம்.

நாமொன்று நினைக்க தெய்வம் வேறு ஒன்று நினைத்து விடுகிறது.

முருகப்பனின் மனைவி அப்படியா வந்து தீக்கிரையாவாள்? யார்தான் எதிர்பார்த்தது இதை?

தெய்வம் இங்கே நின்று கொல்லவில்லை. அன்றே கொன்று விடுகிறது. யாரை? சதி செய்தவர்களை!

சதி மாதாவுக்கு மங்களம், எறிமாடனுக்கு ஜெயமங்களம்…உடன் நின்ற நங்கைக்கு சுபமங்களம்…என்று வெறிகொண்டு கோஷமிட்ட  அந்த நேரம்  எந்த உண்மை மறைக்கப்பட்டதோ, அந்தப் பொய்மைக்கு மாறான இன்னொரு உண்மை அங்கே பலியாகிப் போகிறது.

வாசித்து முடித்ததும் மனம் அதிர்ந்து போகிறது. அதிர்ச்சியிலிருந்து வெளிவர புத்தகத்தை மூடி வைப்பதுதான் சாத்தியமாகிறது. கந்தர்வனின் நினைவுகள் நம்மை சுற்றிச் சுற்றியடிக்கின்றன. அணைஞ்ச பெருமாள்….அவனைத் தந்திரத்தால் சாகடித்த அதிகார மையம்…

பாபகாரியங்கள் என்றேனும் எப்படியும் வெளி வந்துவிடும் என்பதுதான் நீதி. இது அன்றே நிகழ்ந்து விடுகிறது.

கந்தர்வன் என்பவன் மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் தொடர்பாக இருப்பவன் என்று பொருள் கொள்ளப்படுகிறது. இங்கே தேவனாகிய  அரசனையும், கீழ் அதிகார மையத்திலிருக்கும் மாமனிதர்களையும் தொடர்பு படுத்துபவனாய் அணைஞ்ச பெருமாள் திகழ்கிறான். பறக்கும் திறன் கொண்டவர்கள் கந்தர்வர்கள். அந்த மக்களுக்காக அவனின் உயிர்ப் பறவை பறந்து மேலே மேலே சென்று தேவர்களை மகிழ்விக்கும் இடத்தை அடைந்து விடுகிறது.

எண்ணிலடங்கா கதாபாத்திரங்களை உள்ளடக்கிய ஜெயமோகனின் இந்தப் படைப்பு  நம்மை வியக்க வைக்கிறது. மனதில் அங்கங்கே கட்டமிட்டு நிறுத்தி வைத்திருந்தால் தவிர இம்மாதிரிப் படைப்புக்களை நினைத்ததும் இத்தனை தெளிவாய்க் கொடுத்துவிடல் சாத்தியமாகாது என்று அவரது படைப்புத் திறன் குறித்து  மனம் பெருமிதம் கொள்கிறது.

மதுரை பெரியநாயக்கர் விஜயரெங்க சொக்கநாதர் தன் படைகளுடன் திருக்கணங்குடிக்கு வருகை தரும் அந்தப் பயணத்தில் என்னை நான் முழுமையாகக் கரைத்துக் கொண்டு கூடவே பயணித்து, எல்லாம் முடிந்த பின்னும் இன்னும் வெளியே வராமல் அடுத்து நிகழவிருக்கும் உண்மை தெரியவந்த ஊழ்வினைக்காகப் பயத்தோடு  காத்திருக்கிறேன்.

உஷாதீபன்

முந்தைய கட்டுரைஉள்ளம், கடிதம்
அடுத்த கட்டுரைசு.குணசேகரன்