காவல் மாடங்களும் பிரம்ம ராட்ஷசனும்- கடிதம்

(ஆலயக்கலை பயிற்சி முகாமில் பயின்றவர்களின் குழு ஒன்று ஆசிரியர் ஜெயக்குமாருடன் ஹம்பிக்கு கலைப்பயணம் ஒன்றை மேற்கொண்டது. அதன் பதிவு)

சிறுவயதில் கதை கேட்கும் பொழுது அதில் பிரம்ம ராட்சசன் யாரெனும் வந்தால் மிகவும் பயப்படுவேன் ( ராட்சசன்/பேய்/பூதம் பயம் இல்லை ஆனால் பிரம்மராட்சசனுக்கு பயம்) ஒருமுறை கதை சொன்ன ஒரு பெரியவர் என்னிடம் இதற்கெல்லாம் நீ பயப்பட வேண்டாம் பிரம்ம ராட்சசன் என்றால் படித்தவர்கள் தவறு செய்தால் தண்டிக்கப்படும் பொழுது அவர்களை ஊருக்கு வெளியே வைத்து விடுவார்கள் அவர்களுக்கு உணவு மற்ற எதுவுமே ஊருக்குள் இருந்து கிடைக்காது. அவர்களே அவர்கள் பாட்டைப் பார்த்துக் கொள்ள வேண்டும் அவர்கள் படித்தவர்களாக இருப்பதனால் அவர்கள் ஊருக்கு வருபவர்களை பார்த்து நல்லவர்களாக இருந்தால் மட்டுமே உள்ளே வர அனுமதிக்க முடியும். அதாவது எங்கோ ஊரை விட்டு மிகவும் தள்ளி ஒதுக்கப்புறமான ஒரு காவல் மாடத்தில் /மரத்தின் கீழ் தான் இருப்பார்கள். அங்கே வரும் வெளியூர்  வழிப்போக்கர்களிடமிருந்து சாப்பாடு வாங்கிக் கொள்வார்கள் கொடுக்கவில்லை என்றால் அடித்து பிடுங்குவார்கள். காலப்போக்கில் அவர்கள் ஆளையே அடித்து தின்பவர்களாகவும் ஆகி விட்டார்கள். அதனால் நீ அதற்கு பயப்படத் தேவையில்லை என்று தைரியமூட்டினார்.

கதை கேட்கும்/ படிக்கும் பொழுது , கதை மாந்தர்களில்  ஒவ்வொருவருக்கும் ஒரு இடம் ஒதுக்கி கொள்வேன் ( ராட்சசனுக்கு கிணறு,  ராஜகுமாரிக்கு உப்பரிகை )  ஆனால் இந்த பிரம்ம ராட்சசனுக்கு மட்டும் என்னால் ஒரு இடம் கொடுக்க முடியாமல் ஆகிவிட்டது.

கல்லூரி பருவத்தில் நண்பர்களுடன்  இது பற்றி பேசிக் கொண்டிருந்த பொழுது, ஒரு நண்பர் , நீ சொல்வதை எல்லாம் பார்த்தால் அது ஒரு யுஎஸ் கவுன்சலட் ஜெனரல் மாதிரி இருக்கு. அவங்க ஊரை விட்டு ரொம்ப தள்ளி வந்து உட்கார்ந்து இருக்கிறார்கள் கேள்விகள் கேட்டு சரியாக இருந்தால் அனுப்புகிறார்கள் கிட்டத்தட்ட இதுவும் ஒரு பிரம்ம ராட்சசன் வேலையாட்டம் தான் இருக்கு என்று கலாய்த்தார்கள். ஆனால் என் மனதில் உள்ள பிரம்ம ராட்சசன் அங்கே இறங்க மறுத்து விட்டான் நான் ஒரு நல்ல இந்திய பிரம்ம ராட்சசன் ஆக்கும், என்னை யூ எஸ் கவுன்சலெட்டில் விட்டு விடாதே என்று கண்ணீர் மல்கினான்.

பின்பு எகிப்திய Sphinx பற்றி படிக்கும் பொழுது அதையும் இதனுடன் இணைத்துப் பார்த்தேன். அதுவும் ஒரு சாபம் வாங்கிட்டு வந்து ஊருக்கு வெளியே உட்கார்ந்து , அங்கு வருகிறவர்களைவஎல்லாம்  கேள்வி கேட்டு நகரத்தின் உள்ளே போக அனுமதித்தது.  ஆனால் எகிப்திற்கும் போக மறுத்து விட்டான் என் பிரம்ம ராட்சசன்.

ஆலயக்கலை வகுப்பிற்காக ஹம்பி போய் இறங்கியவுடன் ஜெயக்குமார் அவர்கள் ஒரு காவல் மாடத்தை சுட்டி காட்டி இந்த மாதிரி இங்க கைவிடப்பட்ட காவல் மாடங்கள் தனியாக ஒன்று இரண்டு தொங்கிக்கொண்டு  இருக்கிறது  என்று கூறினார்.  நான் தனியாக வந்தால் அதை பார்த்திருப்பேனோ என்பது சந்தேகம் தான். இது மாதிரி ஒரு முறையான பயிற்சி வகுப்பில் தான் வெவ்வேறு கோணங்களில் அங்கு உள்ளவற்றின் மீது வெளிச்சம் பாய்கிறது.

என் பிரம்ம ராட்சசனும், என்னை இங்கே இறக்கி விட்டு விடுங்கள். அந்தக் கல்லின் மீதி இருக்கும் காவல் மாடமே எனது இடம். இத்தனை வருடங்கள் என்னை சுமந்து அலைந்ததற்கு நன்றி என்று கண்ணீருடன் விடைபெற்றுச் சென்றான்.ஹம்பியி ல் எங்கிருந்து பார்த்தாலும் அந்த கல்லின் மீது இருக்கும் காவல் மாடத்தையே புகைப்படங்கள் எடுத்தேன். ஹம்பியை விட்டு கிளம்பும் பொழுதுதான் பார்த்தேன் G20 summit  அழைப்பிதழ் போஸ்டர்களில் இதன் புகைப்படத்தையே போட்டு இருக்கிறார்கள் .

Sphinx வார்த்தை மூலத்தை தேடி பார்த்தால், எகிப்து வார்த்தையான  shesepankh என்கிற சொல்லின் கிரேக்க திரிபே . ஒரு உயிருள்ள பாறையின் மேல் எழுப்பப்பட்ட ஒரு சிலை.  எப்படியோ என் பிரம்ம ராட்சசனுக்கு அவனுக்கான இடம் கிடைத்துவிட்டது

ஹம்பி கூட்டு  பயணம் அமைத்தவர்களுக்கு நன்றி. இன்னும் எத்தனையோ கதை  மாந்தர்கள் அவர்களுக்கான இடம் இல்லாமல் மனதிலேயே அடைப்பட்டு கிடக்கிறார்கள். இந்த மாதிரியான வேறு சில பயணங்களில் அவர்களுக்கான இடம் அமையும் என்று நம்புகிறேன்.

அன்புடன்,

மீனாட்சி

முந்தைய கட்டுரைகோட்டி, தெலுங்கில்
அடுத்த கட்டுரைவிருதுகள், கனவுகள் -கடிதங்கள்