பேய் தெய்வமாதல் – கடிதம்

குலதெய்வங்கள் பேசும் மொழி – முன்னுரை

இது அக வெளி -லட்சுமி மணிவண்ணன்

தெய்வங்கள் தேவர்கள் பேய்கள் – வாங்க

மின்னூல் வாங்க

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

எங்கள் ஊர் காவிரியாற்றின் அருகில் உள்ள பென்னாகரம். ஆண்டுதோறும் ஒகேனெக்கலில் ஆடிப்பெருக்கு அரசுவிழாவாக நடைபெறும். கடந்த ஆண்டு என் தந்தையுடன் அருகில் உள்ள ஒகேனக்கலுக்கு சென்றிருந்தேன். ஆடிப்பெருக்கின் புது வெள்ளம் காரணமாக காவிரி ஆற்றில் இரு கரைகளிலும் வெள்ளம் சலசலத்து சென்று கொண்டிருந்தது. விழா தொடங்க நேரமாகும் என்பதால் நானும் அப்பாவும் கரையோரமாக ஆற்றுவெள்ளத்தை பார்த்துக்கொண்டிருந்தோம். அப்போது அப்பா கரையோரம் இருந்த மரத்தடியில் இருந்த நடுகல்லை பார்த்து அது என்ன சாமி ? என்று கேட்டார். முதலில் அதை சிறிய நாகங்களில் சிற்பம் என்று நினைத்தேன் பின்னர் கழுவிலேற்றபட்ட ஒருவனுடைய நடுகல் என்று தெரிந்தது. அந்த மரம் வரையிலும் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. முதலில் யாரோ அங்கு அதை வழிபட்டிருக்களம் ஆனால் இப்போது கைவிடப்பட்டிருந்தது.

அப்பாவிடம் அந்த நடுகல் பற்றியும் கழுவேற்றம் பற்றியும் சொன்னேன். பின்னர் கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் நடைபெற்ற நடுகற்கள் பற்றிய கண்காட்சிக்கு சென்றிருந்தேன் அதனை “யாக்கை” என்ற தன்னர்வளர் குழு நடத்தியது. அவர்களிடம் நான் பார்த்த நடுகல் பற்றியும் “கோபல்ல கிராமம்” நாவலில் கழுவேற்றம் பற்றி குறிப்பிட்டிருந்ததை கூறினேன். “தீரசெயல் புரிந்தவர்களுக்கு மட்டும் தானே நடுகல் வழிபாடு செய்வார்கள் குற்றம் செய்தவர்களுக்கும் நடுகல் எடுப்பார்களா என்றனர்.”. எனக்கும் உள்ளூர அந்த சந்தேகம் இருந்தது. வீர செயல் புரிந்த மூதாதைகளை வணங்கும் மக்கள் ஏன் குற்றம் புரிந்த ஒருவனையும், பரிதாபமாக இறந்த ஒரு ஒரு பெண்ணையும் ஏன் அவர்கள் வழிபடவேண்டும்?

இந்திய கிராமங்களில் விக்ரமாதித்தன் – வேதாளம் கதைகளில் வரும் வேதாளத்தை வழிபடுதல் வழக்கத்தை அறிந்தபோது அது எனக்கு வியப்பயும் மேலதிகமாக குழப்பத்தையும் அளித்தது. எங்கள் ஊரில் காவல் தெய்வம் முனியப்பன் சிறுவயதில் முனியப்பன் ஊரைசுற்றி காவல் போவதாகவும் எதிர்படுபவர்களை அறைவதாகவும் கூறக் கேட்டதுண்டு. முனி யடித்தது என்று பேசியும் கேட்டிருக்கிறேன்.  தெய்வம் தன்னை வழிபடும் மக்களை ஏன் அடிக்க வேண்டும்? பின் மக்கள் ஏன் அவரயே வழிபடவேண்டும்?  என்று தோன்றியது.

ஒருநாள் ஜெக்கி வாசுதேவ் அவர்கள் கிருஷ்ண ஜெயந்தியில் கிருஷ்ணரை பற்றிப் பேசிய தொடரை அவரது பிரத்தியேக வலைத்தளத்தில் பார்த்தேன் அதில் தன்னை அழிக்க பிறந்த குழந்தை கோகுலத்தில் வளர்வதை அறிந்த கம்சன் பூதனா என்ற அரக்கியை அனுப்பி அந்த மாதத்தில் பிறந்த அனைத்து குழந்தைகளையும் கொன்றுவிடும்படி ஆணையிட்டார். பகிரங்கமாக செய்தால் பிரஜைகளுக்கு தன்மீது அதிருப்தி என்படும் என்று இந்த ஏற்பாட்டை செய்தார். பூதனாவும் அந்த மாதத்தில் பிறந்த குழந்தைகளை யாருமறியாமல் கொன்றால் பின் நந்தரின் குழந்தையைப் பற்றி கேள்விபட்டு கிருஷ்ணனை கொல்ல யாருமறியாமல் கிருஷ்ணனை காட்டிற்குள் தூக்கிசென்று அவனுக்கு பால்கொடுப்பது போல குழந்தையை அமுக்கி கொன்றுவிடலாம் என்று எண்ணமிட்டு கிருஷ்ணனுக்கு பால்கொடுப்பாள்

அந்த தருணத்தில் அந்த அற்புதம் நிகழும் குழந்தை கிருஷ்ணன் அவள் மார்பில் பால் குடிக்கும் தருணத்தில் பூதனை அளவில்லாத ஆனந்தம் கொள்வாள், அவளின் நோக்கங்கள் யாவும் மறந்து அவள் மனம் முழுக்க பரவசத்தில் நிறைந்தது. தான் யார், எதற்காக இங்கு வந்தோம் என்பதை மறந்து ஒரு ஏகாந்தத்தில் திளைப்பாள். அப்போது அவளுக்கு இனி ஏதும் தேவையில்லை ஏனென்றால் இறைவனே என் மார்பில் பால் அருந்திவிட்டார் என்ற பரவசத்தில் அவளின் உடலை துறந்துவிடுவாள். அதுவரை பச்சைப் பிள்ளைகளை கொன்ற அவள் அந்த தருணத்தில் ஒரு தெய்வ நிலையை அடைவாள். இதை கேட்ட பின் என் மனதில் பூதனை கோரைபற்களுடன், அருவருப்பான தோற்றத்தில் இருந்து ஒரு சாந்தமான தெய்வமாக தோன்றினாள். அதே போல தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் புத்தகத்தில் குருதி குடிக்கும் நீலியாக, யட்சியாக குலம் அழிக்க வரும் அவை வருபவை பின் அதே குலத்தின் காவல் தெய்வமாக மாறும்.

அன்பும் பயமும் முற்றிலும் நேர் எதிரானவை அன்பில்லத இடங்களில் பயம் தோண்டும் என ஓஷோ கூறுவார். உயிர்பலி கேட்டு குருதி குடிக்கும் அவை வாளேந்தி வரும் அற தேவதைகள் என்று உணரும் அந்த தருணத்தில் அவற்றின்மீது ஒரு அன்பு பிறக்கிறது. என்னும் எண் குலத்தையும் காப்பாய் என்று அதயே சரண்புகுகிறோம். அவேசமாக தன்னை கட்ட நினைப்பவர்களை கொன்று வீசும் ஆற்றல் படைத்த பொண்ணிறத்தாள் ஒரு கணவணையிழந்த வெள்ளைகுட்டி என்ற பெண்ணின் கண்ணீருக்கு முன் அடங்கியமர்கிறாள்.

கள்ளியன்காட்டு நீலி கதையில் மனிதனையும் அவன் மனைவியும் கொன்ற நீலி அவர்களின் குழந்தையை விட்டு விடுகிறாள். நீர் இறைக்கச் செல்லும் கிராம மக்களை பலி வாங்கும் பூலங்கொண்டாலும் ஒரு கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவம் பார்க்க சிறுமி வடிவில் வந்தாள். ஒரு தருணத்தில்,ஒரு அற்புத தருணத்தில் பேயாக வரும் அவர்கள் தெய்வமாக மாறும் Sublimation நடைபெறுகிறது. இவற்றை தர்கிப்பதால் இதன் மையத்தை அணுக இ்யலாது ஆனால் இந்த மரபின் தன்மை இப்படித்தான் என்ற புரிதல் ஏற்படும் போது நம்மால் இந்த தெய்வங்களை கிரகிக்க முடியும்.

இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ள பல கதைகட்டுரைகள் நாட்டார் தெய்வங்களை அணுகுவது பற்றிய புரிதல்களை அளிக்கிறது. உதாரணமாக காத்தவராயன் கதை வீரனாக, உடைவலிமை பெற்றவனாக, மாந்திரீகம் தெரிந்தவனாக வரும் காத்தவராயன் தான் விரும்பிய பெண்ணை அடைய முயன்று கழுவேறுகிரான். பின் வீரனான ஒருவனை கழுவேற்றிய குற்றவுணர்வு அவனை தெய்வமென்றாக்குகிறது. கோபல்ல கிராமம் நாவலில் வரும் அந்த இரக்கத்தின் அடிப்படையில் தெய்வமாக வழிபடுகின்றனர்.

இறுதி முடிவுரையில் அந்த பழங்குடிப் பெண் கிரிஸ்துவயும் , கிரிஸ்தவர் பழங்குடி தெய்வத்தை பற்றி எண்ணுவது அந்த தொகுப்பில் உள்ள அனைத்து கதைகளின் சாரத்தை பார்ப்பதாக , ஒரு மலையில் ஏறி அதன் சிகரத்தை அடைந்து திரும்பி பார்ப்பதாக அமைந்தது.

நன்றி

தமிழ் குமரன்,

முந்தைய கட்டுரைபுதுமைப்பித்தனின் சிடுக்குகள்
அடுத்த கட்டுரைஷேக்ஸ்பியரின் ஹேம்லெட்