பங்களிப்பாற்றுதலின் வழி

ஜெ,

தூரன் விருது விழா திருப்திகரமாகவும் மிகச் சிறப்பாகவும் நடைபெற்றது. ஒவ்வொரு முறையும் தங்களை சந்தித்து திரும்பும் போது ஊக்கமும் உற்சாகமும் கிடைத்தாலும், மனதின் ஓரத்தில் ஒரு வெறுமையும் சேர்ந்து விடுகிறது. குருபூர்ணிமைக்கு பின் இந்நிலை வேரூன்றி விட்டது. இதனால் உங்களுக்கு கடிதம் எழுதலாம் அல்லது தனித்து பேசிவிடலாம் என நினைத்தேன்‌. தனித்து பேசுவதற்கு சூழல் அமையவில்லை.

நேற்றைய  தினம் நீங்கள் கூறிய  பங்களிப்பு என்ற வார்த்தை என்னை உலுக்கி கொண்டே இருக்கிறது. தற்போது சைவத்தில் சில செயல்கள் செய்தாலும் மனம் நிறைவை அடையவில்லை . நாம் செய்து கொண்டிருப்பது சரியா என்று எண்ணம் எழுகிறது. ஜெ,  கோவில் பயணம், சைவம்,தத்துவம் சார்ந்த எதுவும் எனக்கு உகப்பனவாக இருக்கிறது. இக்கால சூழலில் சைவத்திற்கு பங்களிக்க வேண்டுமெனில் செய்ய வேண்டியது என்ன?  தங்கள் வழிகாட்டுதலை எதிர் நோக்கி….

பிரியமுடன்

பி

தன்மீட்சி நூல் வாங்க

தன்னைக் கடத்தல் நூல் வாங்க

ஒளிரும் பாதை வாங்க

அன்புள்ள பி,

உங்கள் எண்ணமும் மனநிலையும் புரிகிறது. ஏறத்தாழ இதேபோன்று எண்ணுபவர்களின் கடிதங்கள் அவ்வப்போது வருவதுண்டு. என் எண்ணங்களைத் தொகுத்துச் சொல்கிறேன்.

முதல் விஷயம், நம்முடைய அந்தரங்கமான தேடலையும் அதை நிறைவுகொள்ளச் செய்யும் செயலையும் அன்றாட வாழ்க்கையில் இருந்து பிரித்து தனியாகவே வைத்திருக்கவேண்டும். அதை உலகியல் வாழ்க்கையுடன் குழப்பிக்கொள்ளலாகாது. இளமையில் பலர் செய்யும் பிழை இது. பின்னர் அப்பிழையை உணர்வார்கள்.

இது ஏன் என்றால் நம் கனவுகள் ஒரு களத்தில் நிலைகொள்கின்றன. உலகியல் முற்றிலும் வேறொரு களத்தில் உள்ளது. உலகியலில் முதன்மையான பலவற்றை விட்டுவிட்டு நாம் கனவுகளில் ஈடுபட்டோமென்றால் அக்கனவுகளில் இந்த உலகியல் விஷயங்கள் கழிக்கப்படுகின்றன.  அக்கனவுகள் குறைபடுகின்றன.

ஒன்றின் பொருட்டு நீங்கள் இன்னொன்றை கைவிடுவீர்கள் என்றால்  நீங்கள் கைவிட்டவை பெருகிக்கொண்டே இருக்கும். ஒரு கடன்போல. அவற்றுக்கு நிகராக நீங்கள் கைக்கொண்ட இலட்சியங்களில் இருந்து எடுத்துக் கொடுக்க வேண்டியிருக்கும்.ஆகவே நாம் கைவிடுவன அற்பமானவையாக இருக்கவேண்டும். அவை அற்பமானவை ஆகுமளவுக்கு நாம் பெருகி வளரவும் வேண்டும்.

ஆகவே, நமக்குரிய இலட்சியங்கள், கனவுகளுடன் அன்றாட வாழ்க்கையை குழப்பிக்கொள்ளலாகாது. முடிந்தவரை இயல்பாக, சாதாரணமாக, பெரிய எதிர்பார்ப்புகள் அற்றதாக உலகியல் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதே உகந்தது. மிகக்குறைவான உளச்சக்தி அதில் செலவிடப்படவேண்டும். அங்கே நம் கவனம், ஆற்றல் வீணாகலாகாது. உணர்ச்சிகள் அங்கே குவியலாகாது. அது ஒரு தளம். தொழில் போல.

இலட்சியங்களின் உலகில் இரண்டு களங்களுண்டு. ஒன்று, அவ்வண்ணம் வாழ்தல். அன்றாடத்தை அதன்படி அமைத்துக்கொள்ளுதல். இரண்டு, பங்களிப்பாற்றல். இரண்டும் அடிப்படையில் ஒரே செயல்பாட்டின் இரு முகங்கள்தான். பங்களிப்பாற்றுவதன் வழியாகவே அன்றாடத்தை முழுமையாக அர்த்தப்படுத்திக் கொள்ள முடியும்.

சைவத்தில் உங்களுக்கு ஈடுபாடுள்ளது. அப்படியென்றால் சைவத்தைக் கற்றல், சைவம் சார்ந்த வாழ்க்கையை மேற்கொள்ளுதல் இரண்டும் முதல்களம் சார்ந்தவை. அவை இன்றியமையாதவை. வாழ்நாள் முழுக்க கற்றுக்கொண்டே இருக்கவேண்டும். மெய்யியலைப் பொறுத்தவரை கற்றவை அன்றாடவாழ்க்கையில் அனுஷ்டானங்களும் ஆகவேண்டும். அந்நிலையிலேயே அவை நம் ஆளுமையாக ஆகின்றன.

அடுத்த நிலையே பங்களிப்பு. கற்றல் சிறப்புற நிகழ்வது பங்களிப்பாற்றும்போதே. சிறிய அளவிலேனும் பங்களிப்பாற்றும்போது நம்மைப் பற்றி நமக்கு ஒரு நிறைவு உருவாகிறது. நம்முடைய கற்றல் கூர்மையாகிறது. நம் அகமொழி கூர்மையாகிறது. பங்களிப்புகள் எல்லாமே கற்பித்தல்களும்தான். கற்றலின் மறுபக்கம் கற்பித்தல்.

தமிழில் இன்று சைவப்பணி பெருமளவுக்கு தொடப்படாமலேயே உள்ளது. சைவம் என எஞ்சியிருப்பது மரபான சைவக்கல்விமுறையும், சில சொற்பொழிவாளர்கள் சிலரின் பணியும்  மட்டுமே. நவீன மொழியில், நவீன ஊடகங்களில் சைவம் பற்றிய பதிவுகளின் தேவை உள்ளது. இன்று வழக்கொழிந்த பழைய நடையிலுள்ள சைவநூல்களுக்கு புதிய மொழியில் புதிய வடிவங்கள் தேவையாகின்றன. புதிய பேச்சாளர்கள் தேவையாகிறார்கள். காணொளிகளாகவும் சைவம் கிடைக்கவேண்டியுள்ளது. இன்றைய தலைமுறையில் கணிசமானவர்கள் வாசிப்பில் இருந்து அகன்றுகொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இவையெல்லாம் நீண்டகால முயற்சியால் இயற்றப்படவேண்டியவை. அதற்குரிய தகுதியை ஈட்டிக்கொள்ளவேண்டியுள்ளது. அதற்கான ஒரு வழிமுறை என ஒன்றைச் சொல்கிறேன். தமிழ் விக்கி போன்ற தளத்தில் நீங்கள் சைவ நூல்கள், சைவக் கருத்துநிலைகள், கொள்கைகள், சைவ நிறுவனங்கள் பற்றிய பதிவுகளைப் போடலாம். வெவ்வேறு நூல்களில் இருந்து அவற்றை தொகுக்கலாம். அது ஒரு மாபெரும் கல்வி. கூடவே பங்களிப்பும்கூட.

ஜெ

முந்தைய கட்டுரைதாமரைச்செல்வி
அடுத்த கட்டுரைமதுரை புத்தகக் கண்காட்சி