இலட்சியவாதியின் புதைகுழி

அன்புள்ள ஜெ,

நலம்தானே.

என்னுடைய ஒரு வினா. இதை தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

தூரன் விருது விழா பற்றி சிவராஜ் எழுதிய குறிப்பில் (தமிழ் விக்கி -தூரன் விருது விழாவில்…) பச்சை மனிதன் என்னும் சினிமாவை எடுக்க முயன்ற சரத் சூர்யா அதற்காக நிதிவசூல் செய்ததையும், பின்னர் அதை எடுக்கமுடியாமல் தெருவிற்பனையாளராக ஆகிவிட்டதையும் பற்றி எழுதியிருந்தார். அந்தப்படத்தை முடிக்க வேறுவேறு உதவிகள் வந்தபோதும் அவர் அதை மறுத்துவிட்டார் என்றும், பொதுமக்களின் நிதியிலேயே அதைச் செய்யவேண்டும் என்பது தன் கொள்கை என்றும் அதில் சமரசம் செய்யவிரும்பவில்லை என்றும் சொல்லிவிட்டார் என்றும் சிவராஜ் எழுதியிருந்தார். இந்த மனநிலை சரியானது என நீங்கள் நினைக்கிறீர்கள?

அசோக்ராஜ்

தன்மீட்சி நூல் வாங்க

தன்னைக் கடத்தல் நூல் வாங்க

ஒளிரும் பாதை வாங்க

அன்புள்ள அசோக்,

என்னுடைய பார்வை வேறு. நான் என் வழியை என் அனுபவங்களினூடாக அமைத்துக்கொண்டவன். அந்தப்புரிதலை ஓர் அறுதிநெறியாக எவர்மேலும் சுமத்த விரும்பவில்லை. இதுபோன்ற தனிப்பட்ட விஷயங்களில் என் வழியை முன்வைப்பேன், அவ்வளவுதான்.

நான் புரிந்துகொண்ட ஒன்றுண்டு. தமிழ்ச்சூழலில் இலட்சியவாதம், பொதுச்சேவை பற்றிய ஆழமான அவநம்பிக்கை உள்ளது. ஆகவேதான் நம் குடும்பங்களெல்லாம் அதை அஞ்சுகின்றன. இலட்சியவாதிகள் பற்றிய எந்த அவதூறையும் உடனடியாக மக்கள் நம்பிவிடுகிறார்கள்.

இரண்டு வகையான அவநம்பிக்கைகள் உள்ளன.

ஒன்று, இலட்சியவாதமென்பது ‘வாழ்க்கையில் ஒதுக்கப்படுபவர்களுக்கு’ உரியது. அல்லது இலட்சியவாதம் பேசுபவர்கள் ஒதுக்கப்பட்டு அறுதியாகத் தோல்வி அடைவார்கள்.

இரண்டு, இலட்சியவாதம் அல்லது பொதுச்சேவை என்பது ஒருவகையான பாவனை. உள்ளூர சுயநலநோக்கம் இருக்கும்.

இவ்விரண்டு நம்பிக்கைகளுக்கும் காரணமாக அமையும் நூற்றுக்கணக்கான உதாரணங்கள் நம்மைச் சுற்றி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். நீங்கள் இலட்சியவாதம் பற்றிப் பேசினால் உடனே அவர்களையே சுட்டிக்காட்டுவார்கள்.

இந்த இரண்டு எதிர்மறை மனநிலைகளையே ஓர் இலட்சியவாதி, ஒரு பொதுச்சேவையாளன் இன்று எதிர்கொள்ளவேண்டும். அவற்றுக்கு தீனிபோடுபவனாக அவன் ஒரு போதும் ஆகிவிடக்கூடாது. அது வருங்காலத்திலும் இலட்சியவாதம் சார்ந்து, பொதுநலப்பணி நோக்குடன் அடுத்த தலைமுறையினர் எழுந்து வருவதை தடுத்துவிடும்.

மிகையுணர்ச்சியால், மிகைக்கற்பனைகளால் உந்தப்பட்டு இலட்சியவாதம், பொதுச்சேவை என இறங்குபவர்கள் பலர் உண்டு. குறைந்த நாட்களிலேயே அவர்களின் விசைகள் இல்லாமலாகிவிடும். பலர் எந்த தயாரிப்பும் இல்லாமல், எவ்வகையிலும் தன்னை தயார்ப்படுத்திக்கொள்ளாமல், செயலை விடாப்பிடியாகச் செய்துமுடிக்கும் மனவுறுதியும் இல்லாமல் இலட்சியவாதம் பேசி பொதுச்சேவைக்கு வருவார்கள். அவர்கள் நடைமுறைச் சூழலைச் சந்தித்ததுமே தோல்வியடைந்துவிடுவார்கள்.

ஆனால் இவர்கள் அதை முழுக்க முழுக்க சூழலின் குறைபாடாக மட்டுமே முன்வைப்பார்கள். தங்கள் தோல்வியையே ஒரு வகை தியாகமாக சித்தரிப்பார்கள். கண்ணீருடன் புலம்பி, கையறுநிலையை முன்வைத்து விலகிக்கொள்வார்கள். பின்னர் வாழ்நாள் முழுக்க கசப்புடன், சலிப்புடன் திகழ்வார்கள். கொஞ்சம் நம்பிக்கையுடன் எவர் இவர்களை அணுகினாலும் அதில் மண்ணை அள்ளிப்போட்டுவிடுவார்கள்.

இவர்களின் நல்லியல்பை நான் ஐயப்படவில்லை. ஆனால் உண்மையில் இவர்களே இலட்சியவாதம், பொதுச்சேவை சார்ந்த எல்லா செயல்பாடுகளுக்கும் முதன்மை எதிரிகள். இலட்சியவாதம், பொதுச்சேவை ஆகியவை பயனற்றவை என சொல்லும் உலகியலாளர்கள் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டும் முன்னுதாரணங்களும் இவர்களே. இவர்களின் எதிர்மறை அழுத்தம் சாதாரணமானது அல்ல.

இலட்சியவாத நோக்குடன் பொதுப்பணிக்கு வரும் ஒருவர் ஒருபோதும் பொதுவெளியில் தன்னை தோல்வியடைந்தவராக, கைவிடப்பட்டவராக சித்தரிக்கக்கூடாது. ஒருபோதும் பொதுவெளியில் புலம்பக்கூடாது. தோல்வி தோல்விதானே ஒழிய அது ஒருபோதும் தியாகம் அல்ல. தோல்வியின் பொறுப்பை தோற்றவர்தான் எடுத்துக் கொள்ளவேண்டும். அது ஏன் என அவர் ஆராயவேண்டும். கற்கவேண்டும். மேலே செல்லவேண்டும்.

இலட்சியவாதச் செயல்பாடு எதுவானாலும் எளிமையானது அல்ல. அது நம் சமூகத்தின் பொதுவான மனநிலைக்கு எதிரான ஒன்று. ஆகவே அதற்கு இயல்பான ஆதரவு அமைவது அரிதினும் அரிது. இலட்சியவாதத்தை நம் சமூகம் இளக்காரமாகவே பார்க்கும், அல்லது ஐயப்படும். உள்நோக்கம் கற்பிக்கும். அவதூறு செய்யும். இலட்சியவாத நோக்குள்ள பொதுப்பணியை நம் பெரும்பான்மை மக்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள், நம்ப மாட்டார்கள். செய்து காட்டியபிறகே அவர்களால் அதைக் கொஞ்சமேனும் புரிந்துகொள்ள முடியும்.

இலட்சியவாதச் செயல்பாடு என்பது ஒரு ஆவேசமான போர் அல்லது கிளர்ச்சி அல்ல. உயிர்கொடுக்கும் தியாகம் அல்ல. மிகையுணர்ச்சிக் கொந்தளிப்பின் விளைவு அல்ல. மிகையுணர்ச்சிகள் நீண்டகாலம் நீடிக்க முடியாது. இலட்சியவாதம் என்பது அன்றாட வாழ்க்கையாக ஆகும்போதே அது பயனுள்ளது. சிறுகச்சிறுக நீண்டகாலம் ஆற்றப்படும் இலட்சியவாதச் செயல்களே உண்மையான செயல்பாடுகள். மற்றவை வெறும் நடிப்புகள், நமக்கு நாமே நம்மையறியாமலேயே நடித்துக்கொள்பவை அவை.

அன்றாட வாழ்க்கை என்பது முழுக்க முழுக்க உலகியல் சார்ந்தது. அது ஒரு வணிகம் போலத்தான். நடைமுறை யதார்த்தங்களைப் புரிந்துகொண்டு, உரிய கணிப்புகளுடன், தோல்விகளில் இருந்து கற்றுக்கொண்டு, குறையாத பொறுமையுடன், விடாப்பிடியாகச் செய்யவேண்டியது அது. அப்படிச் செயலாற்றுபவர்களே இலட்சியவாதத்தில் வெல்பவர்கள், எதையேனும் செய்து முடிப்பவர்கள். அவர்களே சரியான முன்னுதாரணங்கள்.

மிகுந்த வியப்பளிக்கும் ஒன்றுண்டு. இலட்சியவாதநோக்குடன் பெரும்பணிகளை ஆற்றியவர்களை, வென்றவர்களை நம் சமூகம் பொருட்படுத்துவதில்லை. அவர்களை மறந்துவிடுகிறது. நினைவூட்டினால் ஒரு வணக்கத்தைப் போட்டுவிட்டு போய்விடுகிறது. ஆனால் தோற்றவர்களைக் கொண்டாடுகிறது. அவர்களைப் பற்றி கண்ணீர்க் கதைகளை உருவாக்குகிறது. தோற்றவர்களை சுட்டிக்காட்டி ‘சமூகத்தின் சுரணையின்மையை’ சாடும் குறிப்புகளை நாம் அன்றாடம் பார்த்துக்கொண்டே இருக்கிறோம்.

ஏனென்றால் தோல்வியடைந்தவர்கள் ‘தியாகிகள்’ ஆக்கப்படுகிறார்கள். வீழ்ச்சியில் ஒரு ’சோககாவியத் தன்மை’ உள்ளது. அது மக்களுக்கு பிடிக்கும் ஒரு ‘கதையாடல்’. ஆனால் உள்ளூர அவர்கள் அந்தத்தோல்வியை ரசிக்கிறார்கள். இலட்சியவாதமென்றால் அது தோல்விதான் அடையும் எனும் அவர்களின் நம்பிக்கையை அது வலுவூட்டுகிறது. ”நல்லவேளை நான்லாம் சூதானமா இருந்துக்கிட்டேன்” என உள்ளூரச் சொல்லிக்கொள்கிறார்கள். வெளியே “அய்யய்யோ இலட்சியவாதியை ஒதுக்கிட்டாங்களே” என்று கூச்சலிடுகிறார்கள். தங்கள் அன்றாட உலகியல்தன்மை, தன்னலம் ஆகியவற்றை தங்களுக்கே நியாயப்படுத்திக்கொள்ள பொதுமக்களின் உள்ளம் போடும் நாடகம் இது.

இந்நாடகத்தின் இரைகளாக ஆகிவிடுவதே இலட்சியவாதம் பேசுபவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய புதைமணல். பொதுமக்களின் இரக்கத்திற்கும், அதன் வழியாகக் கொண்டாட்டத்திற்கும் உரிய ஒரு தியாகப்பிம்பமாக தங்களை ஆக்கிக்கொள்ள இலட்சியவாதிகள் தொடர்ச்சியாக தூண்டப்படுகிறார்கள். அது இலட்சியவாதியின் ஆன்மா கறைபடும் இடம் என நான் நினைக்கிறேன்.

இலட்சியவாதி ஒருபோதும் இரக்கத்திற்குரியவராக இருக்கலாகாது. இலட்சியவாதம் பொதுச்சமூகத்தால் அண்ணாந்து வியப்புடன் பார்க்கப்படவேண்டும். ஒருபோதும் குனிந்து இரக்கத்துடன் பார்க்கப்படலாகாது.. அது அவருக்கே தன்மீதிருக்கும் நம்பிக்கையை மெல்லமெல்ல அழிக்கும். இலட்சியவாதி மீதான இரக்கம் என்பது இலட்சியவாதம் மீதான இளக்காரத்திற்கே வழிவகுக்கும்.

ஆகவே, இலட்சியவாதிக்கு ‘காணிக்கை’களாகவே நன்கொடை அளிக்கப்படவேண்டும். அவருக்கு எவரும் ‘நிதியுதவி’ அளிக்கலாகாது. ஒரு பெருஞ்செயலுக்கான காணிக்கைகள் அளவிலாது பெருகும் தன்மைகொண்டவை. இவ்வுலகில் மாபெரும் செயல்கள் முழுக்க அப்படி நடத்தப்பட்டவைதான். எந்த பெருநிறுவனத்தையும்விட அறக்கொடை நிறுவனங்களே பெரியவை. ஆனால் இரக்கப்பட்டு அளிக்கும் நிதியுதவிகள் மிகமிக எல்லைக்குட்பட்டவை. ஒருமுறை அளிப்பவர் தொடர்ந்து அளிக்க மாட்டார்.

ஆகவே பொதுப்பணி செய்பவர் தெளிவான திட்டத்துடன் மட்டுமே நிதியுதவி பெறவேண்டும். நிதியுதவி பெற்றால் எந்நிலையிலும், எதைச்செய்தும் அச்செயலை செய்து முடிக்க வேண்டும். நான் ஒரு செயலுக்காக நிதியுதவி கோரிப்பெற்றேன் என்றால் அதைச் செய்து முடிப்பேன். போதிய நிதி திரளவில்லை என்றால் என் கடைசிப் பைசாவையும் செலவிடுவேன். மேலும் பணம் தேவை என்றால் வழிப்பறி செய்யவும் தயங்கமாட்டேன்.

முடிக்கப்பட்ட செயலே செயல். முடிக்கப்படாத செயல்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. நல்ல நோக்கங்களும், ஆத்மார்த்தமான முயற்சிகளும் எவ்வகையிலும் பொருட்டானவை அல்ல. அவற்றை நாம் கணக்கில் கொள்ளலாம், ஆனால் செய்துகாட்டப்பட்டவையே எல்லாவகையிலும் பயனுள்ளவை.

ஒரு செயலைத் தொடங்கி, நிதிபெற்று, முடிக்காமல் விட்டுவிடுபவர் நிதியளித்தவருக்கு ஓர் ஏமாற்றத்தை அளிக்கிறார். மேலும் பல பணிகளுக்கு நிதி வருவதை தடுப்பவராகவும் மறைமுகமாக ஆகிவிடுகிறார். அவரை நான் மதிப்பதில்லை.

அதேபோல ஒரு செயலைத் தொடங்கிவிட்டு, பாதிசெய்துவிட்டு, அது சரியாக வரவில்லை அல்லது அதில் தோல்வி கிடைத்தது என்று சொல்லி, மேலும் நிதிகோருவதும் தவிர்க்கப்பட வேண்டியதுதான். அது பொதுமக்களிடம் அச்செயலுக்கு முற்பட்ட பொதுப்பணியாளர் செயலாற்றும் திறமை இல்லாதவர் என்னும் உளப்பதிவை உருவாக்கும். அவர் செயல்கள் வெற்றிபெறாது என்னும் அவநம்பிக்கையை வளர்க்கும்.

பொதுப்பணி செய்பவர் செயல்வீரராகவே இருக்கவேண்டும். அவ்வண்ணம் மட்டுமே அவர் பொதுவெளிமுன் தன்னை முன்வைக்கவேண்டும். அவர் தன் கனவுகளை மட்டுமே முன்வைக்கவேண்டும். அக்கனவுகள் உருவாக்கும் நேர்நிலை ஆற்றலை மட்டுமே அவர் பரப்பவேண்டும். அதை நோக்கியே பிறர் வந்துசேர்வார்கள். அந்த வெற்றி மனநிலையையே அனைவரும் பகிர நினைப்பார்கள். அத்தகைய உளநிலைகொண்ட செயல்பாடுகளே மெய்யாகவே எதையாவது சாதிக்கமுடியும்.

ஜெ

***

ஆயிரங்கால்களில் ஊர்வது

முந்தைய கட்டுரைஎஸ்.எஸ்.சர்மா
அடுத்த கட்டுரைஇருந்துகொண்டே இருப்பவர்கள்