விதைசேகரிப்புக்காக ஓர் இந்திய மிதிவண்டிப் பயணம்…

தன்மீட்சி நூல் வாங்க

தன்னைக் கடத்தல் நூல் வாங்க

ஒளிரும் பாதை வாங்க

யசோக் சுப்ரமணியம், பொள்ளாச்சியில் ஆனைமலை அடிவாரத்தில் அமைந்துள்ள காளியாபுரம் எனும் கிராமத்தைச் சேர்ந்த இளைஞன். முந்தைய தலைமுறையில் சிறிது நிலம் வைத்திருந்து, காலச்சூழலால் அதையிழந்து அவனது அப்பாவும் அம்மாவும் தினக்கூலியாக பணிசெய்கின்றனர். ஏழ்மையான சூழலில் குடும்பம் உழைத்துவந்த சமயத்தில் அவனது அப்பாவுக்கு ஓர் விபத்து ஏற்பட்டு உடல் நலம் குன்றிப்போனார். அந்த நோய்மையிலேயே அவரது மீதிவாழ்வும் தொடர்ந்தது. அம்மாவும் சித்தியும் மாமாவும் சேர்ந்து யசோக்கை படிக்கவைத்தனர்.

சிறுவயதில் யசோக்கிற்கு லோகநாதன் எனும் நல்லாசிரியர்  அறிமுகமானார். மாற்றுச்சிந்தனை கொண்ட அந்நல்மனிதர் அவ்வூரில் எப்படியேனும் ஓர் நூலகம் அமைத்திட வேண்டுமெனப் போராடி ஓர் நூலகத்தை அமைத்தார். அங்குள்ள பள்ளிக்குழந்தைகளை அந்த நூலகத்திற்கு வந்து வாசிக்கவைக்க அவர் நிறைய மெனக்கெட்டார். இவ்வாறுதான் யசோக்கின் வாழ்வுக்குள் பள்ளிப்புத்தகங்களைத் தாண்டிய புறவுலகுப்புத்தகங்கள் அறிமுகமாகின.புத்தகங்கள் அவனது வாழ்வை விரித்துச் சென்றது. கல்விக்கடனின் உதவியால் கோயம்புத்தூரிலுள்ள பொறியியல் கல்லூரியில் ECE நிறைவுசெய்தான். அதை முடித்தபிறகு, தனது சுய ஆர்வத்தால் நூலகவியல் சார்ந்த ஒரு பயிற்சிப் படிப்பினையும் முடித்தான்.

பள்ளி இறுதியாண்டு படித்துவந்த காலத்தில், கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டிருந்தான்.அதில் சிறு சிறு பணிகாளாற்றினான். அவன் கல்லூரி மூன்றாமாண்டு படிக்கையில் ஈழப்போராட்டம் உச்சகட்டத்தை எட்டியது. அதன் அனலும் நெடியும் அரசியிலின் அனைத்துப் பக்களிலும் நிறைந்துபரவின. ஆகவே, கொள்கையீர்ப்பால் இளைஞர்கள் அதிகமாக இணையும் தமிழ்த்தேசிய இயக்கமொன்றில் இணைந்து தீவிரமாகச் செயலாற்றினான். அக்கட்சி சார்பாக சட்டமன்ற தொகுதி முழுமைக்குமான பொறுப்பு வழங்கப்பட்டு அதற்காக உழைத்தான். கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, மூன்று வருடங்கள் தமிழகமெங்கும் அலைந்துதிரிந்து கட்சிப்பணி செய்தான்.

நதிநீர் பிரச்சனை கொந்தளிப்புக் காலகட்டத்தில்,  ஓர்நாள் மாலை அவனது கட்சி சார்பாக ஒரு போராட்டம்  நிகழ்த்த முடிவுசெய்யப்பட்டது. அதற்கு முன்பு ஓர் ஆர்ப்பாட்டமும் ஒருங்கிணைக்கப்பட்டது. அந்த ஆர்ப்பாட்டத்தில் யாரும் எதிர்பாராதவிதமாக ஓர் துர்நிகழ்வு நிகழ்ந்தது. இருபது வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன், தன் உடலில் தீ வைத்துக்கொண்டு கூட்டத்துக்கு நடுவில் ஓடிவந்தான். யசோக்கின் கண்முன்னால் அவன் தீயெரிந்து தரைவீழ்ந்தான். உடனே, அங்கிருந்தோர் பதறித்துடித்து அந்தத் தீயை அணைத்து அந்த இளைஞனை மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்தனர். எப்படியாவது அந்த இளைஞனைக் காப்பாற்றிவிட வேண்டும் என்கிற பரிதவிப்பில் யசோக் இருந்தான். அவன் ஆம்புலன்ஸில் செல்லும் போதே உயிரிழந்திருந்தான்.

ஆனால், ஆர்ப்பாட்ட நிகழ்விடத்தில் நிகழ்ந்ததே வேறு. அங்கு நடந்த போராட்டத்தில் கட்சியினர் பேசும்போது, அந்த இளைஞன் உயிரோடு இருப்பதாகத் தெரிவித்தார்கள். மறுநாள் அவனது தீக்குளிப்பை மிகப்பெரும் ஊடகச் செய்தியாக்கி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கினர். அந்த இளைஞனின் குடும்பத்துக்கு நிவாரணமாக தொகையொன்றையும் தருவதாக பொதுவெளியில் அறிவித்தார்கள். அந்த இளைஞன் இறந்து மூன்று மாதங்களுக்குப் பிறகுதான், அவனது குடும்பத்துக்கு அத்தொகை முழுதாய் சென்றுசேரவில்லை என்பது யசோக்குக்கு தெரியவந்தது. அதற்கு முன்பு நிகழ்ந்த முத்துக்குமார் போன்றவர்களின் தீக்குளிப்பு என்பது அரசியல்சார்ந்த தீவிரக்கருத்தின் உள்வாங்குதலால் விளைந்தவை.

ஆனால், இந்த இளைஞனின் தற்பலி என்பது தியாகத்துக்குத் தன்னை பலியிட்டுக்கொள்ளும் கண்மூடித்தனமான கொள்கைப் பிடிப்பால் நிகழ்ந்தது. ஆர்ப்பாட்டத்தின் ஓர் உச்சகணத்தில் உத்வேகமடைந்து அவ்விளைஞன் நிகழ்த்திக்கொண்டது. அந்த இளவயது இளைஞனின் மரணமும், அவனது குடும்பத்துக்கு நேர்ந்த நிர்கதியும் கைவிடலும் யசோக்கின் மனதில் பெரிதும் தாக்கத்தை உண்டாக்கின. யசோக் மனக்கலக்கமுற்றான். வீட்டைவிட்டுக் கிளம்பி கிடைக்கிற தொடர்வண்டியில் ஏறி, நோக்கமற்றவனாக ஏதேதோ ஊர்களுக்கு அலைந்து திரிந்தான். பயணத்தின் வழியாகத் தனது ரணத்தைக் கடந்திட முனைந்தான். வாசிப்பையும் கைவிடாதிருந்தான்.

ஆறேழு மாதங்களுக்குப் பிறகு, தொடர்ச்சியான வாசிப்புநீட்சியால் அவனுக்கு காந்தியும் குமரப்பாவும் அறிமுகமானார்கள்.இன்னும் தொடர்ந்து வாசிக்க வாசிக்க இலக்கியம் சார்ந்தும் கலைசார்ந்தும் அவனுக்குள் ஈர்ப்பு உருவாகியது.காந்தியம் அவனுள் மீண்டும் நம்பிக்கையை விதைக்க ஆரம்பித்தது.

காந்தியும்,ஜே.சி குமரப்பாவும் இந்தியாவின் ஆன்மாவாய் இருந்து அவனுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். “துன்புறும் சகமனிதனுக்கு நீங்கள் உதவ நினைத்தால் நிச்சயம் உங்களது தேவையைச் சற்று குறைத்துக் கொள்ள வேண்டும்.உங்கள் பொருட்தேவையை இழக்கும் அதே வேளையில் உங்கள் அகமன ஆன்மீகச் செல்வத்தை வளர்த்துக் கொள்கிறீர்கள்.உங்களது வாழ்வு விரிகிறது” என்ற குமரப்பாவின் வரிகள் அவன் அகத்துள் திரும்ப திரும்ப எதிரொலித்துக் கொண்டே இருந்தது.

அதன் விளைவாய் தன் பயணத்தில்  வெவ்வேறு மனிதர்களையும் அமைப்புகளையும் கண்டடைந்தான். தமிழகத்தின் பல்வேறு இடங்களிலுள்ள முன்னூதாரண மாற்றுவெளிகள் பலவற்றிலும் சிலகாலம் தங்கி அனுபவமடைந்தான். அப்பயணத்தின் தொடர்ச்சியாக அவன் குக்கூ நிலத்தை வந்தடைந்தான்.

குக்கூ காட்டுப்பள்ளியில் யசோக் கடந்த இருவருட காலமாகத் தங்கிச் செயலாற்றினான். அங்கு எல்லாவிதமான பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி அந்நிலத்திற்குத் தன்னை ஒப்படைத்தான். சிறுகச்சிறுக தனது நுண்ணுணர்வை இன்னும் கூர்மையாக்கிக்கொண்டான். மாடு மேய்ப்பது, மண் அணைப்பது, விதைப்பது, நீர்பாய்ச்சுவது, வளர்ப்பது, சமைப்பது, பராமரிப்பது, பளுதூக்குவது, கழிவறையைச் சுத்தப்படுத்துவது என அனைத்து வேலைக்குள்ளும் யசோக் இருந்தான். அறமற்ற மனிதர்கள் மீதான ஒவ்வாமையிலிருந்த அவனுக்கு, குக்கூவைச் சூழ்ந்திருந்த பெருவனத்தின் மெளனமும் பல்லுயிரியமும் அவனுக்குள் நிறைய உள்ளுணர்தல்களை நிகழ்த்தியது. ஏதோவொருவிதத்தில் இயற்கையிடம் சரணாகதியடைந்து, அதை அழிவிலிருந்து மீட்பதே தன் ஆத்மாவுக்கான அறமென அவன் உணரத் துவங்கினான்.

தனது வாழ்வுப் பயணத்தின் அனுபவத்திலிருந்து யசோக்குக்கு ஒரு கனவு முளைத்துள்ளது. ‘தாவரங்கள் சார்ந்த அனைத்தையும் இயன்றவரை ஆவணப்படுத்துவது’ அக்கனவின் முதல்விழைவாக உள்ளது. மரங்கள், விதைகள், இயற்கைசார்ந்து தொல்குடி மனிதர்களின் நம்பிக்கைகள், மூலிகைகள், கதைகள், பாடல்கள், இசைக்கருவிகள், பல்லுயிரியத்தைப் போற்றும் மரபறிவு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை யசோக் ஆவணப்படுத்த விரும்புகிறான். அதாவது, பல்லுயிர்ச்சூழலின் முழுமை வளையத்தை தற்காலத்திய நவீனவடிவத்தில் ஆவணப்படுத்தும் செயசைவைத் துவங்க உறுதியேற்றுள்ளான். ஆம், அதற்கான செயற்திட்டத்தையும் அவன் வகுத்துவிட்டான்.

இந்திய தேசம் முழுக்க மிதிவண்டியில் பயணித்து பல்லுயிர்ச்சூழலை ஆவணப்படுத்தும் பயணத்தை யசோக் துவங்குகிறான். தாவர விதைகள் சேகரிப்பு இப்பயணத்தின் மைய ஆன்மாவாகயிருக்கும். நெஞ்சொடுங்கிச் சாகும்வரை நம்மாழ்வார் விடாது சொல்லிவந்த செயல் அது. இச்சமூகம் தனக்குரிய மரபுத்தடத்தை இழந்துவிடக் கூடாது, பலவற்றை நாம் இழந்திருந்தாலும், போராடி அவற்றை மீண்டும் கைப்பற்ற வேண்டிய கடன் நமக்குண்டு. யசோக் துவங்கும் இந்த மிதிவண்டிப் பயணம் நம்மாழ்வார் இளைஞர்களுக்களித்த பச்சையத்தையும் பச்சைத்துண்டையும்  இறுகப்பற்றித் தொடங்கவுள்ளது.

இந்தியாவில் நிலங்கள் இல்லாத ஆயிரக்கணக்கான எளிய மக்களுக்கு நிலங்களையும், அவர்களுக்கான அடிப்படை உரிமைகளையும் பெற்றுத்தந்தவர் காந்திய மூதன்னை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன். காந்தியச் செயல்பாட்டின் பெண்வடிவமாகத் தமிழ்ச்சூழலில் தற்போது எஞ்சியிருக்கும் முதுவேர். யசோக் வருகிற ஆகஸ்ட் 25 அன்று தனது பயணத்தை குக்கூ காட்டுப்பள்ளியிலிருந்து தொடங்கி, செயலன்னை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களிடம் ஆசியைப் பெற்றடையவுள்ளான். காந்திய நிதானம் யசோக்கின் வழிப்பயணமெங்கும் தெய்வமென துணைசெல்லும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

தேசந்தழுவிய ஓர் நெடும்பயணத்தை மிதிவண்டிப் பயணமாகத் திட்டமிடுவது என்பதே பெரும் யாத்ரீக மனநிலைதான். வெயிலிலும் மலையிலும் மிதிகட்டையை மிதித்து மிதித்துப் பயணித்து, தனது கனவை நிறைவேற்றக் கிளம்பியவனின் வைராக்கியம் என்பது உண்மையிலேயே வணங்கத்தக்கது. சமூகத்தைவிட்டுத் துறவிபோலத் தனித்தியங்காமல், சமூகத்தின் எதிர்கால வெற்றிடத்தை நிரப்பும்பொருட்டு ஒருவன் ஏற்றுக்கொள்ளும் இந்த  இலட்சியவாதம் நிச்சயம் இலக்கெய்தும்.

இப்பயணத்தின் கால அளவாகத் தோரயமாக இரண்டு வருடங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. யசோக் துவங்கும் இந்தப் பெருஞ்செலுக்கு உங்களுடைய பங்களிப்பும் பேரவசியம். அந்த பங்களிப்பு எத்தகைய உதவிவடிவத்திலும் அமையலாம். காரணம், இந்திய மிதிவண்டிப் பயணம் என்பது எண்ணற்ற துணைக்காரணிகளால் சாத்தியப்படுவது.

விதைகள் மற்றும் மரங்கள் சார்ந்து இந்தியாவில் செயலாற்றும் பல்வேறு மாற்றுச்சிந்தனை குழுக்கள், உதிரி மனிதர்கள் பற்றிய எந்தத் தகவல்கள் இருந்தாலும் அவற்றை அவசியம் யசோக்கிடம் அறிமுகப்படுத்தலாம். பயணத்திற்கான சிறுதொகைப் பங்களிப்பது, வாழ்த்துப்பகிர்வது, போகும்வழியில் உள்ள தொடர்புகளை அறிமுகப்படுத்துவது, தங்குமிடம் பற்றிய தகவல்களைப் பரிந்துரைப்பது, சென்றுவந்த இடங்கள் குறித்த அனுபவத்தைத் தருவது, பிறமாநில மொழிப்பகிரத் துணைநிற்பது என உங்களுடைய ஒவ்வொரு உதவியும் இப்பயணத்திற்கான உயவு. ஆகவே, நண்பர்கள் அனைவரும் இப்பயணத்தை வாழ்த்தியருள கேட்டுக்கொள்கிறோம்.

யசோக் தனது தோள்பையில் எப்பொழுதும் உங்களது காடு நாவலை வைத்திருப்பான். காட்டைச் சுமந்தலைவன் என நண்பர்கள் அவனை வேடிக்கையாக அழைப்பதுண்டு. மேலும், காந்தியம் குறித்து நீங்களெழுதிய கட்டுரைகள் அவனுக்கான ஓர் கண்திறப்பு எனலாம். அவனது நண்பர்கள் அனைவருக்கும் தன்மீட்சி நூலைத் தொடர்ந்து பரிந்துரைத்து பரிசளிப்பான். அவன் இன்றடைந்திருக்கும் இந்தப் பயணவிழைவுக்கு உங்களது பயண அனுபவங்களை நீங்கள் ஆவணப்படுத்தும் தன்மையும் ஓர் இன்றியமையாத காரணம். ஆகவேதான், அவன் தன்னுடன் ஒரு சிறு ஒளிப்படக்கருவியையும் நாட்குறிப்புக் கையேட்டையும் எடுத்துச்செல்கிறான்.

“மிதிவண்டி ஓட்டிச்செல்லும் ஒரு மனிதரைப் பார்க்கும் ஒவ்வொருமுறையும், மனித இனத்தின் எதிர்காலத்தை நினைத்து நான்கொள்ளும் விரக்தி நீங்குகிறது” என்று எழுத்தாளர் வெல்ஸ் சொல்லுவார். எத்தனையோ நண்பர்கள் ஓர் உயரிய நோக்கத்திற்காக மிதிவண்டி அழுத்தி நெடுஞ்சாலையில் செல்வதைக் காண்கையில் நாங்கள் மேற்கண்ட வரியை நினைத்துக்கொள்கிறோம். ஓரடி என்பது குறைவில்லை. அது முன்னோக்கியா அல்லது பின்னோக்கியா என்பதே இங்கு எழுப்பப்பட வேண்டிய வினா? யசோக்கின் மிதவண்டி செல்லும் ஒவ்வொரு அடியும் இனிவரும் தலைமுறை இழந்துவிடக்கூடாத ஓர் தொல்விதையை காப்பாற்றுவதற்காக கடக்கட்டும்!

யசோக் சுப்ரமணியம் தொடர்பு எண் : 9080388398

நன்றியுடன்,
சிவராஜ்
குக்கூ காட்டுப்பள்ளி

முந்தைய கட்டுரைகர்ண சுபாவம்
அடுத்த கட்டுரைதூரனும் துஜாவந்தியும்-யோகேஸ்வரன் ராமநாதன்