ஒரு நாவல் நூலகம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.நான் இன்று உங்களுடைய வெண்முரசு முழுமையாக வாங்க முடியுமா?  படித்தேன்.

நான் முதலில்,  வெண்முரசை உங்கள் தளத்தில் படிக்க ஆரம்பித்தேன்..பிறகு என் அம்மாவுக்கு முதற்கனல் செம்பதிப்பு வாங்கினேன். (அவர் தற்போது வண்ணக்கடல் படித்துக் கொண்டு இருக்கிறார்) முதலில் விலை அதிகமாக இருப்பதாக மனதில் பட்டது. (இவ்வளவு நாளும் வாசித்த புத்தகங்கள் குறைந்த மலிவுப் பதிப்பில் இருந்ததன் பாதிப்பு)

புத்தகத்தை பெற்ற போது ஏன் விலை அதிகம் எனப் புரிந்தது.

  1. இது ஒரு classic. இதற்கான மரியாதை கொடுத்து ஆக வேண்டும். இதை மலிவுப் பதிப்பு என்றால், நாமே அதைக் கீழ் இறக்குகிறோம். அது தேவையில்லாது. ஒரு சில சாதாரண ஆங்கில Kindle வடிவ ஆங்கில புத்தகங்களை விட இதன் விலை குறைவே.
  2. என்னதான் போனிலோ, கம்ப்யூட்டரிலோ பார்த்தாலும், வெண்முரசின் ஓவியங்களை முழு பக்கமாக சிறந்த வண்ணப் போட்டாவாகப் பார்ப்பது மனதுக்கு நெருக்கமாக உள்ளது.
  3. வெண்முரசு புத்தகத்தை பார்த்த மூன்றரை வயதான எனது அக்காவின் பேத்தி, புத்தகத்தில் முதலில் கவனித்தது இந்த ஓவியங்களைத்தான். ஒவ்வொரு ஓவியமாக பார்த்து, ஒவ்வொன்றும் என்ன என்று கேட்டுக் கொண்டிருந்தாள். இது ஒருவேளை, பின்னாளில் வெண்முரசைப் படிக்க ஊக்கமாக் கூட அமையலாம்.
  4. வெளியில் இருக்கும் போது, பிரயாணங்களின் போது, உங்கள் தளத்தில் படிப்பது வசதியாக உள்ளது. அதே சமயம் புத்தக வடிவில் படிப்பதே மிகவும் பிடித்திருக்கிறது.

இரண்டு வடிவங்களில் வெண்முரசைக் கிடைக்க வைத்த உங்களுக்கு நன்றி.

அன்புடன்,

சகுந்தலா.

அன்புள்ள ஜெ

வெண்முரசு நூல்களை நான் தொடர்ச்சியாக வாங்கி வாசிக்கிறேன். 2014 முதல் 2021 வரை தொடர்ச்சியாக வெண்முரசு நாவல்களை வாசித்துமுடித்தவள் நான். ஆனாலும் இந்நூல்களை வாங்கி வாசிக்கிறேன். முதல் விஷயம் என்னவென்றால் அவ்வப்போது எடுத்து கைபோன போக்கிலே ஒரு பக்கத்தைபுரட்டி வாசிப்பதற்கு இதுதான் வசதியாக உள்ளது. என்னதான் இணையவடிவில் வாசித்தாலும் ஒரு நாவலை கையில் எடுக்கும்போதுதான் அது நாவலாக உள்ளது. அதில் பல பகுதிகளை என் அம்மாவுக்கு வாசித்துக் காட்டியிருக்கிறேன். அம்மாவுக்கு முழுமையாக கேட்டு புரிந்துகொள்ள முடியாது. ஆனால் கதையைச் சொல்லி தேவையான இடங்களை மட்டும் வாசித்தால் நன்றாக கூடவே வருவார்கள். அம்மாவின் வாழ்க்கையில் மிக இனிமையான நாட்கள் இதுதான். மழைப்பாடல் முடித்துவிட்டோம். அம்மா வெண்முரசிலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அதோடு அம்மாவுக்கும் எனக்கும் இப்படி சமையல், பிள்ளைகள் என்று வழக்கமான பேச்சுக்கள் இல்லாமல் ஒரு நல்ல உறவு உருவாவது இப்போதுதான் முதல்முறை.

நன்றி

ஆனந்தி பாஸ்கரன்

முந்தைய கட்டுரைநாம், நமது உள்ளம்
அடுத்த கட்டுரைதமிழ்விக்கி தூரன் விருதுவிழா- இசை