காதலால் நிரம்பிய மூன்று கதைகள்

https://twitter.com/AjithanJey5925

மைத்ரி மின்னூல் வாங்க

மைத்ரி வாங்க

அன்புள்ள அஜிதனுக்கு,

மைத்ரியின் இரண்டாம் வாசிப்பு. ஒரு எழுத்தாளரின் படைப்புகளிலிருந்து வேறொரு எழுத்தாளருக்கு வரும்போது, என் வாசிப்பில் சிறு தயக்கம் ஏற்படும். ஆனால் மைத்ரி அப்படி அல்ல. முதல் இரண்டு பக்கங்களுக்குள்ளாகவே மைத்ரி ஈர்த்துக்கொண்டது. நான் எழுதியதை மீண்டும் வாசிப்பது போல் ஓர் அணுக்கம்.

காடு நாவலைப் பற்றி முன்னுரையில் குறிப்பிட்டிருந்தீர்கள். காடு போன்ற ஒரு நாவலை எழுதுவதில் ஒரு சிக்கல் அதன் சூழல் சித்தரிப்பு என்று நினைக்கிறேன். சூழலைப் பற்றி ஏதும் விவரிக்காமல் ஒரு கதை சொல்லப்படும்போது நம் மனது தானாகவே அதற்கு ஒரு அன்றாட சூழலை பொறுத்திக்கொள்கிறது. காடு என்றவுடன் நம் மனதில் தானாகவே ஒரு காடு வந்துவிடுகிறது. அது ஒரு template போல. நாம் காடு என்று நம்பிக்கொண்டிருக்கும் காடு போன்ற ஒன்று. அந்த template-ஐ மீறி எழுத்தாளர் அந்த காட்டை நிகழ்த்திக்காட்டுவதே ஒரு பெறும்பணி. ஜெயமோகன் காடு நாவலில் அதை நிகழ்த்திக்காட்டுவார், குட்டனின் வழியே, ரெசாலத்தின் வழியே கபிலரின் வழியே.

ஜெயமோகன் எழுதிய ‘ஞானி’ நூலில் ஞானியின் ஒரு கருத்து இருக்கும். நான் அதை எனக்குள் தொகுத்தக்கொண்டவாறு சொல்கிறேன். நாம் புழங்கிக்கொண்டிருக்கும் அன்றாடம் என்பது நம் conscious உடன் தொடர்பு கொண்டது. அதற்கு கீழ் unconscious உடன் தொடர்பு கொண்டவை படிமங்கள். பல்லாண்டுகளாக உயிர்ப்புடன் இருக்கும் நாகரீகம் ஒரு மனிதனுக்குள் விட்டுச் செல்பவை அவை. அதை நோக்கி திரும்புவதே தியானம் என்பது.

ஒரு வகையில் காடு என்பதே நாம் அந்த ஆதியை நோக்கி திரும்புவது தான் என்று நினைக்கிறேன். காடு-ஆதிப் படிமங்களின் வைப்பரை. இயற்கை எப்படி மொழியாகிறது என்பதை எமர்சன் தனது இயற்கை கட்டுரைத் தொகுதியில் சொல்லி இருப்பார். முதலில் இயற்கையே மொழியாகிறது. கோவம் என்பதற்கு நேராக சிங்கத்தையும், அழகு நேராக மலரையும் சுட்டிய காலமது. Spiritual facts, natural facts-ஐ நேராகவும் நேர்மாறாகவும் பிரதிபலித்த வேளை. ஒன்றை ஒன்று பார்த்த ஆடி. அகமும் புறமும் தங்களைச் சுட்டிய மொழி. இதை வேறு வகையில் எழுத்தாளர் சுசித்ரா முன்னுரையில் கூறியிருந்ததாக தோன்றுகிறது. சங்க இலக்கியம் போல வண்ணதாசனுடைய கதைகளில் இதை அதிகம் உணர முடிகிறது. காடு நாவலில் இது மிக நேர்த்தியாக கையாளப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு இளைஞனின் அகத்தில் உள்ள வேகத்தை, மீறலை, எல்லாவற்றையும் தனதாக்கிக்கொள்ளும் ஆசையை, எச்சரிக்கையை, தயக்கத்தை, தனிமையை, தன்னிரகத்தை வெளிப்படுத்தும் புறம் காட்டைத் தவிர வேறு ஒன்றாக இருக்க முடியுமா? காடு கிரிதரனின் எல்லா உணர்வுகளுக்குமான படிமங்களை தன்னளவிலேயே கொண்டிருக்கிறது. அவ்விதத்தில் மைத்ரி நாவலின் கதை சூழல் அபாரமானது.

ஹரன் எனக்கு ஒரு விதத்தில் கிரிதரன் என்றே தோன்றுகின்றான். எல்லாரும் தன்னைக் கவனித்து கொள்ளவேண்டுமென்ற மனப்பான்மை. தான் இன்றி மற்றொன்று முழுமை அடையக்கூடாது என்ற ஏக்கம். அது அப்படியல்ல என்று முன்னரே தெரிந்திருந்தும், இருப்பினும் அது நிகழ்ந்த பின் தன்னிரக்கம். மைத்ரியை முதலில் பார்த்து பேரழகி என்று உணர்ந்த கொஞ்ச நேரத்தில், தான் அவள் அருகிலிருக்க தகுதியற்றவன், அவளை இழிவு செய்கிறேன் என்ற எண்ணம். இதை நான் சில முறை உணர்ந்ததுண்டு. அதன் மூலமே நான் ஹரனுக்கு அணுக்கமானேன். நாவலின் தயக்கமற்ற வாசிப்பிற்கு முதன்மையான காரணம், ஹரனின் கண்களின் வழி அந்நிலம் திறக்கிறது என்பது. உங்களுக்கு பறவைகள் மேல் பெரும் நாட்டம் உண்டு. ஆனால் அதைப்பற்றி அறியாத ஒருவன் பார்வையிலேயே நாவல் இருக்கிறது. விடுதியில் கண்ணாடிக்கு அப்பக்கம் நிற்கும் பறவை ஹரனின் கண்களின் வழி அங்கு நிற்கிறது, அஜிதனின் கண்களின் வழி அல்ல. நாவலில் பெரும்பான்மையான சித்தரிப்பு அச்சூழலுக்குள் புதிதாக செல்பவனின் சித்தரிப்பு. அதுவே ஒரு குழந்தையின் சித்தரிப்பு. எமர்சன் மேற் சொன்ன கட்டுரையில் சொல்கிறார்.

” A man’s power to connect his thought with its proper symbol, and so to utter it, depends on the simplicity of his character, that is, upon his love of truth, and his desire to communicate it without loss……. In due time, the fraud is manifest, and words lose all power to stimulate the understanding or the affections. Hundreds of writers may be found in every long-civilized nation, who for a short time believe, and make others believe, that they see and utter truths, who do not of themselves clothe one thought in its natural garment, but who feed unconsciously on the language created by the primary writers of the country, those, namely, who hold primarily on nature.

But wise men pierce this rotten diction and fasten words again to visible things; so that picturesque language is at once a commanding certificate that he who employs it, is a man in alliance with truth and God. “

காடு நாவலில் கிரிதரன் நகரத்திலிருந்து, கல்வெர்ட் கட்டும் இடத்திற்கு வருகிறான் அதுவும் காடு தான் ஆனால் அது காட்டின் நுழைவாயில் போல, அய்யர் இருப்பது வேறொரு காடு, நீலி இருப்பது வேறொரு காடு அல்லது காடாக நீலி இருக்கிறாள். மைத்ரி அது போல் விரிகிறது. சோன்பிரயாக், கௌரிகுந்த், திரியுக நாராயண கோவில், தேவதாரு மரங்கள், புக்யால், கங்கீ. கங்கீ எப்பொழுதும் குழந்தையாக இருக்கிறது. உலகம் குழந்தையாக இருந்த போது உதிர்ந்த ஒரு சிறு பகுதி கங்கீ. நீங்கள் முன்னுரையில் சொன்னவாறே கௌரிகுந்திலிருந்து மைத்ரியின் கிராமத்திற்கு செல்லும் கச்சர் பயணம் அபாரமானது. தேவதாரு மரங்களை பார்ப்பது நாவலின் உச்சம். ரிது பெரியம்மா நாவலில் மிக ஆழமான கதாபாத்திரம். ‘குத்’ என்ற காட்வாலி மொழிக்கேயான சொல்லின் வடிவம். மைத்ரியின் வடிவம்.

காதலால் நிரம்பிய மூன்று கதைகள் உள்ளன. மாத்ரி-ஜீது பகட்வால், ரிது பெரியம்மா-ஜிது பெரியப்பா. மைத்ரி-ஹரன். மூன்றுமே விலகத்தில் முடிகிறது. அதை முறிவு என்று சொல்ல முடியாது. மூன்று கதைகளிலும் அது அப்படித்தான் முடியும் என்று தெரிந்து தான் அவர்கள் தங்களை காதலால் (மாயையால்) நிறைத்துக்கொள்கிறார்கள். ஜீது அறிவான் அவள் மாத்ரி என்று, இருந்தும் காதலில் நிறைகிறான். காதலால் நிறைந்து பாதாளத்திற்கும் தேவபூமிக்கும் அல்லாடும் ஜீது-ஹரன்.

ஹரனைத் தொடரும் மந்தாகினி. அது பெண்மை என்று தோன்றுகிறது. இறுதியில் ஹரன் போய் நிற்பது ஒரு குட்டையில். அங்கு மந்தாகினி அதற்கு வழிவிட்டு வளைந்து செல்கிறது. வெதுவெதுப்பான அந்த குட்டை. ஹரன் அங்குதான் இயல்பாக உணர்கிறான். அந்த வெதுவெதுப்பே அவனை ஆற்றுப்படுத்துகிறது. அவனால் நாவலில் வரும் இரண்டு சிறுமியர் போல மந்தாகனியில் குளிக்க முடியாது. அவனுக்காகவே அது சிறு குட்டையென தன்னை மாற்றிக்கொண்டுள்ளது. அதில் தான் அவன் இறங்கி ஆற்றுப்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் அங்கும் அவனை சூழ்ந்திருப்பது அது தான். மைத்ரி என்பதே மாயை. மொத்த மந்தாகனியையும் அள்ளத் தவிக்கும் ஹரனை நிறைத்து, அவனை குட்டைக்குள் இருத்தி விலகுகிறாள். கோடி விழி கொண்டு பார்க்கிறாள்.

நாவலில் வரும் ஆண் கதாபாத்திரங்கள் ஹரன், ஜிது பெரியப்பா, விடுதி நடத்தும் முதியவர். மூவரும் நிறைந்தவர்கள். ஆண்மை என்பதே பெண்மையால் நிறைக்கப்படுவது தான் போலும்.

ரோரிச் ஓவியம். ஹிமாலயாஸ்

நீங்கள் விமர்சன கூட்ட உரையில் ஹரன் பறவையைப் பார்ப்பது பற்றி சொன்னீர்கள். ஒரு வாசகர் கேட்டதற்கான விடை. அது நாவலில் கஸ்தூரி மிருகை மைத்ரி பார்ப்பதற்கு ஒப்பான தருணம் என்று தோன்றுகிறது. அப்பக்கம் என்ன இருக்கிறது என்ற ஆவலே பறவையை அதை நோக்கி ஈர்க்கிறது. ஆனால் அங்கிருந்து வரும் ஒரு தொடுகை அதன் அறிவுக்கும், உணர்வுக்கும் அப்பாற்பட்டது. கற்பனை கூட செய்ய இயலாதது. அத்தொடுதல் அதற்கு ஒரு படப்படைப்பையே ஏற்படுத்தும். ஒரு வகையில் ஹரனே அப்பறவைதான். முழுதுணர இயலாத ஒரு வெளியின் ஈர்ப்பு. அவ்வெளியிருந்து வரும் மைத்ரியின் தொடுகை. இல்லை, தொடுகை போல. அதன் பின் படபடப்பு. நான் இப்படி புரிந்து கொண்டேன். அவ்வாசகர் மீண்டும் வாசிக்கையில் அவருக்கென ஒரு அர்த்தம் வருமென நினைக்கிறேன்.

நாவலில் ஹரன் மிளிட்ரிகாரரை சந்திக்கும் இடம் ஜெயமோகன் பாணி போல இருந்தது. அது நாவலில் எனக்கு மிகவும் பிடித்த இடம். மேலும் எழுத வாழ்த்துக்கள்.

அன்புடன்,

சியாம்.

மைத்ரி மறுபதிப்பு

மைத்ரி – வாசு முருகவேல்

தளர்ந்தார் தாவளம் – மைத்ரி நாவலை முன்வைத்து- செளந்தர் G

அஜிதன், மைத்ரி- கடிதம்

மைத்ரி, அஜிதன் உரை – கடிதங்கள்

மைத்ரி,அஜிதன் – கடிதம்

மைத்ரிபாவம் – பி.ராமன்

முந்தைய கட்டுரைபூன் முகாம், கடிதம்
அடுத்த கட்டுரைவகுப்புகள், கடிதங்கள்