நான்கடவுள் படம் ஓடிக்கொண்டிருக்கும்போது அதைப்பற்றிய விவாதங்களை தவிர்க்கலாமென்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஆகவே பெரும்பாலான கடிதங்களைத் தவிர்த்துவிட்டேன். பாலா ஒரு விஷயம் சொல்வதுண்டு– சினிமா கோடிக்கணக்கான பேரைச் சென்றடையும் ஓர் ஊடகம். அதைப்பார்ப்பவர்கள் பலவேறு மனநிலைகளில் அறிவுநிலைகளில் பண்பாட்டுச்சூழலில் வாழ்பவர்கள். அவர்கள் பல்லாயிரம் தரப்பை உருவாக்கிக் கொள்வார்கள். அவற்றை எல்லாம் எதிர்கொண்டு விவாதிக்க எழுத்தாளன் முயன்றான் என்றால் அவனால் வேறு எதையுமே செய்யமுடியாது. என. அதை இப்போதுதான் உணர்கிறேன்.
மேலும் சினிமாவில் பல்வேறுபட்ட கலைஞர்கள் பங்குபெறுகிறார்கள். அது ஒரு மாபெரும்கூட்டுக்கலை. ஆகவே அதன் இறுதிவிளைவு என்பது ஒரு சமரசப்புள்ளிதான். பல்வேறு வகையான சாத்தியங்களின் வழியாக ஒரு வடிவம் உருத்திரண்டு வருகிறது. அதன் இயக்குநர் உட்பட எவருமே இப்படித்தான் படம் இருக்க வேண்டும் என்று இறுதியாக வகுத்துவிட முடியாது.
உதாரணமாக நான்கடவுளில் உள்ள காசி சித்தரிப்பு. அது முதலில் நான் தாளில் எழுதியது. பின்னர் பாலா மனதில் உருவகித்தது. கிருஷ்ணமூர்த்தி அமைத்தது. வில்ஸன் ஒளிப்பதிவுசெய்தது. சுரேஷ் அர்ஸ் வெட்டித்தொகுத்தது. அத்தனைபேருக்கும் பொதுவான ஓர் இடம் மட்டுமே காசியாக கடைசியில் திரையில் வரமுடியும். பாலாபோன்ற மூர்க்கமான பிடிவாதம் கொண்ட இயக்குநர் அதில் பெரும்பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார், அவ்வளவுதான். ஆகவே ஒருவர் ஒரு படத்தில் தன் பங்களிப்பைப் பற்றிப் பேசுவதென்பது அனேகமாக சாத்தியமே அல்ல. அது பிறரது பங்களிப்பை குறைத்து மதிப்பிடுவதாகவும் ஆகிவிடக்கூடும்
மேலும் தமிழ் சினிமா என்பது இன்று இயக்குநரின் கலை மட்டும்தான். இயக்குநர்தான் படத்தை முதன்மையாகவும் இறுதியாகவும் வடிவமைக்கிறார். மேலைநாடுகளில் ஒளிப்பதிவாளர், தொகுப்பாளர் போன்றவர்களுக்கு இருக்கும் சுதந்திரம் கூட இங்கே இல்லை. மலையாளத்தில் எழுத்தாளருக்கு இருக்கும் சுதந்திரம் இங்கே இல்லை. அனைவரும் இயக்குநருக்கு தங்கள் எண்ணங்களையும் ஆக்கங்களையும் கொடுக்கிறார்கள். அதில் இயக்குநருக்கு எது தேவை என படுகிறதோ, எது அவருக்குப் பிடித்திருக்கிறதோ அது மட்டுமே படத்தில் இடம்பெறும்.
ஒருவேளை ஆர்தர் வில்ஸனின் ஆகச்சிறந்த படச்சட்டம் என்று அவர் எண்ணுவது படத்தில் வராமல் போய்விடலாம். கிருஷ்ணமூர்த்தியின் கலையமைப்பின் சிறப்பு என அவர் எண்ணுவது படத்தில் வராமல் போகலாம். ஒவ்வொருவருக்கும் மனதில் ஒரு படம் இருக்கும். இறுதிப்படம் அவை அனைத்தில் இருந்தும் பாலா உருவாக்கிய படம்தான். ஆகவே நான் கடவுள் முழுக்க முழுக்க ஒரு பாலா படம். பாராட்டுகளும் வசைகளும் முழுக்க அவருக்கு மட்டுமே சொந்தம்.
நான் கடவுள் குறித்த கேள்விகளில் திரும்பத்திரும்ப வந்த சிலவற்றுக்கு மட்டும் சுருக்கமாக என் தரப்பை மடும் சொல்லிவிடுகிறேன். இதுகூட ஒரு விவாதத்தை தொடங்கும்பொருட்டு அல்ல. அத்தகைய ஒரு விவாதத்துக்கு எஞ்சிய வாழ்நாளை ஒப்படைக்க நான் தயாராக இல்லை.
1. நான் கடவுளில் என்னுடைய நுண்ணரசியல் கலந்துள்ளதா?
இதுபோன்ற ‘ஆய்வு‘களின் உளவியல் ஒன்றே ஒன்றுதான். தன்னை மிக நுண்மையான ஒருவராக எல்லாவற்றையும் உப்பக்கம் காணும் ஒருவராக காட்டிக்கொள்வது, எண்ணிக்கொள்வது. இத்தகைய ஆய்வுகளைச் செய்தவர்களின் எழுத்துக்கள் அந்தப்படத்தை எந்த அளவுக்குத் தட்டையாக அணுகியிருக்கின்றன என்று நோக்கினால் இவர்களின் உண்மையான நுண்மை தெரியவரும்.
2 நான் கடவுளில் இந்துத்துவப் பிரச்சாரம் உள்ளதா?
கொஞ்சம் காதைத்திறந்து வைத்து மனதை திரிபடையச் செய்யாமல் பார்க்கும் எவருக்கும் நான்கடவுளின் கடவுள் கருத்து தெரியும். இம்மாதிரி படங்கள் கோடானுகோடி மக்களுக்காக எடுக்கப்படுபவை. ஆகவே மிகமிக அப்பட்டமாக, வெளிப்படையாக அவை பேசுகின்ரன. எதுவும் புரியாமல் போகக்கூடாது என்ற நிலையிலேயே எடுக்கப்படுகின்றன. ‘அறிவுஜீவிகள்‘ அல்லாத எளிய மக்களுக்கு அவை தெளிவாகப்புரியவும் செய்கின்றன
நான்கடவுளின் கடவுள்கருத்து ஒரேவரிதான் ”எழாம் உலகில் இறைவன் இல்லை” மீண்டும் மீண்டும் அப்பட்டமாக அதை காட்சிகளாகக் காட்டிச் சொல்ல முயன்றிருக்கிறார் பாலா. முடமாகிப்போய் எழவே முடியாத அம்மையும் அப்பனும், வேலாயுதத்தை ஊன்றி தவழும் முருகன், அஷ்டகோணலுடன் அடிப்பாவாடை திருடியே ஆந்திராவில் ஆட்சியமைத்த கிருஷ்ணன் என அண்மைக்காட்சிகளில் காட்டிக்கொண்டே இருக்கிறார். அவர்களுக்கு அவர் அளித்துள்ள அண்மைக்காட்சிகள் அவரால் மிகக் கவனமாகத் திட்டமிடப்பட்டவை. அவற்றின் நீளம், அவை எப்போது காட்டப்படுகின்றன என்பதெல்லாம்…
குரூரமாக அம்மக்கள் வேட்டையாடப்படும்போது அந்த தெய்வங்கள் பரிதாபமாக நின்று விழிக்கின்றன. ஆனால் அவர்களின் குதூகலத்தில் அவர்கள் இல்லை. உண்மையில் ஏசுவும் புத்தரும் எல்லாம் இருந்தார்கள். காட்சிகள் வெட்டப்பட்டதில் அவர்கள் முன்னிலைப்படவில்லை.கடைசிக்காட்சியில் அம்சவல்லி கொல்லப்படும்போது அத்தனை தெய்வங்களும் கேவலமான சாட்சியங்களாக நிற்கின்றன.
அதுவும்போதாதென்று ஆசான் ராமப்பனை பாலா ‘மேலே இருக்கிறான்,தேவ்டியாப்பையன்‘ என்று மீண்டும் சொல்லவைக்கிறார். மீண்டும் உச்சகாட்சியில் சிவனும் விஷ்னுவும் இருக்கிறார்களே, முப்பத்துமுக்கோடி தெய்வங்கள் இருக்கின்றனவே, மாரியம்மனும் நீலியம்மனும் இருக்கிறார்களே அவர்கள் ஏன் என்னை கைவிட்டார்கள் என எல்லா இந்து தெய்வங்களையும் பேரெடுத்து சொல்லி விட்டுதான் அல்லாவையும் ஏசுவையும் அம்சவல்லி சொல்கிறாள்.
உண்மையில் அந்த வசனம் அத்தனை நீளமானதே அல்ல. நம்முடைய ஆட்களை என்னைவிட நன்றாக தெரிந்த பாலா ஐயமே இருக்கக் கூடாதென்றுதான் அதை மேலும் விரிவாக்கம் செய்து அப்பட்டமாக ஆக்கியிருக்கிறார். அதன்பின்னும் இந்தக் கேள்வி என்றால் என்ன சொல்வது? இந்து தெய்வங்களை மட்டும் சொல்லியிருந்தால் ஒரு பிரச்சினை இருந்திருக்காது என்பதே உண்மை. இத்தனைக்கும் பிறகு இதை ஒரு இந்துத்துவப்படம் என்றால் இந்த ஆசாமிகள் என்னதான் நினைக்கிறார்கள் என்றே புரியவில்லை.
அத்தனை தெய்வங்களையும் நிராகரிக்கும் ஆசானும் கூட்டமும் மாங்காண்டி சாமி காலில் விழுந்து வணங்குகின்றன. ஏனென்றால் அவரும் பிச்சைக்காரர். அவர்களுடைய தெய்வமும் இன்னொரு பிச்சைக்காரனாக, நாடோடியாக, அவர்கள் வாழும் உலகைச் சேர்ந்தவனாக மட்டுமே இருக்க முடியும். அது அவர்களின் தெரிவு. அது அவர்களின் மனநிலை. அதுதான் படத்தின் இறைக்கருத்து. இதை மீண்டும் மீண்டும் சொல்லிச் சொல்லிக் காட்டியபின்னும் சிலர் அதன் ஒன்றாம் பாடத்தையே உருவிடுவதைப் பார்க்கும்போது இவர்கள் என்னதான் சினிமா பார்க்கிறார்கள் என்ற சலிப்பே ஏற்படுகிறது.
3. நான் கடவுளில் பிச்சைக்காரர்கள் மேல் பரிதாபம் ஏற்படுத்த பாலா தவறிவிட்டாரா?
என் அலுவலகத்தில் உள்ள கடைநிலை ஊழியரான பையனிடம் கேட்டேன் –படத்தைப் பற்றிஎன்ன நினைக்கிறாய் என்று. ‘பிச்சை எடுக்கிறவங்களும் மனுஷங்கதான்னு சொல்லிட்டுது சார் படம்” என்றார். அதுதான் படத்தின் சாரம். மீண்டும் நம் அறிவுஜீவிகளுக்கு மட்டும் இது புரியவில்லை.
ஏழாம் உலகம் நாவலின் மையச்செய்தியும் இதுதான். முதலிரு அத்தியாயங்களில் அதில் அதிர்ச்சியும் அருவருப்பும் விலகிச்செல்லும். பின் அம்மக்கள் விரும்பத்தக்க சகாக்களாக வாசகனுக்குத் தோன்றிவிடுவார்கள். குய்யனும் ராமப்பனும் அகமதுவும் மதிப்புக்குரியவர்கள் ஆக ஆவார்கள். அதைத்தான் பாலா இந்தப் படத்திலும் செய்கிறார். முதலில் அதிர்ச்சியுடன் அவர்கள் அறிமுகமாகிறார்கள். பின்னர் அவர்களின் பரிதாபகரமான வாழ்க்கை பாடல்மூலம் சொல்லப்படுகிறது. அடுத்தக் காட்சியிலேயே அவர்களின் நக்கலும் கேலியும் ஏகத்தாள சிரிப்பும் திரையை நிறைக்கின்றன. அவ்வரிசையைப் பார்த்தாலே பாலா சொல்ல வருவது புரியும்
பாலாவைப்போல ஒரு காட்சித்துளியைக் கூட வீணாக்காத இயக்குநர் பிச்சைக்காரர்களின் சிரிப்புக்கு ஏன் அத்தனை அண்மைக்காட்சிகளை அளிக்கிறார்? சினிமா பழக்கம் உள்ள ஒரு ரசிகன் முதலில் அதைத்தான் கவனிப்பான். பிச்சைக்காரர்களின் சிரிப்புகள் வழியாக முன்னும் பின்னும் காமிரா நகர்ந்துசெல்கிறது. இதற்கு மேலும் அந்த அர்த்தம் புரியாமல் போய்விடுமோ என்று பயந்து வசனமாகவே மேலும் காட்சி வைக்கிறார் ‘சிரிக்காதே, பொழைப்பைக் கெடுத்திராதே, நீ பிச்சைக்காரன்‘ என்று.
நானே ஏன் இந்த ‘ஸ்பூன் ·பீடிங்‘ என்று சலிப்படைந்தேன். ஆனால் தமிழ் சினிமா உலகில் இதுகூட போதவில்லை. ஒரு கதாபாத்திரத்தை நேரில் வரவழைத்து திரை நோக்கி ‘பிச்சைக்காரர்கள் எல்லாம் எப்போதும் அழுது கொண்டிருக்கமாட்டார்கள். அவர்கள் வாழ்க்கையிலும் சந்தோஷம் உண்டு. அன்பும் தியாகமும் கொண்டாட்டமும் உண்டு. அவர்களுக்கு தங்கள் பிச்சைபோடுபவர்கள் மேல் இளக்காரமும் நக்கலும்தான் இருக்கும். அந்த நக்கல் வழியாகத்தான் அவர்கள் தாங்கள் பிச்சை எடுப்பதில் உள்ள இழிவுணர்ச்சியை தாண்டிச்செல்கிறார்கள் ‘ என்று விளக்கமாகச் சொல்லவும் வைத்திருக்கவேண்டுமென்று இப்போது படுகிறது. அப்படித்தான் தமிழில் வழக்கமாகக் காட்சி அமைப்பார்கள். அவர்கள் நம் ரசிகர்களை எந்த அளவுக்குப் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்ற வியப்பு ஏற்படுகிறது.
இத்தனைக்குப் பின்னும் வசனங்கள் வருகின்றன .திருவோட்டுடன் இருக்கும் முருகனைப் பார்த்து விட்டா நம்மகூட பிச்சைஎடுக்க வந்திருவான் போல என்று. பிச்சைக்காரியை சுமந்துவரும் வியாபாரியைப் பார்த்து ‘அங்கபார் ஏசு சிலுவையைச் சுமந்தது போல ஒருத்தன் சுமந்திட்டு வாறான்‘. என்று. ‘பிச்சைக்காரன் கிட்டேயே பிச்சை எடுக்கிறியா?’ என்று. ‘மத்தவங்களுக்கு புண்ணியம் கிடைக்கணும்கிறதுக்கான பொழைப்பு ‘என்று. அநதவாழ்க்கையைத்தான் அவர்கள் நக்கலாகக் கொண்டாடி சிரிக்கிறார்கள்.
இதெல்லாம் பார்வையாளர்கள் பிச்சைக்காரர்களைப் பார்த்து பரிதாபம் கொண்டு மேலும் பிச்சைபோட வேண்டுமென்று ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டவை அல்ல. அப்படி பரிதாபத்தை உருவாக்கத் தெரியாமல் எடுத்த காட்சிகளும் அல்ல. ஒரு ரூபாய் நாணயத்தை சுண்டிவிட்டு திரும்பிப்பார்க்காமல் போகும் ஒரு பெரும் சமூகத்தை நோக்கிய நக்கல் அது. அவர்களை நோக்கித்தான் ‘செல்லாத நோட்ட போடுறானுங்க‘ என்று குய்யன் சொல்கிறான். அம்மையப்பனாக வந்து அமர்ந்து கடவுள்கள் டிக்கெட் எடுத்து அவர்களைப் பார்க்க வந்திருக்கும் கூட்டத்தைப் பார்த்து சிரிக்கிறார்கள்.பரிதாபத்தைக் கோரவில்லை. உண்மையிலேயே செந்தில் அப்படிபப்ட்ட ஆள்தான். அவனுக்கு எதைப்பற்றியும் கவலை கிடையாது. சிரிப்புதான். நீங்கள் பிச்சை போடவேண்டுமென அவன் அழமுடியாது
பாலா போன்று அத்தனை காட்சிச்சட்டம் பற்றிய கவனம் கொண்ட இயக்குநர் பிச்சைக்காரர்கள் பற்றிய படத்தில் பிச்சை போடுபவர்களை நோக்கி காமிராவை நிறுத்துவதே இல்லை. அவர்கள் முகமற்ற அர்த்தமற்ற வெற்றுக் கும்பலாகவே காடப்பட்டிருக்கிறாகள். பெரும்பாலான நேரங்களில் அவர்கள் வெறும் கால்கள். பலசமயம் கடந்துசெல்லும் நிழல்கள். இதை புரிந்துகொள்ள உலகசினிமா பார்க்க வேண்டிய தேவையே இல்லை.சாதாரண ரசிகனுக்கு பிரச்சினை இல்லை. பாலா அதை பட்டவர்த்தனமாக சொல்லியே செல்கிறார்.
4. நான் கடவுளில் பாலா கவனமில்லாமல் எடுத்த காட்சிகள் இருக்கின்றனவா, அந்த போலீஸ் நிலையக் காட்சிகளைப்போல…?
பாலாவுக்கு அதற்கான நோக்கங்கள் இருந்தன. முக்கியமாக காசிக்கும் பிச்சைக்காரர் அவலத்துக்கும் நடுவே ஓர் இடைவேளையாகவே அதை எழுதினேன். ஆனால் அந்தக் காட்சியையும் அவருக்கே உரித்தான நக்கலுடன் பாலா முன்னெடுத்துச் சென்றார். பாடல்களை அவர் தேர்வுசெய்திருக்கும் விதம் உதாரணம். ”கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்…” …”ஏன் ஏன் ஏன்?” போன்ற பாடல்கள் மிகவும் திட்டமிட்டு தெரிவுசெய்யப்பட்டவை. ‘சொற்கம் இருப்பது உண்மையென்றால்…‘ என்று அந்த போலீஸ் நிலைய பிச்சைக்காரக்கும்பலையே சுட்டிகாட்டுகிறார் சிவாஜி.
‘உடலை காட்டி பிச்சை எடுப்பது இழிவென்றால் சினிமா மட்டும்?’ என்று நேரடியாக வெளிப்படையாகவே கேட்கிறார் திரையை நோக்கி. ஒவ்வொரு தருணத்திலும் அவருக்கு சொல்வதற்கு ஒன்று உள்ளது. ஏழாம் உலகில் இருந்த தரிசனம் சார்ந்த நகைச்சுவை பாலாவின் படத்தில் அவருடைய சொந்த ஆளுமை சார்ந்ததாக ஆகிவிட்டது. கசப்பு. நக்கல். ஒட்டுமொத்தமான ‘போங்கடா டேய்‘ என்ற சிரிப்பு. அந்த காட்சியில் காட்சி வழியாக அதை அவர் உருவாக்குகிறார். அந்தக் கசப்பில் எனக்குப் பங்கே இல்லை. நான் அந்த அளவுக்கு ‘ஸினிக்‘ இல்லை. அது பாலாவுக்கு மட்டுமே உரியது.
படம் முழுக்க காட்சியை அமைப்பதில் இந்த விமரிசனநோக்கு அவரிடம் செயல்படுவதைக் கண்டிருக்கிறேன். சின்னச் சின்னக் காட்சிகளில் இந்த விமரிசனத்தை அமைப்பதில் என்ன பொருள் என்று கேட்டிருக்கிறேன். அவை கண நேரத்தில் மின்னிச் சென்றுவிடுமே.. ‘இருக்கட்டும் பத்துவருஷம் கழிச்சு நாமளே பாக்கலாமே‘ என்பார் பாலா.
ஒர் உதாரணம் போலிஸ் நிலையத்தில் சவுக்கால் இன்ஸ்பெக்டர் ‘ஓனர்‘ ரை அடிப்பார். அடிபட்டால் அவர் அசரவே இல்லை.. ஏனென்றால் அவர் அன்றாடம் செய்யும் தொழிலே சவுக்கால் அடித்துக்கொள்ளுதல்தான். தொழில் மட்டுமல்ல பொழுதுபோக்கும் சவுக்காலடித்துக்கொள்ளுதல்தான். அவர் அறிமுகமாகும்போது கொஞ்சம் சுருதி ஏற்றிக்கோண்டு ஓய்வாக சவுக்கால் அடித்துக்கொண்டு என்னடி ராக்கம்மா என்ற பாட்டை பாடி நடனமிட்டுக்கொண்டிருப்பார். அந்த இடத்தின் வேதனையான நகைச்சுவை ஒருவருமே கவனிக்காமல் போய்விட்டது.
அதேபோல காட்சிகளில் பாலா உருவாக்கியிருக்கும் நுட்பமாக சின்னக்கதைகள். உதாரணமாக இரண்டு பையன்களும் படு உற்சாகமாக பிச்சை எடுக்கக் கிளம்பும் காட்சி, எப்போதும் அவர்கள் ஒன்றாகவே இருக்கிறார்கள்., ஒரே தட்டில் சாப்பிடுகிறார்கள். ஓருவன் முள்மேல் இருக்க மற்றவனும் அருகே வந்து அமர்ந்துகொள்கிறான். கைகோர்த்து தூங்குகிறார்கள். ‘எங்களுக்கெல்லாம் இருபதாயிரம் வெலை ,என்னா பார்ட்னர்‘ என்ற வசனம் என ஒரு மகத்தான நட்பு சிலசில மின்னல்கள் வழியாக படத்தில் ஓடிச்சென்றுவிடுகிறது. இவற்றை எத்தனை கடுமையான உழைப்பில் பாலா உருவாக்கினார் என்று பார்த்தபின் போகிறபோக்கிலான விமரிசனங்களை கவனிக்கும்போது எல்லாம் எதற்காக என்றுதான் இருக்கிறது.
ஒவ்வொரு காட்சிக்கும் பாலாவுக்கு அவருக்கான காட்சி நியாயம் இருந்தது. இன்னொரு ஆரோக்கியமான சூழலில் படத்தை இயக்குநர் சொல்லவருவதென்ன என்றுதான் அணுகுவார்கள். இப்போது கேரளத்தில் வரும் எல்லா திரைவிமரிசனங்களும் அந்த கோணத்திலேயே உள்ளன என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் தமிழில் படத்தை வைத்துக்கொண்டு அரட்டை அடிப்பதையே விமரிசனம் என்று பழகியிருக்கிறார்கள். தாண்டவனின் முகாம் செட்டா இல்லையா என்ற ஆராய்ச்சிகள், செட் சரியில்லை என்ற கருத்துக்கள், [அது காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு நிலத்தடிக் கோயில்]
அந்த இடம் எப்படி அங்கே வந்தது, அப்படி ஓர் இடம் உண்டா என்பது போன்ற ‘சமூகவியல்’ ஆய்வுகளைக் க்ண்டேன். அதை எழுதியவர்களுக்கு என்னவோ இந்தியாவின் அகமும் புறமும் தெரியும் என்பதுபோல. ஸ்ரீகாளஹஸ்தியில் ஸ்ரீசசைலத்தில் ராமேஸ்வரத்தில் அதைப்போல பிச்சைக்காரர்கள் தங்கும் இடிந்த பல கோயில்களை நான் கண்டிருக்கிறேன் – ஏற்கனவே எழுதியிருக்கிறேன்
அது பாலா உருவகித்த ‘பாதாள உலகம்‘ அதாவது ஏழாம் உலகம். அந்த இடத்துக்கு அந்த பொருளை அளிக்க அவர் எடுத்துக்கோண்டிருக்கும் கவனம் ஒரு நல்ல ரசிகனை பலமுறை அந்தப்படத்தைக் கவனிக்கச் செய்யும். அங்கே ஆறுவயது முதல் நூறுவயது வரை மனிதர்கள் இருக்கிறார்கள். தூசி அழுக்கு மரணம். ஆனால் அங்கும் சின்னச் சின்ன உல்லாசங்களும் உறவுகளும் உண்டு. பிரியமாக பேன் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். கைகால் பிடித்து விடுகிறார்கள் மடியில் தலைவைத்துப் படுக்கிறார்கள்.
காமிரா அந்தக் காட்சி வழியாக எப்போதும் நகர்ந்தே செல்கிறது. அதுசெல்லும் தூரம் முழுக்க ‘உருப்படிகளை‘ நிரப்பி அவர்கள் ஒவ்வொருவரையும் நடிக்கச்செய்து அதை உருவாக்க பாலா போன்ற சிலராலேயே தமிழில் முடியும். காமிரா அவர்களைக் காட்டிநகர்ந்து செல்வதனாலேயே சேது போல இருக்கிறது என்று ஒருசில திரைநிபுணர்கள். அப்படியானால் இனிமேல் பாலா காமிராவை பான் செய்யவே கூடாதா என்ன?
தாண்டவனின் இடம் ஒரு விபூதிக்கடை என்றே எழுத்தில் இருந்தது. அவனுடைய பக்க வியாபாரமாகவே உருபப்டிகள் காட்டப்பட்டன. அவ்வகையில் அவை படம்பிடிக்கவும் பான. ஆனால் பின்னர் பாலாவுக்கு அது ஒரு பாதாளம் ஆக இருக்க வேண்டும் என்று பட்டது. அதற்கான நோக்கம் அவருக்கு இருந்திருக்கிறது.
ருத்ரன் தலைகீழாக அறிமுகமாவதிலிருந்து பல காட்சிகளில் அவன் தலைகீழாகவே நிற்பதிலும் பாலாவுக்கான அர்த்தம் உள்ளது. உச்சகாட்சியில் அவன் அம்சவல்லியை தலைகீழாகக் காண்கிறான். இன்னொரு உலக இயக்குநர் படத்தில் இத்தகைய காட்சிகள் வந்திருந்தால் அங்கே அதைப்பற்றி எழுதியிருப்பார்கள் நம் விமரிசகர்களும் அதை மீண்டும் சொல்லியிருப்பார்கள்.
போகிறபோக்கிலேயே இந்தப்படத்தில் முக்கியமான வசனங்கள் வருகின்றன. ‘நாலைஞ்சு உருப்படிகளைப் பெத்துப்போடு‘ என்ற வாழ்த்து ஓர் உதாரணம். ‘சாமி நம்மைப்பாக்காட்டியும் நாம சாமியை பாத்தா போரும்‘ என்ற வசனம் இன்னொரு உதாரணம். வசனங்களை அந்தந்த கதாபாத்திரங்கள் அவர்கள் போக்கில் புரிந்துகொண்டு சொல்லவிட்டிருக்கிறார் பாலா.
கவனமில்லாமல் எடுத்த எந்தக் காட்சியும் படத்தில் இல்லை என்பதே நான் உணர்ந்தது. அவர் அளித்த கவனமும் உழைப்பும் பத்து சதவீதம் கூட பார்வையாளர்களால் ,அதிலும் தேர்ந்த பார்வையாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களால், கவனிக்கப்படவில்லை.
4. நான் கடவுளில் இரு கதைகள் சரியாக இணைக்கபப்டாமல் இருக்கின்றனவா? ஒன்று நானும் இன்னொன்று பாலாவும் உருவாக்கியதா?
நான்கடவுளில் இரு உலகங்களும் இருவரும் சேர்ந்து உருவாக்கியதே. இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பு என்பது கொஞ்சம் யோசித்தால் தெளிவாகவே தெரியக்கூடியது. அகோரிகளும் பிச்சைக்காரர்களே. அவர்கள் தங்களை பிச்சைக்காரர்களாக ஆக்கிக் கொண்டவர்கள். பிச்சைக்காரர்கள் ஆக்கப்பட்டவர்கள். அகோரிகள் முழுமையான சுதந்திரம் கொண்டவர்கள். பிச்சைக்காரர்கள் பரிபூரணமாக அடிமைகள். ஒரே ஏழாம் உலகில் உள்ள உச்சம் அவர்கள். அடிமட்டம் இவர்கள்.
இதை எத்தனை காட்சிகள் வழியாக மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறார் பாலா. சாதாரண மனிதனுக்கு அகோரியும் பிச்சைக்காரனே. அதை படத்தில் தெருவில் தூங்குபவன் போலீஸ் உட்பட குறைந்தது ஐந்துபேர் சொல்கிறார்கள். ‘அவரை நம்மை மாதிரி பிச்சைக்காரர்னு நெனைச்சியா’ என்று வேறுபாட்டை பிச்சைக்காரப்பையனே சொல்கிறான். இத்தனை அப்பட்டமாக மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறது அந்த ஒற்றுமையும் வேறுபாடும்.
அநத இரு உலகங்களும் உரசிக்கொள்ளும் ஒரு புள்ளி. அதன்மூலம் இரண்டையும் பரிசீலனைசெய்ய ஒரு வாய்ப்பு. படம் தேடுவது அதைத்தான்.
5. நான் கடவுளில் பூஜா பாடும் பாடல்களை ஏன் புதிதாக பாடவைத்திருக்கக் கூடாது?
பாலா அதை யோசிக்காதவராக இருப்பார் என்று எண்ணி அறிவுரை சொல்லவேண்டியதில்லை. அங்கே அவர் உருவாக்க விரும்பியது ‘ரியலிஸத்தை‘ அல்ல. நக்கலை. அவரது நோக்கம் இதுதான். அந்தக்குரல் பிச்சைக்காரர்களின் குரலே அல்ல. தாயிற்சிறந்த கோயிலும் இல்லை, முருகாமுருகா, சொந்தமில்லை எல்லாமே ‘வெளி‘க்குரல்கள். அவர்களுக்கு ‘தலைக்குமேல்‘ உள்ள உலகில் இருந்து வரும் குரல்கள்.அவர்கள் அதற்கு வாயசைக்கிறார்கள். தங்கள் தொண்டைகளை விட்டுக்கொடுக்கிறார்கள். அது அவர்களின் பாட்டு அல்ல. ‘அம்மா தாயே பசிக்குதே சாமீ’ மட்டும்தான் அவர்களின் பாட்டும் குரலும். அந்த வேறுபாட்டை உருவாக்க எண்ணினார் அவர். அது வந்துசேரவில்லை என்று வேண்டுமானால் சொல்லுங்கள். அது பாலாவின் தவறாக இருக்கலாம். உங்கள் தவறாகவும் இருக்கலாம்.
நான் கடவுள் பற்றிய என் கருத்தை சாதகமாகவோ பாதகமாகவோ சொல்வது முறையாக இருக்காது. ஏனென்றால் அதில் நானும் ஓர் உறுப்பு. ஆனால் பாலா என்ன கொடுத்தாரோ அதை பெற்றுக்கொண்டவர்கள் அதைத்தாண்டிச் சென்று சொல்லும் கருத்துக்களுக்கே மதிப்பு இருக்க முடியும். டிக்கெட் எடுத்து படம் பார்த்த எவருமே கருத்து சொல்லலாம். ஆனால் பொருட்படுத்தும் தகுதி கொண்டகருத்து நல்ல ரசிகனுடையதாகவே இருக்க முடியும்
[மேலும்]