கடந்த மாத இறுதியில் நடந்த யோக முகாமில் கலந்து கொண்டது மிகவும் பயனளிக்க கூடியதாக இருந்தது. நான் ஏற்கனவே சில வருடங்களாக ஆசன பயற்சிகளை செய்து வந்தாலும் மரபான யோக முறைய முறையாக பயில வேண்டும் என்ற ஆசை இருந்தது. மேலும் என் உடலுக்கு மனதிற்கும் அது முக்கியமாக தேவைபட்டது. குருஜி சௌந்தர் மிகவும் நேர்த்தியாக யோக மரபு ,மரபு மற்றும் மரபல்லாத பயிற்சி முறைகளில் உள்ள வித்தியாசம் ஆகியவற்றை முறையே புரியவைத்தார்.
மேலும் மரபான யோகம் என்றால் அதற்கான வரைமுறை ,தற்பொழுது இந்தியாவிலுள்ள நான்கு மரபான யோக கல்வி நிறுவனங்கள் அவைகளில் நடைபெறும் ஆராய்சிகள் போன்ற தகவல்கள் மிகவும் பயனுள்ளதாகவுளம், சில சமயங்களில் வியக்க வைப்பதாகவும் இருந்தது. வெறும் ஆசன பயிற்சி என்றில்லாமல் அந்த ஆசனத்தின் தேவை ,அதனால் ஏற்படும் மாற்றம் ஆகியவற்றை புரியவைத்த பின்பே பயிற்றுவித்தார். இது மிகவும் முக்கியமானதாக அமைந்தது.
ஒவ்வொரு ஆசனத்தை செய்யும்பொழுது உடலளவிலும் மனதளவிலும் ஒன்றி செய்வதற்கு இது வழி வகுத்தது. வகுப்புகள் மிகவும் நேர்த்தியாக திட்டமிடபட்டு நடத்தபட்டன. வெறும் யோகம் என்றில்லாமல் உடல் சாரந்தும் உடல் நலம் சாரந்தும் ,மன நலம் சார்ந்தும், யோகம் எங்கே அறிவியலுடன் இணைந்து போகிறது எங்கு மாறுபடுகிறது போன்ற உரையாடல்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. ஒரு மிக பெரிய மரபின் ஒரு சிறு பகுதியாக தொடர்சியாக இணைவதாக உணர்ந்தோம்.
முக்கியமாக குருஜி சௌந்தரின் அணுகுமுறை. தனது வாழ்க்கையை அற்பணித்து மரபான யோக முறைய கற்றவர் என்றபொழுதும் குரு என்ற ஸ்தானத்தில் இருந்த பொழுதும் எங்கள் அனைவரையும் நண்பர்களாகவே நடத்தினார். நாங்கள் அவரை குருவாகவும் அதே நேரத்தில் தயக்கமின்றி எதையும் கேட்கவும் பகிர்ந்துகொள்ள கூடியவராகவும் ஒருசேர இருந்தார். ஒரு பயிற்சி என்று மட்டுமில்லாமல் கருத்துபறிமாற்றம் மூலம் கற்றுகொள்ளும் ஒரு சூழலை உருவாக்கி தந்தார். பெரும்பாலான நேரங்களில் எங்களின் கேள்விகள் மூலமே உரையாடல்கள் நடந்தன.
கேள்வி : குருஜி..எந்த இடத்திலும் யோகா செய்யலாமா..
பதில் : எந்த இடத்திலும் செய்யலாம்.ஆனா நீங்க யோக மேட்டை எடுத்து போட்டவுடன் “இப்படி குக்கர இறக்கி வைக்கிற இடத்தில் யோகா பண்றீங்களே …அறிவு இருக்கா..” என்று யாரும் கேட்டு விடாத இடமாக இருக்குமாறு பார்த்துகொள்ளுங்கள்..
நிகழ்வெங்கும் இது போன்ற சுவராஸ்யமான கேள்வி பதில்கள் இருந்தது சிறப்பு..
அந்தியூர் மணி அவர்கள் மிகுந்த அக்கறையுடன் கவனித்து கொண்டார். சின்ன சின்ன விஷயங்களில் கூட. வழக்கம்போல அந்தியூர் மணியின் சைவசித்தாந்த மற்றும் நாட்டாரியல் ,வரலாற்று வகுப்புகள் கிடைக்கும் நேரத்திலெல்லாம் நடந்தது கூடுதல் சிறப்பு. அந்தியூர் மணிக்கு நன்றிகள்.
மேலும் அங்கு உணவு சமைக்கும் இரு அம்மாக்கள். மிகுந்த அக்கறையுடனும் கனிவுடனும் சமைக்காமல் அந்த “வீட்டு” சுவை வராது. அவர்களுக்கும் நன்றிகள்.
இது போன்ற கற்றலுக்கான வாய்ப்பையும் ,சூழலையும் முக்கியமாக அதற்கேற்ற நல்ல ஆசிரியர்களையும் அமைத்து கொடுத்தமைக்கு மிக்க நன்றி ஜெமோ.
பிரதீப் சபா