அணி, கடிதங்கள்

அணி சிறுகதை

அன்புள்ள ஜெ

உயிர்மை வெளியிட்ட சிறுகதையான அணி பெரும்பாலானவர்களின் வாசிப்புக்குள் செல்லுமா என்று தெரியவில்லை. மிக அரிதான ஒரு சூழலுக்குள் நிகழும் கதை. ஏற்கனவே நீங்கள் இதே சூழலில் ஒரு கதை எழுதினீர்கள்.  உங்கள் தொடக்ககாலக் கதையான போதி இதே கருவும் களமும் கொண்டது. மலம், மடம் ஆகிய கதைகளும் இதே பேசுபொருள் கொண்டவை. தமிழில் இந்தக் களத்தில் வேறு எவரும் எழுதியதில்லை. ஆச்சரியமாக உள்ளது. நீங்கள் எடுத்தாளும் கதைக்களங்கள்.

இந்தக்கதையின் மையம் தம்புரானின் உறுதிதான். கள்ளமற்றவராக அவர் தன் சத்தியத்தில் சார்ந்து நிலைகொள்கிறார். இந்தக்கதையை வாசித்தபோது இதை எங்கேயோ வாசித்துள்ளேனே என்ற எண்ணம் வந்தது. தேடிப்பார்த்தபோது தமிழ் விக்கியிலேயே கூழங்கை தம்புரான் பற்றிய கட்டுரை இருந்தது. அந்தச் செய்தியை ஓர் அரிய கதையாக ஆக்கியிருக்கிறீர்கள்.

தன்னை நிரூபிக்க கூழங்கை தம்புரான் தன் கையை எரித்துக்கொண்டார். தனக்கே தன்னை நிரூபிக்க என்று தோன்றுகிறது

அருண்குமார் பழனிவேல்

கூழங்கை தம்பிரான் தமிழ் விக்கி

அன்பு நண்பர் ஜெயமோகனுக்கு, வணக்கம். நலம்தானே?

உயிர்மையில் வந்திருக்கும் சிறுகதை அணி படித்தேன். கதை சற்று வித்தியாசமான தளத்தில் இயங்குகிறது.இதுபோன்ற சூழலில் உலவும் சிறுகதைகள் இப்பொழுது நவீன இலக்கிய உலகில் எழுதப்படுவதில்லை.

காரணங்கள் என்னவென்றால் அச்சூழல்கள் பற்றி யாரும் அதிகம் அறியமாட்டார்கள்.ற்றொன்று ஏதேனும் தவறாய்ப் புரிந்து கொண்டுவிடுவார்களோ என்ற அச்சம்மடங்களில் பல அரசியல்கள் அப்போதே நடந்துள்ளன என்பது செவிவழிச் செய்திகளாக இருந்துள்ளன. அதிலும் அடுத்த பட்டம் யார் என்பதில் பெரிய போட்டியே உணவில் நஞ்சு கலக்கக் கூடிய அளவிற்கு இருந்திருக்கிறது.

சுந்தரலிங்கம் வந்து கனகசபாபதியிடம் “நான் ஒங்காளுன்னு எல்லாருக்கும் தெரியும்” என்று சொன்ன உடனேயே அங்கு அணி பிரிவினை இருப்பது தெரிந்து விடுகிறது.எப்படியும் கனகத்தை விலக்குவது என்று விசாரணைக்கு முன்னரே முடிவு செய்திருப்பதும், “உன்னைய மடத்தை விட்டு நீக்குறது முடிவாயிடுச்சு” என்ற சுந்தரலிங்கத்தின் உரையாடலால் தெரிந்துவிடுகிறது.

எப்பொழுதும் நமசிவாயம், நமசிவாயம் என்றிருக்கும் கனகம் எல்லாவற்றுக்கும் சிவனை நம்பித் தயராகிறார். “ஒரு வார்த்தையில் சிவனை மறுத்திடலாம் சித்தாந்தம் பொய்யின்னு சொல்லிடலாம்.” என்று சொல்லும் அளவுக்கு கனகம் மனம் உடைந்து போயிருப்பது காட்டப்படுகிறது.

ஆனாலும் கொண்ட கோட்பாட்டில் உறுதியாக இருக்கிறார். பட்டினத்தார் கூறியபடி நிலையில்லாத இவ்வுடலின் பற்றைத் துறந்து விடுவதால்தான் கையை எரியும் நெய்யிலேயே வைத்திருக்கிறார்.

இதுபோன்று வைணவத்திலும் பார்க்கலாம் .குலசேகரப் பெருமான் வைணவர்களுடன் நெருக்கமாக இருந்தது பிடிக்காதவர்கள் வைணவ அடியார்களின் மீது திருட்டுப்பட்டம் கட, அவர் “என்னடியார் அது செய்யார்” என்று அவர்களுக்காக நாகம் இருந்த குடத்தில் கைவிட்ட வரலாறு உண்டு. குடப்பாம்பில் கைவிட்டான் என்றே குலசேகரருக்கு வாழித்திருநாமம் உண்டு.

பொய்ப்புகார்களும், போலிசாட்சிகளும் எந்நாளும்  ஒரு கொள்கையையும் சித்தாந்தத்தையும் அழிக்க முடியாது என்பது கதை காட்டும் பாடம்.

இக்கதை மரபை நவீனத்தோடு இணைக்கும் பாலமாகும்.

வளவ.துரையன்,கடலூர்

முந்தைய கட்டுரைநாவலெனும் கலைநிகழ்வு – லக்ஷ்மி சரவணக்குமார்
அடுத்த கட்டுரைஒரு கருத்தரங்குக்கு முன்…