வதையுரிமை- கடிதம்

திசைகளின் நடுவே தொகுப்பு வாங்க
திசைகளின் நடுவே தொகுப்பு மின்னூல் வாங்க 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம்.

தருமன் தனதுப் பிச்சைப்பாத்திரத்தில் போடும் தங்க நாணயங்களை இரத்த வாடை அடிக்கிறது என்று கொட்டிவிடும் சார்வாகன் வரும் ‘திசைகள் நடுவே’, அனுமனாகவே மாறிவிடும் கதகளி ஆசான் அனந்தன் வரும் கதையான லங்கா தகனம்..கும்பி வத்திப்போய் வெட்கத்தைவிட்டு தனது பூசாரியிடம் கோழி கேட்கும் மாடன் வரும் ‘மாடன் மோட்சம்’.‘சிவா சிவா’ எனச்சொல்லிக்கோண்டிருந்த கிளிகள் ‘சரசா சரசா’ என மாயம் நடந்த கதையான ‘சிவமயம்’ ‘ஆறு, பனியில் நனைந்துபோய்க் கிடந்தது’ என்று என்றும் மறக்கமுடியாத சித்திரத்துடன் ஆரம்பிக்கும் ‘நதி’ கதை.அந்தப் பச்சைத் துரோகி வரும் ‘பல்லக்கு’. உடும்புத்தோல் உடுக்கையை மீட்டி சிங்கி பாடும் ‘படுகை’. இந்தக் கதைகள் அடங்கிய திசைகளின் நடுவே தொகுப்பில் உள்ள எல்லாக் கதைகளையும் வாசித்திருக்கிறேன்.  ‘சவுக்கு’ மட்டும்,  விவசாயி போரில் இருந்து உருவும் தட்டைகளுக்குள் ஒளிந்திருக்கும்  பாம்பைப் போல எனக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கிறது. தனது தலையில் தூக்கிவந்த தட்டைக் குவியலில் பாம்பு ஒன்று படுத்திருந்திருக்கிறது என்ற விவசாயி அடையும் அதே பதற்றத்தைத்தான் , ‘சவுக்கு’ வாசித்துவிட்டு நான் அடைந்தேன்.

கதைசொல்லி சிறுவனுக்கு அவன் நகரத்தின் ஒரு சந்திப்பு நினவிலிருந்து மீளவில்லை. நினைத்தாலே நடு இரவில் விழிப்பு வந்து வியர்த்துவிடுகிறது. சவுக்கை முதுகில் விளாசி,காயமாக்கிக்கொண்டு மக்கள் இரக்கப்பட்டுப் போடும் காசில் வாழும் கலைக்கூத்தாடியையும் அவன் குழந்தைகளையும் கதைசொல்லி அங்குதான் பார்க்கிறான். மல்கான் சிங், சோகக்கதை சொல்லி  தன்னையே சவுக்கால், விளாசிக்கொள்வதையும், ஸ்வரூப ராணி எல்லாப் பாடல்களுக்கும் ஒரே மாதிரி டான்ஸ் ஆடுவதையும் , சோட்டாலால் மிருதங்கம் வாசிப்பதையும் விபரிப்பதில் தமிழக நகரங்களின் முச்சந்தியில், ஜான் வயிற்று பிழைப்பை முன்னிட்டு நடக்கும் தெருக்கூத்தை புனைவின் வடிவில் ஆவணப்படுத்தியிருக்கிறது என்ற வகையில் மட்டுமே இந்தக் கதைக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. கதைசொல்லி தன் வயதில் இருக்கும் சோட்டாலாலுடன் நட்பு பாராட்டியதால், கண்டடையும் வாழ்வியல் உண்மைகளால், கதை முன்னகர்ந்து தமிழில் வந்த மிகச்சிறந்த கதைகளில் ஒன்றேன ஆகிறது.

கோவில் வாசலில் பிச்சை எடுப்பவர்களின் வாழ்வில் உள் சென்று ‘ஏழாம் உலகம்’ நாவல். முச்சந்தியில் வித்தை காட்டுபவரின் வாழ்க்கையை கட்டவிழ்க்க இச்சிறுகதை – சவுக்கு. ஏழாம் உலகம், ‘The Abyss’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் கிடைக்கிறது. ‘சவுக்கு’-ம் வாசக நண்பர்களில் ஒருவரால் மொழியாக்கம் செய்யப்பட்டு உலகில் உலா வரட்டும் என ஆசைப்படுகிறேன்.

அன்புடன்,

சௌந்தர்

அன்புள்ள சௌந்தர்

அக்கதை என் உள்ளத்தில் ஒரு படிமம் மட்டுமாகவே இருந்தது. எழுதி 30 ஆண்டுகளுக்குப்பின் ஒரு படிமம் மட்டுமாக எஞ்சுகிறது. தந்தையிடமிருந்து மகனுக்கு, பாரம்பரியச் சொத்தாக வந்துசேரும் சவுக்கு. தன்னைத்தானே வதைத்துக்கொள்ளும் கருவி. அவர்களின் குலச்சொத்தே அதுதான்

ஆனால் நம் வாழ்க்கையில் நாமும் பெரும்பாலும் தந்தையிடமிருந்து, மூதாதையரிடமிருந்து பெற்றுக்கொள்வதே அவர்களின் வதைகளைத்தானே?

ஜெ

முந்தைய கட்டுரைஆலம் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைபூன் முகாம், பதிவு