ஒரு காலகட்டத்தின் புயல்- ரம்யா

அன்பு ஜெ,

இந்தத்தூரன் விழாவின் மையமாக உங்களுடைய உரை அமைந்திருந்தது. ஒரு உணர்ச்சிகரமான உரை.  கருப்பங்கிளார்.சு.அ.ராமசாமிப்புலவர் என்று நீங்கள் சொன்னபோதே அவர் எழுதிய அத்தனை தொகுதிகளும் கண்முன் வந்து நின்றன. இத்தனை ஆவணப்படுத்தல்கள் செய்தும் கைவிடப்பட்ட ஒருவரை, சென்று கண்டடைந்து ஆவணப்படுத்த காலம் தேர்ந்தெடுத்துக் கொண்ட இன்னொரு அறிஞர் என மு. இளங்கோவன் அங்கே முன்வைக்கப்பட்டபோது அவர் உணர்ச்சிகரமாகாக ஆகியிருந்தார். உரையின் உச்சமாக அந்தப்புள்ளி இருந்தது.

ஒன்றரை வருடத்திற்கு மேலாக நண்பர்களுடன் இணைந்து செய்து கொண்டிருக்கும் இந்த தமிழ்விக்கிப்பணி வழியாக அறிந்து கொண்டது ”ஒரு காலகட்டத்தின் கூட்டு உளவியல்” ஒன்று உள்ளது என்பதைத்தான். அறிவுத்துறையில் செயல்பட்டிருந்த அனைவரும் அடித்துச் செல்லப்பட்ட ஒரு புயலை தமிழ்விக்கி வழியாகவே கண்டுகொள்ள முடிந்தது. அதைக் கண்டு கொள்ளும் போது கிடைக்கும் ஆற்றல் அளப்பரியது. இங்கு என்ன செய்யப்பட்டிருக்கிறது என்பது இனி என்ன செய்ய வேண்டும் என்ற விதையை நமக்கு அருள்கிறது. எப்படி செய்யப்பட்டிருக்கிறது என்பது அதற்கான ஊக்கியாக அமைகிறது.

உ.வே.சா, சைமன் காசிச்செட்டி, அ.சதாசிவம்பிள்ளை, மு. அருணாச்சலம் என பழந்தமிழ் அறிஞர்களைத் தொகுத்தவர்கள் ஒரு புறம், நவீனத்தமிழ் இலக்கியம் நோக்கி புதிய வீச்சை செலுத்த வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருந்த பி.எஸ்.ராமையா, புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, க.நா.சு என ஒரு புறம், சங்கரதாஸ் சுவாமிகள், டி.கே.எஸ், ஆண்டி சுப்ரமணியம், சி. கன்னையா, பாலாமணி, நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை என நாடகக் கலைஞர்கள் ஒருபுறம், அண்ணாத்துரை, மு. கருணாநிதி, எம்.ஜி. ராமச்சந்திரன் என கலையும், இலக்கியமும், அரசியலும் இணைந்த தலைவர்கள் ஒரு புறமும் என மிகப்பெரிய ஒரு கூட்டு மனநிலைக்காலகட்டம் அது. இத்துடன் நீங்கள் அறிவியல், தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகளையும் உடன் சேர்த்துக் கொண்டீர்கள்.

சமயம், இலக்கியம், நாடகம் என எதைத்தொட்டாலும் இங்கிருந்து ஒரு கோடு இலங்கை வரை நம்மால் நீட்டிக் கொள்ள முடிந்த காலகட்டமும் கூட அது. இந்தப் புயல் வீசியதும் ஒரு குறுங்குழுவிற்குள் தான். ஆனால் அவர்களுக்குள் ஒரு உரையாடல் இருந்ததை உணர முடிகிறது. ஒருவரின் செயலும், சிந்தனையும் இன்னொருவரை ஊக்குவித்திருப்பது தெரிகிறது. புகழும் அடையாளமும், செல்வமும் தரக்கூடிய சினிமாவிலும், அரசியலிலும் இயங்கியவர்கள் தவிர இங்கு யாரும் கால ஓட்டத்தில் நினைவுகூரப்படவில்லை. அறிஞர்கள் வாழ்ந்த அந்த காலகட்டத்திலேயே கூட அது அவர்களுக்கு நிகழ்வில்லை. சாதியம் சார்ந்து அகழ்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு சில மணிமண்டபங்களும், சிலைகளும், ஆவணப்படுத்தல்களும் நிகழ்ந்திருக்கின்றன.

தனித்தமிழ் இயக்கம், பதிப்பியக்கம், இசைத்தமிழ் இயக்கம் இந்த புயலை முன்னெடுத்துச் செல்லும் விசையாக நீங்கள் உரையில் குறிப்பிட்டது ஒரு பரந்த பார்வையை அளித்தது ஜெ. அதைக் கொண்டு தமிழ் விக்கி பதிவுகளைப்  பார்க்கும் போது தொகுத்துக் கொள்ள முடிந்தது.

இத்தனை வீச்சான காலகட்டம் ஒன்று எங்கே தேங்கிப் போனது. ஏன் நீங்கள் குறிப்பிட்டது போல நாற்பது ஐம்பது வருடங்களாக தனு வைத்த புரங்களாக ஆனது என்பது விளங்கவில்லை. அத்தகைய வீச்சு தேவைப்படும் ஒரு காலகட்டத்தில் இருக்கிறோம் என்பது மட்டும் புரிந்தது. தூரன்விருது விழா இந்த வெற்றிடத்தை நிரப்புவதைக் காண முடிகிறது. விஷ்ணுபுரம் விழா, அதன் அமர்வுகள் வழி புனைவிலக்கிய ஆளுமைகளையும்,  அது சார்ந்த உலகத்தையும் அறிந்து கொள்ள முடிகிறதென்றால், தூரன்விழா நிகழ்வு வழியாக அபுனைவு சார்ந்த ஆளுமைகள், அறிஞர்கள் ஆகியோரை அறிய முடிகிறது. இந்த வருடம் இன்னும் ஒருபடி மேலாக இசை நிகழ்வும் இணைந்து கொண்டது.

*

இந்த வருடமும் அமர்வுகள் அனைத்துமே சிறப்பாக இருந்தது ஜெ. முதன்மையாக பி.கே.ராஜசேகரனின் அமர்வு. ஆளுமையாகவே அவரை மிகப்பிடித்திருந்தது. அரங்கில் அவரின் விரிவான பதில்களும், நண்பர்களின் கேள்விகளும் சிறப்பாக இருந்தது. முதன்மையாக பி.கே. ராஜசேகரன் ஒரு விமர்சகர். ஒவ்வொரு மொழியிலும் விமர்சகர்கள் வழியாகவே இலக்கிய படைப்புகள் அடுத்த காலகட்டத்தை நோக்கி எடுத்துச் செல்லப்படுகின்றன. புதிய தலைமுறை ஒன்று முந்தைய தலைமுறை எழுத்தாளர்களை முதலில் அணுகுவது அவர்கள் வழியாகத்தான். அந்த வகையில் மலையாள மொழி சார்ந்து இயங்கும் முக்கியமான விமர்சகராக பி.கே.ராஜசேகரனை அறிமுகப்படுத்தினீர்கள். முன்னரே மலையாள அகராதியான சப்ததாராவலியை உருவாக்கியவரான ஶ்ரீகண்டேஸ்வரம் பத்மநாப பிள்ளை பற்றி அவர் எழுதிய கட்டுரை அழகிய மணவாளன் மொழிபெயர்த்து தளத்தில் வெளிவந்ததும், தமிழ்விக்கி பதிவும் அவரை அறிய உதவியாக இருந்தது. புனைவோடு மட்டும் நின்றுவிடாமல் அதற்கு ஊற்றாக அமையும் மொழிக்கான அகராதியைத் தோற்றுவித்தவரைக் கவனப்படுத்தியதால் அவர் தூரன் விழாவுக்கு முக்கியமாக அறிமுகப்படுத்த வேண்டிய ஆளுமை என்ற எண்ணம் இருந்தது.

சமீபத்தில் வெளிவந்த திருவருட்செல்வி சிறுகதைத்தொகுப்பின் முன்னுரையில் விஷால் ராஜா, “ஒவ்வொரு புத்தகத்தை படிக்கும்போதும் அடிப்படையான வியப்பு என்னை விட்டு அகலவேயில்லை. மனிதர்கள் மொழியில் உருவாகிறார்கள். வீடுகளும் தெருக்களும் மொழியில் உருவாகின்றன. அவற்றை என்னால் அனுபவத்தில் உணர முடிகிறது. எவ்வளவு அழகானது மொழி? எவ்வளவு ஆழமானது மொழி? எவ்வளவு ஆழமானது நினைவு? எவ்வளவு மர்மமானது அனுபவம்?” என எழுதியிருந்தார். ஒரு மனிதன் இன்னொரு மனிதனுடன் உரையாட மொழி கருவியாகிறது. புனைவெழுத்தாளரின் முதல் முக்கியமான கருவியும் அதுவே. அவர் அதைத் தன் வாழ்நாள் தோறும் பயின்றுகொண்டே இருக்க வேண்டியுள்ளது. நீங்கள் ஒவ்வொரு நாளும் எடுத்துப் பயிலும் ஒன்றாக அகராதியையே சொல்வீர்கள். புனைவும் அபுனைவும் முயங்கும் புள்ளி இது தான். மொழி சார்ந்த அகராதிப்பணிகள், கலைக்களஞ்சியப்பணிகள், ஆய்வுகள் என தமிழறிஞர்கள் தொகுத்து அளிக்கும் ஒன்று இலக்கியப்பரப்பில் செயல்படும் யாவருக்கும் என்பதற்கான சான்றுகள் இவை. அந்த ஒன்றை கவனப்படுத்தியவராக பி.கே.ராஜசேகரனை அறிமுகம் செய்து கொண்டோம். அரங்கில் மலையாள மொழியின் விமர்சன மரபு சார்ந்து அறிந்து கொள்ள முடிந்தது.

விமர்சகர்கள் எழுத்தாளராக இருந்தால் மட்டுமே அதற்கு மதிப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு அப்படியான ஒரு எண்ணம் கேரளாவில் இல்லை என்றும், அது ஒரு தனித்துறையாகவே வளர்ந்து வந்ததாகவும் சொன்னார். ஆனால் இன்னும் தமிழில் புனைவெழுத்தாளர்களைத் தாண்டி இந்த விமர்சன மரபு அதிகமும் செல்லாமல் தனித்துறையாக வளர்ச்சியடையாமல் இருப்பதன் முரணைப்பார்க்க முடிந்தது. ஒருவேளை புனைவும் அபுனைவும் முயைந்தியங்காத்தன்மையே அதற்கான காரணமாக இருக்கலாம் என்று தோன்றியது. தமிழ்த்துறை சார்ந்த அறிஞர்கள் இன்னும் இங்கு ஒப்பிலக்கணத்தையும், திறனாய்வுகளையும், கவிதைகளில் உவமை, உவமானத்தைக் கண்டறிவதையுமே விமர்சனமாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அநேகமாக பாரதிதாசனுக்குப் பிறகு தமிழ் மீளாத்துயரில் மூழ்கிக் கிடப்பதாக நானும் நினைத்திருக்கிறேன். அழகியல் சார்ந்து, ரசனை சார்ந்து தீவிர இலக்கியம் உருவாக்கி வைத்திருக்கும் ஒரு விமர்சன மரபை ஒருபோதும் யாரும் நெருங்கா வண்ணம் ஒரு முள்வேலி அமைத்து காத்துவருகிறார்கள் என்று தோன்றுகிறது.

மு. இளங்கோவன் ஐயாவின் அமர்வில்  ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், அசோகமித்திரன் என்ற பெயர் அமைந்த கேள்வியை கல்லூரி மாணவர்கள் Out of syllabus கேள்வி என்று சொல்லி கேள்வி எடுத்த தன்னை பலித்ததாகச் சொன்னது நினைவுக்கு வந்தது. இந்த தூரம் குறைந்தால் ஒருவேளை வாசிப்புப் புலம் அதிகமாகலாம், விமர்சனச்சூழல் விசாலமாகலாம் என்று தோன்றியது.

விமர்சன மரபில் பெண்ணெழுத்தின் விடுபடல் சார்ந்து நான் ஆரம்பித்த கேள்வியை நீங்கள் மிக விரிவாகக் கேட்டதோடு அதற்கான துணைக்கேள்வியையும் கேட்டீர்கள். அதற்கு நன்றி ஜெ. ”தமிழ் விமர்சன மரபு என பட்டியலிட்டால் இங்கு இருப்பது ஆண்கள் மட்டுமே. அவர்கள் அக்காலகட்டம் சார்ந்து முன்வைக்கும் அழகியலை நோக்கியே இலக்கியம் இயங்கி வருகிறது. இந்த விமர்சன மரபில் பெரும்பாலும் பெண்களுக்கு இடமில்லாமல் இருக்கிறதா? அதனால் தான் பெண் மைய எழுத்துக்கள் கவனம் பெறாமல் சென்றதா? அப்படி கவனம் பெறாமல் சென்றதால் தான் பெண்ணெழுத்துக்கள் உச்சமடையவில்லையா? இங்கு பெண் மைய எழுத்து என்பது மெல்லுணர்ச்சிகள், நேர்நிலை சார்ந்து என்பதை தெளிவாக எடுத்துச் சொன்னீர்கள். சைதன்யா எழுதிய ஜார்ஜ் சாண்ட் கட்டுரையின் தலைப்பை உதாரணமாகச் சொன்னது பொருத்தமாக இருந்தது. நிலவறை மனிதர்களான தஸ்தயெவ்ஸ்கி மற்றும் ஃப்லாபர்ட் ஆகியோரை ஏற்றுக் கொண்ட இலக்கியப் பரப்பு அவர்களின் அன்னையாக நேர்நிலை எழுத்தாக அமைந்த ஜார்ஜ் சாண்டை ஏன் புறக்கணித்தது” என்ற கேள்வியாக நீங்கள் கேட்டபோது அது முழுமையாக இருந்தது.

இக்கேள்விக்கு பதிலளிக்கும் முன் அவர் சற்று தயங்கியது தெரிந்தது. புதுமையான கேள்வியை எதிர்கொள்வதாகவும் அந்தத் தேடலின் முயற்சியில் இருப்பதற்கும் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் மலையாளத்தில் அம்பானிக்காவம்மா என்ற விமர்சகரைப் பற்றியும், கோமலவள்ளி, பாலாமணி, சுகதகுமாரி, கமலாதாஸ், ஆகியோரின் செல்வாக்கு பற்றியும் பகிர்ந்தார். பெண்கள் சார்ந்த திட்டத்திற்கு முதன்மையாக அவரின் வீட்டுக்கே சென்று முதலமைச்சர் ஆலோசனை கேட்கும் சுகதகுமாரியை அவர் விவரிப்பதே எழுச்சியாக இருந்தது. கமலாதாஸை பற்றிச் சொல்லும் போது ”அவள் கேரள ஆட்களுக்கு மாதவிக்குட்டி” என்று சொல்ல ஆரம்பித்து அவரின் பிறந்த நாள் கொண்டாடப்படும் விதத்தை விவரித்தது ஒரு கதாநாயகனை அறிமுகப்படுத்துவது போல பெருமிதமாக விவரித்தார்.

இன்று சூழலில் ஒடுக்கப்பட்ட மக்கள், சிறுபான்மையினர், பழங்குடியினர் என யாவருக்கும் இடம் உள்ளது என்றார். பழங்குடிகளின் பாடல்கள் கவிதை வடிவமாக வெளிவருவதைப் பற்றிச் சொன்னார். ஏற்கனவே பி.ராமன் இதைப் பற்றி பேசிய காணொளியைப் பார்த்திருக்கிறேன். யாவற்றுக்கும் இன்று இடமுள்ளது. இப்போது ”கலை” என்பதே பிரதானமாக உள்ளது. அங்கு எதற்கும் இடஒதுக்கீடு இல்லை என்றார். அவர் சொன்னதன் சாரம் புரிந்தது. ஆனால் கேள்விக்கான விடை கிடைக்கவில்லை ஜெ. அது தேடிக் கண்டடைய வேண்டியது தான். மிகப் பெரும்பாலும் உணர்வுகள் மழுங்கிய ஒரு காலகட்டத்திற்கு நம்மை கொணர்ந்து நிறுத்தியதற்கான காரணத்தை இலக்கியப்பரப்பின் வழியாக கண்டறிய இயலும் என்ற நம்பிக்கை உள்ளது. மிகவிரிவாகவும், ஆழமாகவும் அக்கேள்வியை நீங்கள் கேட்டமைக்கு நன்றி ஜெ.

அடுத்ததாக மு. இளங்கோவன் எனும் ஆளுமை. தமிழ்விக்கியில் நீங்கள் அறிமுகப்படுத்தியதன் வழியாக அறிந்து கொண்டோம். தமிழறிஞர்கள் பதிவுகளைத்தாண்டி, அவர்களுக்கான ஆவணப்படங்கள், கணினித்தமிழை பரவலாக்க அவர் எடுத்த முயற்சிகள் என பல செயல்பாடுகளை செய்து கொண்டிருப்பவர். வல்லினம் இதழில் அவரின் பேட்டி வழியாக அவர் தன் வாழ்வுக்கு ஏற்ற எளிமையான வாழ்க்கைமுறையை தேர்ந்தெடுத்து வாழ்ந்து கொண்டிருப்பது தெரிந்து நெகிழ்ச்சியாக இருந்தது. அவரைப் பார்க்கையில் பள்ளிப்பருவத்தில் சந்திக்கும் தமிழாசிரியர்களுக்கான கச்சிதமான உடல்மொழியைக் கொண்டிருந்தார். பேசும்போதே முகம் முழுவதும் புன்னகையும், மிகுந்த ஆர்வத்துடன் அவரை விட்டு அகலமுடியாதபடிக்குமாக கைகளை ஆட்டியபடியே சுறுசுறுப்பாக பேசிக்கொண்டிருந்தார்.

முதல் நாள் மாலை அவர் இயக்கிய பா.சுந்தரேசனார், விபுலானந்தர் ஆவணபப்டங்கள் திரையிடப்பட்டன. அந்த ஆவணப்படத்திற்காக அவரின் மெனக்கெடல்களைப் பற்றி விரிவாக விவரித்திக் கொண்டிருந்தார். அவர் அமர்விலும், ஆவணப்படம் திரையிடும் முன்னரும் பாடிய நாட்டுப்புறப்பாடல் அருமையாக இருந்தது. விவசாயக் குடும்பத்தில் பிறந்த தனக்கு இயல்பாகவே அதில் ஆர்வம் இருந்ததாகவும் நாட்டுப்புறப்பாடல்களை அதன் நிமித்தமாக ஆவணப்படுத்தியதாகவும் கூறினார். வெறுமே வரிகளை மட்டுமல்ல ராகங்களையும் உடன் ஆவணப்படுத்தியதாகச் சொன்னார்.

எஸ்.ஜே.சிவசங்கர் அண்ணாவும் குடும்பத்தினருடன் வந்திருந்தார். அவர்கள் அனைவரும் மகிழ்வாகவும், பெருமித உணர்வுடனும் இருந்ததைப் பார்க்க முடிந்தது. அண்ணன் தன் அமர்வில் ஒரு புனைவெழுத்தாளனாக இந்த ஆவணப்படுத்தலின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைச் செய்ததாகச் சொல்லியிருந்தார். ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு வட்டார வழக்குகள் மாறிவரும் நாகர்கோயிலில் அந்த சொற்களின் மாற்றத்தின் மேலான வியப்பே அதை ஆவணப்படுத்த தூண்டியதாகச் சொன்னார். ”சொல்வெட்டு” என்று அவர் சொன்ன வார்த்தை பிடித்திருந்தது. கல்வெட்டின் வாயிலாக நாம் அறியும் வரலாற்றுக்கு இணையாகவே சொல்வெட்டின் வழியாக நம்மால் வரலாற்றை வேரை அறிய முடியும் என்று சொன்னார். ஏனோ அ.கா.பெருமாள் ஐயா நினைவிற்கு வந்து கொண்டே இருந்தார்.

தியடோர் பாஸ்கரன் அவர்களின் அமர்வும் நன்றாக இருந்தது. ஆட்சிப்பணியில் இருந்து கொண்டு அவரின் தனிப்பட்ட ஆர்வத்தின் அடிப்படையில் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டதை விவரித்தது பிடித்திருந்தது. சினிமா விமர்சனம், சூழலியல், கானுயிர் என அவரிடம் உரையாட நண்பர்களுக்கு அதிகமிருந்தது. அமர்வுக்குப் பின்னும் அவரைச் சுற்றி நின்று உரையாடி நண்பர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஒரு ரிட்டயர்ட் மிலிட்டரி ஜெனரலின் மீசையும், கம்பீரமும் அழகான சிரிப்பும் அவரில் வசீகரமாக இருந்தது. அதை அருகே பார்க்க முடிந்தது மகிழ்ச்சி.

முதல் நாள் மாலை தென்கொங்கு சதாசிவம் அவர்கள் பவர்பாய்ண்ட் பிரசண்டேஷன் வழியாக கொங்கு மண்டலத்தில் அவர் கண்டறிந்த தொல்லியல் எச்சங்களைப் பற்றி விரிவாக அரை மணி நேரம் பேசினார். ஒவ்வொன்றிலும் அதன் உலகளாவிய முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி தொடர்பு படுத்தியது மிகப் பிடித்திருந்தது. நினைவில் பதியும் படங்களாக அந்த நீள வீரல்கள் கொண்ட கையின் தடமும், புள்ளிப்புள்ளியாக மனிதர்கள் விலங்குகளுடன் இருந்த படமும் எனக்கு அமைந்தது. எந்தவித எதிர்பார்ப்புகளுமின்றி ஆர்வத்தின் பேரில் மட்டுமே ஆவணப்படுத்தல்களைச் செய்பவர். மிக உற்சாகமான மனிதர்.

*

தூரன் இசைவிழாவை ஏற்பாடு செய்தமைக்காக நன்றி ஜெ. நாதஸ்வரக் கலைஞர்கள் திருமெய்ஞானம் டி.பி.என்.ராமநாதன், பாண்டமங்களம் ஜி.யுவராஜ் ஆகிய இருவரையும் ஒருவருட இடைவெளிக்குப் பின் பார்க்கிறோம். நித்யவனத்தில் அவர்கள் வாசித்த சிங்கார வேலனே பாடல் என் நினைவில் உள்ளது. ஒருவேளை அவர்கள் வாசித்ததிலேயே தெரிந்த பாடலாக இருந்ததாக இருக்கலாம். இசை நிகழ்வு சீனுவிற்கு அருகில் அமர்ந்து தான் கேட்கும் சூழ்நிலை வாய்த்தது. நான் உட்கார்ந்தபோதே குறுக்குவிசாரணைத் தோரணையில் ”பாட்டெல்லாம் கேட்கச் சொன்னாங்களே” என்று கேட்டார். “ஓ. ரெண்டு முறை கேட்டேன். ஆனால் ராகம் தான் இன்னது என சொல்லுமளவு தெரியவில்லை” என்றேன். “அதில் உனக்கு பிடிச்ச பாட்டு என்ன” என கறாராகவும் ஆர்வத்துடனும் கேட்டார். ஒருவேளை அவருக்கு பிடிக்காததைச் சொன்னால் வேறு பக்கம் போய் உட்காரச் சொல்லிவிடுவாரோ என்ற தயக்கத்துடன், “அந்த பாம்பே ஜெயஸ்ரீ பாடுவாங்கள்ல. ஏதோ த்வஜானு ஒரு ராகம்..” என இழுத்துக் கொண்டிருந்தேன். அவர் கைக்குலுக்குவதற்காக என்னை நோக்கி நீட்டி “ஐ.. அது திவ்ஜாவந்தி. எனக்கும் அதான் பிடிக்கும்” என குழந்தையாக மாறிப்போனார். ஒருவழியாக உட்கார்ந்து கொள்ளலாம் என்ற ஆசுவாசத்துடன் வலதுபக்கம் உட்கார்ந்திருந்த விக்னேஷ் ஹரிஹரனிடம் ”உனக்கு இந்த ராகம்லாம் தெரியுமா” எனக் கேட்டேன். “நான் ஏழு வருடம் இசை பயின்றிருக்கிறேன் கா” என ஏற்ற இறக்கமாக என்னைப் பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டான். இனி அவனிடம் எதுவும் பேசக்கூடாது என்று மனதில் நினைத்துக் கொண்டேன். திரும்பி இரண்டு வரிசை தள்ளி அமர்ந்திருந்த செந்தில் ஜெகந்நாதனை பார்த்தேன். அவர் பரவசத்துடன் உட்கார்ந்திருந்தார். சுதாமாமி இதன் பொருட்டே வந்திருந்தார். ஸ்ரீநி மாமா வரவில்லை. கட்டாயம் மிஸ் செய்வார். வெறுப்பேற்றலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

யுவராஜ் வந்து அமர்ந்தபோது என்னைக் கண்டுகொண்டு வணக்கம் வைத்தார். சீனுவும், விக்னேஷும் திரும்பி என்னைப் பார்த்தார்கள். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் பெருமிதமாக இருந்தது. அவர் ஏற்கனவே நித்யவனத்தில் வாசித்தபோது கேட்டிருக்கிறேன். “எனக்கு ராகம் எல்லாம் தெரியாது. ஆனா அந்த சிங்கார வேலனே தேவா வாசிக்கறப்போ புல்லறித்துவிட்டது. ரொம்ப நல்லா வாசிச்சீங்க” என்றேன். “ரசிக்கிறீங்களே அதுவே போதும். தொடர்ந்து ஈடுபாட்டோடு கேட்டால் ராகம் லாம் கண்டுபிடிச்சிடலாம். அது சுலபம் தான்.” என்று சொன்னதை அவர்களிடம் பகிர்ந்து கொண்டேன். அது நம்பும்படியாக இருந்ததால் அவர்கள் ஏதும் என்னைக் கேட்கவில்லை. நிகழ்ச்சி முடியும் வரை ஓரிரு உச்சமான தருணங்களில் பார்வையைத்தவிர வேறு ஏதும் பகிர்ந்து கொள்ளவில்லை.

”கலைமாமணி” தலைச்சங்காடு டி.எம்.ராமநாதன், கட்டிமேடு பி.பாலசங்கர் ஆகியோரின் தவிலுடன் நாதஸ்வர இசையை முதன்முறையாகக் கேட்கிறேன் ஜெ. இரண்டு மணி நேரம் வேறு உலகத்தில் இருந்தது போல இருந்தது. நிகழ்ச்சியின் போது அவர்களுக்கு இடையே நிகழ்ந்த சம்பாஷணைகளையும் ரசித்திருந்தேன். பி.பாலசங்கரின் முகமும் சேர்ந்து தவில் வாசித்துக் கொண்டிருந்தது. யோகேஸ்வரன் அண்ணா தவில் வித்துவான் டி.எம்.ராமநாதனின் மகன் என்றே தமிழ்விக்கி பதிவைப்பார்த்து தான் அறிந்து கொண்டேன். அண்ணா சிறப்பாக தொகுத்து வழங்கினார். கச்சேரியின் போது அந்த சிங்கார வேலனே தேவாவுக்கு சற்று ஒத்த ராகத்தை வாசித்தபோது உங்களைத் தேடினேன். உங்களுக்குப் பிடித்த ராகம் என்று தோன்றிய கணம் உங்கள் முகத்தைப் பார்க்கலாம் என்று தோன்றியது. முடியவில்லை. நண்பர் மதுசூதன் தமிழ்விக்கி குழுவில் “ஜெ தன் ஃபேவரைட் ராகம் ஆபேரி வாசிக்கப்படும்போது” என உங்களின் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். என்ன ஒரு அலைவரிசை என்று தோன்றியது. ஒரே அலைவரிசையிலுள்ளவர்கள் ஒன்றாக இருக்கையில் ஆற்றல் அவ்வளவு வீணவதில்லை ஜெ. மகிழ்ச்சியும், நிறைவும் பல மடங்காக இருக்கிறது என்பதைக் கண்டேன்.

நிகழ்ச்சி முடிந்ததும் கலைஞர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டோம். “இந்த முறையும் நல்லா வாசிச்சீங்க. அந்த சிங்கார வேலனே நல்லா இருந்தது” என்றேன். ” அது ஆபேரி. உங்களுக்கெல்லாம் பிடிக்குமேன்னு தான்” என்றார். சற்று இடைவெளிவிட்டு “ஜெ -க்கு பிடிக்குமேன்னு” என்றார். சிரித்துக் கொண்டிருந்தோம். யுவராஜ் முதன்மையாக என்னை ஞாபகம் வைத்திருப்பது முதல் முறை நாங்கள் சந்தித்த போது நான் அணிந்திருந்த மயிற்பீலி கம்மலை வைத்து தான். மேலும் நல்ல மனிதர். அவருக்கு வெண்முரசின் நீலம் நாவல் வாங்கித்தர வேண்டும் என்று ஆசைப்பட்டு, “நீங்கள் வாசிப்பீங்களா?” என்று கேட்டேன். அவர் திணறுவதைப் பார்த்த போது ஏதோ கேட்கக்கூடாத கேள்வியை கேட்டுவிட்டேன் போல என்று நினைத்து அருகிலிருந்த கிருபாவையும், நவீனையும் பார்த்தேன். “இவ்ளோ நேரம் அவர் வாசிச்சாரே” என்றான் நவீன். நான் சுதாரித்துக் கொண்டு “இல்ல, புத்தகம் வாசிப்பீங்களானு.” என்று கேட்டு குழைந்தவாறு சிரித்தேன். புத்தகம் வாங்கப்போவதற்குள் நவீன் அநேகமாக அரங்கிலிருந்த பாதி பேரிடமாவது சொல்லியிருப்பான் என்று நினைக்கிறேன். பார்ப்பவர்கள் எல்லாம் “நாதஸ்வரக் கலைஞரிடம் சென்று வாசிப்பீங்களானு கேட்டியாமே” என்று கேட்டனர். காலை வீடு வந்து சேர்ந்தபோது குவிஸ் செந்தில் அண்ணா இப்படி அனுப்பியிருந்தார். “ நாதஸ்வரக் கலைஞரிடம் நீங்கவாசிப்பீங்களா? துடுக்குப் பெண் கேள்வி. தூரன் விழாவில் பரபரப்பு” என அனுப்பியிருந்தார். அநேகமாக ஒவ்வொரு விழாவிலும் இதைச் சொல்லி நகைப்பார்கள் என்று மட்டும் விளங்கியது. இறுதியில் புத்தகம் வாங்கிக்கொடுக்காமல் வந்தது வருத்தமாக இருந்தது. என்ன ஒரு மோசமான உலகம்!

*

அறிஞர்கள், ஆய்வாளர்களுடனான அமர்வுகள், இசை விழா என யாவுமே இனிய அனுபவமாக அமைந்தது ஜெ. இவையாவற்றையும் தொகுத்துக் கொள்ள நினைத்தபோது இந்த குமரகுருபரன் விருது விழா நிகழ்விற்கு முன் காலை வேளையில் உங்களுடன் உரையாடியது நினைவிற்கு வந்தது. கே.சி. நாராயணனுடன் நீங்கள் அறையில் இருந்தீர்கள். தமிழ்விக்கி என ஆரம்பித்து எஸ்.வையாபுரிப்பிள்ளையின் அகராதியில் வந்து நின்றீர்கள். வேர்ச்சொல் பற்றி குழந்தைக்குரிய குதூகலத்தோடு சொல்லிக் கொண்டிருந்தீர்கள். ”இருள்” என்ற வார்த்தையின் சொற்பிறப்பைப் பற்றி சொல்லும்போது, “முதல் சொல்லைக் கண்டறிந்தவன் தத்துவவாதியாகத்தான் இருக்க வேண்டும். அவன் கண்ட சொல்லை மக்களின் புழக்கத்திற்கு பயன்படுத்தும் பொருட்டு அவர்களை நோக்கி //இது இங்க எப்போதும் இருக்கு. இரு, இருப்பு, இன்மை. அதாவது இருள், இருட்டு, இரவு. // என புரிய வைக்க முற்பட்டிருப்பான். எப்போதும் இருக்கும் ஒன்றை, இன்மையான ஒன்றைக் குறிக்க அவன் “இருள்” என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பான்” என ஒரு புனைவுலகத்தை மொழியின் தோற்றம் குறித்து விரித்துக் காண்பித்தீர்கள். நீங்கள் காட்டிய உலகத்திற்கு இணையான ஒரு புனைவுப் பிரபஞ்சத்தை அந்த அறைக்குள் கட்டியெழுப்பி அதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். சொற்குவியல்களிலிருந்து வேரைச் சென்றடைந்து அந்த முதல் சொல்லின் உச்சரிப்பில் நாம் கண்டடைவது நம்மிலிருந்து தோன்றிய முதல் தத்துவவாதியை என்று நினைக்கும் போது உடல் சிலிர்த்துக் கொண்டது. நீங்கள் சொற்களைப் பேசிக் கொண்டே இருந்தீர்கள்.

“வெளி எப்படி இருக்கும்?” என்று என்னைப் பார்த்துக் கேட்டீர்கள்.

யோசிக்கும் பாவனையில் “ஜெ.. வெளிச்சமா” என்றேன். நீங்கள் மகிழ்ந்து, “வெளி, வெள்ளை, வெளிச்சம்” என்ற சொற்கூட்டை முன்வைத்தீர்கள்.

“ஜெ. வெள்ளம்” என்று நீங்கள் விவரிப்பதற்காக கேட்டேன்.

“ஆமா.. தண்ணீருக்கு நிறம் இருக்கா?

“இல்ல”

“வெளிச்சமான நீர் வெள்ளம், தண்மையான நீர் தண்ணீர், வெந்த நீர் வெந்நீர்” என்றீர்கள். “பொல், பொலிவு, பொல்லாங்கு, பொல்லாப்பு, பொல்லாதவன்” என்று நீங்கள் சொன்னபோது கே.சி மகிழ்ந்து “தமிழ்ல ’பொல்’ உண்டோ” என்று கேட்டார். நீங்கள் “பொலிக!” என்றீர்கள். மேலும் சொல்லிக் கொண்டே இருந்தீர்கள். நான் எங்கோ ஆதியில் நின்று கொண்டிருந்ததாகப்பட்டது. மறக்கவே இயலாத தருணம் ஜெ.

சொல்வெட்டு, கல்வெட்டு, ஓவியவெட்டு, இசை, ராகம் என நம் மரபும் பண்பாடும் நமக்கு விட்டுச் செல்வதன் பொருள் என்ன? என்ற சிந்தனை முட்டிக் கொண்டே இருக்கிறது ஜெ.

நண்பர் செல்வேந்திரேன் ஒருமுறை தூரத்தில் ஒரு கழுகு வட்டமிட்டுக் கொண்டிருப்பதை எங்களுக்குக் காண்பித்தார். அதற்கு சற்று அருகிலேயே புறாக்களின் கூட்டம் ஒன்று மிகுந்த உற்சாகத்துடன் பறப்பதும் விளையாடுவதுமாக இருந்ததையும் சுட்டிக் காண்பித்தார். “அந்தக் கழுகைப் பாருங்களேன். ஏமாத்துது. என்னுடைய டார்கெட் நீ இல்லை என்று சொல்வதற்காக அது வேறு இடத்தில் வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. அநேகமாக அது எந்தப்புறாவை வீழ்த்தவேண்டும் என்ற முடிவை ஏற்கனவே எடுத்துவிட்டிருக்கும்” என்றார். நான் அதை அவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. எதிர்பாராத கணம் ஒன்றில் அந்தக் கழுகு ஒட்டுமொத்தக் கூட்டத்திலும் எதையும் பொருட்படுத்தாமல் விளையாடிக் கொண்டிருந்த ஒரு புறாவை பிடித்துச் சென்றுவிட்டது. அவர் கணிப்பு சரியாக அமைந்ததன் புன்னகை அவரில் எஞ்சியிருந்தது. என்னால் அந்த இமேஜை மறக்கமுடியவில்லை.

யாவுமே இங்கு இமேஜ் தானோ என்று அப்போது தோன்றியது ஜெ. ”சிற்பங்கள், ஓவியங்கள், கல்வெட்டுக்கள், புனைவுகள் என கலைஞர்கள் வடித்த யாவுமே நம்மிடம் ஏதோ சொல்ல முற்பட்டு சொட்டி நிற்கும் இமேஜ் தானோ. இயற்கையும் கூட நம்மிடம் காட்டுவது இமேஜுகளைத்தானோ. கவிஞன் மட்டுமே இயற்கையில் அதைக் கண்டு கொள்கிறான். கவிஞன் கவிதையில் வெட்டிவைப்பது இயற்கை சொல்ல முற்பட்ட இமேஜைத்தான். இயற்கையே கூட கடவுளின் வெட்டு என்று தோன்றியது. நாம் இவற்றினூடாகத் தேடுவது எதை? கண்டடைவது எதை? இந்த இமேஜுகள் வழியாக நாம் தேடுவது எங்கோ எப்போதோ நாமே நமக்காக விட்டுச் சென்ற செய்தியைத்தானா? அல்லது நம் முன்னோடிகள் நமக்காக பரிமார நினைத்த செய்திகளையா இருக்குமோ.” என்று செல்வேந்திரனிடம் கேட்டேன். அவர் சற்று திடுக்கிடலுடன் அமர்ந்திருந்தார். எங்களைப் பார்க்கவில்லை. நீண்ட தொலைவில் அவரின் பார்வை இருந்தது. மிக மெல்லிதாக “யெஸ்…” என்றார்.

இந்த சிந்தனையை அடையும் போது திடுக்கிடலே வருகிறது ஜெ. எல்லாமும் நம் முன் கூடி எழுந்து நமக்கான இமேஜுகளை/தகவலை ஏந்தி நிற்பது போன்ற பிரமை. புனைவிலக்கியவாதியின் ஊற்று இது. புனைவிலக்கியங்களில் மட்டுமல்ல என உணரும் ஒவ்வொரு எழுத்தாளர்களும் வந்து நின்று தரிசிக்க வேண்டிய வெட்டுக்கள் இவை. தூரன் விழா அத்தகைய இமேஜுகளை கொடுக்கக்கூடியது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். யாவற்றையும் காணும் ஒரு பரந்த பரப்பை நீங்கள் உருவாக்க முயல்கிறீர்கள் என்று தோன்றியது.

இந்த முன்னெடுப்புக்காக உங்களுக்கும், விஷ்ணுபுரம் ஈரோடு(பிரபு, V.S.செந்தில்குமார், அழகிய மணவாளன், பாரி, ஈரோடு கிருஷ்ணன், ஜி.எஸ்.எஸ்.வி. நவீன், அந்தியூர் மணி, தாமரைக்கண்ணன், யோகேஷ்வரன்) நண்பர்களுக்கும் நன்றி.

பிரேமையுடன்

ரம்யா

முந்தைய கட்டுரைஉலகமே கேள்!
அடுத்த கட்டுரைகவிதைகள், ஆகஸ்ட் இதழ்