பாலியல் வன்முறை, மீட்சி

Shafiya shafi-Frozen flower!

அன்புள்ள ஜெ,

கடந்தாண்டு திரைப்பட விழாவில் ‘On the quiet’ படம் பார்த்தேன். இசைப் பள்ளி ஆசிரியர் ஒரு மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்தது பிற மாணவர்களுக்குத் தெரிந்துவிடுவது போன்ற கதைக்களம் கொண்ட படம். ஆனால் படத்தின் இறுதியில் அவர் செய்த குற்றத்தை மாணவர்கள் யாரும் பொது வெளியில் சொல்லவே மாட்டார்கள். மிகவும் பிரமிப்பை ஏற்படுத்திய அற்புதமான படம் அது.

“அந்த மாணவர்கள் பார்வைல ஆசிரியர் அழிஞ்சிட்டாங்கிறதுதான் இந்தப் படத்தோட அழகே” என, படம் பார்த்துவிட்டு வெளியே வந்ததும் நண்பன் ஒருவன் சொன்னான்.

இப்படியான ஓர் அற்புதமான இடம் ‘கன்னியாகுமரி’ நாவலிலும் இருக்கும். விமலாவை 18 ஆண்டுகளுக்கு முன் சைக்கிள் கடை ஸ்டீபன் பலாத்காரம் செய்திருப்பான். ஏறத்தாழ இரு தசாப்தங்களுக்குப் பிறகு விமலா, ஸ்டீபனை சந்திக்கும்போது அவனுடன் சரிசமமாக உட்கார்த்து நலம் விசாரிப்பாள். காசநோயால் பாதிக்கப்பட்ட ஸ்டீபனுக்கு மருத்துவ உதவிகளை ஏற்பாடு செய்வாள். அவனுடைய மகள்களின் கல்விக்குத் தேவையான உதவியைச் செய்வாள். தன்னை பலாத்காரம் செய்த ஒருவனுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுப்பாள். இக்கதையில் ஸ்டீபன் மீது புகாரளிக்கப்பட்டிருக்காது. எவ்வித சட்டரீதியான தண்டனையுமின்றி அவன் சுதந்திரமாகவே வாழ்வான். நிஜ உலகில் மட்டுமே அவன் தண்டிக்கப்பட வேண்டியவன். புனைவழகியலுக்கு அது அவசியமற்றது. அந்த மோசமான சம்பவம் அவள் வாழ்வில் மிகச்சிறியதாக மாறும் அளவுக்கு விமலா பெரிய உச்சத்தை அடைந்திருப்பாள். எவரையும் எப்பேர்ப்பட்ட துயரத்திலிருந்தும் மீட்சியடைய வைக்கும் நாவல் ‘கன்னியாகுமரி’.

‘On the quiet’ அழகியலைப் பேசிய அதே நண்பனிடம் சமீபத்தில் ‘கன்னியாகுமரி’ நாவலின் கதையைச் சொன்னேன். அவன் தீவிர சினிமா விரும்பி; இலக்கியம் வாசிக்கும் பழக்கம் அற்றவன். ‘கன்னியாகுமரி’ கதை கேட்ட பிறகு, “விமலாவின் மீட்சியைப் பேசுவது எல்லாம் சரிதான். ஆனால் ஸ்டீபன் செய்த அநீதியைக் கண்டுகொள்ளாமலே போவது சரியல்ல” என்றான். அவனிடம் நான் சொன்னது இதைத்தான், “முதலில் இது ஒரு புனைவுலகம். இந்த உலகில் ஸ்டீபனுக்கு தண்டனை கிடைப்பதுதான் முக்கிய நோக்கம் என்றால் அதற்கு நான் செய்தித்தாளின் நடுப்பக்கத்தைப் படித்துவிட்டுப் போய்விடலாம். தினசரி இதுபோல் ஆயிரம் செய்திகள் வருகின்றன. ஆனால் புனைவில் எனக்குத் தேவையானது அதுவல்ல. தன்னை பலாத்காரம் செய்தவனுக்கு முன்பு எந்த வித பழைய சுவடுகளும் இல்லாமல் மாபெரும் உச்சத்தை அடைந்த விமலாவின் மீட்சிதான் எனக்குத் தேவை. இந்த அற்புதம் கலையில் மட்டும்தான் சாத்தியம். இங்கு ஸ்டீபனுக்கு தண்டனை கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் யாருக்கு என்ன பயன்?” என்றேன். இருந்தாலும் என் நண்பன், ஸ்டீபன் செய்த குற்றத்தையே பிடித்துத் தொங்கினான்.

அவன் இன்னொரு இடத்திலும் முரண்பட்டான். நாவலின் ஓரிடத்தில், “எந்தப் பெண்ணும் அந்தக் கொடூரத்துல இருந்து ஈஸியா வந்துருவான்னுதான் தோனுது. கற்பனைல இருக்கிற பயங்கரம் நடக்கும்போது இருக்கிறதில்லை. நடக்கும்போது இருக்கிற பயங்கரம் நடந்து முடிஞ்ச பிறகு இருக்கிறதில்லை” என்பாள் விமலா. இதற்கு பிரவீணா, “நீங்க ரொம்ப குறைச்சு சொல்றீங்க” என்பாள். அவர்களுக்கிடையிலான உரையாடல் அப்படியே தொடரும்.

பிரவீணா சொன்னதைத்தான் என் நண்பர்கள் பலரும் இந்தக் கதை கேட்டு சொன்னார்கள். “இதெல்லாம் ஆயிரத்துல ஒரு பெண்ணுக்குத்தான் நடக்கும். இதுல இருந்து அவ்ளோ ஈஸியா ஓவர்கம் ஆக முடியாது. ஜெயமோகன் கொடுக்கிறது False Hope” என்றனர். “இது வெறும் கற்பனைக் கதை அல்ல. இப்படி ஒரு சம்பவம் உண்மையா நடந்ததா ஜெமோ எழுதிருக்காரே” என்றேன். “அப்படின்னா இதெல்லாம் முந்தைய தலைமுறை பெண்களிடம்தான் சாத்தியம். நம்ம காலத்துல பெண்கள் பலரையும் பார்க்கிறேன். எல்லாருக்கும் ஏதோ ஒரு கஷ்டம் இருக்கு. அதுல இருந்து வெளியேற முடியாம தவிக்கிறாங்க. அவங்கலாம் விமலாவைப் படிச்சா ஏதோ சூப்பர்மேன் ஃபேன்டசி படிக்கிறது போலத்தான் இருக்கும்” என்றார்கள்.

அவர்கள் சொன்னதை என்னால் மறுக்க முடியவில்லை. ஏனெனில் என் தலைமுறையைச் சேர்ந்த எல்லோருமே துயரத்தை விரும்புபவர்களாகத்தான் இருக்கின்றனர். அல்லது அவற்றைச் சரி செய்து மேலெழ விரும்பாத சோம்பேறிகள் என்றும் சொல்லலாம். விமலாவின் மீட்சி எனக்குள் ஒரு மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால் என்னைச் சுற்றி இருக்கும் பலர், ‘அப்படியான ஒரு மீட்சி சாத்தியமே இல்லை’ என்று சொல்வதைக் கேட்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதனால்தான் உங்களுக்கு எழுதுகிறேன். இந்த நாவல் வெளியான புதிதில் வாசகர்கள் எவ்வித எதிர்வினை ஆற்றினார்கள் என அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

ஏற்கெனவே இந்நாவலுக்குப் பெண்ணியவாதிகள் எதிர்ப்பு தெரிவித்ததாக எழுதியிருந்தீர்கள். உண்மையில் விமலா தன் உடல் மீது சுமத்தப்பட்ட புனிதத்தன்மையை களைத்தெறிந்ததற்காக அவர்கள் இதைக் கொண்டாடித்தானே இருக்க வேண்டும்!? நவீன மனிதர்களைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

அன்புடன்

பாலு

கன்யாகுமரி வாங்க

கன்யாகுமரி மின்னூல் வாங்க

அன்புள்ள பாலு,

கன்யாகுமரி வெளிவந்து இருபத்தைந்து ஆண்டுகள் ஆகப்போகின்றன. 1998ல் விஷ்ணுபுரம் நாவல் வெளிவந்து ஓராண்டு நிறைவுக்குள் அந்நாவல் வெளிவந்தது. நான் என்னை அதுவரை ஆட்டுவித்த விஷ்ணுபுரம் நாவலில் இருந்து வெளிவர விரும்பினேன். அந்த நடை, அந்த படிம உலகம், அந்த உச்சமனநிலைகள் எல்லாவற்றையும் கடக்க முயன்றேன். துப்பறியும் நாவல்கள், மில்ஸ் ஆண்ட் பூன் நாவல்கள், கடும் தத்துவ நாவல்கள் என வாசித்துத் தள்ளினேன்.

அந்நாட்களில் ஒருமுறை லக்ஷ்மி மணிவண்ணன் இந்நாவலின் கருவைச் சொன்னார். இது மெய்யாக நிகழ்ந்தது என்றார். அது எனக்கு ஓர் அதிர்வை உருவாக்கியது. கன்னியன்னையின் ஊரில் அது நிகழ்ந்தமை அளித்த துணுக்குறல் அது.

அதன்பின் ஓராண்டு கழித்து நான் என் நண்பரின் தோழியாகிய ஒரு பெண்மணியைச் சந்தித்தேன். அவர்தான் கன்யாகுமரி நாவலின் கதைநாயகி. அவர் அன்று கீழைநாடொன்றில் அறிவியலறிஞர். அவர் கோவாவில் அவருக்கு நிகழ்ந்த ஓர் அனுபவத்தை, அவர் அதைக் கடந்துவிட்டதைச் சொன்னார்.

மீண்டுமொரு நினைவலை. இளமையில் ஒருமுறை கன்யாகுமரி சென்றபோது பாபு நந்தங்கோடு அங்கே ஒரு திரைக்கதை விவாதத்தில் இருப்பதைக் கண்டேன். அந்தப்படத்தின் கதைநாயகியான நந்திதா போஸ் அவருடனிருந்தார். அந்நினைவு இந்நாவலின் களமாக ஆகியது. எழுத ஆரம்பித்தேன்.

நாவல் வெளிவந்தபோது எதிர்பார்த்ததற்கு மாறாக பெண்கள் நாவலை எதிர்மறையாகவே மதிப்பிட்டனர். பொதுவாக என் தலைமுறைப் பெண்களிடம் ஒரு குழப்பமான பெண்ணியமே உள்ளது. ஆண்களை சுரண்டல்காரர்களாக புனைந்துகொள்வது, கூடவே தங்களை புனிதவதிகளாக கற்பனைசெய்துகொள்வது. இந்த இருமையையே லக்ஷ்மி முதல் ரமணி சந்திரன் வரை சலிக்காமல் எழுதித்தள்ளினர். எல்லா ‘சீரியல்’களிலும் இதே கதைதான் வெல்கிறது.

தமிழ்ச்சூழலில் அன்று ’அறிவுஜீவி’ எனப்படும் பெண்களுக்கும் இதே மனநிலைதான் இருந்தது. அவர்களுக்கு ‘பெண்மையைப் போற்றும்’ கதைகள் தேவை. அடக்கமான நற்குணநங்கையர் அல்லது தட்டிக்கேட்கும் நல்ல பெண்கள் என இரண்டே ‘டெம்ப்ளேட்டு’கள்தான். அதை எழுதாவிடில் அதை ஆணாதிக்கப்பார்வை, பெண் வெறுப்பு என்பார்கள். இன்றும் என் படைப்புகளில் ‘பெண்வெறுப்பு’ ‘ஆணாதிக்கம்’ உள்ளது என்பவர்களின் அறிவுக்கட்டமைப்பு இப்படியேதான் உள்ளது. அந்த மனநிலையை கடந்து வாசிக்க அடுத்த தலைமுறைப் பெண்கள் வரவேண்டியிருந்தது.

அந்த பழைய பெண்களுக்கு நாவலின் கதைநாயகி பாலியல் ஆக்ரமிப்புக்கு ஆளானது ஒரு ‘கொடுமையாக’ தோன்றியது. கதை அதை மையம் கொண்டிருக்கவேண்டும் என்றும், அப்பெண் அதிலிருந்து வெளியே வரவே முடியாது என்றும், அவள் அதற்கு எப்படி ‘பதில்’ செய்கிறாள் என்பதே கதையாக இருக்கவேண்டும் என்றும் தோன்றியது. அந்தப்பெண் அதை எளிதாகக் கடந்து செல்கிறாள் என்பது  ‘நம்ப முடியாதது’ ‘செயற்கையானது’ என்று தோன்றியது. சில ஆண் விமர்சகர்களும் அவ்வாறு எழுதியுள்ளனர். இன்றும் நம் சூழலில் ஆண்கள் பலர் அவ்வாறு நம்புகின்றனர்.

அவர்களை மேலும் சீண்டியது கதைநாயகி தன் பாலியலை சாதாரணமாக எடுத்துக்கொண்டது. அதை வாழ்க்கைநெறி சார்ந்த சிக்கலாகவே அவள் கொள்ளவில்லை. ஓர் உடல் சார் விஷயமாக, மிகச்சிறிய விஷயமாக மட்டுமே எண்ணுகிறாள். கற்பு அவளுக்கு பெரிய விஷயமாகப் படவில்லை. அவளுடைய பாலியல் விடுதலை நிலையை நம் சூழலின் முந்தைய தலைமுறைப் பெண்கள் வேறொரு கோணத்தில் எடுத்துக்கொண்டனர். அதாவது ‘பாதிக்கப்பட்ட பெண்’ எப்படியானாலும் ‘கெட்டுப்போவாள்’ என கன்யாகுமரி நாவல் சொல்வதாகவும், கதைநாயகியை ‘ஒழுக்கமற்றவள்’ ஆக நான் சித்தரிப்பதாகவும் அவர்கள் சொன்னார்கள்.

ஆச்சரியமாக இருக்கும். அப்படிப் புரிந்துகொண்டவர்கள் பெரும்பாலும் இடதுசாரிகள், திராவிட இயக்க மனநிலைகொண்டவர்கள். ஆனால் அதன்பின்னர்தான் அவர்களின் எழுத்துக்களை கூர்ந்து நோக்க ஆரம்பித்தேன். பாலியல் ஒழுக்கம் சார்ந்த இறுக்கமும், பதற்றமும் அவர்களுக்குத்தான் மிக அதிகம். பாலியல் மீறல்களை அவர்கள் ஒருவகை அராஜகமாகவே பார்க்கிறார்கள். மீறலுக்கே இடமற்ற இலட்சிய உலகங்களையே அவர்கள் படைக்கிறார்கள். அவர்களின் எழுத்துக்களிலேயே அவை உச்சமாகவும், உறுதியாகவும் வெளிப்படுகின்றன.

திராவிட இயக்க எழுத்துக்களில் ’பத்தினி x பரத்தை’ என்னும் முரண் மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படுகிறது. அதை விரிவாகவே எழுதியுள்ளேன். அவர்களின் இலட்சியக் கதாபாத்திரங்கள் எல்லாமே பத்தினிகள்தான். பாரதிதாசனின் குடும்ப விளக்கு முதல் இன்றுவரை. அவர்கள் பிற புராணக் கதைமாந்தர்கள் மேல் முன்வைக்கும் விமர்சனங்களும் பாலியல் ஒழுக்கம் சார்ந்தவையே. ஈ.வெ.ரா முன்வைத்த எல்லா விமர்சனங்களும் பாலியல் ஒழுக்கம் சார்ந்த குற்றச்சாட்டுக்களே என்பதைக் காணலாம்.

இடதுசாரி நாவல்களில் ‘நல்ல’ கதைமாந்தர், ‘இலட்சியக்’ கதைமாந்தர், ஆசிரியரின் கொள்கையை முன்வைக்கும் மனிதர்கள் ஒழுக்கநெறி மீறா உத்தமர்களாகவே இருப்பதைக் காணலாம். இன்னும் சொல்லப்போனால் தமிழில் எழுதப்பட்ட பெரும்பாலான இடதுசாரி எழுத்துக்கள் பாலியலே அற்ற எழுத்துக்கள்.

இவர்கள்தான் தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள் வெளிவந்தபோது, ஜெயகாந்தனின் அக்னிப்பிரவேசம் வெளிவந்தபோது, அஸ்வகோஷ் (இராசேந்திரசோழன்) எழுதிய சிறகுகள் முளைத்து வெளிவந்தபோது மிகக்கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர்கள். அதை சிறகுகள் முளைத்து நாவலின் முன்னுரையில் விரிவாகவே ராஜேந்திரசோழன் எழுதியுமுள்ளார். எண்ணிப்பாருங்கள், உங்கள் நண்பர்கள் சொல்லும் அதே விமர்சனம்தான் அக்னிப்பிரவேசம் கதைமேல் முன்வைக்கப்பட்டது. அதை எதிர்கொள்ளவே ஜெயகாந்தன் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலை எழுதினார். இன்றும் அம்மனநிலை மாறவில்லை இல்லையா?

அதே விமர்சன அளவுகோல்தான் கன்யாகுமரி நாவல்மேலும் வந்தது. கதைநாயகியை ஏன் ஒழுக்கமற்றவளாக ‘காட்ட’ வேண்டும்? அவள் ‘பாதிக்கப்பட்டவள்’ என்பதனால் அவளை ‘தூயவளாக’ அல்லவா காட்டியிருக்கவேண்டும். இது ஆசிரியரின் ஆணாதிக்கப்பார்வை–இதுதான் அன்று ஓங்கிய குரல். அதனுடன் பேச முடியாது என நான் அதைக் கடந்து அடுத்த நாவலுக்குச் சென்றுவிட்டேன். 2008ல் இயக்குநர் வசந்த் கன்யாகுமரியை படமாக்க அனுமதி கோரினார். வேண்டாம், ஓடாது என நான் மறுத்துவிட்டேன். பெண்களின் உளநிலையை அறிந்திருந்தேன். இன்று படமாக்கப்பட்டால் ஓடும்.

ஏனென்றால் சென்ற பதினைந்தாண்டுகளுக்குள் அடுத்த தலைமுறைப் பெண்வாசகர்கள் உருவாகி வந்துள்ளனர். அவர்களில் பலர் அயல்நாட்டுப்பயணங்களும், அயல்பண்பாட்டுச்சூழலில் வாழ்க்கைகளும் அமைந்தவர்கள். உயர்கல்வி கற்று, உயர்பணிகளில் இருப்பவர்கள். தனிப்பட்ட அறிவுச்சாதனைகள் கொண்டவர்கள். நம் சூழலின் சிமிழுக்குள் இருந்து வெளியேறியவர்கள். அவர்கள் அந்தக் கதைநாயகியை மிக இயல்பாக புரிந்துகொண்டனர். அணுகி அறிந்தனர். அப்படி ஒன்று நிகழ்வது ஆச்சரியமளிக்கவில்லை.

ஆனால் ஆச்சரியமளிக்கும் ஒன்று உண்டு. தமிழில் ’வணிகவாசிப்புக்குரிய’ படைப்புகளை எழுதத் தொடங்கிய சில பெண் எழுத்தாளர்களில் கன்யாகுமரி ஆழமான பாதிப்பைச் செலுத்தியது. அவர்கள் அந்நாவலின் கதைநாயகியை அணுகிப்புரிந்துகொண்டனர். எனக்கு கடிதங்கள் எழுதியுள்ளனர். கன்யாகுமரி நாவலையே வேறு வேறு கோணங்களில் எழுதியிருப்பதாக எனக்கு சிலர் தங்கள் நாவல்களை அனுப்பியுமுள்ளனர். இன்றைய வணிகப் பெண்ணெழுத்தில் கன்யாகுமரி நாவலின் பல நிறவேறுபாடுகள் கொண்ட வடிவங்களை வாசகர்கள் காணமுடியும்.

என் பார்வை என்ன? அப்படி ’நிலையான’ பார்வை எனக்கில்லை. அனுபவங்களுக்கான எதிர்வினைகளே என் நாவல்கள். எனக்கு மானுடஉணர்ச்சிகள், அழகியல் ஒருமை ஆகியவையே முக்கியம். அந்த கதைநாயகிக்கு முதலுதாரணமாக அமைந்த ஆளுமையை எனக்குத் தெரியும். பெண்ணாக அல்ல, அறிவுஜீவியாக அவரை அணுகி அறிய, அகம்புகுந்து நோக்க என்னால் இயன்றது. அவ்வளவுதான்.

ஓர் அறிவுஜீவியாக என்னால் ஆழமாக உணரமுடிந்த ஒன்று உண்டு. அறிவுஜீவிக்கு பாலியல் ஒரு பொருட்டே அல்ல. அது சார்ந்த தேவைகள், அடிப்படை உணர்வுகள் அவனிடமிருக்கலாம். ஆனால் அவனால் அதை முதன்மையானதாகக் கொள்ள முடியாது. அதை அவன் மிகையான கற்பனாவாதத் தன்மையுடனோ நேர்மாறான கசப்புடனோ வாழ்க்கை முழுக்க அணுகமாட்டான். அதைச்சார்ந்து முழு வாழ்க்கையையும் அமைத்துக்கொள்வது அபத்தமாகவே அவனுக்கு தெரியும்.

ஓர் அறிவுஜீவியின் அடிப்படைச் சிக்கல்கள், அவனுடைய ஆதாரமான கேள்விகள், அவனுடைய ஆழ்ந்த துயரங்கள், அவனுடைய மெய்யான மகிழ்ச்சிகல் எல்லாமே வேறொரு தளத்திலேயே இருக்கும். அது தத்துவமோ, அரசியலோ, வரலாறோ, அறிவியலோ, மதமோ …. எதாவதாகவும் இருக்கலாம். அதன்பொருட்டே அவன் வாழ்க்கையை தூக்கிக் கொடுக்கச் சித்தமாக இருப்பான். அப்படித்தான் இன்றுவரை இருந்திருக்கிறார்கள். இதை பலசமயம் எளிய பெண்கள் ஆண் அறிவுஜீவிகளுக்கு குடும்பம் அல்லது பெண்கள் மேல் மதிப்பில்லை என புரிந்துகொள்வது உண்டு. (எளிய ஆண்கள் பெண் அறிவுஜீவிகளை அவ்வாறு எண்ணிக்கொள்வது இன்று நிகழ்கிறது)

இந்தக் காரணத்தால் அறிவுஜீவிக்கு பாலியல்மேல் ஒரு விலக்கமும் இருக்கும். பாலியலில் ஈடுபடும்போதே ஓர் அகம் விலகி நின்று அதை வேடிக்கை பார்க்கும். அது ஒரு அபத்தமான சாபம் என்றுகூட சொல்லலாம். அவனால் பிறரைப்போல விலங்கின் திளைப்பு கொள்ள முடிவதில்லை. அதை விஷ்ணுபுரம் நாவலே விரிவாக பேசுகிறது. அந்த விலக்கமே அறிவுஜீவி பாலியலை கூர்ந்து நோக்கவும், நுண்ணிய அவதானிப்புகளைச் செய்யவும் வழிவகுக்கிறது. அதுவே அவனுடைய கலையையும் சிந்தனையையும் ஆழமானதாக ஆக்குகிறது.

கூடவே அறிவுஜீவியிடம் பாலியல் பற்றிய ஒரு அங்கதமும் இருந்துகொண்டிருக்கும். கொஞ்சமும் சிரிப்பின்றி, பகடியே இன்றி, ‘சீரியஸாக’ பாலியலை எழுதுபவர்கள் மிகச்சாதாரண எழுத்தாளர்கள் என ஓர் எண்ணம் எனக்குண்டு. பாலியலுணர்வின் பரவசத்தை, கொந்தளிப்பை, அதீதநிலையை சிறந்த எழுத்தாளர்களே எழுத முடியும். ஆனால் கூடவே அவர்கள் அந்தச் சிரிப்பை நோக்கியும் தங்களை திருப்பிக்கொள்வார்கள்.

(கவிஞர்கள் விதிவிலக்கு என நினைப்பேன். ஆனால் நான் கொண்டாடும் கவிஞர்கள் அனைவரிடமும் அந்த பகடியும் உள்ளது. “கட்டிப்பிடித்து முத்தமிடவா முடியும்? ஒரு காபி சாப்பிடலாம் வா” என்ற தேவதேவனின் கவிதை நினைவுக்கு வருகிறது)

ஆகவேதான் பாலியல் எந்தப் பேரிலக்கியத்திற்கும் மையப்பேசுபொருளாக இருக்கமுடியாது. பாலியல் இலக்கியத்தின் முதன்மைப்பேசுபொருட்களில் ஒன்று. ஏனென்றால் அது மானுடனின் அடிப்படை விசை. வன்முறை மற்றும் ஆணவம் ஆகிய இரண்டாலும் ஆட்டுவிக்கப்படும் அதிகாரவிழைவுக்கு ஒரு படி குறைவான விசை. ஆகவே பாலியலில் இருந்து தொடங்கி மானுட இருத்தல் நோக்கி, வாழ்வின் பொருள் நோக்கி உசாவிச்சென்றவையே பெரும்படைப்புகள். ஒரு விதிவிலக்கு  கூட உலக இலக்கியத்தில் கிடையாது.

அறிவுஜீவிக்கு பாலியல் முக்கியமே அல்ல. ஆகவே அதைச்சார்ந்த ஒழுக்கநெறிகளும் அவனைப் பொறுத்தவரை பெரிய பேசுபொருட்கள் அல்ல. அதை ஒரு கொள்கைச் சிக்கலாகவோ, தத்துவச் சிடுக்காகவோ, இருத்தல்வினாவாகவோ அவன் கொள்வதே இல்லை. முதிரா இளமைக்கு மேல் அதை பெரிதாக பேசுவதுகூட இல்லை. அவன் பாலியல் ஒழுக்கம் உடையவனாக இருக்கலாம், இல்லாதவனாக இருக்கலாம். அது அவனுடைய இயல்பு சார்ந்தது, வாழ்க்கைச் சூழல் சார்ந்தது, அவனுடைய சிந்தனையின் அமைப்பு சார்ந்தது. அது அவனுக்கு கூடுதலாக எதையும் சேர்ப்பதில்லை.

இந்த விலக்கம் ஆன்மிகத்தில் ஒரு படி மேலாக உள்ளது. ஆன்மிகம் பாலியலுக்கு அப்பாற்பட்டது. அங்கே பாலியல் இல்லை என்பதனாலேயே பாலியல் நெறிகளும் இல்லை, ஆகவே மீறல்களும் பெரிய விஷயம் அல்ல. அது அந்த சாதகனின் பிரச்சினை, அவன் வெல்லவேண்டிய அகம். ஒரு யோக சாதகனுக்கு தெரியாத பாலியல் அதீதங்களை எந்த மனநோயாளியும் சொல்லிவிட முடியாது. அது அவன் வென்றாகவேண்டிய ‘வைதரணி’ அவ்வளவுதான்.

இக்காரணத்தால்தான் நான் இலக்கியவாதிகளை ஒழுக்கநெறியால் அளவிடுவதில்லை. அவனுடைய கலையின் பெறுமதி என்பது என் வரையில் வேறு அளவுகோல்கள் கொண்டது. இதை நீங்கள் பார்க்கலாம். என்னை ஒழுக்கவாதி என வசைபாடுபவர்கள் உண்டு. ஆனால் ஒரு நடைமுறைச் சிக்கல் வரும்போது வசைபாடுபவர்கள் அனைவருமே ஒழுக்க அளவுகோல்களை கழிகளாக ஏந்திக்கொண்டு சிக்கிக்கொண்டவரை அடிக்க வருவார்கள். அவரை ஒட்டுமொத்தமாக அதைக்கொண்டு மட்டுமே மதிப்பிட்டு தூக்கிவீசுவார்கள். நம் சூழலில் அனேகமாக நான் மட்டுமே அறிவுஜீவியை ஒழுக்க அளவுகோலை பொருட்படுத்தாமல் அணுகுபவனாக இருப்பேன். அதற்காகவும் வசைபாடப்படுவேன்.

கன்யாகுமரிக்கே வருகிறேன். அறிவுஜீவி, ஆன்மிகசாதகர் என்னும் இரு நிலைகளிலும் ஆழத்தில் ஆண்பெண் வேறுபாடு என ஏதுமில்லை என்பது நான் நம்புவது அல்ல, நான் உறுதியாக அறிந்தது. அது ‘மானுட நிலை’ மட்டுமே. ஆண்பெண் என்பது உடல்சார்ந்த, சமூகச்சூழல் சார்ந்த , சில உணர்வுகள் மற்றும் அறிவார்ந்த அணுகுமுறைகள் சார்ந்த வேறுபாடுகளை உருவாக்கலாம். ஆனால் அவை மேல்மட்டம் சார்ந்தவை. கன்யாகுமரியின் கதைநாயகி ஓர் அறிவுஜீவி. அவளை ஆழ்ந்தறிந்தே அதை எழுதியுள்ளேன்.

ஆகவே இறுதியாக உங்கள் வினாவுக்கே வருகிறேன். பெண்கள் அதேபோன்ற ஒரு வன்முறையில் இருந்து உளவியல்சார்ந்தும் ஆன்மிகமாகவும் வெளிவர முடியுமா? அது இயல்பான ஒன்றாக ஆகுமா?

சாதாரணமான வாழ்க்கையில், சாதாரணமான உளவியலில் அது சாத்தியம் அல்ல. ஏனென்றால் இங்கே பெண்கள் அவர்களின் பாலியலடையாளமே அவர்களின் ஆளுமை என கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள். அதைப் பேணிக் கொள்ளுதலே வாழ்க்கையின் ஒரே அர்த்தம் என நம்பவைக்கப் பட்டிருக்கிறார்கள். வேறொரு அகமே இல்லாமல் வாழ்கிறார்கள். ஆகவே அந்த வன்முறையை ஆளுமைச்சிதைப்பு என்றே எடுத்துக் கொள்கிறார்கள். தங்கள் அடையாளமும் அகமும் ஊடுருவப்பட்டுவிட்டதாக, கையகப்படுத்தப்பட்டுவிட்டதாக, அவமதிக்கப்பட்டுவிட்டதாக கற்பனை செய்துகொள்கிறார்கள்.

அந்நிலையில் அவர்கள் தீராத உள அலைவுகளுக்கு ஆளாகிறார்கள். ஒரு மனநாடகம் முடிவில்லாமல் நீடிக்கிறது. பழிவாங்குதல், தன்னை அழித்துக்கொள்ளுதல் என இரு நிலைகளில் அதன் உச்சங்கள் அவர்களுக்குள் நிகழ்ந்தபடியே உள்ளன. அகவை செல்லச்செல்ல அந்த உளநாடகத்தின் உணர்வுவேகம் குறையும். அதுவே விடுதலையாக அமைகிறது. மற்றபடி அவர்கள் வெளியேறுவதில்லை.

ஆனால் அறிவுஜீவியாக தன்னை ஆக்கிக்கொள்ளும் ஒருவர், ஆன்மிக சாதகராக தன்னை கொண்டுசெல்லும் ஒருவர் மிக எளிதாக அதை கடக்க முடியும். தன்னை மிகப்பெரியவராக ஆக்கிக்கொண்டு அதை மிகச்சிறியதாக மாற்றிக்கொள்ள முடியும். அந்நிலையில் அவர் அதற்கு ‘எதிர்வினை’ ஆற்றுவதே இல்லை. ஏனென்றால் அது அவருக்கு முக்கியமே அல்ல. அது ஒரு சிறு நினைவாக எஞ்சலாம், அவ்வளவுதான்.

அறிவுத்தளம் அதற்கான வழிமுறைகள் கொண்டது. அறிவுப்பணி எதுவானாலும் மிச்சமில்லாத அர்ப்பணிப்பைக் கோருகிறது. அதை அளிக்கும் எவருக்கும் பிற எதற்காகவும் தன் உள்ளத்தையும் சிந்தனையையும் நேரத்தையும் அளிக்கமுடியாது. ஆன்மிகசாதனை தன்னை தானே நுணுகி அறிவது. தன்னுள் நிகழ்வதை வகுத்து ஒதுக்கி கடந்துசெல்வது. அந்த வன்முறையை எல்லாம் தூசுத்துகளாக ஆக்கிவிடும் மேலும் உக்கிரமான பலவற்றை ஆன்மிக சாதகர் தன்னுள் அறிய நேரிடும். அவர் அந்த வன்முறையை ஒரு பொருட்டாக எண்ணாத அளவுக்கு மேலும் மேலும் தன்னறிதலை அடைந்துகொண்டிருப்பார். அத்தகைய பலரை நான் அறிவேன். ஆகவேதான் கன்யாகுமரி நாவலில் எழுதினேன்.

உங்கள் நண்பர்கள் ஒரு பெண் அதிலிருந்து வெளியேற மாட்டாள் என நினைக்கிறார்களா அல்லது வெளியேறக்கூடாது என்று நினைக்கிறார்களா? அதாவது வெளியேறுவது ஒழுக்கரீதியாகச் சரியல்ல என நினைக்கிறார்களா? இரண்டாவதுதான் உண்மை. ஏனென்றால் அதுதான் ஆணின் அகங்காரம். கன்யாகுமரியின் கதைநாயகி அந்த வன்முறையைச் சிறியதாக ஆக்கிக்கொண்டு வெளியேறியதுதான் கதைநாயகனை ஏமாற்றமடையச் செய்கிறது, கொந்தளிக்கச் செய்கிறது, அவளுக்கு மேலும் தீங்கிழைக்கவும் தூண்டுகிறது. அவளுடைய விடுதலைதான் அவனுடைய சிக்கலே. அவள் உடைந்து போயிருந்தால் அவனுக்குள் ஒரு நிறைவு உருவாகியிருக்கும். உங்கள் நண்பர்களின் உளநிலை அதுவே. அது ஏன் என சிந்தியுங்கள்.

என் வாசகர்கள் என் படைப்பின் வழியாக தங்களை விரித்துக்கொள்பவர்கள் மட்டுமே. தாங்களறிந்த சிறிய உலகைக்கொண்டு என்னை மதிப்பிடுபவர்களோ, எனக்கு ஆலோசனை சொல்பவர்களோ அல்ல. உணர்க, எழுதும்போது எழும் ஜெயமோகன் உங்கள் கோபுரங்களை கால்விரல்கள் அளவுக்கே சிறிதாக்கும் பேருருவன். ஆண் பெண், அங்கு இங்கு, அவர் இவர் என எந்த பிரிவுமற்ற அறிவு ஒன்றை சென்று தொடுமளவுக்கு உயர்ந்தவன்.

 

ஜெ

கன்யாகுமரி 2 -உன்னதமாக்கல்- சுசித்ரா ராமச்சந்திரன்

கன்யாகுமரி 1-ஆண்மையின் குரூரம் சுசித்ரா ராமச்சந்திரன்

வீழ்ச்சியின் இயக்கவியல்

கன்னியின் காலடியில்

முந்தைய கட்டுரைராஜேஷ்குமார்
அடுத்த கட்டுரைபிரபந்தம் கடிதம்