தூரனும் துஜாவந்தியும்-யோகேஸ்வரன் ராமநாதன்

தூரன் விழா விருது உரைகள்

தூரன் விழா, உளப்பதிவுகள்

தமிழ் விக்கி -தூரன் விருது விழாவில்…

தூரன் விருது- இசை நிகழ்வு

அன்புள்ள ஜெ

அ) :  அவர்களுக்கான தமிழ் விக்கி பக்கம்  உருவாக்கப் படவேண்டும்

ஆ) :  வாசிக்கப்பட இருக்கும் கீர்த்தனைகளை முன்கூட்டியே தளத்தில் வெளியிட வேண்டும்

இ)  :  நிகழ்வில் ஒலிப்பெருக்கிகள் இருத்தல் கூடாது.

நாதஸ்வர-தவில் இசை நிகழ்ச்சி ஒன்றை நாம் ஒருங்கிணைப்போம் எனில் என்னவெல்லாம் செய்யப்பட வேண்டும், எவை தவிர்க்கப்பட வேண்டும்  என்று  குருபூர்ணிமா நிகழ்வில் காலை அமர்விற்கு பின்பான தேநீர் இடைவேளையில்  நீங்கள் சொல்லிக் கொண்டு இருக்கையில், உங்களின் கண் கண்ணாடியை தாண்டி கருவிழிகளை பார்த்துக் கொண்டு இருந்தேன்.

”அ”னா ஜி.எஸ்.எஸ்.வி நவீனால் சாத்தியமாயிற்று. ஊர் திரும்பியபின் உத்தேச பட்டியல் ஒன்றை தயாரித்துக் கொண்டு, தூரன் விழா தேதி முடிவானதும்,நாதஸ்வர கலைஞர் ராமநாதனின் இல்லம் சென்று இருந்தேன்.

”இந்த இடத்துல, இத்தனாம் தேதி, ஒரு விழா, இத்தனை மணிக்கு வாசிக்கனும், வந்திருங்க..” என்ற போன் தகவல்கள் மூலம் கச்சேரிகளுக்கான அழைப்புகள் விடுப்பதும்,  நிகழ்விற்கு சில நாட்கள் முன்பு அழைத்து “அந்த விழா ஒரு முக்கியஸ்தரின் தேதி கன்பார்ம் ஆகாததால் தள்ளி போகுது, தேதி கிடைச்சதும் போன் செய்யுறேன்” என்று சொல்லி ரத்து செய்வதும் வாடிக்கை.

பூ பழத்தாலங்களோடு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் இசைநிகழ்ச்சிக்காக முறைப்படி  நேரில் அழைப்பு விடுத்த பிறகு, உத்தேச பட்டியலை, ராமநாதனின் கைகளில் அளித்தேன்.அவரது இல்லத்திலேயே அமர்ந்து, முதல் கீர்த்தனை முதல், ஆபேரி ராக ஆலாபனை வரை மற்றும் பிற கீர்த்தனைகளின் பட்டியலை இறுதி செய்தோம். மங்கல பாடலாக எதை வாசிக்கலாம் என்ற கேள்வி எழுந்தபோது, நிகழ்வுகளில் பொதுவாக வாசிக்கும் பாடல் ஒன்றை வாசிக்கலாமா என்ற யோசனையை தவிர்த்து, தூரன் எழுதிய, கர்ணாரஞ்சனி ராகத்தில் அமைந்த தேசபக்தி பாடலான ”சத்தியமே  வெல்லும்,தர்மமே ஓங்கிடும்” என்ற பாடலை முடிவு செய்தோம்..

இறுதியாக “இ”னா…

மைக் மேட்டரை மெதுவாக ஆரம்பித்தேன். “அண்ணே…..” என்று ஆலாபனையோடு ஆரம்பித்தவர்  ஒரு நிமிடம் யோசித்து “சரியா வருமாண்ணே…” என்று முடித்தார்.

ஐந்து நிமிட தொடர் உடையாடலுக்கு பின் “ ஒரே ஒரு மைக்கும், எங்களுக்கு மட்டும் கேக்குற கேக்குற மாதிரி மேடையில ஒரே ஒரு ஸ்பீக்கரும் வச்சிக்கலாமாண்ணே…” என்ற கடைசி கேள்வி. அடுத்தடுத்த உரையாடல்களில் சமாதானமாகி “சரிண்ணே.. மைக் இல்லாமலே வாசிச்சிருவோம்….” என்ற உடன்படிக்கையோடு முடித்துக்கொண்டோம்.

இசை நிகழ்வு குறித்த அறிவிப்பு தளத்தில் வெளியான பிறகு வந்த கடிதங்களில் எழுத்தாளர் செந்தில் ஜெகன்னாதன் எழுதிய கடிதமும், அகரமுதல்வன் எழுதிய கட்டுரையும் முக்கியமானவை.

// அணைசு வழியே நீர்ப்பாம்பாக கீழிறங்கும் ஸ்வரநீரைக் கண்டு உள்ளம் பெருகியவன் நான்//

மூச்சை இழுத்து பிடித்து வாசிக்கையில் வெளிப்படும் உமிழ்நீர் நாதஸ்வர குழவு வழியே பயணித்து அணைசு வழியே வெளியாவதை  கீழிறங்கும் நீர்பாம்பாக உருவகம் செய்து எழுதியிருந்தார் அகரமுதல்வன்.

நிகழ்வில் அருகில் அமர்ந்து இருந்த ஈரோடு பிரபு “அண்ணா… லெப்ட்ல வாசிக்கிறவறோட இண்ஸ்ட்டுமெண்டுலேருந்து வந்திருச்சி…. இவருதுல ஏண்ணா இன்னும் காணோம்…” பாண்டமங்கலம் யுவராஜின் நாதஸ்வரத்தை  கைசுட்டி கேட்டுக்கொண்டு இருந்தார். ஹரிஹரசுதனே அனுபல்லவி வாசிக்கையில்  யுவராஜின் நாதஸ்வரத்தில் இருந்து ஸ்வரநீர் கீழிறங்க  “அவருதலயும் வந்திருச்சி” என்று சமாதானமடைந்தார் பிரபு.

ராமநாதனின் முதன்மை குருநாதர் செம்பனார்கோவில் எஸ்.ஆர்.டி.வைத்தியநாதன்(பாடகர் சஞ்சய் சுப்ரமணியத்தின் குருவும் கூட).  ராமநாதன் அவர்களுடைய மெருகேறிய பல்லவி வாசிப்பில் அவருடைய குருநாதருக்கு பெரும் பங்கு உண்டு. திருமண நிகழ்வுகளில் பெண் வீட்டார் மேளம், மாப்பிள்ளை வீட்டார் மேளம் என்று இசைக்கலைஞர்களை தனி தனியாக வரவழைப்பதை பற்றியும், இரு குழுவினரையும் அருகருகே அமரவைத்து  அவர்களிடையே போட்டியாக வாசிக்க சொல்லி, பெண் வீட்டார் வைத்த மேளம் தான் நன்றாக இருந்தது என்றும், இல்லை மாப்பிள்ளை வீட்டு பார்ட்டியார் தான் நன்றாக வாசித்தார்கள் என்றும் விவாதம் நடக்கும் என்பதையும், அவ்வாறான ஒரு திருமண நிகழ்வில், ராமநாதன் தந்தையார் திருமெய்ஞானம் நடராஜ சுந்தரம் பிள்ளை குழுவினர் ஒரு அணியாகவும், செம்பனார்கோவில் எஸ்.ஆர்.டி.முத்துக்குமரசாமி – வைத்தியநாதன் சகோதரர்கள் போட்டி அணியாகவும் வாசித்ததை நேரில் பார்த்து ரசித்த நிகழ்வை சொல்லி சிலாகித்துக் கொண்டு இருந்தார், எஸ்,ஆர்,டி,முத்துக்குமரசாமியின் மகனான எஸ்.ஆர்.டி.எம்.ராமமூர்த்தி அவர்கள்.  மைக் இல்லாமல் இரண்டு மணி நேரம் கச்சேரி என்றவுடன், நேரில் கேட்டு ரசிப்பதற்காக மாயவரத்தில் இருந்து புறப்பட்டு நம் நிகழ்வுக்கு வந்து இருந்தார். நிகழ்வு முடிந்தவுடன், “என் வயசுக்கு எத்தனையோ கச்சேரி கேட்டு இருக்கேன், இந்தன சின்ன வயசு புள்ளைங்க இவ்ளோ அமைதியா உக்காந்து நாதஸ்வர-தவில் கச்சேரி கேக்குறத இதுவரைக்கும் நான் எங்கயும் பார்த்ததில்ல…” என்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

நிகழ்வின் முடிவில் இசைக்கலைஞர்களை நண்பர்கள் பாராட்டியபடி இருந்தார்கள். இசை கேட்க குடும்பத்துடன் வந்திருக்கும் செய்தியை கலைஞர்களிடத்தில் சந்தோசமாக பகிர்ந்து கொண்டார் பேராசிரியை லோகமாதேவி, “ராகம் தானம் பல்லவி அவ்ளோ அருமையா இருந்திச்சி…. ரொம்ம நெகிழ்வாக இருக்கு” என்று மேடையேறி பாராட்டினார் சுதா மாமி. “இவ்ளோ நேரம் உக்காந்து நாதஸ்வர கச்சேரில்லாம் கேட்டதேயில்ல”  என்றபடி கலைஞர்களோடு புகைப்படம் எடுத்துக்கொண்ட மீனாம்பிகை. ”ஒரு கட்டத்தில் அவங்கல்லாம் வாசிக்கிறாங்களா, இல்ல பாடுறாங்களான்னு தோண ஆரம்பிச்சிது” என்ற ஈரோடு கிருஷ்ணன். கலைஞர்களின் கைகளை வாஞ்சையுடன் பிடித்தபடி பாராட்டிக் கொண்டு இருந்தார் குப்பம் பேராசிரியர் பத்மநாபன். மேடையேறி கலைஞர்களை பாராட்டுவதற்கு முன்பாக மேடையின் கீழே நின்றபடி அவர்களையே வாஞ்சையாக பார்த்துக்கொண்டு இருந்த ”நீலி” ரம்யா. வார்த்தைகள் வெளிப்படாமல், மெதுவாக பேசியபடி, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட அனங்கன். ”துஜாவந்தியில  வாசிச்ச அந்த பிர்கா பிரமாதம்” தூத்துக்குடி வாசகர் முத்துமாணிக்கம் சொன்னதை கேட்டவுடன், ஒரு வினாடி திகைப்போடு அவரை பார்த்த ராமநாதன், நெகிழ்வாய் நன்றி தெரிவித்தபடி இருந்தார். பிர்காக்களை உள்வாங்கி பாராட்டும் அவையினர் அமைந்த அரங்கு என்பது அவருக்கு இனிய அதிர்ச்சியாக இருந்திருக்கக் கூடும் என்பதை  நிகழ்வுக்கு பிறகான உரையாடல்களில் இருந்து தெரிந்து கொண்டேன்.

இசை நிகழ்ச்சிக்காக ஒதுக்கப்பட்டு இருப்பது இரண்டு மணி நேரம். அதற்குள்ளாக ராக ஆலாபனை, காவடி சிந்து, தவில் தனி ஆவர்த்தனம், மங்கல பாடல் என அனைத்தும் நிறைவுற வேண்டும் என்று தெரியப்படுத்தி இருந்ததால், குழுவினர் அனைவரும் அதற்கான முன் தயாரிப்போடு வந்திருந்தார்கள்.

ரொம்ப நாளாச்சி, இப்படி உக்காந்து கேட்டு,,, இசையில் நிறைஞ்ச மனசோட  வீட்டுக்கு போகப்போகிறேன் என்று மகிழ்ந்தார் நாஞ்சில் நாடன். வழியனுப்ப ரயில் நிலையம் செல்கையில் ராகம் தானம் பல்லவி நிகழ்வை வானுக்கும் பூமிக்கும் ஒப்பிட்டு பேசிக்கொண்டிருந்தார் கவிஞர் தேவதேவன்.

குரு பூர்ணிமா நிகழ்வில் ஆசிரியரென அருகமைந்து நீங்கள் உரைத்த சொல்,  ஆகஸ்ட் ஆறாம் தேதி, கவுண்டச்சிபாளையத்தில் நிறைவேறி இருக்கிறது. செயலாக்க வாய்ப்பு கிடைத்தது என்னுடைய நல்லூழ்….

நாதஸ்வர தவில் இசை எனும் நீர்பாம்பு தமிழ்விக்கி-பெரியசாமி தூரன் விருதுவிழா மூலம்  நவீன தமிழ் இலக்கிய அரங்கில் கீழே இறங்கியிருக்கிறது.

– யோகேஸ்வரன் ராமநாதன்.

தூரன் விழா, கடிதங்கள்

மூன்று இனிமைகள்

அழுகையர் தொழுகையர் துவள்கையர் ஒருபால்

முந்தைய கட்டுரைவிதைசேகரிப்புக்காக ஓர் இந்திய மிதிவண்டிப் பயணம்…
அடுத்த கட்டுரைதம்பிமார் கதை