குருதியும் வெற்றியும்

அன்புள்ள ஜெ

இது உங்களுக்கும் தெரிந்த திராவிட இயக்க ஆதரவாளர் ஒருவர் முகநூலில் போட்ட பதிவு.

 *

நாங்குநேரியில் நடந்த சம்பவத்தில், மாணவர்கள் அரிவாளைக் கையிலெடுத்தது, பள்ளி வயதிலேயே சாதிப் பாகுபாடு, சாதி மேட்டிமை பார்த்தது, சக மாணவனை அடிமையாக நடத்தியது, போதைப் பொருள் பயன்பாடு இவற்றையெல்லாம் பார்த்து, தாங்கள் அதிர்ச்சியாகிவிட்டதாக செவ்வாய் கிரக வாசிகள் பல பேர் போஸ்ட் போட்டிருக்கிறார்கள்.

அப்படி அதிர்ச்சி ஆனவர்களையெல்லாம் பார்த்தால்தான் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.அவர்களுக்கெல்லாம் நான் சொல்லிக் கொள்வது ஒன்றுதான்…

“எழுந்திரு அஞ்சலி, எழுந்திரு… எழுந்து, சுத்தி என்ன நடக்குதுன்னு கண்ணத் தொறந்து பாரு”.

நாங்குநேரி சம்பவம் என்பது ஒரு கூட்டுச் சமூகமாக நம் அனைவராலும் கைவிடப்பட்ட, அல்லது யாரும் கண்டுகொள்ளாத, நீண்ட காலம் புண்ணாகிப் புரையோடிப் போய்விட்ட அரசுப் பள்ளிகள் அவற்றின் இன்றைய தலைமுறை மாணவர்களின் மன வார்ப்பு, அதன் நீண்ட நாள் விளைவுகளின் ஒரு சாம்ப்பிள் மட்டுமே.

சொல்ல வருத்தமாக, சங்கடமாக இருந்தாலும் சொல்லித்தானே ஆக வேண்டும்.இது போன்ற சம்பவங்கள் இனி தொடரவே செய்யும். பயப்பட வேண்டாம், அடிக்கடி அதிர்ச்சியாகும்போது அதுவும் காலப்போக்கில் பழகிவிடும்.

(இளங்கோவன் முத்தையா)

*

நான் நினைத்துக்கொண்டது ஒன்றுதான். ஓராண்டுக்கு முன்பு இதையே நீங்கள் சொன்னீர்கள். அரசுப்பள்ளிகளில் மாணவர்களிடையே ஓங்கியுள்ள வன்முறைப்போக்கு பற்றி. அதை ஆசிரியர்கள் கட்டுப்படுத்த முடியாதபடி அது வளர்ந்திருப்பதைப் பற்றி. இந்த நிகழ்விலேயேகூட அந்த வன்முறைப்பையன்களுக்கு அவர்களின் குடும்பம் கடைசிவரை ஒத்தாசை செய்துள்ளது. வன்முறையில் அவர்களும் கைதாகியிருக்கிறார்கள். அந்த குடும்பமும், அவர்களின் சாதியும் வழக்கைச் சந்திக்க உதவுவார்கள். அந்த பையன்கள் மிகச்சிலநாட்கள் நீதிமன்றக் காவலில் இருந்துவிட்டு, வழக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டதுமே ஜாமீன் பெற்று வெளிவந்து மீண்டும் பள்ளிக்கு வருவார்கள். அவர்களுக்கு இன்னும் புகழும் அதன் கெத்தும் இருக்கும். ஆசிரியர்கள் என்னதான் செய்ய முடியும்?

இதை எழுதியதற்காக இங்குள்ள போலி முற்போக்கினர் உங்களை என்னென்ன சொல்லி ஏசினார்கள் என்பது இணையத்தில் இருக்கிறது. அரசுப் பள்ளி மாணவர்களை ரவுடிகள் என்கிறீர்கள், உங்களை கைது செய்யவேண்டும் என்றெல்லாம் எழுதினர். (இன்றைய சூழலை வைத்துப் பார்த்தால் எவராவது உடனே புகார் அளிக்க உங்களை கைதுசெய்து சிறையிலும் அடைத்திருப்பார்கள்) சில நாட்கள் கழித்து நீங்கள் சொன்னதையே கடுமையாக கல்வியமைச்சரே சொன்னபோது அதை வரவேற்று அரசு நடவடிக்கை எடுக்கிறது என்று எழுதினார்கள்.

இந்தப் போலிகள் அவர்களுக்கு ஒரு பிம்பம் உருவாகவேண்டும் என்பதற்கு அப்பால் எந்த உண்மையையும் பேச விரும்புவதில்லை. எதையுமே பொதுவெளியில் பேசவும் விடுவதில்லை. உண்மையில் வைரஸ் போல நம் சூழலை ஆக்ரமித்து அழித்துக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள். அவர்களின் மனசாட்சி வெளிப்படுவதே இல்லை. எல்லாமே நடிப்பு மட்டும்தான்.

இன்றைக்கு நம் பள்ளிகளெல்லாம் எந்ந்நிலையில் இருக்கின்றன என்பதற்கான சான்று இந்த நிகழ்வு. நீங்க்ளும் பல கட்டுரைகள் வழியாகச் சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். இனியாவது கண் திறக்கும் என்றால் நல்லது

இரா. பூபாலன்

அன்புள்ள பூபாலன்,

எழுத்தாளரின் பணி என்பது சமூக யதார்த்தங்களை நோக்கி வெளிப்படையாகப் பேசுவது மட்டும்தான். எனக்கு கிடைக்கும் உளப்பதிவுகளை நான் பேசுகிறேன். அவற்றை ஏற்பவர்களும் மறுப்பவர்களும் அவரவர் அரசியல், அவரவர் காட்டவிரும்பும் பிம்பங்களையே சார்ந்துள்ளனர். அவற்றை நான் என்றுமே பொருட்படுத்தியதில்லை. அந்த ’முற்போக்கினர் ’ ‘திமுக’வினர் பலருடைய  பின்புலம் இடைநிலைச்சாதியைச் சேர்ந்தது. அவர்களின் மனநிலை அதையொட்டியே வடிவமைக்கப்பட்டுள்ளது. அன்று பள்ளிகளில் வன்முறையே இல்லை என்று கூவியதும் சரி, இன்று ‘அதிர்ச்சி’ அடைவதும் சரி, பெரும்பாலும் சாதிய மனநிலை கொண்டவர்கள்தான். பிற எல்லாமே அவர்களின் பொதுவெளிப் பாவனைகள் மட்டுமே.

நம் அரசுப்  பள்ளிகள் இன்று ஆசிரியர்களால் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு சென்றுகொண்டிருக்கின்றன. எல்லா பள்ளிகளும் அல்ல. ஆனால் கணிசமான பள்ளிகளின் நிலைமை அது. எந்த மாணவன் மேலும் எந்த நடவடிக்கையும் பள்ளி எடுக்க முடியாத நிலை. பள்ளிகளில் இந்த அளவுக்கு அரசியல் தலையீடு முன்பு இருந்ததில்லை. சாதிய அரசியலின் ஊடுருவல் மிக அதிகம்.நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே பள்ளக்கால் புதுக்குடி என்ற கிராமத்தில்  அரசுப்பள்ளி மாணவர் சென்ற ஆண்டு  சாதி பிரச்சினையால் சக மாணவர்களால் அடித்துக் கொல்லப்பட்டார் என்று நாளிதழ்களில் செய்தி வந்தது. அன்று எவரும் பேசவில்லை. பேசியவர்களை வசைபாடினர். இது தொடர்ந்து செய்திகளில் வந்துகொண்டே இருக்கும் ஒரு போக்கு.

ஒரு பள்ளியில் பத்து மாணவர்கள் கட்டுப்படுத்த முடியாதபடி இருந்தால் மொத்தப் பள்ளியுமே கல்விகற்க முடியாத நிலைக்குச் சென்றுவிடும். அங்கே பாதிக்கப்படுபவர்கள் மெய்யாகவே கற்று மெலே செல்லும் ஆர்வத்துடன் வந்துசேரும் ஏழைக்குடும்பத்து மாணவர்கள்தான்.அந்த கட்டற்ற மாணவர்களை கட்டுப்படுத்தவேண்டும் என்று சொல்வது அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் மோசமானவர்கள் என்ற பொருளில் அல்ல. அரசுப்பள்ளியை நம்பி சேரும் அடித்தள மக்களின் குழந்தைகள் மெய்யான கல்வியை அடையவேண்டும் என்பதற்காகவே. இதில் ’செண்டிமெண்ட்’ பேசுவது, ‘மனிதாபிமானம் பேசுவது’ எல்லாமே குற்றத்தை மழுப்புவது மட்டுமே. குற்றம் குற்றம்தான். எதன்பொருட்டு நிகழ்ந்திருந்தாலும். பாதிக்கப்படுபவர் தரப்பில் நிற்பதே நீதி. மென்மையான போக்கு இனி உதவாது என்பதை இப்போதுகூட அரசு புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. இப்போதும் போலி உணர்ச்சிகரமே அதிகமாகக் காணக்கிடைக்கிறது.

இதற்கிணையான தாக்குதல்கள்  பெரும்பாலானவற்றில் பாதிக்கப்படுபவர்கள் மிக ஏழை மாணவர்கள். நன்றாகப் படிப்பவர்கள் என்பதனால் அவர்கள் உடல்வலிமை அற்றவர்கள். தாக்குபவர்கள் ஏற்கனவே குற்றப்பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவே பொதுவாக இருக்கிறார்கள். ஆகவே ஆசிரியர்கள் அவர்களின் குடும்பத்தினரிடம் புகார் சொல்வதில் பயனே இருப்பதில்லை. காவல்துறை தலையிடவே முடியாது- உடனே அரசியல் கட்சிகள் உள்ளே வந்துவிடும். விளைவாக படிக்கும் மாணவர்கள் நிராதரவாக இந்த மாணவர்களைப்போன்ற  குற்றவாளிகள் முன்பு விடப்படுகிறார்கள். இதுவே உண்மை. இதை தடுத்து, படிக்கும் பையன்களுக்கு முழுப்பாதுகாப்பை அளிப்பது அரசின் கடமை. மாணவச்செல்வங்கள் என பொதுவாக நெகிழ்வது அல்ல. இதைச் சொல்லியாகவேண்டியது, அதற்காகப் போலிகளின் வசைகளையும் வாங்கிக்கொள்ளவேண்டியது, எழுத்தாளனின் கடமை.

இது சாதியத் தாக்குதல். தலித் மக்கள் கல்வி கற்பதற்கு எதிரான நம் சமூகமனநிலையின் வெளிப்ப்பாடு. தாக்கிய சிறுவர்களின் வீடுகளில் என்னென்ன பேசப்பட்டு அந்தச் சிறுவர்கள் அந்த மனநிலையை அடைந்திருப்பார்கள் என ஊகிப்பதொன்றும் பெரிய விஷயம் அல்ல. நான் மீளமீள சொல்வது அதையே. சாதியாதிக்க மனநிலை என்பது நம்முடைய சமூகத்தில் உள்ள நோய். அத்தனை சாதிகளிலும் ஊறியது. அதை இன்னொரு சாதி மேல் மேல் சுமத்தி, நம் சாதிவெறியை மறைத்துக்கொண்டு, பாவலா செய்வதே நம் வழக்கம். அதை இனிமேலாவது மறுபரிசீலனை செய்வோம். நாம் எங்கிருக்கிறோம் என்பதையாவது ஒப்புக்கொள்வோம். நம் சாதிவெறிக்கு நாம் பொறுப்பேற்காத வரை இங்கே எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை.  அது நாம் மாறுவதற்கான அடிப்படை.

ஆனால் இந்தத் தாக்குதல்களை நான் வேறொரு வகையிலேயே பார்க்கிறேன். 1970 களில் திருக்கணங்குடிக் கலவரங்கள் நிகழ்ந்தன . அது நாடார் சாதி மேலெழுந்து வருவதற்கு எதிரான கலவரம். அதை வென்று அவர்கள் இன்று தொடமுடியாத சக்தியாக ஆகிவிட்டனர். 1990களில் கொடியங்குளம் கலவரம். அது தேவேந்திரகுல வேளாளர் மேலெழுந்து வந்தமைக்கு எதிரான கலவரம். அவர்கள் வென்றுள்ளனர். இதுவும் அதுபோன்றதே. இது ஒடுக்குமுறையின் சித்திரம் அல்ல. அந்த மக்கள் மேலெழுந்து வருவதன் சான்று. அதற்கு எதிரான ஒவ்வாமையின் வெளிப்பாடு இந்த குருதி. அவர்கள் வெற்றி வழியாக அதற்குப் பதில் சொல்வார்கள்.

ஜெ

நமது மாணவர்கள்

நமது கல்வி

கல்விக்கூட ஒழுங்கும் பஞ்சாயத்துக்களும்

பிராமணர் கல்வியை மறுத்தனரா?

முந்தைய கட்டுரைதுரை மணிகண்டன்
அடுத்த கட்டுரைதிரிபுகளின் பெருநிலம்