‘சாதி ஓர் உரையாடல்’- அதியா வீரக்குமார்

சாதி ஓர் உரையாடல் வாங்க

சாதி ஓர் உரையாடல் மின்னூல் வாங்க

அன்புள்ள ஜெ அண்ணாவுக்கு வணக்கம்,

‘சாதி ஓர் உரையாடல்’ புத்தகம் வாசித்தேன். முன்னமே இணையத்தில் இதை வாசித்திருந்தாலும் ஓர் தொகுப்பாக வாசிக்கும் போது பற்பல விஷயங்கள் துலங்கி வருகின்றன. இடைநிலை ஆதிக்க சாதியில் பிறந்து அதன் சூழ்நிலையில் வளர்ந்தவனான எனக்கு இந்தப் புத்தகத்திலுள்ள உரையாடல்கள் மிக நெருக்கமாகப் பொருள் படுகின்றன.

சாதியை யாரோ சிலர் உருவாக்கி அதை மேலிருந்து கீழ்நோக்கிச் செலுத்தி நிலைபெற வைத்தனர் என்ற பெரும் மூடநம்பிக்கையை சமூகவியலின் எளிய அடிச்சுவடி தெரிந்தவர்கள் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் அந்தக் கருத்தியலை இங்கு நிறுவும் பொருட்டு எத்தனை முன்னெடுப்புகள் எத்தனை செயல்திட்டங்கள். ஆனால் உங்கள் சிந்தனையின் வீச்சு இவை அனைத்தையும் புறந்தள்ளி உண்மையின் உள்ளொளியைப் பிரகாசப்படுத்துகிறது,

ஆதிப் பழங்குடிகளின் இனக்குழுக்களே சாதியின் தோற்றுவாய் என்பதையும் அதைப் படிநிலை அமைப்பாக்கியதில் நிலப்பிரபுத்துவத்தின் வரலாற்றுப் பாத்திரத்தையும் உலக நாடுகளின் பொருளாதாரப் பிரிவினைக்கும் இந்தியாவின் சாதிசார்ந்த பிரிவினைக்குமான நுட்பமான காரணத்தை விளக்கி,  சாதி என்பது கீழிருந்து மேல் நோக்கியும் வருணம் என்பது மேலிருந்து கீழ் நோக்கியும் பாய்ந்து கலந்து இந்தியப் பெரும்பரப்பில் சாதிப் பிரிவுகளாக நிலைகொண்டதை விளக்கியிருந்தீர்கள். அதை அக்காலத்திய சில போக்குகள் தங்கள் சுயநலத்துக்காகக் கூர்மைப்படுத்தி கெட்டித் தன்மையாக்கியதையும் நுட்பமாக உணர்த்தியுள்ளீர்கள். அதே போல் இடஒதுக்கீட்டின் ஆரம்பகால அரசியல் தேவையையும் அதன் வளர்ச்சியையும் குறிப்பிட்டுள்ளீர்கள்.

பிராமணர்களின் மேல் வலிந்து ஏற்றப்பட்ட அவதுாறுகளின் பொருட்டு உங்களுடைய பதில் சுயபரிசோதனையின் அனைத்து எல்லைகளுக்குள்ளும் மனதைச் செலுத்தவைக்கிறது. குற்றமற்றவர்களைக் கல்லெறியச் சொல்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக மனுஸ்மிருதி பற்றி உங்கள் விளக்கம் என் அறிவை புதிய தளங்களுக்கு இட்டுச் செல்கிறது. ஸ்ருதிக்கும் ஸ்மிருதிக்குமான உங்கள் விளக்கத்திலேயே எல்லாம் துலங்கிவிட்டது. அதிலும் பலவகையான ஸ்மிருதிகளின் நிலைப்பாடுகளைக் குறிப்பிட்டு, அதிலொன்று மனுஸ்மிருதி என்றும் அதன் கருத்துகள் கொள்கையளவில் இருந்தனவே அன்றி நடைமுறைக்கு சாத்தியமற்றதாகவே வரலாறு நெடுகிலும் இருந்து வந்துள்ளதை விளக்கி, அதன் முக்கியத்துவமற்ற தன்மையைப் புரியவைத்தீர்கள். நீங்கள் விளக்கிய இந்து மதத்தின் மூன்று அடுக்குக் கட்டமைப்பு, எனக்குப் புரிந்தும் புரியாதது போல் இருந்த  சில விஷயங்களைத் தெளிவுபெறச் செய்தது. ஏன் இந்து மதம் ஒற்றைத் தன்மையற்ற சுதந்திரத்துடன் இயங்குகிறது என்ற உண்மையை இந்த அடுக்குகளின் வழியே புரிந்து கொள்கிறேன். பிற மதங்களில் இந்த மூன்றும் ஒன்றோடொன்று கலந்திருப்பதால் அவற்றில் தர்க்கத்திற்கு இடமில்லாது இறுக்கிமூடப்பட்டுள்ள நிலைமையை உணர்ந்து கொள்கிறேன்.

மற்றபடி வா.வே.சு அய்யரின் பங்களிப்பையும் அவரின் நியாயங்களையும் உணர்வோடு பதிவு செய்திருந்தீர்கள். அசோகமித்திரனின் எச்சரிக்கை உணர்வை ஒரு சிறு பறவையின் எச்சரிக்கை உணர்வுடன் ஒப்பிட்டிருந்தீர்கள். அந்த வரிகள் நயம்மிகுந்தவை. அந்த அபாரமான ஒப்பீடு இனி என் வாழ்நாள் முழுவதும் தக்க சூழ்நிலைகளில் நினைவுக்கு வந்து கொண்டே இருக்கும். நான் அசோனமித்திரனை சிலதடவை அவரின் வீட்டில் சந்தித்திருக்கிறேன். உரையாடியிருக்கிறேன். ஒருநாள் கூட அவர் என் சாதியை அறிந்து கொள்ளும் ஆர்வத்தைக் காட்டினார் இல்லை.  நாயர்களின் என்.எஸ்.எஸ் பற்றிய செயல்முறைளும் செய்திகளும் எனக்கு ஆச்சர்யத்தைத் தந்தன. இ.எம்.எஸ் சின் சுயசாதி திருமணம் வரதட்சனை வாங்கியதன் உட்பொருள் எல்லாம் என் சிந்தனைக்குக் கூர்தீட்டல்கள்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் எழுத்தைப் புத்தகத்தில் வாசித்த அனுபவம் என்னை தீவிர வாசிப்பிற்கு மீண்டும் இட்டுச் சென்றுள்ளது. பல காரணங்களால் இடையில் தடைபட்டுப் போன என் வாசிப்பையும் நீர்த்துப் போன என் சிந்தனைப் போக்கையும் மறுபடியும் மீட்டுக் கொண்டுவர உங்களின் இந்தப் புத்தகம் காரணமானது.

மகிழ்ச்சி

அன்புடன்

-அதியா வீரக்குமார்

சாதி ஓர் உரையாடல்

முந்தைய கட்டுரைபாவண்ணன் சந்திப்பு, பதிவுகள்
அடுத்த கட்டுரைதமிழிலக்கியத்தின் முதல் இஸ்லாமிகேட் நாவல் – அல்கிஸா