துளிகளின் அழகு- கடிதம்

மலர்த்துளி மின்னூல் வாங்க

மலர்த்துளி வாங்க

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

மலர்த்துளி தொகுப்பு வாசித்தேன். காதலின் வண்ணங்களால் ஆனதாக இருந்தது. காதல் என்றால் என்ன என்ற கேள்வி மீண்டும் தோன்றியது. அது வெறும் காமம் மட்டுமே இல்லை என்றும் தோன்றியது. வாழ்க்கையின் மீதான பற்றுதலான, இந்த பற்றுதலுக்காக மனம் கொள்ளும் பல உணர்வுகளா. இது காதல் என்று அறுதியிட்டு சொல்ல முடியுமா. காதலின் மென் கணங்களை காட்டி முழு பரிணாமத்தையும் சொல்ல முயல்கிறது இந்த தொகுப்பு.

கொலைச்சோற்றில் வருவது வாழ்க்கையின் பொருளின்மைக்கு முன் அம்முகுட்டி கொள்ளும் கருணைதானே. அதன் இந்த எடையை ஏற்றி வைக்கலாமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் இந்த பொருள்கொள்ளல் அல்லது எடையெற்றம் இல்லாமல் அந்த உணர்வை விளக்க முடியவில்லை. இதற்கு பின்னும் அதில் எஞ்சி நிற்பதை காதல் எனலாம். இது இல்லாமல் இல்லை.

யமி நேற்று கனவில் வந்தது. யமி என்ற சொல் நினைவில் ஓடிக்கொண்டே இருந்தது. வழிந்து செல்லும் நீர் மெல்லிய ஆடையாக ஒச்சனுக்கு தெரிவதிலிருந்து கதை வேறு பரிணாமம் கொள்கிறது. அவள் தன் ஆடையை களைந்து அவன் மட்டும் அறிந்த நீர் ஆடையை அணிகிறாள். யமி ஆகிறாள்.

சுவை கதை Submissive தன்மை கொண்டதாக தோன்றுகிறது. அவள் மேல் கொள்ளும் இரக்கம் காதலாக மாறும் கணத்தில் முடிகிறது. இதில் தோன்றும் அனைத்தும் அம்சங்களும் ஆம் காதலின் கூறு என்றே மனம் சொல்கிறது.

பெருங்கை, இந்த தொகுப்பில் தொடர்ந்து வருவது சமமில்லாதவர்களுக்கு இடையில் தோன்றும் ஈர்ப்பு. பெருங்கையும் அதுதான். யானைபாகனுக்கும் முதலாளியின் மகளுக்கும். ஆனால் இதில் அந்த ஆண் கொள்ளும் தவிப்பு காதலாக மாறுவதை,  இன்னும் கொஞ்சம் விளக்கினால் தன் நிலைக்கு மேல் அவன் கொள்ளும் விருப்பம். ஒரு அமைதயின்மை உள்ளது. அதை யாரைவிடவும் யானை நான்றாக உணர்ந்துள்ளது. கீழே கிடக்கும் பூக்களை எடுத்து குறி சொல்கிறது. கற்களை அடுக்கி கொடுக்கிறது. இவனுக்கு மட்டும் கொஞ்சம் ஸ்பெஷலாக அவன் மனதை எடுத்து அவளுக்கு காண்பிக்கிறது.

Loving Couple Art | Acrylic On Canvas | By Samir Sarkar

என்னை ஆள. காதலுக்கு என்றும் தவிப்பும் காத்திருத்தலும் தான் இலக்கணம். அது பெண்ணும் ஆணும் எவ்வளவு நெருங்கி இருந்தாலும் அந்த தவிப்பும் காத்திருப்புமே அவர்கள் மேல் பிரேமையாக மாறுகிறது. என்னை ஆள அப்படி ஒரு கதை. அவன் அவ்வளவு காத்திருக்கிறான். ஆனால் வாய்ப்பு வரும்போது அவனால் பேச முடியவில்லை. பின் ஒரு சின்ன ட்விஸ்ட். அவன் அதுவரை கேட்ட குரலுக்கு சொந்தமானவள் அல்ல அவன் பார்த்த பெண். தனக்கு பிடித்த பெண்ணின் குரலின் இனிமையை காணத் தொடங்குகிறான்.

கேளாச்சங்கீதம். இது ஆட்கொள்ளலின் மாறுபாடு. காதல் தான் ஆனாலும் அழிக்கும் காதல். உணர்வுகளுக்கு ஆட்கொள்ளும் தன்மை உள்ளது. அது அதிகமாகி ஒரு தனி ஆளுமையாக மாற்றம் பெரும் தன்மை கொண்டது. தன்னை முற்றாக இழந்து தன்னை ஆட்கொள்ளும் அந்த உணர்வுக்கு தன்னை பலியிட கொள்ளும் முனைப்பு.

கள்வன், நவீன காதல் கதை. தற்காலத்திய இளைஞனின் வாழ்க்கை உருவாக்கம், அவனின் இருமை ஆளுமை மற்றும் கள்ளமில்லாத காதல் இல்லை என்றே தோன்றுகிறது. தற்காலத்தில் காதலிக்காத ஒருவரால் இதுபோன்று எழுத முடியாது எனத் தோன்றியது இதை வாசிக்கும்போது.

எப்போதும் ஒரு சிறுகதையை வாசிக்கும்போது மனம் ஒருவித நிறைவின்மை கொள்ளும். இல்லையே இது அந்த உணர்வின் ஒரு வெளிப்பாடு தானே என. இத்தொகுப்பு அதன் பல்வேறு நிறங்களை சாத்தியங்களை கண்டடைதலை காண்பிக்கிறது. அது இன்னும் பெருகுவது என்றாலும் இதுபோல் நிறைவை வேறு எதிலும் அடையவில்லை.

மனிதரில் எழும் பலவேறு உணர்வுகள் விழுமியங்கள் எண்ணங்கள் காதலாக மாறும் தருணத்தை சொல்லும் கதைகள்.

காதலெனும் பேரணங்கின் காலில் மாட்டிய பொற்சரடு இது. ஒவ்வொரு கதையும் ஒரு மலர்த்துளி. மலர்கோத்த சரம் கொண்டு ஆடுகிறாள் அவள்.  ஆனால் இனி அவள் வரும் ஓசையை துடிப்பை உணர முடியும்.

அன்புடன்

இ கே ஆதவன்

முந்தைய கட்டுரைஇசையும் தத்துவமும்
அடுத்த கட்டுரைபூன் முகாம் ,கடிதம்: ராஜேஷ் கிருஷ்ணசாமி