திருவருட்செல்வி – விஷால் ராஜா (சிறுகதைகள்)
அன்புள்ள ஜெ
என் வாழ்க்கையில் இரண்டு கதைச்சந்தர்ப்பங்கள் முக்கியமானவை. ஒன்று, அசோகமித்திரனின் தண்ணீர் நாவலில் பக்கத்துவீட்டு மாமி ஜமுனாவிடம் வாழ்க்கையைப் பற்றிப் பேசும் இடம். இன்னொன்று தி.ஜானகிராமனின் மாப்பிள்ளைத் தோழன் என்னும் கதை. இரண்டு கதையையும் நான் அடிக்கடி படிப்பது உண்டு. மனச்சோர்வு அடையும்போதெல்லாம் என்னை தேற்றும் கதைகளவை.
ஒருவர் கிராமத்திலே நல்ல நம்பிக்கையுடனும் மனிதாபிமானத்துடனும் வாழ்ந்துவிடமுடியும். ஆனால் நகரவாழ்க்கையில் அப்படி வாழ்வது மிகக்கடினமானது, நகரத்தில் எல்லா ஈரமும் உலர்ந்துபோய்விடுகிறது. பக்கத்திலே வாழ்வது யார் என்றே தெரியவில்லை. இங்கே ஒவ்வொருவரும் தனியாகவே வாழ்கிறார்கள். இந்த வாழ்க்கை என்பது எலிகளைப்போல வளைகளில் ஒடுங்கி இருட்டிலே குப்பைநடுவிலே வாழ்வதுதான்
இந்த வாழ்க்கையிலே ஒரு நம்பிக்கையையும் அன்பையும் அடைவதென்பது சாமானியமானது அல்ல. அசோகமித்திரன் துன்பங்களையே எழுதியவர். ஆனால் தண்ணீர் நாவலில் அந்த மாமியின் பேச்சு அற்புதமான ஒரு நம்பிக்கையை அளிப்பது. மாப்பிள்ளைத் தோழன் கதையிலும் அந்த பெண்மணி பேசுவது மனதை ஊக்கம் கொள்ளச்செய்வது. வாழ்க்கை என்பது ஒன்றும் கசப்பும் துக்கமும் மட்டுமே கொண்டது அல்ல என்று காட்டுவது அந்தக்கதை.
அந்தக் கதைகளுக்குச் சமானமான கதை விஷால்ராஜாவின் திருவருட்செல்வி. மிதமான மொழியிலே எழுதப்பட்ட கதை. அவ்வளவு சாதாரணமான வாழ்க்கையிலும் கொஞ்சம் அருளை மிச்சம்வைத்திருக்கும் அந்தப்பெண்ணுக்கு திருவருட்செல்வி என்று பெயரிட்டது அற்புதமான விஷயம். அந்தக் கதை மட்டும்தான் படித்திருக்கிறேன். தொகுப்பு நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்
எஸ்.ராமச்சந்திரன்