வெண்முரசு முழுமையாக வாங்க முடியுமா?

வெண்முரசு நூல்கள் வாங்க

வெண்முரசு மின்னூல்கள் வாங்க 

அன்புள்ள ஜெ

வெண்முரசு முழுத்தொகுதிகளையும் வாங்க விரும்புகிறேன். எனக்கும் என் பெற்றோருக்குமாக இரண்டு தொகுதிகளாக. இப்போது கேட்டால் முழுமையாக கிடைப்பதில்லை என்கிறார்கள். முழுமையாகப் பெற என்ன வழி?

ராகவன் பண்டரிநாதன்

அன்புள்ள ராகவன்,

வெண்முரசு மின்னூல்- இணைய வாசிப்பு இரண்டையும் உத்தேசித்து எழுதப்பட்ட படைப்பு. அதன் பிரம்மாண்டமான வடிவம் அதற்குரியது. இப்போதே அதன் பகுதிகள் இயல்பாக கூகிள் தேடலில் வந்து நிற்கின்றன.அச்சுவடிவில் நூல்தொகுதிகள் இன்னும் ஒரு தலைமுறைக்காலம் வரலாம். அதன்பின் மின்வடிவே நீடிக்கும். ஆகவே அச்சுவடிவமென்பது ஒரு வகை கலைப்பொருள் சேமிப்பே. இணையத்தில் இலவசமாக, முழுமையாக வெண்முரசு கிடைக்கிறது.

ஆனாலும் வெண்முரசு நூல்களுக்கு தொடர் தேவை இருந்துகொண்டே இருக்கிறது. பெரும்பாலும் நூலகமாக அமைக்கவும், பெற்றோருக்கோ பெரியவர்களுக்கோ பரிசாக அளிக்கவுமே அதை வாங்குகிறார்கள். வெண்முரசு வாங்குபவர்கள் பெரும்பாலும் அது இணையத்தில் இலவசமாக இருக்கிறது என அறிந்தவர்கள். பலர் அதை முன்னரே வாசித்தவர்களும் கூட. அதை நூல்வடிவில் வைத்துக்கொள்ளவேண்டும் என்னும் விருப்பம் உடையவர்கள்.

வெண்முரசு இன்று ஒரு முக்கியமான பரிசுப்பொருள் ஆகிவிட்டிருப்பதை காண்கிறேன். பெற்றோருக்கு பிள்ளைகள் வாங்கி அளிக்கும் பரிசாகவே அது பெரும்பாலும் விற்பனை ஆகிறது. (அதிலும் அப்பாக்களை விட அம்மாக்கள் விரும்பி வாசிக்கிறார்கள். இலக்கிய வாசிப்புப் பழக்கம் அற்ற அன்னையர்கூட மிக அதிகமாக அதை வாசிக்கிறார்கள்). அது அவர்களின் வாழ்க்கை முழுக்க கூடவே இருக்கும் நூலாக உள்ளது. தாங்களே பெற்றோருக்கு வாசித்துக்காட்டும் மகன்களும் பலர் உள்ளனர்.

அதேபோல மரியாதைக்குரிய ஒருவருக்கு அளிக்கத்தக்க உகந்த கையுறையாகவும் அது உள்ளது. ஒரு பொருளை வாங்கி அளித்தால் தவறாக ஆகிவிடும் இடங்களில்கூட வெண்முரசு தொகைகளை அளிப்பது கௌரவமானதாக உள்ளது.

ஆகவே பெரும்பாலானவர்கள்  விலைகுறைவான தாளட்டைப் பதிப்பை விரும்புவதில்லை. வண்ணப் படங்கள் கொண்ட, கெட்டி அட்டை போடப்பட்ட செம்பதிப்பையே விரும்புகிறார்கள். செம்பதிப்பு இருந்தால் தாளட்டைப் பதிப்பு விற்பதில்லை. ஆகவே இப்போது விஷ்ணுபுரம் பதிப்பகம் வெளியிடும் வெண்முரசு நூல்களெல்லாமே செம்பதிப்புகளின் மறு அச்சுகளே.  தாளட்டைப் பதிப்புகள் இனி வெளிவர வாய்ப்பு குறைவு.

அதில் என்ன சிக்கல் என்றால், கெட்டி அட்டைப் பதிப்பை மனிதக் கையாலேயே தயார் செய்யவேண்டும். அட்டைக்கட்டு என்பது கையால் செய்யப்பட்டால்தான் உறுதியாக இருக்கும். இன்றுள்ள அச்சகப் பணியில் அதற்கான ஊழியர்கள் குறைவு. ஆகவே வேலை அவர்களின் வசதிப்படியே நிகழும்.

வெண்முரசு எல்லா நாவல்களுமே மிகப்பெரியவை. ஒரு நூல் தயாராகி வர குறைந்தது இரண்டு மாதம் ஆகிறது. நடுவே புத்தகக் கண்காட்சிகள் வந்தால் மூன்றுமாதம். தமிழில் இன்று இதற்கு சமானமான பெரிய நூல்கள் குறைவாகவே வருகின்றன. ஒரு பதிப்புக்கு  900 பிரதிகள் அச்சிடுகிறோம். அதற்குமேல் என்றால் இவ்வளவு பெரிய நூல் மிகப்பெரிய இடத்தை எடுத்துக்கொள்ளும். கிடங்கு தேவைப்படும்.

இவ்வாறு மூன்று தொகுதிகள் அச்சிட்டு கைக்கு வருகையில் ஆறு ஏழு  மாதம் கடந்துவிடுகிறது. அதற்குள் அச்சிடப்பட்ட முந்தைய நூல்கள் தீர்ந்து விடுகின்றன. விஷ்ணுபுரம் பதிப்பகம் வழியாக நாங்கள் அச்சிட்டதில் முதற்கனலை மட்டும் எப்போதுமே கையிருப்பு இருக்கும்படி பார்த்துக்கொள்கிறோம். மற்றநூல்கள் தீர்ந்தால் மீண்டும் அச்சு ஆணை கொடுத்து அச்சாகி வர நாலைந்து மாதம் ஆகிவிடுகிறது

அச்சகத்தில் ஆண்டு முழுக்க வெண்முரசு அச்சாகிக்கொண்டே இருக்கிறது. ஆனால் 26 தொகுதிகளும் ஒரே சமயம் கிடைப்பது  இல்லை. அதற்கான முயற்சியில்தான் இருக்கிறோம்.  இது பொதுவாக தமிழ் பதிப்புச்சூழலின் சிறிய அளவைச் சார்ந்த சிக்கல். பெரிய பதிப்பகமான கிழக்கு இந்நூல்களை வெளியிட்டபோதே இந்நிலைமைதான் இருந்தது

கிடைக்கும் நூல்களை வாங்கிக்கொண்டிருந்தால் ஓராண்டுக்குள் எல்லா நூல்களையும் சேர்த்துவிடலாம் என்பதே இப்போதைய நிலைமை. வரும் ஆண்டில் முந்நூறு பேராவது முன்பதிவில் சேர்வார்கள் என்றால் அத்தொகையை முதலீடாகப் போட்டு ஒரேதொகுப்பாக இருபத்தாறு நூல்களையும் கொண்டுவரலாம் என்னும் கனவு உள்ளது. உடனடியாக அவை அனுப்பப்பட்டுவிடும் என்பதனால் சேமிப்புக்கிடங்கு தேவையிராது. பார்ப்போம்.

ஜெ

முந்தைய கட்டுரைவாழை செழித்த நிலம்
அடுத்த கட்டுரைதூரன் விழா, கடிதங்கள்