மென்பொருள் பணியில் ஒரு சாதகம் என்றால் அவை நம்மை எப்பொழுதும் தேட வைத்துக்கொண்டே சிந்திக்க வைத்தபடியே இருக்கும், படித்து தெரிந்துக்கொண்டே இருக்க வேண்டும் காலப்போக்கில் அனுபவம் கைக்கூடினால் புரிதல் சுலபமாகிவிடும். மொழி ஒன்று தான் என்றாலும் வெளிப்படும் வடிவங்கள் செய்யுள், கவிதை, கதை, பாடல் என்று இருப்பதை வாசித்து பழக வேண்டியது போல.
ஆனால் இப்பணியின் பாதகமும் இதே தான் சிந்திக்க வைத்துகொண்டே இருப்பது அதன் விளைவு மன ஓட்டத்தை கட்டுபடுத்தும் கலை தெரியாமல் இருப்பது அதற்கு அடுத்த படி சிறிது சிறிதாக சேர்ந்து பெரிதாக மாறும் ஒவ்வாமை அதன் பின் விளைவுகள்!
இப்படியான மென்பொருள் அலுவல் சூழலில் நம்மை வயது அனுபவம் என்று பெரிதுபடுத்தாமல் தெரியாததை தெரிந்து கொள்வதில் ஒரு குழந்தை மனதோடு அணுகினோம் என்றால் அது தரும் புத்துணர்ச்சி நம்மை குதூகலம் அடைய செய்யும். இப்படியான முறையில் மன ஓட்டத்தையும் ஒழுங்குபடுத்த உதவும் காரணம் முன் முடிவுகளும், ஒவ்வாமையும், பிறர் கட்டாயத்திற்காகவும் இல்லாமல் ஒரு ஆர்வத்தோடும் குறுகுறுப்போடு அணுகுவதும் ஏற்றுக்கொள்வதும்.
வாசிப்பிலும் அது போல் தான் என்று தோன்றுகிறது, குரு ந்திய சைதன்ய யதி அவர்களின் ’சின்ன சின்ன ஞானங்கள்’ படித்த பிறகு குறைந்தது இரண்டு புத்தகங்களாவது படிக்க எடுத்துக் கொள்கிறேன். அதில் சில நேரங்களில் ‘டின் டின்’ காமிக் போன்ற புத்தகங்களும் உண்டு. இந்த முறை ஒரு ஆர்வத்தில் மகன் இராமிற்காக வாங்கி ‘பனிமனிதன்’ என் கையில் இருந்தது அதை எடுத்து கொண்டேன்.
முதலில் படிக்க படிக்க சில இடங்களில் அவதார் படத்தின் ஆவண தன்மை நினைவில் எழுவதை தவிர்க்க முடியவில்லை. பனிமனிதர்களின் ஒரே பொதுவான மனது, மிக உயரமான மரங்கள், அனைத்து உயிர்களுக்கு கால்களில் விரல்கள் இருப்பது அடர் வனத்தில் வாழ தக்க அமைப்பு, அங்கே இருக்கும் பறக்கும் வவ்வால் டாக்டர் திவாகருக்கும் பாண்டியனுக்கும் வாகனமாக இருப்பது என்று பல இடங்களில் பனிமனிதன் புத்தகத்தின் காட்சி வடிவமாக அவதார் முந்திக்கொண்டது. இந்த ஆவண தன்மைகளை பரிணாமக் கொள்கையின் கோணங்களாக எடுத்தக்கொண்டால் எத்தனை விதமான தனி நபர்கள் அல்ல குழுக்களின் கருத்தாக இருந்தாலும் அதில் தவிர்க்க முடியாத செய்திகள் ஒரே போல இருக்கிறது என்பது சிறப்பு – பொது மனம், தாவர உண்ணிகள், உயரமான மரங்கள், அதற்கு ஏற்ற உடல் அமைப்பு என்று பல. அவை தமிழிலும் ஒரு சுய படைப்பாக இருக்கிறது என்பதில் பெருமை. அவதார் திரைப்படத்தை பெருமை பேசினால் அந்த பேச்சில் இனி பனிமனிதனையும் பேசிவிடுவேன் என்பதில் எனக்கு ஒரு தனி மகிழ்ச்சி!
இந்த மகிழ்ச்சி தமிழில் ஒரு படைப்பு என்பதற்காக மட்டும் அல்ல, வணிக பார்வையை கடந்து, ஒரு கருத்தாக்கத்தில் அனுகினால் அவதாரில் ஒரு பேராசை அழிவை ஏற்படுத்துகிறது அதில் இருந்து மீட்பு என்று போகிறது. அதில் ஒரு பரிணாமத்தின் வளர்ச்சி அடைந்த மனிதர்கள் தான் தங்களையும் அவதார்களாடு இணைத்துக்கொண்டு பேராசை கொண்ட மனிதர்களிடம் இருந்து காப்பாற்றுவது என்று கதையாக்கப்பட்டிருக்கிறது. பரிணாமத்தின் வளர்ச்சி அடைந்தவர்கள் மனிதர்கள் அவர்களே மீட்பர்கள் அல்ல மனிதர்களாகவே இருந்து அதே கோணத்தில் பார்ப்பதால் மனிதர்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்ற காரணமாக இருக்கும். இப்படியான கட்டாயம் திரைப்பட வடிவத்திற்கு உண்டு.
ஆனால், அப்படி அல்லாமல் பனிமனிதனில் ஒரு சிறப்பு இங்கே தேடல், அடைதல், புரிதல் அதன் வழி வருங்காலத்தின் மீட்பாக நம்பிக்கை மார்க்கம் என்றும் அதனை அடைகாக்கும் ஒரு பீடபூமி என்று பரிணாமத்தின் கோணங்களையும், பரிணாமத்தின் வளர்ச்சி அடைந்த மனிதர்களின் கருமம் பலன் ஏன் எப்படி இருக்காலம் என்று சிந்திக்க வைக்கிறது. கோபுர கலசத்தில் இருக்கும் விதைகளாக எடுத்துரைக்கிறது. ஆகவே அவர்கள் உயர இருக்கட்டும்!
இதில் கூடுதலாக குழந்தைகள் முன்னேடுக்கும் கதையாக இல்லாத போதும் அவர்களுக்கான செய்திகளும் சிந்திக்க வைகின்ற அம்சங்களும் குறைவே இல்லாமல் இருக்கிறது. இன்று வளர்ந்து வரும் குழந்தைகள் மனிதர்களின் பரணாமத்தை புரிந்துகொள்வதற்கு உதவியாகவும் சிந்திக்க தூண்டும் புத்தகமாகவும் இருக்கும். மச்ச அவதாரத்தையும், கூர்ம அவதாரத்தையும், நோவாவையும், அறிவியல் ரீதியாகவும் அனுக உதவும். அவர்களுக்கு அதனை அறிமுகபடுத்தும் பொறுப்பு பெற்றோர்களுக்கு உண்டு, இன்று ஆன்மீகமும் அதன் வழி பொறுப்புகளும் கட்டுப்பாடுகளும் என்ற ஆரோக்கியமான வழிகளில் அறிமுகமாத சூழலில் இப்படியான சிந்திக்கும் முறைகள் கொண்ட புத்தகங்களை அறிமுக படுத்தவது கடமையுங்கூட!
பனிமனிதன் படித்த பொழுதுகளில் தோன்றியது குழந்தை தன்மைகளில் ஆர்வத்தையும் குறுகுறுப்பையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று. புதிதாக வேலையில் சேரும் நபர், புதிய தொழில்நுட்பம், புதிய யுக்திகள், புதிய மேன்படுத்தல் முறை, தொடரும் பழுநீக்கி தரவேண்டிய பிரச்சனைக்கு புதிய தீர்வாக என்ன செய்யலாம் என்று எப்படி எப்படியோ புதுமை ஒரு குழந்தையை போல வந்து கையசைத்து பயணத்தை உற்சாகபடுத்துகிறது. அனுபவம் அறிவு என்று அவசியமற்ற அளவீடுகள் கொண்டு புது வாசல்களை குறுக்கிகொள்வதை விட புதியன கொண்டுவருவதை பெற்றுக்கொள்ள திறந்த மனதுடன் இருந்தால் போதும்.
பனிமனிதனில் திவாகருடன் அவ்வளவு காலம் பொறுமையாக சேகரித்த செய்திகள் இருந்தாலும் அந்த குறுகுறுப்பு குறையாமல் பாண்டியன் கிம் வாயிலாக காலம் கனிந்த உடன் அவரது பயணத்தை தொடங்கியது. அங்கே வழியில் அவர்களது பேராசையை தூண்டும் இடங்களை கடந்து வர சிறுவன் கிம் காட்டும் குறிக்கோளிலிருந்து தடம் பிறழாமல் இருக்க உதவும் வழிகள் புதியன என்று கொள்ளலாம். பயணம் முடிந்து கிம் அடுத்த லாமாவாக அடையாளம் காணப்படுகிற காட்சி ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது செல்லும் வழியில் பார்த்த அதே கிம் செல்லும் போது இல்லாமல் வரும் போது லாமாவாக ஏற்கப்படுகிறார். தனது அம்மாவின் பற்றை விட்ட பிறகு முழு பற்றற்ற பிறகு!
பயணம் ஏதோ ஒன்றை பற்றி கொள்ளவும் ஏதோ ஒன்றின் மிதான பற்றை விடவும் அறிவுறுத்தியபடி இருக்கிறது, காசிக்கு போய் வரும் போது காயிலும் கனியிலும் ஒவ்வொன்றை விட்டுவட்டு வருவார்கள் அதன் தாத்பரியமும் இது தான் போலும்!
நித்தம் நித்தம் மாறும் என்றாலும் மாற்றம் ஒன்றே மாறாதது என்றாலும் அதனை புரிந்த துறையிலும் பணி செய்கையிலும் சில நேரங்களில் சலிப்பை தவிர்க்க முடிவதில்லை. இப்படியான சூழலில் ’பழைய கழிதலும் புதியன புகுதலும்’ என்று பழையன கடந்து மாறிக்கொண்டே இருந்தாலும் புதியன என்று ஒன்றை ஏற்பது தான் ஊந்து சக்தி! ஒரு சிறு குழந்தை வீட்டுக்குள்ளிருந்து ஓடி வந்த கையசைப்பது உற்சாகம் அளிக்கக்கூடியது நாம் அறிந்தோ அறியாமலோ உதட்டில் ஒரு புன்னகையை வரவழைப்பது. அதுவே இயக்கம்.
நாராயணன் மெய்யப்பன்
இருந்துகொண்டே இருப்பவர்கள்
ஒருமுறை பார்த்தவைபோல அல்ல
அதே இடங்களும்
அதே காட்சிகளும்
இன்னொருமுறை பார்க்கும்போது
எனினும் சலிப்பூட்டுகிறது
ஒரே வழி ரயில் பயணம்
நொடிநேரம் நிலைத்து மறுநொடி கலையும்
மலைகள் நதிகள் மரங்கள்
வயல்கள் வழிகள் வீடுகள்
சலிப்பூட்டுவதாகவே இருக்கும் எல்லாம்
இருப்புப் பாதைக்கு அருகில்
ஏதாவது ஒரு வீட்டுக்குள்ளிருந்து
அவசரமாக ஓடிவந்து
சின்னக் குழந்தை கையசைக்கும்வரை
பயணத்தின் பாக்கியம்
நேற்றும் இன்றும் நாளையும்
கையசைத்து வழியனுப்ப
இருந்துகொண்டேயிருக்கிறார்கள்
சின்னக் குழந்தைகள்
– சுகுமாரன்