முதல்நெருப்பின் நடனம்

முதற்கனல் வாங்க

முதற்கனல் மின்னூல் வாங்க

அன்புள்ள ஜெ,

வணக்கம், நீங்கள் நலமா?

வெண்முரசின் அசுர அளவினால் புத்தகத்தை படிப்பதற்கு ஒரு தயக்கம் இருந்து கொண்டே இருந்தது. சென்ற வாரம் பத்மவியூகம் புத்தகத்தில் உள்ள  “காட்சி” நாடகத்தில், பீஷ்மருக்கும் அம்பைக்கும் நடக்கும் விவாதத்தை படித்தவுடன், வெண்முரசு என்னை ஆட்கொண்டது.

முதற்கனல் படித்து முடித்து விட்டேன் ஆனால் மீள முடியவில்லை. ஒரு கனவுலகில் சஞ்சரிப்பது போன்று தோன்றுகிறது, மிக ஆழமான கதை நாயகர்கள் மற்றும் நாயகிகள், ஒவ்வொருவரும் மனதில் நீங்கா இடம் பிடிக்கிறார்கள். தனது குலத்தை பலப்படுத்துவதர்க்காக கங்கர்களின் கங்கையை அடைந்த சாந்தனு, அரச லஷனங்கள் அனைத்தும் பொருந்திய தனது  மகனை அரசனாக்க முடியாமல் தனது காமத்திற்கு பலி கொடுப்பதும். தன் குலம் பலம் பெறவேண்டும் என நினைத்த சத்தியவதி பலசாலியான சித்திராங்கதனை இழந்து, நோயில் வருந்தும் விசித்திரவீரியனை இல்லறத்தில் கட்டாயப்ப் படுத்தி பலி கொடுப்பதும் தெரிந்த கதை என்றாலும் படிக்கும் போது எழுந்த கேள்விகள் ஏராளம்.

முதற்கனலில் அம்பை என் மனதை முற்றிலும் கொள்ளை கொண்டுவிட்டாள். அகங்காரத்தின் உச்சியில், கம்பீரமான நெருப்பாக சுயம்வர மேடையில் இருந்த அவள் தன் வாழ்க்கை எங்கே மாறியது என்று எண்ணவே இல்லை. பீஷ்மரின் வரவாலா அல்லது சால்வனைப் போன்ற ஒருவனை மனதில் வரித்ததினாலா என்ற கேள்விக்கு “கங்கை மீது ஆணையாகச் சொல்கிறேன்… நான் சால்வனின் குழந்தைகளை மட்டுமே பெற்றெடுப்பேன். வேறு எக்குழந்தை என் வயிற்றில் பிறந்தாலும் இந்த கங்கை நீரில் அவற்றை மூழ்கடிப்பேன்.” என எப்போது சொன்னாளோ அப்பொழுது அவள் வாழ்க்கை மாறியதாக படுகிறது. அம்பைகும் பீஷ்மருக்கும் ஒருவரை ஒருவர் காயபடுத்த நன்றாகவே தெரிந்திருக்கிறது. “உலகம் மீது வன்மம் கொண்டவர்கள் அவர்களுக்கு நெருக்கமானவர்களையே வதைப்பார்கள்” என்ற வரிகள் இருவருக்கும் பொருந்தும். சால்வனால்  கைவிடப்பட்டு, தந்தையால் புறக்கணிக்கப்பட்டு, பீஷ்மரின் மேலுள்ள காதலை உணர்ந்து திரும்புகையில் மீண்டும் அவள் மனதில் எத்தனை நம்பிக்கை இருந்திருக்கும். பீஷ்மருகும் அம்பைக்கும் நடக்கும் விவாதம் மிக நுணுக்கமானது, பலமுறை படித்தும் மீண்டும் படிக்கத் தூண்டும் கதைக்களம். தஞ்சம் புகுந்த எவர்க்கும் அடைக்களம் அளிப்பதே ஷ்த்திரியனின் அறம் என வியாசன் சொன்னது மனதில் தோன்றியது.

விசித்திரவீரியன் ஒரு வகையில் ஏழாம் உலகத்தின் உருப்படிகளை நியாபகப் படுத்தினான், நோயில் உலன்றாலும், அனைவரையும் நன்றாக அறிந்து கொள்ளும் ஆற்றல் கொண்டவனாக இருக்கிறான். அவனுக்கும் ஸ்தானகர்க்குமான உரையாடல் உணர்ச்சிகரமான நேரத்திலும் புன்னகை வரவைப்பதாக இருந்தது. அப்படிப்பட்ட நோயாளியை விரும்பும் ஒரு பெண்ணாக அம்பிகை. அந்த துளி போன்ற கல்லுடனான ஆபரணம் கூட ஒரு கதாபாத்திரம் போல தோன்றியது. அம்பாலிகை ஒரு சிறு பெண்ணாகவே புத்தகம் முழுதும் தோன்றினாள், ஆனால் கடைசியில் “அக்கா அவருடைய பலத்தை எல்லாம் எடுத்தும் கொண்டால் அவரிடம் இருந்த நோய் எங்கே செல்லும், அதை நான் எடுத்துக் கொள்கிறேன்” என சொல்லும் போது எப்பொழுது அம்பாலிகை வளர்ந்தால் என்ற கேள்வி எழுந்தது.

அம்பை ஒரு வகையில் உறுதியை வெளிப்படுத்தினால் சத்தியவதி தன் இச்சைகளை நிறைவேற்றும் உத்தி தெரிந்தவளாகவே இருக்கிறாள். “நீங்கள் காற்றை சற்று வீச சொல்லலாம்” என விசித்திரவீரியன் சொல்லும் பொழுது ஒரே வரியில் சத்தியவதியை அனைவருக்கும் அறிமுகம் செய்து விட்டீர்கள். எத்தனை தடை வந்தாலும் அனைத்தையும் உடைத்து முன் நகரும் உத்வேகம் மட்டுமே எனக்கு சத்தியவதியிடம் தெரிந்தது. சாந்தனு, விசித்திரவீரியன் , பீஷ்மன், வியாசன், அம்பிகை என அனைவரும் மறு வார்த்தை இன்றி சத்தியவதியை பணிவது என்ன மாயம் என்று தோன்றியது.

பீஷ்மர், எனக்கு மிகவும் பிடித்த கதைமாந்தர் அவரது மனக்குழப்பங்களும் அறம் பற்றிய கேள்விகளும் சிந்திக்கவே வைத்தன. அம்பையை அவர் மறுப்பார் என தெரிந்த்தும் அம்பையை ஏற்றுக் கொண்டிருந்தால் ஒரு வேலை அனைத்தும் மாறி இருக்குமோ என்ற கேள்வியை மனதில் இருந்து அகற்ற முடியவில்லை. சூதனின் பாடலில் பகடியாக கூறியது  போல “பீஷ்மர் அவர் உருவாக்கும் ஆபத்திலிருந்து அஸ்தினாபுரியை காப்பாற்றுவதில் ஈடுபட்டிருப்பதாக சொன்னது எவ்வளவு உண்மை.  வியாசனின் குடிலுக்கு அருகில் இருந்த சித் ரகர்ணி பீஷ்மரின் மறு உருவாக  தோன்றியது. பீஷ்மர் அடியில் யயாதியை கண்டது முதலில் குழப்பமாக இருந்தாலும் எவ்வளவு பொருத்தமான ஒப்பு நோக்குதல். இருவரும் காமத்தின் நோயால் வாழ்கையை இழந்தவர்கள் தான். சிகண்டி அம்பையின் மறு உருவம் என தெரிந்தே தனுர் வித்தையை கற்றுக் கொடுப்பது மனம் நெகிழவைத்தது.

சிகண்டி, மனதை பறித்துக் கொண்ட இன்னுமொரு பாத்திரம். பீஷ்மரில் பாதி அம்பையில் பாதி. பீஷ்மர் தந்தைக்கு கொடுத்த வாக்கிற்காக வாழ்க்கையை துறந்தார், சிகண்டி அன்னைக்கு கொடுத்த வாக்கிற்காக வாழ்க்கையை துறந்தான். அம்பையை போன்று அசைக்க முடியாத உறுதி கொண்டு அக்னிவேசரின் மாணவனாவதும், பீஷ்மனை வென்ற பால்ஹிகனை சென்று சந்திப்பதும், அடியில் பீஷ்மனை காண்பதும் அம்பையின் உறுதியையே கண் முன் கொண்டுவருகிறது. சிகண்டினி சிகண்டி ஆக மாறுவதும் ஒரு வேள்வியே. கதை முழுதும் வரும் வராகி அம்மன் பயத்தையும் பக்தியையும் ஒருங்கே வரவழத்தாள்.

தொன்மங்கள்  ஒவ்வொன்றும் மனதில் நின்றன, மொழி அழகு மனதை மயக்கியது, ஆங்காங்கே இருக்கும் தத்துவம் சார்ந்த இடங்கள் நுண் வாசிப்பின் அவசியத்தை உணர்த்தியது. “ஆதியிலிருந்தது ஒன்றே. முதல்முடிவற்ற, இதுஅதுவற்ற, முதலியற்கை. அது பிளவற்ற காலத்தில் இருந்தது. அதில் முதல் எண்ணமெனும் மஹத் உருவானது. அது இருப்பு எனும் அகங்காரமாகியது. அகங்காரம் முக்குணங்களாக மாறி அவை ஒன்றுடன் ஒன்று முரண்பட்டன. பிரபஞ்சப்பேரியக்கம் தொடங்கியது” என்ற சாங்கிய அறிமுகமும்; அம்பை, அம்பிகை மற்றும் அம்பாலிகையை ரஜோ,  தமோ, சத்வ குணமுள்ளவர்களாக விவரிப்பதும்; திரிராஷ்டிரன், பாண்டு, விதுரனை கரு நிலவு, தேய் நிலவு, முழு நிலவு என உறுவகிப்பதும் இன்னும் படிக்கவேண்டும் என்ற ஆவலையே ஏற்படுத்துகிறது. நாக வழியாக மகாபாரதத்தை சொல்வது சாங்கியத்தில் தத்துவ அறிமுகத்தை தொடங்குவதற்கு என்றே தோன்றுகிறது. “காது மட்டும்தான் உழைப்பில்லாமல் பணியாற்றும் உறுப்பு ஸ்தானகரே, அதனால் தான்  இச்சாசக்தியான நாகங்களுக்கு காதுகள் இல்லை போலும்” மனதில் நின்ற கணக்கில்லா வரிகளில் இதுவும் ஒன்று.

முதற்கனல் ஆரம்பித்தது அம்பையிலா? எனக்கென்னவோ சுனந்தையில் தான் எனப்படுகிறது.

எவ்வளவு எழுதினாலும் விடுபட்டவை கணக்கில் அடங்காது என்ற எண்ணமே மேலோங்குகிறது. மழைப்பாடல் ஆரம்பித்திருக்கிறேன், இந்த காவியத்தை அளித்தமைக்கு நன்றி ஆசானே.

புவனேஷ்வரி

பெங்களூர்

அன்புள்ள புவனேஸ்வரி,

மகிழ்ச்சி. முதற்கனல் படிக்க ஆரம்பிப்பது ஓர் அரிய தொடக்கம். அது ஒரு தீவிர மனநிலையை தொடங்கி வைக்கிறது. ஓராண்டுக்காவது நீடிக்கும் ஒரு வாசிப்பை நிகழ்த்துகிறது அம்மனநிலை. நான் எழுதும்போது அப்படித்தான் இருந்தேன். ஆனால் இன்று நான் திரும்ப அந்த உச்சநிலைக்குச் செல்லமுடியாது.

ஜெ

முந்தைய கட்டுரைஉங்கள் உடலை அறிதல்- ஆயுர்வேத அறிமுக முகாம்
அடுத்த கட்டுரைஅல் கிஸா- இஸ்லாம்- விளக்கம்