யோகம், கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

ஜூலை மாத யோகா முகாமில் கலந்துகொண்டேன். அந்த அனுபவத்தைப் பகிரவே இந்தக் கடிதம்.

ஓர் ஆசிரியர் அருகாமையில் இருந்து கற்பது – ஆசனங்கள் & சுவாசப் பயிற்சிகளை அறிந்துக் கொள்வது மட்டுமல்ல. கற்கும் கல்வியின் தத்துவ பின்னணி என்ன, முறையாக கற்பதன் விளைவுகள் என்னென்ன ஆகியவையும் அதில் அடங்கும் என்பதை யோகா பயிற்சி முகாமில் கலந்து கொண்டதன் மூலம் தெரிந்து கொண்டேன்.

பயிற்சி முடிந்த பிறகு, ‘இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்’ புத்தகத்தில் இருந்து யோகம் பற்றிய பகுதிகளை வாசித்தேன். யோகி என்பவன் தன்னை அறிபவன். கர்மயோகி தன்னை அறிந்து வாழ்வை திறம்பட கையாள்பவன் என்று அறிமுகப்படுத்துகிறது.

நம்மை அறிந்து கொள்வது என்பது நம் எண்ணங்களை கூர்ந்து நோக்குவது தான். அதே எண்ணங்கள் தான் அந்த அறிதலுக்கு தடையாகவும் அமைகின்றன. எண்ணங்கள் நம்மை நம் சூழலை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்று குருஜி விளக்கினார். யோகத்தின் ஆரம்ப நோக்கம் எண்ணங்களை கட்டுப்படுத்துவது அல்ல. மாறாக எண்ணங்களை கவனிப்பது என்றார்.

முகாமில் கற்றுக் கொடுக்கப்பட்ட ஆரம்ப நிலை தியான‌ப் பயிற்சிகளில் ஒன்றான ‘அந்தர் மௌனா’ – நம் உடலை கவனிப்பதில் ஆரம்பித்து சுவாசத்தைக் கவனிப்பதின் வழியாக எண்ணங்களை கவனிக்கப் பயிற்றுவிக்கிறது. கவனிக்க ஆரம்பித்த உடனேயே எண்ணங்கள் எங்கோ சென்று ஒளிந்து கொள்கின்றன. மனதில் காரணமே இல்லாமல் தோன்றும் ஒரு எண்ணம் – நாள் முழுவதும் நம்மை எண்ணங்களின் சுழற்சியிலேயே வைத்திருக்கிறது. யோகப் பயிற்சிகளின் விளைவுகளில் ஒன்று- அச்சுழற்ச்சியில் இருந்து சிறிது நேரம் விலகி நம் முழு கவனத்தையும் செயல்களில் குவிக்க உதவுவது. முன் எப்போதையும் விட, இந்த கவன குவிப்பு என் அலுவலகப் பணிகளில் இப்பொழுது தேவையாகிறது.

வகுப்பின் போது கற்றுக் கொடுக்கப்பட்டப் பத்து ஆசனங்கள் எவ்வாறு நாம் உடல் நலனையும் நம் மன நலனையும் மேம்படுத்த உதவுகிறது என்பதன் விளக்கங்கள் மிக துல்லியமாகவும் தெளிவாகவும் இருந்தன. ஆசனங்களின் முக்கியத்துவத்தை விளக்கும் தோறும் நவீன உடலியல் மற்றும் ஆயுர்வேதம் அதை எவ்வாறு அணுகுகிறது என்பதையும் குருஜி தெரிவித்தார்.

நடைபெற்ற அமர்வுகளில் என் விருப்பத்திற்குரிய அமர்வு உடலின் ஐவகை ஆற்றல்களின் அம்சங்கள் பற்றியது. யோகமும் ஆயுர்வேதமும் நல்வாழ்வுக்கு இந்த ஆற்றல்களின் சமநிலையை அங்கீகரிக்கின்றன. வழிமுறைகளில் மாற்றங்கள் இருந்தாலும் – குறிக்கோளில் எவ்வித மாற்றமும் இல்லை. பிராணன், அபானன், சமானன், உதானன் & வியானன் இதுவே ஐவகை ஆற்றல்கள் என்றும், யோகம் இதில் எவ்வாறு பங்காற்றுகிறது என்றும் குருஜி அவ்வமர்வில் கற்றுக் கொடுத்தார். மரபார்ந்த யோகப் பயிற்சிகளில் ஏன் பங்கு பெற வேண்டும் என்பதற்கான பதில் இது. யோகம் குறித்த முழுமையான அணுகுமுறை மரபார்ந்த பயிற்சிகளில் மட்டுமே உள்ளது.

இந்திய யோகப் பரம்பரை பற்றிய அமர்வு, சுவாமி சிவானந்த சரஸ்வதி பள்ளி, கைவல்யதாமா பூனே, மைசூரு யோகா பள்ளி, பீகார் யோகா பள்ளி முதலிய பரம்பரைகளின் அறிமுகத்தையும் முக்கியத்துவத்தையும் உணர்த்தியது. அமர்வின் இறுதியில் யோகம் சார்ந்து வாசித்து அறிய சில புத்தகங்களையும் குருஜி பரிந்துரைத்திருக்கிறார்.

புத்தகங்களை வாசிக்கும் முன் ‘சாதகன்’ ஆவதே குறிக்கோள். சாதகன் எனும் சொல்லை மாணவன், பயிற்சி பெறுபவன் என்னும் அர்த்தத்தில் பயன்படுத்துகிறேன்.

வாய்ப்பை வழங்கிய உங்களுக்கும் குருஜிக்கும் வணக்கங்கள்.

நன்றி

பலராம கிருஷ்ணன்.

முந்தைய கட்டுரைபாலஸ்தீன் வாழ்வுரிமை
அடுத்த கட்டுரைகுள்ளச்சித்தன் – சதீஷ்குமார்