திரிபுகளின் பெருநிலம்

வண்ணக்கடல் மின்னூல் வாங்க

வண்ணக்கடல் செம்பதிப்பு வாங்க

அன்புள்ள ஜெ,

வண்ணக்கடல் வாசித்து முடித்தேன். தொல்மதுரை மூதூரிலிருந்து அஸ்தினாபுரம் நோக்கிய இளநாகனின் பயணம் வழியே  கிடைத்தது  ஒரு பேரனுபவம் .வண்ணக்கடல் வாசிப்பனுபவத்தை முழுவதுமாக தொகுத்துக் கொள்ள நினைக்கையில் மனதில் பெரிதாக நின்றவை  ஒரு மனித மனம் தன் தூய குழந்தைமையில் இருந்து மெல்ல  விடுபட்டு படிப்படியாக இவ்வுலக இன்ப  துன்பங்களுங்கு ஆட்பட்டு தன்னை நிரூபிப்பதற்காக ஆணவத்தால் அது அடையும் அலைக்கழிப்புகளின் ஆழம் எத்தகையது என்று உணர முடிந்தது.

காட்டிலிருந்து அஸ்தினாபுர அரண்மனைக்குத் திரும்பும் பாண்டவர்களை திருதிராஷ்டிரன் பேரன்புடன்  வரவேற்ற விதத்தில் தன் தம்பி பாண்டு மீது கொண்டிருந்த தூய பாசமே அவனது ஒவ்வொரு உடலசைவிலும் வெளிப்பட்டது.பீமனை எதிர்கொள்ளும்போது அவனை  ஆரத்தழுவி திருதிராஷ்டிரன் அடைந்த உணர்வெழுச்சி நெகிழ்வை ஏற்படுத்தியது.முதன்முறையாக  சிறுவர்களாக பாண்டவர்களும் கௌரவர்களும் சந்தித்த கணத்தில்  ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாறிக் கொண்ட  விதமும், சேர்ந்து இன்புற்று மகிழ்ந்து விளையாடிய தருணங்களையும் எண்ணிப் பார்க்கையில் இவர்களுக்கிடையிலா என்றும் நீங்கா ரணம் கொண்ட  அந்த மாபெரும் யுத்தம் நிகழப்போகிறது என்ற கேள்வியும் சஞ்சலமுமாக மனம் கனத்தது.

பிறிதொருவர் புகமுடியாத தனியுலகில் தோள்தழுவி அகம்தழுவி ஆடிபிம்பங்களைப் போல்  சுற்றித் திரிந்த பீமன் துரியோதனனிடத்தில்  பின் எது அத்தகைய பெரும் பிளவை ஏற்படுத்தியது?!”உன்னை ஒரு கலமென உணர்கிறேன் தம்பி.என் ஆன்மாவை முற்றிலும் உன்னில் செய்துவிட விழைகிறேன்’ என்று பீமனை உணர்ந்த துரியோதனனிடத்தில் ,’நீ என் முதல் தம்பி.எவருக்காகவேனும் உயிர் கொடுப்பேனென்றால் அது உனக்காக’ என்று பீமனிடம் உரைத்த அதே துரியோதனன் தான் பயிற்சி முடிந்து இறுதியான களவிழாவில்  ஒருவேளை பீமனை தான்  எதிர்கொள்ள நேர்ந்தால் பீமனைக் கொன்றாவது தன் ஆற்றலை நிரூபிக்க ஆயத்தமாகியிருந்தான்.பாலர்பருவ குருகுல கல்வி முடிந்து சிறுவர்களாக கௌரவர்களும் பாண்டவர்களும்  முதன்முறையாக  பீஷ்மர் முன்னாள் தாங்கள் கற்றவைகளை அரங்கேற்றி காட்டிக்கொண்டிருந்த போது அர்ஜுனனின் வில் வித்தைகளை கண்டு பரவசப்பட்டு அவனை  ஆனந்தத்தில் தூக்கி சுழற்றி அன்னையரிடம் இன்றைக்கு அர்ஜுனனுக்கு சுத்திப் போட சொல்ல வேண்டுமென்று பூரித்த அதே துரியோதனன்  தான் இறுதியான களப்பயிற்சி விழாவில் அர்ஜுனனிற்கு நிகராக அவனை எதிர்த்து வில்லேந்திய கர்ணனனை தன் உற்ற நண்பனாக ஏற்று அர்ஜுனனின் ஆணவத்தை சீண்டிப் பார்க்கும் துரியோதனனுமானான்.

இந்த இரண்டு மன நிலைப்பாடுகளுக்கும்  இடையே நிகழ்ந்தது என்ன என்பதை புரிந்து கொள்ள முயன்றேன் . ஒன்று தன்னை, தன் ஆற்றலை நிரூபிக்கும் ஆணவம், இரண்டாவது அஸ்தினபுரியின் அரியணையை கைப்பற்றும் ஆட்சி மீதான ஆசை.அது பீமனையும் துரியோதனனையும்  குரோதத்தில், பாண்டவர்களையும்  கௌரவர்களையும்  பகையில் நிறுத்துகிறது  . காம குரோத மோகங்களை எளிய மானுட மனங்களால் வெல்ல முடிவதில்லை தான் . பிரியங்களும் அன்பின் அலாவல்களும் நிரம்பிக்  கிடந்த  சகோதரர்களுக்கிடையே வஞ்சங்களும் சூழ்ச்சிகளும் குடியேறத் துவங்கியது . சூழ்ச்சியென்றால் பீமனை கௌரவ சகோதரர்கள்  விஷம் வைத்து கொல்ல முனையும் உச்சம் வரை.பாசத்தில் மட்டுமே உறைந்து கிடந்து பின்பு   வளர வளர  அந்த தூய குழந்தைமையிலிருந்து விடுபட்டு சுயநலம், போட்டி பொறாமைகளில்  சிக்கி  உழலும் மானுட மனத்தின் தவிப்புகளை பாரதத்தின் வழியாக வெண்முரசின் வழியாக புரிந்து கொள்ள முடிகிறது.

சகோதரர்களுக்கிடையில் மட்டுமல்ல துரோணரிடம் மாணவர்களாக பயிலும் அர்ஜுனன், கர்ணன், அஸ்வத்தாமன்,ஏகலைவன் என்று அவர்களிடம்   இருப்பதும் யார் வில்வித்தையில் தேர்ந்தவர்கள் என்று தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தி எவர் அவர்களில் முதன்மையான மாணவன்  என்று தன்னை நிரூபிக்கும் ஆணவநிலை தான்.உலகியலில் மனித உயிர்கள் ஏதேனும் ஒரு வகையில் தன்னை நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயமும், தான் என்ற நினைப்பும் இல்லாமல் வாழ முடிவதில்லை .தன்னை நிரூபிப்பதற்கு அவரவர் சூழ்நிலையில் எல்லோருக்கும் நியாயமான  காரணங்களும் இருக்கின்றன.அர்ஜுனனுக்கு ஷத்ரியனாக தன்னை நிரூபித்தாக வேண்டும்.ஏகலைவனுக்கு ஒரு மாணவனாக தீராத் தேடலும் கற்றலுமான  காரணங்கள். அஸ்வத்தாமனுக்கு சிறு வயதில் பயிற்சிகளை கற்கும் வலுப்பெற   குதிரைப்பால் கூட பருகக் கிடைக்காமல் வளர்ந்தவன் தன் தந்தை வழியாக அத்தனையும் அடைய ஆசைப்படுகிறான். கர்ணனுக்கு  சூதர்மகனென்று தான் பட்ட அவமானங்களுக்கெல்லாம்  பதில் சொல்லியாக வேண்டியிருக்கிறது. கிட்டத்தட்ட துரோணரும் ஒரு வகையில் கர்ணன் அடைந்த அவமானத்திற்கு நிகரான வலியை அவரும்  அனுபவித்தவர் தானே. ஷத்ரியனாகவும் பிராமணனாகவும் தான் இருக்கும் நிலைப்பாட்டிற்கு நடுவில் தன்னை நிரூபிப்பதற்காக அவர் பட்ட அவமானங்கள் தான் எத்தனை?.

‘காலமே காற்றாகி வந்து வீசி எழுப்பிக்கொண்டிருக்கும் கனல் போன்ற பெருந்துயர் அவமதிப்பே’ என்ற வண்ணக்கடலின்  வரிகளின் வலியை தான் கர்ணனின் உள்ளமும்  துரோணரின் உள்ளமும் சுமந்திருக்கக்கூடும்  .தான் இழந்த யாவையும் தன் மகன் அஸ்வத்தாமனுக்கு கிடைக்கும்படி செய்யும் தீர்க்கமும் வைராக்கியமுமே ஏகலைவனிடம் கட்டைவிரலை குருதட்சணையாய் பெரும் எல்லை வரை துரோணரை செலுத்தியது. கர்ணனும், ஏகலைவனும் அவரவர் வில்வல்லமையில் துரோணரின் முதல் மாணவர்களாக இருக்க திறமையிருந்தும் தகுதி, குலம் காரணமாக நிராகரித்து அவ்விருவரையும் அவமதிக்க நேர்ந்த தருணங்களில் எல்லாம் துரோணரின் மனநிலை எத்தனை கலக்கமுற்றிருக்கும் என்று தோன்றியது. ஏகலைவனிடம் குருதட்சணை பெற்று நீங்கும் கணத்தில்  அவன் தாய் தீச்சொல்லிட்டு கழுத்தறுத்து மாண்ட சமயத்தில் துரோணரின்  உள்ளம் எத்தனை பதற்றமும் துணுக்குரலும் அடைந்திருக்கும் என்று எண்ணிக் கொண்டேன் .துரோணர் வழி திரும்பும்போது அவர் கண்களில் இருந்து நீர்வழிந்து காதுகளை நிறைத்துக் கொண்டேயிருந்தாக சொல்லப்பட்டிருக்கும் . அந்த அத்தியாயத்தை வாசித்த போதும்   கண்களில் கண்ணீர் இல்லாமல் வாசிக்கமுடியவில்லை தான்.கர்ணன், ஏகலைவன், துரோணர்  என்று எல்லோரையும் ஒருசேர  நினைத்து மனம் கனக்கவே செய்தது. ஊழ் எத்தனை வலியது என்று நினைத்துக் கொண்டேன்.

வெண்முரசின் பயணத்தில் வாசிக்கையில்  மிகவும் ரசித்து,மனதில் நின்று தங்கிவிடுபவை இதில் கையாளப்பட்ட உவமைகள்.அப்படி  துரோணர் குசையிடம் முறையிட்டு அழும் காட்சியை வர்ணிக்கையில் ‘நாணலில் அருவி விழுந்தது போல் அவர்மேல் அழுகை நிகழ்ந்தது’ என்ற உவமை தான் எத்தனை அழகு!

வண்ணக்கடலின் வாசிப்பில் மிகவும் அணுக்கமாக உணர்ந்தவை அர்ஜுனனுக்கும், ஏகலைவனுக்கும் துரோணர் மீதான அந்த குருபக்தி.துரோணர் அர்ஜுனனுக்கு கற்றுக்கொடுக்கையில் கற்பித்தல் மட்டுமே இருந்தது ,அங்கு துரோணர் இல்லை. அர்ஜுனன் கற்றுக்கொள்ளும் போது அங்கு அறிதல் மட்டுமே இருந்தது, அர்ஜுனன் இல்லை. எத்தகைய பெரும்பேறு இத்தகைய கல்வி என்று நினைத்துக்கொண்டேன்.ஏகலைவனின் கதையை சிறுவயதில் இருந்து எத்தனையோ முறை கேட்டு  அறிந்திருந்தாலும் வண்ணக்கடலில் ஏகலைவனை உணர்ந்து அவனது கற்றுக்கொள்ளும் வேட்கை, அதற்கான பயணம், ஆசிரியர் மீதான குருபக்தி என எல்லாம் சேர்ந்து மனதிற்கு மிக நெருக்கமான   ஒரு ஏகலைவனை உணர்ந்தேன்.”தங்களை பிரியலாகாதென்பதற்காக நான் ஒவ்வொரு கணமும் நதிக்கரையிலே வாழ்ந்தேன்.தங்கள் விழிதொடும் தொலைவுக்கு அப்பால், தங்கள் மொழிதொடும் தொலைவுக்கப்பால் நான் ஒருமுறை கூட விலகிச்செல்லவில்லை ” என்று துரோணரிடம் சொல்லும் ஏகலைவன் அகத்திற்கு மிகவும் அணுக்கமாகிவிடுகிறான் . “இது பயின்று வரும் கலையல்ல.சிலருக்கு கலையை தெய்வங்கள் கையில்கொடுத்து மண்ணுக்கு அனுப்புகின்றன ” என்று ஏகலைவனை பற்றி விவரிக்கும் வரிகளை வாசித்த போது மண்ணில் சாத்தியமாக்கப்பட்ட மாபெரும் கலைகள் பலவும் அப்படிவொரு தெய்வ சங்கல்பத்தின் , ஆசிர்வாதத்தாலேயே நிகழ்ந்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

வெண்முரசிலிருந்து பிரிக்கமுடியாதவர்கள் இதில் வரும் அன்னையர்கள். முதற்கனலின் சத்தியவதி, மழைப்பாடலின் குந்தி என்று அன்னையர்கள் ஒவ்வொருவரிடமும் அவர்களுக்கு மட்டுமே உரித்தான ஒரு தனித்துவமும் தீர்க்கமும் இருக்கும். அந்த குணத்துடன் என்றுமே மனதில் நிற்பவர்கள் அவர்கள். அப்படி வண்ணக்கடலில் அணுக்கமாகிப்போன அன்னை கர்ணனின் வளர்ப்புத்தாய் ராதை.கர்ணனை இதுவரையில் அவளைக் காட்டிலும் வேறு எவர் அத்தனை புரிந்து வைத்திருக்க முடியும்?எப்போதும் ஒரு விலகலும் சிடு சிடு உணர்வுடனும் சுற்றித்திரியும் ராதையை அவள் அதுமட்டுமானவள்  அல்ல என்பதையும் , அதைத் தாண்டிய ராதையையும் கர்ணனையன்றி  வேறு யார்  அறிவார்?  சராசரி இயல்புகளின் கவசத்திற்குள் ஒரு பெரும்   சக்தியாக தங்களை ஒளித்து வைத்திருக்கும் அத்தனை மானுட அன்னையர்களையும்  பிரதிபலிப்பவளாக  ராதை எனக்குத் தெரிந்தாள்.

வண்ணக்கடலின் வாசிப்பில் இரண்டு பெரும் பயணங்கள் நிகழ்கின்றன.ஒன்று, இளநாகனின் கண்கள் வழியே, அவன் கால்கள் நடந்து சென்ற திசையில் அவனுக்கு கிடைத்த அனுபவங்கள் வாயிலாக வேறு வேறு நிலங்கள்,மாறுபட்ட மனிதர்கள், சூதர் பாடல்களின்  கதைகளின் வழியே வரலாறு, பண்பாடு சார்ந்த ஒரு புறப்பயணம். இரண்டாவதாக, பாரதத்தின் களமான  அஸ்தினாபுரமும் , அம்மண்ணின் மனிதர்களும், கிளைக்கதைகளாய் கேட்டு பதிந்த யாவும் சேர்ந்து உள்ளுக்குள் ஒரு விதையென தங்கி வெண்முரசின் மொத்த பயணத்தின் ஒவ்வொரு படிநிலைகளிலும்  அவ்விதை ஒரு பெரும் வாழ்வனுபவமாக பதிந்து, சிந்தனையாக மலர்ந்து கொண்டே இருக்கும் ஒரு அகப்பயணத்திற்கான தொடக்கமும் வண்ணக்கடலில் நிகழ்கிறது.நாடோடித்தனமும்,தூரமறியா பாதைகளின் திசைதெரியாத பயணங்களின் வழியே கண்கள்  விரிய காட்சிகளையும் சித்தம் நிறைய அனுபவங்களையும் சேர்த்துக் கொண்டு தனக்கான  தேடல்களோடும், விடைகளை கண்டடையும் தீர்க்கத்தோடும் பயணிக்கும்  வண்ணக்கடலில் வரும் இளநாகன் நம்மைத் தான் பிரதிபலிக்கிறான் என்று தோன்றியது.நம் ஒவ்வொருக்குள்ளும் அப்படி ஒரு இளநாகன் இருக்கிறான் தானே. ஒவ்வொரு நிலம் தாண்டி அவனது பயணம் முடியும் தோறும், ஆரம்பித்த இடத்தில் இருந்த அதே இளநாகன் அவனில்லை. பயணங்கள் கொடுப்பது அதைத்தான்.வெண்முரசின் பயணமும் கூட கிட்டத்தட்ட அப்படித்தான் என்று தோன்றுகிறது.ஒவ்வொரு நாவல் வாசிப்பின் முடிவிலும் பிறிதெதுவிலும் கிடைக்காத ஏதோ பெரியவொன்றை அகத்தில் ஏந்திக்கொண்டு நகரும் பயணம் வெண்முரசு.

‘இப்பிரபஞ்ச வெளியில் உண்மையில் வினாக்களே இல்லை, ஒற்றைப்பெரும் விடை மட்டுமே உள்ளது’ என்ற வண்ணக்கடலின் வரிகளைப் போலவே வெண்முரசின் வாசிப்பு பயணம்  இந்த உலகியலுக்கு அப்பாற்பட்டு சிந்திக்க வைத்து பிரபஞ்சம், இயற்கை, தத்துவம், ஆன்மீகம் சார்ந்து எல்லாவற்றிற்கும் விடைகளை கொடுத்துக்கொண்டிருக்கின்றன.அந்த விடைகளுக்காக ஆசிரியருக்கு மனமார்ந்த நன்றி.அடுத்து நீலத்தை துவங்கவிருக்கிறேன்.

பணிவன்புடன்,
இந்துமதி.

அன்புள்ள இந்துமதி

பாலை என ஒரு நிலம் இல்லை. பிற நிலங்கள் திரிபடைந்தே பாலை உருவாகிறது. வெறுப்பு, பகைமை, வஞ்சம் எல்லாமே திரிபுநிலைகள்தான். துயரும்கூட.

ஜெ
வண்ணக்கடல் அனைத்து கட்டுரைகளும்
இளமையின் கடல் -கடிதம்
வண்ணக்கடல் பயணம்
பெருகும் வண்ணங்களின் நிலம்
கடல்வண்ணம்
வண்ணக்கடல் -பிரவீன்குமார்
வண்ணக்கடல் வாசிப்பு- முனைவர் ப.சரவணன்
முந்தைய கட்டுரைகுருதியும் வெற்றியும்
அடுத்த கட்டுரைதூரன் விருது, கடிதங்கள்