2023 ,கோடை

July 2023 nailed an unfortunate world record: hottest month ever recorded

இனிய ஜெயம்

தனது கிட்டத்தட்ட அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு நூலில் ( மஞ்சுள் பப்ளிகேஷன் ) பில் ப்ரைசன், சூரியனில் இருந்து துண்டுபட்டு புவி எனும் கொள், எத்தனை எத்தனை துல்லிய கணக்குகள் வழியே இன்றிருக்கும் நிலையை அடைந்தது, அதில் மிக மிக தற்செயலாக முதல் உயிர் எவ்விதம் தோன்றியது, அதிலிருந்து மிக மிக அரிதாக ‘நாம்’ எவ்விதம் பரிணமித்தோம் என்று விளக்கி இருப்பார். மனிதர்களுக்கு முன்னால் மூன்று பேருழிகள் வழியே பண்டைய புவியின் முதன்மை ஆதிக்க உயிர்கள் ட்ரைலோபைட்டா துவங்கி டைனோசர்கள் தொடர்ந்து நியாண்டர்த்தால் வரை முற்றிலும் அழிந்தன. இன்றைய யுகத்தின் முதன்மை ஆதிக்க உயிர்கள் நாம். இன்று ஒரு ஊழி வந்தால் அது முதலில் துடைதழிக்கப் போவது நம்மைத்தான்.

அந்த யுகங்களில் விண்கல் தாக்குதல் போன்ற புறக் காரணிகள் இன்றி, உயிர்கள் அழியக் காரணமான பெரும் கோடை, பெரும் வெள்ளம் இவற்றுக்கு நிரந்தரமாக  இயற்கையின் சூழல் மண்டலத்தின் உள்ளேயே அமைந்த உஷ்ண எல் நினோ, குளிர் லா நினா இவற்றின் அலையே  காரணம் என்று அதன் தோற்றுவாய், இருப்பிடம், அதன் குணநலன்கள் குறித்து முதன் முதலாக கில்பர்ட் தாமஸ் வாக்கர் என்பவர் ஆய்வு செய்து 1920 இல் உலகுக்கு வெளிப்படுத்தினார்.  இடம் வலம் என சுழலும் மத்து கடையும் தயிர் போல இந்த உஷ்ண குளிர் அலை உலகை வலம் வந்து சூழல் மண்டல நிலவரங்களைத் தீர்மானிக்கிறது. உலகு முழுக்க குறிப்பிட்ட கால கெடு வழியே வலம் வரும் அலைகள் இவை. இந்தியாவில் மிக முன்னர் என்றோ எங்கோ பழம் கனவென நாம் கேள்விப்படும் மழை பொய்த்த 12 வருட பஞ்சம் என்பதெல்லாம் இந்த எல் நினோ வின் செயற்களத்தின் பகுதியே.

புவியின் சூழலுக்கு ஒரு பரிணாமகதி உண்டு, அந்த வரிசை வளர்ந்து நிலை கொண்டு கடந்த 20 000 வருடமாகத்தான் அது பெரிய மாற்றம் இன்றி நிலவியது. அதன் பின்புலம் கொண்டே மனிதப் பண்பாடு வரலாறு அறிவியல் எல்லாம் வளர்ந்தது. நிலை பெற்ற இந்த சூழல் நிலை இன்று துருவப் பகுதிகள் சூழல் சீர்கேடு வழியே உடைந்து உருகி ஓடத் துவங்கி விட்டது. துருவம் கரையாத வரை சில விஷயங்களை தாக்குப்பிடிக்க முடியும். உருகத் துவங்கிய பின்னர் நிகழப் போகும் தொடர் விளைவுகளை நம்மால் கட்டுப்படுத்தவோ, பழைய நிலைக்கு மீளவோ முடியாது. எது வருகிறதோ அதை எதிர்கொள்வது மட்டுமே நம்மால் செய்யக் கூடுவது. இதை, இந்த ஆர்க்டிக் உடைவை நிகழ்த்தியது இயற்கை அல்ல. மனிதர்களாகிய நாம்.

துளி கேன்சர் மெல்ல மெல்லப் பரவி உடலையே சிதைப்பது எப்படியோ அப்படித்தான் பெட்ரோல், நிலக் கரி, மின்சார எரிப்பு பிளாஸ்டிக் காணினிக் குப்பை இவற்றின் எச்சம் வளி மண்டலத்தில் வினை புரிகிறது. மொத்த வளி மண்டலமும் ஒரு தனித்த உடல். அதில் அறிவியல் காலத்துக்கு பிறகான ரசாயன எச்சம் ஒரு சொட்டு கேன்சர் போல சென்று விழுந்து விட்டது. கேன்சருக்கு மூன்று நிலை உண்டு. முதல் நிலையில் சரியாக பணியாற்றினால் வென்று விட முடியும். இரண்டாம் நிலையில் வெல்லும் சாத்தியமும் தோற்கும் சாத்தியமும் சமம். எனவே வெல்லும் சாத்தியத்தை ‘நம்பி’ பணியாற்ற வேண்டும். மூன்றாம் நிலையில் புதைக்கவோ எரிக்கவோ என்று வினவும் சுற்றத்துக்கு பதில் சொல்ல வேண்டியது மட்டுமே ஒரே பணி. அந்த வகையில் இப்போது இந்த புவிச் சூழல் மண்டல கேன்சர் அதன் இரண்டாம் நிலைக்குள் மெல்ல எட்டு எடுத்து வைத்திருக்கிறது என்பதையே உலகுக்கு இந்த 2023 இன் கோடை உணர்த்தத் தலைப்பட்டிருக்கிரது.

க்ரிஸ்ஸி கரடிக்கும் பனிக் கரடிக்கும் பிறந்த கரடி இனத்தின் வாழ்வு  (இவற்றால் சந்ததி வளர்க்க முடியாது) குறித்து அட்டன்பரோவின் ஆவணப்படம் ஒன்று உண்டு. சில வருடம் நீண்ட அளவு மீறிய உஷ்ணம் கொண்ட கோடையால், க்ரிஸ்ஸி கரடிகள் புலம் பெயர்ந்து பனிக் கரடிகளின் நில எல்லைக்குள் சென்று வாழ்ந்த வகையில் தோன்றிய கரடிகள் இவை. ஒரு குறிப்பிட்ட நிலத்தில், குறிப்பிட்ட சூழலில் நிகழ்ந்து இது எனில், உலகம் முழுவதும் இந்த நிலை நீடித்தால் என்னென்ன நிகழும்? புவிச் சூழல் வரலாற்றில் உலகு தழுவிய அதிக பட்ச கோடை உஷ்ண உயர்வு என்பது இந்த 2023 இல் நிகழ்ந்திருக்கிரது. உலக அறிவியல் மூளைகள் அவர்கள் எல்லா நிலையிலும் அரசியல் அதிகாரத்துக்கு கட்டுப்பட்டவர்கள் என்பதால் வழக்கம் போல இதையும் தூக்கி எல் நினோ தலையில் போட முயற்சிக்கிறார்கள். ஆனால் உண்மை அது அல்ல, இரண்டு ஆண்டு முடக்கத்தில் சூழலை சீர் கெடுப்பதில் 20 படிகள் பின்னால் சென்ற மனித இனம், அடுத்த ஒரே ஆண்டில் 40 படிகள் தாண்டி முன்னால் பாய்ந்திருக்கிரது என்பதே இதன் பின்னால் உள்ள பிரதான உண்மை.

இவற்றை வெளிப்படையாக பேச இயலாதவாறு ஆய்வாளர்களுக்கு  பல நூறு சிக்கல்கள். நடைமுறையில் எதையும் இனி பின்னால் கொண்டு செல்ல முடியாது, நிறுத்த முடியாது, அவ்வளவு ஏன் இவற்றை குறைக்க கூட முடியாது எனும் யதார்த்தம் மற்றொரு சிக்கல். உதாரணத்துக்கு கடலூரில் ஒரு பெரிய கடை உண்டு அங்கே பிளாஸ்டிக் பை க்கு தடை. ஆனால் அந்த பெரிய கடை ழுழுக்க முழுக்க குளிர் பதனம் செய்யப்பட்டது.  ஒரு சூழல் நட்பு குழு ஒன்று உறிஞ்சி குடிக்க பேப்பர் ஸ்ட்ரா தயாரிக்கிறது. அதை பிளாஸ்டிக் பையில் அடைத்து விநியோகம் செய்கிறது. வியர்வை கசகசப்புக்கு ஓடும் மின்விசிரியை விட்டு விடுவோம், ஒவ்வொரு நாளும் நகரத்தில் விளம்பர பதாகைகளுக்கு மட்டும் எரியும் மின்சாரதின் அளவு திகைக்க வைப்பது. ஒரே ஒரு கடலூரில் இருந்து பல நூறு மடங்கு பெருக்கல் குறி போட்டால் அதுதான் இன்றைய உலக நிலவரம். இதன் எதிர்வினைகள் அளிக்கப்போகும்  வீரிய நிலையைத்தான் இனி இந்த 2023 இல் உலகம் காணப் போகிறது.

அடுத்த ஐந்து வருடங்களுக்கு எல் நினோ தகிக்கப்போகும் நிலங்களில் தென்னிந்தியாவும் ஒன்று. தக்காளி என்ன நிலத்தில், எவ்வளவு நீர் கொண்டு எவ்விதம் விளையும் என நாம் அறிவோம். ஏன் இன்று தக்காளி பஞ்சம் என்பதை மட்டும் அறியத் தயாராகமாட்டோம். இந்தியா உட்பட எல்லா உலக நாடுகளும் இனி வரப்போகும் அரிசி பஞ்சத்தை எவ்விதம் சமாளிப்பது எனும் திட்டங்களில் இறங்கி விட்டன. இதுவும் ஏன் இப்படி என்பது எவருக்கும் ஒரு பொருட்டே இல்லை. தனது உழைப்பு தனது காசு, தனது நுகர்வு எதையும் காசு தூக்கி எறிந்து பெற்றுக்கொள்ளலாம் என  இதில் மட்டுமே வாழும் சூம்பிய வாழ்வு என்பதெல்லாம் வெகு விரைவில் கிழியப் போகிறது.

நேற்று நண்பர் ஒருவர் வாட்சப் காலில் அழைத்திருந்தார். “என்னப்பா தொடர்ந்து வெயில் பத்தி பொலம்புற… வயசாகி போச்சா” என்று சிரித்துக்கொண்டே கேட்டார். நண்பர் தலைமுறை பணக்காரர். குளிர் பதன வீட்டில் இருந்து வெளியேறி, குளிர் பதன காரில், குளிர் பதன அலுவலகம் சென்று, குளிர் பதன விமானங்களில், குளிர் நாடுகளில் வணிக சந்திப்புகள் நிகழ்த்தி இந்திய பொருளாதார தூணை வலுப்படுத்தும் பல ஆயிரம் பேரில் ஒருவர். அவர் நினைவில் எஞ்சும் வெயில் அல்ல, இப்போது இங்கு என் முதுகில் நான் சுமக்கும் வெயில். இது என் வெயில். கடலூர் வெயில். கடலூரில் பசித்தலையும் ஒரு சொறி நாயும் நானும் ஒருங்கே பகிர்ந்து கொள்ளும் வெயில். கடலூர் ஜனத்தொகையில் ஒரு சதவீதம் என்பது கைவிட பட்ட முதிய அநாதைகளால், பைத்தியக் காரர்களால், ரோகிகளால், நரிக்குறவர் போன்ற நாடோடிகளால் ஆனது. அவர்களில் நானும் ஒருவன் என்பதால், இங்கே அவர்கள் உண்டு என்பது எனகுத் தெரியும். கடலூரில் சிப்காட் பகுதிகளில் நிலத்தடி நீர் செப்டிக் ஆகி பல வருடம் ஆகிறது. எரியும் குப்பை மலைகள் உண்டு. ஊர் நடுவே சாக்கடை நதி உண்டு. இங்கே உருவாகும் கொசுவும் அது கடிக்கும் விதமும் எவ்விதம் இருக்கும் தெரியுமா? நெருப்பில் பழுத்த குண்டூசி ஒன்றின் தொடுகை போல இருக்கும். இதில்தான் கிடந்து என் ஊரில் ஒரு பிச்சைக்கார ஆனாதை குழந்தை தனது அன்னையின் கிழிந்த முந்தானைக்குள் புதைந்து உறங்க முயலுகிறது.

கடந்த வாரம்  எங்கோ ஊர் சுற்றிவிட்டு நள்ளிரவு வீடு திரும்புகையில் எனக்குத் தெரிந்த அந்த பைத்தியக்காரனை மீண்டும் பார்த்தேன். இடை வரை சாக்கடைக்குள் நிர்வாணமாக நின்றிருந்தான். உடலெல்லாம் சாக்கடையை அள்ளிப் பூசி இருந்தான். நான் பார்க்கவே சாக்கடையை அள்ளி அள்ளி தின்றான். என்னை கண்ட கணம், பரவசம் கொண்டு இளித்தான். பித்தின் நிலவெழுந்த கண்களுடன் “அம்ம.. அம்ம… அம்ம…” என்றபடி வானத்தை இடது கையால் சுட்டினான். வானம் பார்த்தேன். கோடை வறண்ட வானில் தனித்து நின்றிருந்தது துண்டு நிலா.

அவன் கேட்டிருப்பான்.

அம்மா அம்மா… என்னால் இந்த எரியும் பகலை தாள இயலவில்லை நான் என்ன செய்யட்டும்?

அம்மா அம்மா… எரியும் அந்த பகலையும் விஞ்சும் இந்த பசித்த வயிற்றை என்னால் தாள இயலவில்லை. நான் என்ன செய்யட்டும்?

அம்மா அம்மா… எரியும் இந்த வயிற்றயும் விட வேகும் இந்த இரவை என்னால் தாள இயலவில்லை. நான் என்ன செய்யட்டும்?

நீ இல்லை, உறக்கம் இல்லை. உறக்கம் இல்லை கனவும் இல்லை. கனவிலும் நீ இல்லை. அம்மா அம்மா… நான் என்ன செய்யட்டும்?

அவள் சொல்லி இருப்பாள்.

மகனேமகனே அங்கே பார்.

அதில் நான் தெரிவேன். அதுதான் மகனே உன் அமுத குளம்.

அள்ளி அள்ளி பூசிக்கொள் குளிர்வாய்.

அள்ளி அள்ளி உண். பசியாறுவாய்.

அள்ளி அணைத்து இனிது உறங்கு. உன் குளிர் கனவில் நான் வருவேன்.

சாக்கடை என்பது இயற்கையில் கிடையாது. அது மனிதப் பண்பாடு உருவாக்கி எடுத்தது. நேற்று அது புழக்கடையில் இருந்தது. இன்று நாம் அதில்தான் இருக்கிறோம் என்பதே தெரியாமல் அதில் இருக்கிறோம். நாளை அது நம் அனைவரையும் மூழ்கடிக்கும்.

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைதூரன் விருது, கடிதங்கள்
அடுத்த கட்டுரைபம்மல் விஜயரங்க முதலியார்