கடுக்கரை பவித்ரா மகாதேவன்

இன்று சுவாரசியமான ஒரு இணையர் என்னை வந்து சந்தித்தனர். கடுக்கரை மகாதேவன் என்னும் புகழ்மிக்க வில்லுப்பாட்டுக் கலைஞரின் பெயர்த்தியான பவித்ரா மகாதேவனும் அவருடைய கணவரும். பவித்ரா தன் தாத்தாவின் பெயரையே பின்னொட்டாக வைத்துக்கொண்டிருக்கிறார். கடுக்கரை மகாதேவன் மரபிலக்கியக் கவிராயர், வில்லுப்பாட்டுக் கலைஞராகப் புகழ்பெற்றவர். இப்போது முதுமையில் இருக்கிறார்.

தபால்நிலைய ஊழியரான பவித்ரா தன் தாத்தாவின் முதன்மை மாணவி. இளமையிலேயே வில்லுப்பாட்டுக்குச் சென்று பழகியவர். தாத்தாவிடம் புராணங்கள், மரபிலக்கியங்களைக் கற்றுத்தேர்ந்தவர். மரபான முறையில் கணீர் குரலில், நிதானமாகக் கதைச் சொல்கிறார். தத்துவங்கள், தொன்மங்கள் ஆகியவற்றை விரித்துரைக்கிறார். ஊடாகப் பாட்டுகளையும் பாடுகிறார்.

வியப்பான விஷயம் காற்றுமின்நிலைய ஊழியரான அவருடைய இளம் கணவர் அவருக்கு முதன்மை ஆராதகராக இருப்பது. பவித்ரா பேசியதை விட கணவர் மனைவி பற்றிப் பேசியதுதான் அதிகம். மரபிலக்கியம், புராணங்கள் சார்ந்த சொற்பொழிவாளர்கள் அருகி வரும் சூழலில் அடுத்த தலைமுறை உருவாகி வருவது மகிழ்வளிக்கிறது.

பவித்ரா மகாதேவன் யூடியூப் பக்கம்

முந்தைய கட்டுரைவலியின் ஒளி- கிருஷ்ணன் சங்கரன்
அடுத்த கட்டுரைவே.விவேகானந்தன்