அல் கிஸா- இஸ்லாம்- விளக்கம்

அல் கிஸா – அஜிதன் (நாவல்)
அல்-கிஸா நாவல் மின்னூலாக கிடைக்கும்.

ஜெ

அஜிதன் எழுதிய அல்கிஸா நாவல் பற்றிய செய்திகளை வாசிக்கிறேன். நாவலை நான் இன்னும் வாசிக்கவில்லை. ஆனால் என்னுடைய சூழலில் உள்ள விவாதத்தைப் பற்றிச் சொல்கிறேன். இப்போது இஸ்லாமிய நூல்கள் நன்றாக விற்பனையாகின்றன. இது ஒரு விற்பனை உத்தியாகவே எழுதப்பட்டுள்ளது. இது என் கருத்து அல்ல. ஆனால் இப்படி ஒரு பேச்சு உள்ளது. மற்றபடி அஜிதனின் ஆர்வம் இதில் எப்படி என்பது என்னால் சொல்லக்கூடியதாக இல்லை. ஆகவேதான் எழுதுகிறேன்

எம்.ஶ்ரீனிவாஸ் ராஜகோபால்

அன்புள்ள ஶ்ரீனிவாஸ்,

தமிழில் ஏராளமான இஸ்லாமிய நூல்கள் வெளிவருகின்றன. என் நண்பர் கொள்ளு நதீம் சீர்மை பதிப்பகம் வாயிலாக பல முக்கியமான நூல்களை வெளியிட்டிருக்கிறார். இஸ்லாமிய வரலாற்றையும் வாழ்வையும் சொல்லும் நாவல்களின் மொழியாக்கங்கள் வெளிவந்துள்ளன. எவையுமே பெரிதாக விற்பனையாகவில்லை. ஆர்வமிருந்தால் இணையத்தில் தேடிப்பார்க்கவும். விற்பனையாகும் நூல்களுக்கு சமூக ஊடகவெளியில் விற்பனைக்கு இணையான அளவு மதிப்புரைகள், வாசிப்புக்குறிப்புகள் இருக்கும். இஸ்லாமிய நூல்களுக்கு அப்படி நான்கு வரி வருவது அரிதினும் அரிது.

ஏனென்றால் இஸ்லாமிய அரசியல் பேசும் இஸ்லாமியர் இலக்கியம் வாசிப்பவர்கள் அல்ல. அவர்கள் எந்த இலக்கிய நூலைப்பற்றியும் ஏதும் எழுதி நீங்கள் பார்த்திருக்க முடியாது. இஸ்லாமிய ஆதரவு அரசியல் பேசும் இடதுசாரிகளும் திராவிடவாதிகளும் இஸ்லாமிய நூல்களை வாசிப்பவர்கள் அல்ல, இஸ்லாம் பற்றி எளிய அறிமுகமோ அதற்கான ஆர்வமோ கொண்டவர்கள் அல்ல. அவர்களுக்கு இஸ்லாமிய சமூகம் அரசியலில் ஒரு நட்புசக்தி மட்டுமே. 

நீங்கள் சொன்னதற்கு மாறாக அல் கிஸா என்ற பெயராலேயே இந்து வாசகர்கள் ஒரு சாரார் நாவலை தவிர்ப்பதை புத்தகக் கண்காட்சிகளில் கண்டோம். காழ்ப்பு அல்லது விலக்கத்தால் அல்ல. அது தங்களுக்குப் புரியாத எதையோ சொல்லும் நூல் என்னும் எண்ணத்தால். சொல்லி, ஏற்கவைத்தால் வாங்கினர். அந்நூல் நன்றாக விற்பது இரண்டே காரணத்தால்தான். ஒன்று, அது சிறியது. இரண்டு, மைத்ரி ஏற்கனவே பரவலாக வாசிக்கப்பட்டுள்ளது. மைத்ரியின் இரண்டாம் பதிப்பு இப்போது முடியப்போகிறது. அல் கிஸா வாங்கியவர்களில் 99 சதவீதம்பேரும் மைத்ரி வாசித்தவர்கள். (மைத்ரி வாங்க.) 

பொதுவாக இளம் படைப்பாளிகளின் நூல்கள் இலக்கியவட்டத்திற்குள் மட்டுமே விற்பனையாகும். மைத்ரி அதைக்கடந்து பொதுவாக அனைத்து வாசகர்களையும் சென்றடைந்த நாவல். இன்று ஒரு நூல் விற்பனையாவதற்கு அடிப்படையான தகுதி என்பது அதன் வாசிப்புத்தன்மையே. வாங்கினால் வாசித்துவிடமுடியும் என்னும் எண்ணம் வாசகரிடையே உருவாகவேண்டும். அந்த நம்பிக்கை உருவானால் வாங்குவார்கள். மைத்ரி அந்நம்பிக்கையை உருவாக்கிய நூல். அல் கிஸா இன்னும் உணர்சிகரமானது, மேலும் அழகிய நேர்த்தியான நடை கொண்டது. 

மேலுமொன்று உண்டு. நவீன இலக்கியம் பெரும்பாலும் சலிப்பு, அவநம்பிக்கை ஆகிய எதிர்மறை உணர்வுநிலைகள் கொண்டது. அது ஒரு மரபாகவே நீடிக்கிறது. அதற்கு நவீன இலக்கியவாதிக்கு இச்சமூகம் அளிக்கும் வாழ்க்கைச்சூழலும் ஒரு காரணம். ஆனால் மைத்ரி, அல் கிஸா இரு நாவல்களுமே நேர்நிலையான, ஆன்மிகமான ஓர் உச்சம் நோக்கிச் செல்பவை. அது அளிக்கும் புத்துணர்வே வாசக ஏற்புக்கான காரணம்.

கடைசியாக, கொள்கைநிலை பற்றி. உண்மையில் அதைப்பற்றியே கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். அஜிதன் என் மகன், என்னால் தீவிரமாக பாதிப்படைந்தவன். ஆனால் என் வார்ப்பு அல்ல. என்னில் இருந்து பிரிந்து தன் வளர்ச்சிப்பாதையை தானே கண்டடைந்தவன். அவனுக்கான பொறுப்பை நான் ஏற்கவியலாது. அவனுடைய உருவாக்கத்தில் என் அளவுக்கே கேரளத்தின் காலடி சங்கரா  தத்துவப் பல்கலைக்கு முக்கியமான இடமுண்டு. இன்று அது இடதுசாரிக் கருத்துக்கள் ஓங்கிய ஓர் அமைப்பு.

அங்கிருக்கும் மனநிலையைப் பற்றி அங்கு பணியாற்றும் ஒரு பேராசிரியர், என் நண்பர், என்னிடம் சொன்னார். ‘திட்டமிட்டு இஸ்லாமிய பண்பாட்டை பொதுச்சமூகத்தில் இருந்து விலக்கும் முயற்சி ஒன்று பெருவிசையுடன் நிகழ்கிறது. சமூகத்தின் ஒரு முனை அந்த திசைநோக்கிச் செல்கிறது. அதற்கு எதிர்ப்போக்காக மறுமுனையில் இஸ்லாமியப் பண்பாட்டை நோக்கிய அணுக்கத்தை அறிவுஜீவிகள் அடையவேண்டும். அதுவே எதிர் அரசியல்அந்த எண்ணங்கள் அஜிதனில் செல்வாக்கு செலுத்தியிருக்கலாம்.  

எனக்கு அஜ்மீர் குவாஜா மொய்னுதீன் ஷிஷ்டி மேல் பக்தி உண்டு. அது அரசியல் அல்ல, முழுக்க முழுக்க ஆன்மிகமானது, என் தனியுள்ளம் சம்பந்தமானது. அதை  பகிரவோ விவாதிக்கவோ நான் விரும்பவில்லை. அன்னியர் அதற்குள் புகுவது எனக்கு உடன்பாடானதல்ல. அந்த தொடர்ச்சியை என் குடும்பத்திற்கும் கூடவே அஜிதனுக்கு நான் அளித்தேன். அல் கிஸாவின் ஆன்மிகம் அந்த தொடர்பில் இருந்து உருவானது. அஜிதனுக்கும் அருண்மொழிக்கும் கூடுதலாக சூஃபிஇந்துஸ்தானி இசையில் தீவிர ஈடுபாடு உண்டு. அல் கிஸா அடிப்படையில் இந்துஸ்தானி இசை சார்ந்த ஆன்மிகத்தை முன்வைக்கும் நாவல். அரசியல் ஏதும் அதில் இல்லை. முழுக்க முழுக்க பொதுவான இலக்கியவாசகர்களுக்காக மட்டுமே எழுதப்பட்டது

ஜெ

முந்தைய கட்டுரைமுதல்நெருப்பின் நடனம்
அடுத்த கட்டுரைதூரன் விழா, கடிதங்கள்