தமிழ் விக்கி தமிழில் வெளிவரும் ஒரு இணையக் கலைக்களஞ்சியம். இலக்கியம் பண்பாடு ஆகியவற்றுக்கு முதன்மை அளிப்பது. தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் தந்தையும் கொங்குநாட்டின் முதன்மை அறிவியக்கவாதியுமான பெரியசாமித் தூரனின் நினைவாக தமிழ் விக்கி சார்பில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது 2023 ஆண்டுக்கு ஆய்வாளர் மு. இளங்கோவனுக்கு வழங்கப்படுகிறது. சிறப்பு விருது எஸ்.ஜே.சிவசங்கருக்கு வழங்கப்படுகிறது. விருதுவிழா இன்று மாலை 5 மணிக்கு ஈரோடு , கவுண்டச்சிப்பாளையம் (சென்னிமலை சாலை) ராஜ் மகால் திருமண அரங்கில் தொடங்குகிறது சு.தியடோர் பாஸ்கரன், பி.கே.ராஜசேகரன் ஆகியோர் விருதுவிழாவில் கலந்துகொள்கிறார்கள்
தமிழ் விக்கி- தூரன் விருதுகள் விழா, ஆகஸ்ட் 5,6
இன்று மாலை ஐந்து மணிக்கு தொடங்கும் நிகழ்வுக்கு 150 பேர் வரை தங்குமிடம் பதிவுசெய்துள்ளனர். வெளியூரில் இருந்து ஓர் இலக்கிய நிகழ்வுக்கு இத்தனைபேர் வந்து தங்குவது என்பது விஷ்ணுபுரம் விருதுவிழா நிகழ்வுக்குப் பின் இதுவே அடுத்தபெரிய நிகழ்வு எனப் படுகிறது. அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நான் கோவை புத்தகக் கண்காட்சி முடிந்ததும் கேரளத்தில் ஒரு பயணம் மேற்கொண்டேன். சில அரிய ஆலயங்களைப் பார்ப்பதற்காக. அதன்பின் மலைமேல் சென்று எங்கள் விடுதியில் மூன்றுநாட்கள் தங்கியிருந்தேன். நான்காம்தேதி காலை கிளம்பி மதியம் ஈரோடு வந்து சேர்ந்தேன். அஜிதனும் என்னுடன் வந்தான்.
நான்காம்தேதி மாலையிலேயே பத்துபேர் வரை வந்துவிட்டனர். ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்தில் தங்கியிருந்தனர். ஐந்தாம்தேதி காலைமுதலே ஏராளமான நண்பர்கள் வரத்தொடங்குவார்கள் என தெரிகிறது. அனைவரும் ராஜ்மகால் கல்யாணமண்டபத்தில்தான் இடம். நானும் அங்கேதான் தங்குவதாகத் திட்டம். இந்த தங்குதல்கள் பலவகையிலும் முக்கியமானவை. இலக்கியத்தை ஒரு கொண்டாட்டமாக இவை ஆக்குகின்றன.
நாளை மதியம் பெரியசாமித் தூரனின் கீர்த்தனைகளை டி.பி.என் ராமநாதன் மற்றும் பாண்டமங்களம் ஜி.யுவராஜ் நாதஸ்வரத்தில் வாசிக்க தலைச்சங்காடு டி.எம்.ராமநாதன் தவுல் இசைப்பார். அப்பாடல்களை முன்னரே அறிவித்து இணைப்பு அளித்துள்ளோம். கேட்டுவிட்டு வருபவர்கள் இசையை நன்கு ரசிக்க முடியும்