(குறிப்பு: இது பி.கே.ராஜசேகரனின் ”ஏகாந்த நகரங்கள்” என்ற 2006 ஆம் ஆண்டு வெளிவந்த இலக்கிய விமர்சனக் கட்டுரைத்தொகுதியில் உள்ள ஒரு கட்டுரை. அந்த சமயம் மலையாளத்தில் படைப்பூக்கமற்ற பின்நவீனத்துவ படைப்புகளும், கோட்பாட்டு கட்டுரைகளும் ஒருபக்கம், இன்னொருபக்கம் பின்நவீனத்துவ எழுத்துமுறையை ஒட்டுமொத்தமாகவே அநிராகரிக்கும் விமர்சனங்கள். அந்த சூழலில் பின்நவீனத்துவ எழுத்துமுறையின் சாத்தியங்களையும், போதாமைகளையும் ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரை).
பின்நவீனத்துவ எழுத்துமுறை உருவாகி வந்த காலகட்டத்தில் (பத்து வருடங்களில்) மலையாள இலக்கியத்தின் போக்கு என்ன என்பது சார்ந்த விவாதம் மிக அரிதாகத்தான் நிகழ்ந்திருக்கிறது, இதை துரதிஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். நவீனத்துவ காலகட்டத்திற்கு பின் எழுதப்பட்டவை என்ற நிலையில் அந்த எழுத்துமுறையின் இயல்புகளை மதிப்படுவதற்குப்பதிலாக நம் இலக்கிய விமர்சனம் வேறொருவகையில் அதை மதிப்பிட்டது. ஐரோப்பாவில் உருவாகிவந்த பின்நவீனத்துவ கோட்பாடுகளை அறிமுகப்படுத்தி, அவற்றை விளக்கி, பரிசீலிக்கும் முயற்சியில் பல மேற்குலக கோட்பாட்டாளர்களும் முற்றிலும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சொன்ன மாறுபட்ட விஷயங்களையெல்லாம் ஒன்றாக ஆக்கி குழப்புவது போன்ற சல்லிசான செயல்பாடுகள்தான் மலையாள இலக்கிய உலகில் முக்கியமாக நிகழ்ந்தது. நமக்கு பரிச்சயமான உலகில் உருவாகிவந்த புதிய இலக்கியப்படைப்புகளை ஆராயாமல் கோட்பாட்டு விவாதவங்கள் வழியாக உயிர்த்துடிப்பான பின்நவீனத்துவ சூழலை மலையாளத்தில் ஏற்படுத்திவிடலாம் என அந்த விவாதங்களில் ஈடுபட்டவர்கள் பேரசைப்பட்டனர். அப்படி விவாதித்த பலருக்கு அறிஞர்கள், கோட்பாட்டாளர் போன்ற போலியான பிம்பம் கிடைக்கவும் செய்தது. ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு பொருளுடன் வந்துசெல்லும் குறு வியாபாரியைப்போல இவர்களும் சீக்கிரமே மலையாள இலக்கியத்திலிருந்து மறைந்துவிட்டிருக்கிறார்கள். இலக்கியப்படைப்புகளில் உள்ள படிமங்களில், உட்குறிப்புகளில் சாதி, வர்க்கம் இவற்றை தேடிக்கண்டுபிடிக்கும் மோசமான வாசிப்பும், இலக்கியப்படைப்புகளை பேயோட்டுவதற்கான களமாக காணும் விமர்சகர்களும் அதேபோல மறைந்திவிட்டிருக்கிறார்கள்.
இந்த மேலோட்டமான, பகட்டான கோட்பாடுகள் இலக்கிய இதழ்கள், புத்தகக்கடைகள் வழியாக பணம் ஈட்டும் வியாபாரமாக ஆக வழிவகுத்தது. அதுவும் தற்காலிகமானதுதான். அலன் சோக்கல் போன்றவர்கள் யாரும் மலையாளத்தில் உருவாகி ஒரு போலியான கோட்பாட்டு கட்டுரை ஒன்றை உருவாக்கி இந்த பாவனைகளை இல்லாமலாக்கவில்லை. ஆனால் இன்னும் அதற்கு வாய்ப்பு இருக்கிறது. நவீனத்துவத்திற்கு பிறகான எழுத்துமுறை சார்ந்த விவாதங்கள் எதிலும் அந்த காலகட்டத்தில் உருவாகிவந்த மலையாள இலக்கியப்படைப்புகளை வாசித்ததன் தடையங்களே இல்லை. அந்த விவாதங்களில் ஈடுபட்டவர்களுக்கு மேற்கத்திய கோட்பாடுகளில் அதீதமான ஆர்வம் இருந்தது. ஆனால் ஐரோப்பிய மொழிகளில் அந்த காலத்தில் உருவாகிவந்த இலக்கியப்படைப்புகளை இவர்கள் வாசித்திருக்கவே வாய்ப்பில்லை என்று உறுதியாக எண்ணும்படி சுத்த அறியாமையைத்தான் மலையாளத்தில் கோட்பாடு சார்ந்த விவாதங்கள் பிரதிபலித்தன. இலக்கியமில்லை, இலக்கியக்கோட்பாடுகள் மட்டும் தான் இருக்கிறது என்பதுதான் அவர்களின் நிலைப்பாடு. சமகால இலக்கியப்படைப்புகள் மீதான ஆர்வமின்மையால் அவற்றை மதிப்பிடும்போக்கும் இல்லாமலாகியது. இதற்கிடையே, சமகால மலையாள இலக்கியத்தைப்பற்றிய மிகக்குறைவான விமர்சனங்களும் போதுமான கவனத்தை பெறவில்லை. சமகால படைப்புகள் சார்ந்த விமர்சனமும், விவாதமும் தனிநபர்களைப்பற்றிய மதிப்பீடுகளாகவும், அறிவுப்பயிற்சியாகவும் ஆகியது.
மலையாளத்தில் பின்நவீனத்துவ இலக்கியப்படைப்புகள் (அவற்றை சிசுக்கள் என்று சொல்லலாம்) விமர்சிக்கப்படாமல், ஆராயப்படாமல், வாசிக்கவும்படாத நிலையில் இருக்கின்றன. அந்த படைப்புகள் தங்களைத்தாங்களே மெச்சிக்கொண்டு, தாங்கள் எழுதுவதுதான் உயர்ந்த இலக்கியம் என்ற மாயையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர்களை குற்றம்சொல்லி ஒன்று ஆகப்போவதில்லை. பின்நவீனத்துவ இலக்கியப்படைப்புகளுக்கு தத்துவார்த்தமான அடித்தளத்தையோ, அவற்றின் இருப்பை நியாயப்படுத்தவோ முயற்சிசெய்ய வேண்டிய விமர்சகர்கள் அதை செய்யவே முயலவில்லை. அதற்குப்பதிலாக தத்துவார்த்தமான என்ற பாவனையை சூடிக்கொண்ட கோட்பாட்டு ரீதியான போலித்தனமான விமர்சனங்களை சுதந்திரமான சிந்தனை என்று பிழையாகப் புரிந்துகொண்டனர். இந்த விமர்சகர்கள் யாரும் உண்மையான விமர்சகர்கள் இல்லை என்பதுதான் உண்மை. இலக்கிய கோட்பாடுகளை உள்வாங்கியோ, அவற்றை தங்கள் இலக்கியச்சூழலுக்கான தேவைகளுக்கேற்ப அவற்றை மறுஆக்கம் செய்வதற்கோ பதிலாக நன்கொடையால் தன் பாக்கெட்டையும், கட்சியின் கஜானாவையும் பெரிதாக்கும் கட்சியரசியலாளர்களைப்போல அவர்கள் நடந்துகொண்டனர். அப்படி பின்நவீனத்துவ இலக்கியப்படைப்புகள் பரிபூர்ணமான அனாதைகளாக ஆகின.
நவீனத்துவத்திற்கு பின் உருவான மலையாள இலக்கியப்படைப்புகளின் தோல்வியின் கதை இது என்று சொல்லி இதை விவாதித்தை முடித்துவிட முடியாது. தோல்வி அதன் பகுதிதான். நோயை கண்டறிவதுபோல ஒற்றைப்படையாக அதன் தோல்வியை உறுதிசெய்யவும் முடியாது. பின்நவீனத்துவ எழுத்தாளர்களில் பெரிய எழுத்தாளர்கள் உருவாகி வராததற்கான காரணம் அவர்கள் நவீனத்துவ எழுத்தாளர்களைப்போல படைப்பாக்கத்திற்கான உழைப்பை செலுத்த முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. பின்நவீனத்துவ எழுத்துகளின் தோல்விக்கு இப்படியான காரணத்தை சொல்வது என்பது எளிமைப்படுத்தல் அல்லது அரைகுறையான புரிதல் என்றுதான் சொல்லவேண்டும். நோய்க்கான பல காரணிகளில் ஒன்றுக்கு மட்டும் உடனே சிகிச்சையளிக்கும் differential diagnosisஐ மட்டும் செய்தால் பலன் கிடைக்கப்போவதில்லை. நோய் ஏற்படுவதற்கான பின்னணிகளும், நோயின் இயல்புகளையும் ஒட்டுமொத்தமாக கருத்தில்கொண்டு ஒட்டுமொத்த கண்டடைதல்(provisional diagnosis) நோக்கி செல்வதுதான் சரியானது. ஒட்டுமொத்த கண்டடைதல் (provisional diagnosis) என்ற முறைமையில் நோயை கண்டறிவது சரியானதுதான் என்றாலும் பரிசோதனை முடிவுகளை அடிப்படையாகக்கொண்ட கடைசிகட்ட நோயை கண்டறியும் வழிமுறைதான் மிகவும் நல்லது. அப்படி செய்யாவிட்டால் மருத்துவரே நோயாளியில் இல்லாத நோயை கண்டறியும் Iatrogenic diseasesதான் நோயாளியில் உருவாகும். இலக்கிய விமர்சனத்தின் நோய்கண்டரியும் முறைமை அந்த வழிமுறையை நோக்கி செல்லக்கூடாது.
மலையாள நாவல்களை பற்றி செய்யப்படும் ஆய்வுகள் பின்நவீனத்துவ படைப்புகளை ஆராய முற்படும்போது அது எதிர்கொள்வது ஆளரவமற்ற உலகைத்தான். அபூர்வமான சில படைப்புகளை தவிர மற்றவை நொய்மையான மண்ணில் உருவானவை. அவற்றை கொஞ்சம் தள்ளினால் வீழ்ந்துவிடும், அவை எதிர்வினையாற்றும் திறன் இல்லாத மண்ணால் உருவாக்கப்பட்டவை. இதை மட்டுமே வைத்துக்கொண்டு பின்நவீனத்துவ இலக்கியம் என்பது தோல்வியடைந்தவர்களும், பலவீனமானவர்களும் சந்தித்துக்கொள்ளும் இடம் என்று விளக்கமளித்துவிட முடியாது.
நவீனத்துவத்திற்கு பின் எழுதவந்தவர்களையும் தொண்ணூறுகளுக்கு பிறகு கவனிக்கப்பட்ட எழுத்தாளர்களையும் ஒட்டுமொத்தமாக சேர்த்து பின்நவீனத்துவ எழுத்தாளர்கள் என்ற பொதுவான சொல்லில் சுட்டுவது சரியான வழிமுறை அல்ல. அப்படியான தெளிவான அடையாளம் நவீனத்துவத்திற்கு பின் வந்த படைப்புகளுக்கு இல்லை. நவீனத்துவத்திற்கு பின் வெளிவந்த படைப்புகள் ஒருவகையான தனித்த நகரங்களாக மலையாள இலக்கியத்தில் நிலைகொள்கின்றன. அப்படிப்பட்ட எழுத்துகளுக்கு மிகக்குறைவான பொதுப்புரிதல்களும், தத்துவங்களும் மட்டுமே இருக்கின்றன. திட்டவட்டமான வகைப்படுத்தல்களை எதிர்க்கும் விதத்தில் தனித்த எழுத்துமுறை கொண்டவர்களாக அந்தவகையான எழுத்தாளர்கள் எஞ்சினர். சி.வி.பாலகிருஷ்ணன், கெ.பி. ராமனுண்ணி, பி.சுரேந்திரன், தாமஸ் ஜோசப் இவர்களின் படைப்புகளும் சுபாஷ் சந்திரன், சந்தோஷ் எச்சிக்கானம் இவர்களின் எழுத்துகளிலும் பின்நவீனத்துவத்தின் பொதுவான தரிசன வெளிப்பாடு இல்லை. இது சிறுகதைகளில் மட்டும் தனியாக பார்க்கவேண்டிய விஷயமும் இல்லை. கவிதை, நாவல், நாடகங்கள் என இந்த தனியான நகரங்கள் அவைகளுக்கென தனியான ஆற்றல்களும், சோர்வுகளும் வெற்றிதோல்விகளுமாக இருப்பதை காணமுடியும். நவீனத்துவத்திற்கு பின் எழுத வந்தவர்களை ஒரு நிழல்தலைமுறை என்றுதான் சொல்லவேண்டும். நவீனத்துவத்தின் நிழலிலிருந்து தங்களை கிழித்துக்கொண்டு வெளியேறும் முயற்சிகளைத்தான் அவர்கள் செய்துகொண்டிருந்தனர். நவீனத்துவம் உச்சத்திலிருந்த காலத்தில் எழுதிய வி.பி.சிவகுமார், என்.எஸ்.மாதவம், அய்மனம் ஜான், சி. அய்யப்பன் போன்ற எழுத்தாளர்கள் நவீனத்துவத்தின் நிழலை எதிர்கொண்டவர்கள். பின்பு என்.எஸ்.மாதவன் அதிலிருந்து வெளியேறினார். கவிதையிலும் இதுதான் நிகழ்ந்தது. நவீனத்துவத்தின் நிழலிலிருந்து வெளியேறும் முயற்சியில் ஒருஎல்லைவரை வெற்றிபெற்றது பின்நவீனத்துவ சிறுகதையாசிரியர்கள்தான். கவிதையில் கெ.ஜி.சங்கரப்பிள்ளை, பாலசந்திரன் சுள்ளிக்காடு, எ.அய்யப்பன் போன்றவர்களின் அணைப்பில் நெரிபடாத இளம் கவிஞர்கள் மிகச்சிலர்தான். அவர்களும் தனித்த நகரங்கள்தான்; நவீனத்துவத்தின் குளிர்ந்த கதிர்வீச்சில் பாதிக்கப்பட்ட தளர்ந்த நகரங்கள்.
பின்நவீனத்துவ காலகட்டத்தில் எழுதவந்த புதிய தலைமுறைக்கு வேறு சில பிரச்சனைகளும் இருக்கின்றன. அந்த காலகட்டத்தின் ஆரம்பத்தில் எழுதவந்தவர்களைப்போல அவர்கள் நிழல்தலைமுறை இல்லை. அவர்கள் சுதந்திரமான சந்தை சார்ந்த பொருளாதாரத்தின் சந்ததிகள். தேவைப்பட்டால் அவர்களின் இருப்பையே இல்லாமலாக்கும் டிஜிட்டல் சூழலில் அவர்கள் இருக்கிறார்கள். சின்ன அரட்டைகள், துணுக்குகளை பின்நவீனத்துவ இலக்கிய விவாதமாக காட்டும் சிறுபத்திரிக்கை கலாச்சாரத்தை இப்போது காணமுடிகிறது. கடலோரத்தில் கடலையை சாப்பிட்டபடி லாவகமாக, ஒரு புதிய லஜ்ஜாவதி திரைப்படத்தை நினைவில் வைத்துக்கொண்டு இளம் சிறுகதையாசிரியரும், இளம் கவிஞரும் நடத்தும் உரையாடல் நாளிதழ்களின் வாராந்திர பதிப்புகளில் வெளியாகிறது. முக்கியமான இலக்கிய இதழ்கள் கொண்டுவந்த தீவிர இலக்கிய உரையாடல் வெளியை அப்படியே போலிசெய்து புதியதலைமுறை நிகழ்த்தும் போலியான உரையாடல்கள் இன்று கிட்டத்தட்ட அங்கீகரிக்கப்பட்ட உரையாடல் வெளியாகவே ஆகிவிட்டது. சந்தைப்பொருளாதாரம் உருவாக்கும் இப்படியான வெளிகளில் பின்நவீனத்துவ எழுத்தாளர்கள் சுயவிழைவுடன் மூழ்கிவிடுகிறார்கள். இப்போதுதான் எழுத வந்தவரும், எழுதிக்கொண்டிருப்பவர்கள் எல்லோரும் இதில் ஆட்பட்டுவிடுகிறார்கள்.
நவீனத்துவர்களின் அரசியலின்மையை நிராகரித்த பின்நவீனத்துவர்கள் அரசியல் பிரக்ஞையுடன் எழுத முயற்சித்தனர்; குறிப்பாக நவீனத்துவத்தின் நிழல்தலைமுறையை சேர்ந்தவர்கள். ஆனால், அவர்கள் கார்ப்பரேட் அரசியல் கட்சிகளின் கருத்துப்புலத்தைதான் எழுதினார்கள். உண்மையை மறைக்கும் தங்கப்பாத்திரங்களைப்போல காட்சியளிக்கும் கட்சிகளின் கருத்துவெளி தங்களின் மறைத்துவைக்கப்பட்ட நோக்கங்களின், கருத்துகளின் ஊடகமாக எழுத்தாளர்களை மாற்றியது. ’கட்சி’ என்ற பெரும்கதையாடலுக்கு கீழ்படிந்த சிலர் இலக்கியத்தின் பெரும்கதையாடலை தகர்க்கப்போவதாக நடித்தார்கள். ஆனால், இது எல்லா பின்நவீனத்துவ எழுத்தாளர்களின் பிரச்சனை என்று பொதுமைப்படுத்தமுடியாது. ஆனால், தாங்கள் கொஞ்சம் நெகிழ்வான இடதுசாரிகள் என்ற நடிக்கும் திறன் பெரும்பாலான பின்நவீனத்துவ எழுத்தாளர்களுக்கு இருக்கிறது. அரசியல்கட்சிகள் தங்களின் நலனுக்காக சொல்லும் ‘ வர்க்கம் சார்ந்த’, ‘அடிப்படைவாத’ போன்ற அறைகூவல்களுக்கு கேடயமாக எழுத்தாளர்கள் அணிசேர்கிறார்கள். மறைத்துவைக்கப்பட்ட பல நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியாதபடி இம்மாதிரியான கட்சியரசியல் உருவாக்கும் அறைகூவல்கள் எழுத்தாளர்களின் அரசியல்பிரக்ஞையை மழுங்கடித்தது. இலக்கிய கோட்பாட்டாளர்களுக்கு இனிமேல் மிச்சமிருப்பது தலித், பெண்ணிய, சூழலிய அரசியல்மட்டும்தான் என்று சொல்லப்பட்டது. அப்படி எழுத பல முயற்சித்தனர். வாசகர்கள் என்பது இடதுசாரிகள் மட்டும்தான் என்ற பிழையான எண்ணம் பல பின்நவீனத்துவ எழுத்தாளர்களை பாதித்திருக்கிறது. இவ்வளவு பலவீனங்களும், போதாமைகளும் இருந்தாலும் தனித்துவிடப்பட்ட நகரங்களான பின்நவீனத்துவ படைப்புகளை அப்படியே புறக்கணித்துவிடமுடியாது. ஆனால் அந்த தனி இருப்புகளை அப்படியே இணைத்து பெருநகரமாக (metropolis) உருவாக்காமல் இருப்பதுதான் நல்லது. நவீனத்துவம் போல ஒரு இயக்கமாக ஆகும் இயல்பு பின்நவீனத்துவ இலக்கியத்திற்கு இல்லை. பின்நவீனத்துவத்தின் மேன்மை என்பது அதன் இயக்கமாக திரளாத மனப்பான்மைதான். நம் இலக்கியவிமர்சனங்கள் பின்நவீனத்துவத்தின் இந்த இயல்பை கண்டுகொள்ள முயற்சிசெய்யவில்லை. மேற்கத்திய நாடுகளில் உருவாகிவந்த பின்நவீனத்துவத்தை வைத்துக்கொண்டு அதன் அடிப்படையில் நம் மொழியில் எழுதப்பட்ட படைப்புகளை வரையறுக்க முயற்சிக்கும்போக்கு நம் இலக்கிய விமர்சனத்தை அபாயகரமான நிலைக்கு இட்டுச்செல்கிறோம். நவீனத்துவம் காட்டும் உலகத்திற்கு அப்பாலும் சில இருக்கின்றன என்ற உணர்வை வாசகனில் ஏற்படுத்த பின்நவீனத்துவ எழுத்தாளர்களால் முடிந்தது. அவர்கள் தோல்வியடைந்தவர்கள் அல்ல. ஆனால், அவர்கள் காட்டும் உலகத்தின் வரையறைகளை தெளிவாக்கக்கூடிய ஆற்றல்கொண்ட இலக்கியப்படைப்புகளின் பெரிய நிரையை அவர்களால் உருவாக்க முடியவில்லை. அரசியல் கட்சிகளின் அறிக்கைகள் பின்நவீனத்துவர்களின் அரசியல் பிரக்ஞையை மழுங்கடிக்கிறது. கோட்பாட்டு வியாபாரிகளின் அழகியல்நிலைப்பாடுகள் இலக்கிய நுண்ணுணர்வை கேள்விக்குள்ளாக்குகிறது. புத்தகச்சந்தை காட்டும் பேராசைகளுக்கு ஆட்பட்டு எழுதும் விழைவை இன்றைய எழுத்தாளர்களில் காணமுடிகிறது. இவையெல்லாம் பின்நவீனத்துவத்தை வலுவிழக்கச்செய்யும் ஆற்றல்களாக ஆகிவிட்டன. ஆனால், அவற்றிலிருந்து விடுபட்ட மிகமிகக்குறைந்த பின்நவீனத்துவ எழுத்தாளர்கள் நம் மொழியில் இருக்கிறார்கள்.
நவீனத்துவ இலக்கியத்திற்கு அதற்கான விமர்சகர்கள் உருவாகி வந்தனர். அதற்கு தத்துவார்த்தமான அடித்தளத்தை உருவாக்கிக்கொண்டு நவீனத்துவ விமர்சகர்கள் அதற்குமுன் இருந்த பழைய விமர்சன மரபை கைவிட்டனர். மலையாளத்தில் நவீனத்துவ இலக்கியத்தை வாசித்து அதை நிலைநிறுத்தவேண்டும் என்ற முயற்சியில் நவீனத்துவ காலகட்டத்தை சேர்ந்த விமர்சகர்கள் ஈடுபட்டனர் (நவீனத்துவத்தின் பலவீனங்களை கண்டுகொள்ளாமல்). ஆனால், பின்நவீனத்துவ விமர்சகர்களில் எத்தனைபேர் அப்படி செய்கிறார்கள்? நவீனத்துவ காலகட்டத்திற்கு முன்பு உள்ள தலைமுறையை சேர்ந்த முக்கியமான விமர்சகர்கள் நவீனத்துவ இலக்கியத்தை எதிர்கொள்ளாமல் இருந்தது அதைக்கண்டு பயந்து அல்ல. அது கவனிக்கப்படவேண்டிய தகுதிகொண்டதல்ல, அது மூலநூல்களின் (literary canons) பகுதி அல்ல என்ற உறுதியான நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது, அந்த எண்ணம் நவீனத்துவ இலக்கியத்தை அவர்களிடமிருந்து விலக்கியது. நவீனத்துவ காலகட்டத்திற்கு முந்தைய தலைமுறையைச்சேர்ந்த விமர்சகர்களைப்பற்றிய எழுதிய யாருமே அந்த விமர்சகர்கள் நவீனத்துவ படைப்புகளை கண்டுகொள்ளாததைப்பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. நவீனத்துவ எழுத்துமுறையை அதற்கு முன் தலைமுறையை சேர்ந்த விமர்சகர்கள் அங்கீகரிக்காததற்கு காரணம் நவீனத்துவ படைப்புகளை அதுவரை இருந்த படைப்புகளுக்கு மாற்றான இலக்கியப்போக்காக காண அவர்களால் முடியவில்லை என்பதுதான். நவீனத்துவத்தை ஒரு மாற்றிலக்கியம் (அது நல்லதோ, மோசமானதோ) என்பதற்கு பதிலாக பிழைபட்ட ஆக்கங்களாக, திரிபுகளாக பல புகழ்பெற்ற விமர்சகர்களும் அவர்களின் மாணவர்களும் பார்த்தனர். கிட்டத்தட்ட மேல்சாதி கீழ்சாதி பிரிவினை என்பதுபோல. பின்நவீனத்துவ விமர்சனத்திற்கு இந்த மாதிரியான பிரிவினைப்போக்கு வந்துவிடக்கூடாது. பின்நவீனத்துவ இலக்கியத்தை அதன் பலவீனங்களை, அதன் மேன்மைகளை அனைத்தையும் பின்தொடர்ந்தால் மட்டும்தான் அதைப்பற்றி விமர்சிக்கும் தகுதியை அடையமுடியும். இலக்கிய விமர்சனம் பின்நவீனத்துவ எழுத்துமுறைக்கு தத்துவார்த்தமான அடித்தளத்தை உருவாக்குதல் என்ற கடமையையும் நிறைவேற்றமுடியும். ஆனால், பலசந்தர்ப்பங்களில் இலக்கியப்படைப்புகளை வாசிக்காமல் கோட்பாடுகளை வைத்துக்கொண்டு வழிகாட்டும் தொனியில் விமர்சகர்கள் செயல்படுகிறார்கள். அந்த எண்ணையில்லாத விளக்குகளின் வெளிச்சத்தை நம்பி அதை வழிகாட்டியாக கொண்ட பின்நவீனத்துவ எழுத்தாளர்களில் கணிசமானவர்கள் படுகுழியில் விழுந்துவிட்டனர். கதைசொல்லும் முறை, கதையமைப்பு, தலைப்பு, உட்குறிப்புகள், மற்ற படைப்புகளுடன் ஒரு குறிப்பிட்ட படைப்பிற்கான உறவு இவற்றைப்பற்றியெல்லாம் கோட்பாட்டாளர்களுக்கு இருந்த பிழைப்புரிதல்களை அப்படியே எடுத்துக்கொண்ட எத்தனையோ எழுத்தாளர்கள் மீபுனைவை(metafiction) எழுதுவதாக நம்பி பல தோல்வியடைந்த படைப்புகளை உருவாக்கியிருக்கிறார்கள். ஒரு சின்ன அகராதியில் சுருக்குமளவுக்கு சுருங்கிய அனுபவப்பரப்பில் மட்டும் செயல்படும் அளவுக்கு வீழ்ந்துவிட்ட படைப்பாளிகள் பலர் இருக்கிறார்கள். இது நம் இலக்கியச்சூழல் பற்றிய சித்திரத்தின் ஒருபக்கம் மட்டும்தான். ஆனால் இதை மட்டும்வைத்துக்கொண்டு ஒருதலைமுறை எழுத்தாளர்களை முழுமையாக மதிப்பிட்டுவிடமுடியாது. நவீனத்துவர்களைப்போல தன் தனிப்பட்ட எண்ணங்களிலும், மனப்பதிவுகளிலும் மூழ்கிவிடும் போதை போன்ற மனநிலையிலிருந்து பின்நவீனத்துவர்கள் மீண்டுவிட்டனர். நிரந்தரமான புதுமையாக்கமும் பின்நவீனத்துவ எழுத்தில் நிகழ்ந்திருக்கிறது. சமீபத்தில் எழுதவந்த பலரில் இந்த போக்கு உயிர்துடிப்புடன் செயல்படுகிறது. எடையற்ற அந்த தனிமையிலிருந்து அவர்கள் வலுவான படைப்புகளை உருவாக்குவார்கள். இலக்கிய விமர்சனம் அந்த படைப்புகளுக்கு தத்துவார்த்தமான அடித்தளத்தை அமைத்துத்தருவதாக, அந்த தத்துவத்தை வைத்து பின்நவீனத்துவ படைப்புகளை மதிப்பிடும் கலையாக ஆகவேண்டும். கருத்தியலின்(idealogy) சுமையிலிருந்து விடுபடாத பெருநகரம் அல்ல, என்றென்றைக்குமான புதுமையாக்கலும், சுதந்திரமும் கொண்ட இருப்புகளால் ஆன தனித்த நகரங்கள்தான் பின்நவீனத்துவ எழுத்தின் உண்மையான வெளி.
மொழியாக்கம் அழகிய மணவாளன்
அலன் சோகல்– இவர் கணிதப்பேராசிரியர். கணிதச் சமன்பாடுகளும், அறிவியல் தேற்றங்களும் நிறைந்த தத்துவார்த்தமான கட்டுரை என தோற்றமளிக்கும் போலியான கட்டுரை ஒன்றை சோகல் எழுதுகிறார். அதை ஒரு கலாச்சார இதழ் வெளியிடுகிறது. அந்த கட்டுரையை மதிப்பிட்டு பின்நவீனத்துவ கோட்பாட்டாளர்கள் கட்டுரை எழுதுகிறார்கள். இரண்டு வாரங்களுக்கு பிறகு அலன் சோகல் அந்த கட்டுரை போலியானது என்று அறிவிக்கிறார். பின்நவீனத்துவ கோட்பாட்டாளர்களின் ஆழமின்மையை சுட்ட இந்த சம்பவம் மேற்கோள்காட்டப்படுகிறது.