(குறிப்பு: மலையாள மொழியில் இருபதாம் நூற்றாண்டிற்கு முன்பு வெளிவந்த மலையாளம்- மலையாளம் அகராதிகளில் அதிகாரப்பூர்வமான அகராதி சப்ததாராவலி. ஒவ்வொரு மலையாளச்சொல்லுக்கும் வேர்ச்சொல்லையும், அந்த சொல்லுக்கு சமானமான மலையாள சொற்களையும், மலையாளத்தில் பொருள் விளக்கத்தையும் அளிக்கும் அகராதி இது. இன்றும் அது அதிகாரபூர்வமான அகராதியாகவே தொடர்கிறது. 2021இல் நாட்டுடைமையாக்கப்பட்ட இந்த அகராதியை இப்போது சாயாஹ்னா அமைப்பு இணையத்தில் பதிவேற்றியிருக்கிறது. இது அதை உருவாக்கியவர் பற்றிய கட்டுரை.)
*
ஶ்ரீகண்டேஸ்வரம் பத்மநாப பிள்ளை
ஒவ்வொரு சொல்லையும் எழுதும்போது அனுபவத்த வலி என பல எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளைப்பற்றி பெருமிதத்துடன் சொல்வதுண்டு. “படைப்பாக்கத்தின் வலி” என்ற கற்பனையான கருத்தின் அடிப்படையில் எழுத்தாளர்கள் இதைச் சொல்கிறார்கள். படைப்புச்செயல்பாட்டின் வலி என்ற சொல்லுக்கு இன்று பகடியான தொனியும் உருவாகிவிட்டது. படைப்பாளி தன் உள்ளே இருப்பதை வாசகனில் உணர்த்துவதற்கு பொருத்தமான சொல்லை தேடுவதன் அவஸ்தையை நாம் படைப்பாக்கத்தின் வலி என்ற சொல்லாக உன்னதப்படுத்துகிறோம். ஆனால் சொற்களைத்தேடி அலைந்து தூக்கமிழந்து, நோய்வாய்ப்பட்டு, வறுமையாக ஆனவர்களின் அசலான வலியை படைப்பாக்கத்தின் வலியைப்போல ஆழமானதாக நாம் கருதுவதில்லை. அகராதிகளுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களின் வலி நம் கவனத்தின் எல்லைக்கு வெளியே இருக்கிறது. மொழிக்காக இவ்வளவு தூய சமர்ப்பணத்தை செய்த இவர்களுக்கு நாம் எந்தவகையிலாவது நினைவஞ்சலி செலுத்தியிருக்கிறோமா?
அன்றும் இன்றும் மலையாளி எதற்காக என்றாலும் புரட்டிப்பார்க்கும் நூல்களில் ஒன்றான சப்ததாராவலி (சொற்களின் நட்சத்திர மண்டலம்) என்ற மலையாள அகராதியை உருவாக்கிய ஸ்ரீகண்டேஸ்வரம் ஜி. பத்மநாப பிள்ளைக்கு நாம் எதையாவது திரும்ப அளித்திருக்கிறோமா? அவருக்கு ஒரு சிலை? அவருடைய பெயரில் விருது? நினைவு இல்லம்? பல்கலைக்கழக இருக்கை? அப்படி எதுவுமே இல்லை. சப்ததாராவலியை விற்று பணம் சம்பாதித்தவர்கள் எதையாவது செய்தார்களா? ஒன்றுமே செய்யவில்லை.
ஜி.பத்மநாபபிள்ளை எதையுமே எதிர்பார்க்கவில்லை, அல்லது அவர் எதிர்பார்த்த எதுவும் கிடைக்கவில்லை. நோயால் அவஸ்தைப்பட்டு வதைபட்டு இறந்தார். அன்றைய நாளிதழ்களுக்கு இது அவ்வளவு பெரிய செய்தியாக இல்லை. நினைவேந்தல் கூட்டங்கள் எதுவுமே நடக்கவில்லை. 1895 முதல் 1923 வரை 28 வருடம் தனி ஒருவராக கடின உழைப்பு செய்துதான் ஸ்ரீகண்டேஸ்வரம் பத்மநாபபிள்ளை சப்ததாராவலியை முடித்தார். எழுதி, அச்சு மேற்பார்வை செய்து, பலமுறை வாசித்து திருத்தங்களை செய்தது எல்லாமே அவர்தான். மின்சாரம், தட்டச்சுப்பொறி, கணினி, ஜெராக்ஸ் ஏன் தேவையான அளவுக்கு காகிதங்கள் கூட கிடைக்காத காலத்தில் இந்த ஆச்சர்யமான செயல்பாட்டை எந்த ஒருவரின் உதவியும் இல்லாமல் அவர் செய்துமுடித்தார், பதிப்பாளர்கள்கூட இல்லை. கேரளத்தில் இதைவிட மகத்தான, தனித்துவமான, புனிதமான எத்தனை செயல்கள் உள்ளன? நம் மொழியில் இன்று இருக்கும் மற்ற அகராதிகளுக்கு எல்லாவகையான தொழில்நுட்ப வசதிகளும் துணையாக இருந்தன, பணம் செலவழிக்க தயாராக உள்ள பதிப்பகத்தாரும், முனைவர்பட்ட ஆய்வாளர்களும், பேராசிரியர்களும் இருக்கிறார்கள். அதை வாங்க வாசகர்களும் இருக்கிறார்கள். ஆனால் இன்றும் மலையாளமொழியில் சப்ததாராவலி என்ற அகராதிக்குத்தான் நட்சத்திர அந்தஸ்து. ஆனால் சப்ததாராவலியை உருவாக்கிய ஸ்ரீகண்டேஸ்வரம் பத்மநாபபிள்ளையின் புகைப்படத்தை பார்த்தால் எத்தனை பேரால் அவரைக் கண்டுபிடிக்கமுடியும்?
“நன்றிகெட்ட” என்ற பேச்சுவழக்கு சொல்லுக்கு சப்ததாராவலியில் பெரிய விளக்கங்கள் இல்லை. அதற்கு சமானமான சமஸ்கிருதத்திலிருந்து எடுத்தாளப்பட்ட “க்ருதக்னத” என்ற மலையாளச்சொல் அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த சொல்லுக்கு அதற்குமேல் விளக்கங்கள் வேண்டாம் என அவர் நினைத்திருக்கலாம். சப்ததாராவலி இன்று நாட்டுடைமையாக்கப்பட்டுவிட்டது,
அதை உருவாக்கிய ஸ்ரீகண்டேஸ்வரம் பத்மநாப பிள்ளைக்கு நாம் அளித்தது “நன்றியின்மை” என்ற சொல்லை மட்டும்தான்.
சப்ததாராவலியின், ஸ்ரீகண்டேஸ்வரம் பத்மநாப பிள்ளையின் வரலாறு மலையாள புத்தகங்களின் வரலாற்றில் அசாதாரணமான ஒரு அத்தியாயம். மலையாள நூல்களின் வரலாற்றில் வலியாக, வலிதாங்கும்தன்மையாக, தனிமையாக, தியாகமாக, நிறைந்திருப்பது சப்ததாரவலிதான். சப்ததாராவலி என்பது தனியொரு மனிதனின் வரலாறு. 1930ஆம் ஆண்டு சப்ததாராவலியின் இரண்டாம் பதிப்பில் முகவுரையில் ஸ்ரீகண்டேஸ்வரம் பத்மநாப பிள்ளை இப்படி எழுதியிருக்கிறார்:
“சுகம் (நலம்) என்ற சொல்லுக்கான அர்த்தம் இந்த அகராதியில் இருக்கிறது என்றாலும் அது எப்படிப்பட்டது என்பதை நான் இதுவரை உணர்ந்ததில்லை. என் குடும்பத்தாரும், உறவினர்களும், நண்பர்களும் அதற்கு சாட்சி.”
அவர் ஒருமுறைகூட நிம்மதியை உணர்ந்ததில்லை என்றாலும் “சுகம் (நலம்)” என்ற மலையாளச்சொல் வேறு சிலவற்றையும் சுட்டுகிறது(மயிர்க்கூச்செறிதல், உன்மத்தம், பரவசம்…) அவர் உருவாக்கிய அகராதி, அந்த மகத்தான செயல் வெற்றியடைந்திருக்கும்போது அவர் பரவசமடைந்திருக்கலாம்.
ஸ்ரீகண்டேஸ்வரம் பத்மநாபபிள்ளை இந்த அகராதியை உருவாக்குவதற்கான சொற்களைத்தேடி வாசிப்பை தொடங்கியது 1895-ல். 1897ல் எழுதத்தொடங்கினார். பத்மநாபபிள்ளை அன்றைய திருவனந்தபுரத்தின் நிலஅளவை பிரிவில் குமாஸ்தாவாக இருந்தார். அகராதியை உருவாக்குவதும் குமாஸ்தா வேலையும் ஒத்திசையவில்லை என்பதை புரிந்துகொண்ட பத்மநாபபிள்ளை ஒருவருடம் விடுமுறை எடுத்துக்கொண்டார். 1899ல் மேஜிஸ்ட்ரேட் தேர்வெழுதி திருவனந்தபுரத்தில் வக்கீலாக செயல்பட ஆரம்பித்தார். ஆனால், அகராதியை உருவாக்குவதில் மூழ்கியிருந்த அவர் நீதிமன்றத்திற்கு போகவே இல்லை, சுத்தமாக வழக்குகளே இல்லை, பணமும் கிடைக்கவில்லை. எஸ்.டி. ரெட்டியார் போன்ற பதிப்பாளர்களுக்காக திருவாதிரைப்பாட்டுகள் போன்ற ஜனரஞ்சகமான பாட்டுபுத்தகங்களை எழுதி அந்த புத்தகங்களின் பதிப்புரிமைத்தொகையை வைத்து வீட்டுசெலவுகளை செய்துகொண்டிருந்தார். மலையாள மொழிக்காக அவர் பெற்றுக்கொண்ட வறுமை. எளிய நாட்டார் பாடல்களையும், மற்ற கேளிக்கைப்பாட்டுகளையும் தன் வாழ்க்கைப்பாட்டிற்காக எழுதியிருக்கிறார். 1904-ல் அகராதிக்காக அதுவரை அவர் சேகரித்த சொற்களை ’கீசா நிகண்டு’ என்ற பெயரில் பாக்கெட் டிக்ஷ்னரியாக (சுருக்கமான அகராதி) பத்மநாபபிள்ளை வெளியிட்டார். 1916ல் அதன் பதிப்புரிமையை திருவனந்தபுரம் சாலைத்தெரு சந்தையில் ஆர்.டி.பிள்ளை என்ற புத்தகவியாபாரிக்கு விற்றார். முதல்மகன் பிறந்தவுடன் மதனகாமராஜ சரிதம் என்ற இசைநாடகம் எழுதித்தான் பிரசவத்திற்கான செலவை அவர் செய்ய வேண்டியிருந்தது.
ஆனால் பணத்தேவை அவரை அலைக்கழித்தபடியே இருந்தது. வக்கீல் வேலையை உதறிவிட்டு மீண்டும் அரசுவேலைக்கு சேர்ந்தார். அங்கும் தொடர முடியவில்லை, அகராதி வேலைக்காக, மலையாள மொழிக்காக வேலையை ராஜினாமா செய்தார். தாய்மொழிக்காக வேலையை விட்ட அவரை உறவினர் பரிகாசமாக பார்த்தனர். ஸ்ரீபத்மநாபனின் நாலு சக்கரம் பணத்தை (திருவிதாங்கூர் அரச சம்பளம்) உதறிவிட்ட, பெரும்பிழை செய்த தன்னை “நடுக்கடலிலும் நாய் நக்கிதான் குடிக்கும்” என்று உறவினர்கள் கேலிசெய்ததாக பத்மநாபபிள்ளை தன் டைரியில் எழுதியிருக்கிறார். மீண்டும் வக்கீலாக ஆனார். வழக்குகளே இல்லை. வீட்டுச்செலவுக்காக பாட்டுப்புத்தகங்களை எழுதினார், சொற்களின் நட்சத்திர மண்டலத்தில் மூழ்கிவிட்டார். ஒருவழியாக 1917ல் சப்ததாராவலியின் கையெழுத்துப்பிரதி முழுமையடைந்தது. 20 வருடங்கள் பிடிவாதமாக தொடர்ந்து எழுதி உருவாக்கிப்பட்டது சப்ததாராவலி. அது மலையாள சொற்களின் பால்வெளி மண்டலம். இவ்வளவு பெரிய நூலை அச்சடிக்க பதிப்பாளர்கள் யாரும் தயாராக இல்லை. பெருநஷ்டம் ஏற்பட சாத்தியமுள்ள இந்த அகராதியை பதிப்பிக்க மறுத்த பதிப்பாளர்களை நாம் மலையாள மொழிக்காக இதை ஏன் செய்யவில்லை என்று எப்படி குறைசொல்லமுடியும்? கடைசியில் சப்ததாராவலியை பல பகுதிகளாக பிரித்து கொஞ்சம் கால இடைவெளி விட்டு வெளியிடலாம் என்று முடிவுசெய்யப்பட்டது. திருவனந்தபுரம் சாலைத்தெருவில் தன் நண்பரும், புத்தக விற்பனையாளருமான ஜெ.கேப்பையுடன் சேர்ந்து 1917இல் நவம்பர் 13-ஆம் தேது பத்மநாபபிள்ளை சப்ததாராவலியின் முதல் பகுதியை வெளியிட்டார். அது கேரள வரலாற்றில் நட்சத்திரச்சின்னத்தால் அடையாளப்படுத்தப்படவேண்டிய நாள். 1923ல் கடைசியில் 22ஆம் பகுதி வெளிவந்ததுடன் சப்ததாராவலியின் முதல்பதிப்பு முழுமையாக வெளிவந்துவிட்டது. மொத்தமாக 1584 பக்கங்கள்.
பத்மநாபபிள்ளை 1930ல் வந்த பதிப்பிற்கு எழுதிய முகவுரையில் ஒருபகுதி:
அகராதியை உருவாக்க முடியாது. இந்த அகராதியை விற்று பணம் சம்பாதிக்கவேண்டும் என்பது என் நோக்கமில்லை. இது மலையாள மொழியை ஆராய்பவர்களுக்கு எல்லையற்ற சாத்தியம்கொண்டதாக இருக்கவேண்டும் என்பதை இலக்காகக்கொண்டு 34 ஆண்டுகளை செலவாக்கிய பின்பும் இது எனக்கு உள்ளுர திருப்தியளிக்கும் நிலையை அடையவில்லை. ‘உடனடியாக ஒரு அகராதி வெளியிட்டுவிடவேண்டும்’ என்று நினைப்பவர்கள் இதை நினைவில் வைத்துக்கொள்ளவும். அகராதியை ஒவ்வொருமுறை பதிப்பிக்கும்போதும் அதை திருத்த வேண்டிய பொறுப்பு அகராதி உருவாக்கத்தில் பங்குபெற்றவர்களுக்கும், பதிப்பாளர்களுக்கும் இருக்கிறது.
இன்று கேரளத்தின் இலக்கிய செயல்பாட்டிற்கான கூட்டமைப்பு (சாகித்ய பிரவர்த்தன சககரண சங்கம்) பதிப்பிக்கும் சப்ததாராவலி நவீன d.t.p அச்சில் வந்த பதிப்பில் 1769 பக்கங்கள் உள்ளன. டி.ஸி.புக்ஸின் டெமி ¼ பதிப்பில் 2055 பக்கங்கள். ஸ்ரீகண்டேஸ்வரம் பத்மநாபபிள்ளையின் மரணம்வரை மூன்று பதிப்புகள்தான் வெளிவந்திருக்கின்றன. அதற்குப்பின் வந்த பதிப்புகளில் புதிய சொற்கள் சேர்க்கப்பட்டன. அவற்றிற்கெல்லாம் தந்தைவடிவம் இன்றும் ஸ்ரீகண்டேஸ்வரம் பத்மநாபபிள்ளைதான். கறாராக பார்த்தால், இன்றைய சப்ததாராவலியில் உள்ள சொற்களில் முப்பது சதவிகிதம் சொற்கள் பத்மநாபபிள்ளையுடையது அல்ல. அகராதிகள் வளரவேண்டியவை அல்லவா, அவை வளரட்டும்.
இப்போதும் மலையாளி ஒரு அனுஷ்டானம் போல சப்ததாராவலியை புரட்டிப்பார்க்கிறான். ஆனால், ஸ்ரீகண்டேஸ்வரம் பத்மநாபபிள்ளைக்கு நாம் எதை திருப்பி அளித்திருக்கிறோம்? ஷேக்ஸ்பியர் ஹேம்லெட்டில் சொல்வது போல நாம் வாசிப்பது “சொற்கள், சொற்கள், சொற்களை மட்டும்தான்”. அந்த சொற்களைத்தேடி நிம்மதியை இழந்தவருக்கு அளிக்கப்பட்டது இன்னொரு சொல்: “நன்றியின்மை”.
(தமிழாக்கம் அழகியமணவாளன்)