தூரன் இசை-“நாதம் எழுக!” அகரமுதல்வன்


நாதஸ்வர தவில் இசை அறிவிப்பைப் பார்த்ததும் கொஞ்சம் பொறாமையாக இருந்தது.  ஆகுதி நடத்திய விழாவொன்றிற்காக இதுபோன்றதொரு  முன்னெடுப்பை விருப்பத்துடன் செய்ய எண்ணினேன். பிறகு அது கைகூடாமல் போயிற்று.  எனக்கும் நாதஸ்வர தவில் இசைக்கும் சிறுவயது முதலே பெரிய பிணைப்பு இருக்கிறது. ஈழத்து கோவில் திருவிழாக்களில், மங்கலச் சடங்குகளில் எப்போதும் நாதஸ்வர – தவில் இசைக்கு முதன்மை இடம்.  என்னுடைய ஆச்சிக்கு கலை (அருள்) வந்து ஆடுகிற போது தவில் வித்துவான்களிடமும் ஒருவகையான ஆட்டம் பிறக்கும். அவர்கள் தங்களது இசையால் தெய்வத்தை ஆடச்செய்யும் வல்லபர்கள்.

நாதஸ்வர வித்துவான்கள் எப்போதும் விழிப்புடன் இருப்பவர்கள். அவர்களுடைய உடல் மொழியிலும் ஒரு சுருதி  இருக்கும். நனைந்த சீவாளியை கழற்றி வேறொரு சீவாளியை தெரிவு செய்யும் சில நிமிடங்களில் எத்தனையோ நுணுக்கம் பார்ப்பார்கள். அணைசு வழியே நீர்ப்பாம்பாக கீழிறங்கும் ஸ்வரநீரைக் கண்டு உள்ளம் பெருகியவன் நான். அவர்கள் மேனியில் வியர்வையாய் வழிந்தோடும் ஜவ்வாது வாசனைக்கு எத்தனையோ நாத அசைவுகள் இருக்கும்.

ஆனால் தவில் வித்துவான்கள் வேறு விதமானவர்கள். சாகசம் அறிந்தவர்கள். தங்களது புலமை பொருந்திய வித்துவங்களால் கூடியிருக்கும் பக்தர்களை ரசிக்க செய்பவர்கள். மங்கலம் என்றால் மங்கலம். உக்கிரம் என்றால் உக்கிரம். துள்ளல் என்றால் துள்ளல். அமைதி என்றால் அமைதி. என்ன வேண்டும் உன் தெய்வத்துக்கு என்று கேட்பவர்கள்.சாமி வந்து ஆடுபவர்களுக்கு தவில்காரர்கள் தங்களது இசையால் கட்டளை இடுவார்கள். அவர்களுக்கு தெய்வம் அந்த உரிமையை வழங்கியிருக்கிறது என்பாள் ஆச்சி.

அகரமுதல்வன் பதிவு – தூரன் விருது – நாதம் எழுக!

முந்தைய கட்டுரையுகத்துளி
அடுத்த கட்டுரைஸ்ரீகண்டேஸ்வரம் பத்மநாபப்பிள்ளைக்கு நாம் அளித்த சொல் – பி.கே.ராஜசேகரன்