வான்நகர்- கடிதம்

வெண்முகில் நகரம் மின்னூல் வாங்க

 வெண்முகில் நகரம் வாங்க

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு 

சென்ற வாரம் வெண்முரசின் ஆறாவது  பாகமான வெண்முகில்நகரத்தை  வாசித்து முடித்தேன். அந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஐவரை மணந்த திரௌபதி அவர்களுடன் எவ்வாறு வாழப்போகிறாள் என்பதற்கான விடையை முதல் ஆறு அத்தியாயங்கள் அளித்தன. அதுவரை அவ்வளவாக அறியாத நகுலன் மற்றும் சகதேவனின் ஆளுமைகளை திரௌபதியுடன் அவர்கள் மேற்கொண்ட உரையாடலின் மூலம் அறிய முடிந்தது.

இந்த நாவலில் நான் மிகவும் அணுக்கமாக உணர்ந்த கதாபாத்திரம் பூரிசிரவஸ். துடிப்பான, புத்திசாலித்தனமான, பெரும் கனவுகள் கொண்ட சற்று அப்பாவியான அவனை என் நண்பன் எனவே எண்ணினேன். இளமையின் துடிப்பால் தேவிகை, விஜயை மற்றும் துச்சளையுடன் காதல் கொண்டு அவ்வனைத்து காதலையும் வென்றெடுக்க அவன் செய்யும் முயற்சிகளை புன்னைகையுடன் வாசித்தேன். ஆனால் அவன் போட்ட அனைத்து கணக்குகளும் தவறிப்போய் அவன் அப்பெண்களாலேயே இழிவு செய்யப்படும் போது  அவனுக்காக வருந்தினேன்

பாஞ்சாலத்தை துரியோதனனும் கர்ணனும் தாக்கும் அத்தியாயத்தை நான் மிகுந்த ஆர்வத்துடன் வாசித்தேன்அப்போரில் கர்ணனின் நிதானம் அவன் பயன்படுத்திய உத்திகள் ஆகியவற்றின் வர்ணனைகள் நானும் பூரிசிரவஸைப்  போல அப்போரில் பங்குகொண்ட அனுபவத்தை அளித்தது. கௌரவர்களின் தோல்விக்கான காரணத்தை பின்வரும் அத்தியாயங்களில் கிருஷ்ணன் விளக்கும் போது ஒரு மர்மக்கதையின் முடிச்சுகள் அவிழ்வதைப் போல உணர்ந்தேன்.

பூரிசிரவஸிடம் காட்டிய அன்பு, கர்ணனை சமாதானப்படுத்தும் விதம் ஆகியவை துரியோதனனின் ஆளுமையின் இனிய மறுபக்கத்தை காட்டுவதாக இருந்தது. தனது மதுபர்க சடங்கின் போது கர்ணனும், துச்சாதனனும் வருவார்களா  என்று அப்பாவியாக அவன் கேட்பதையும் அரண்மனைப்பெண்களால் சூழப்பட்டிருக்கும் போது அவன் அடையும் தடுமாற்றத்தையும் மிகவும் ரசித்தேன்.

திரௌபதியின் நகர் நுழைவிற்கு முன்பு பாண்டவர்களும் கௌரவர்களும் சந்தித்துக்கொள்ளும் இடம் நெகிழ்ச்சியில் கண்ணீர் வரவைப்பதாக இருந்தது. தூர இருக்கும் போது அவர்கள் கற்பனைகளில் வஞ்சத்தை வளர்த்துக் கொள்வதும் நேரில் சந்தித்து ஒரு தொடுகையின் பிறகு அனைத்தும் கரைந்து பொருள் இழந்துவிடுவதும் வாசிக்கையில் அற்புதமான அனுபவமாக இருந்தது.

திரௌபதியின் நகர் நுழைவின் மாபெரும் கொண்டாட்டத்திற்குப் பின் பூரிசிரவஸும் சாத்யகியும் ஒரு அமைதியான சூழலில் நட்பாக உரையாடுவதும், இறுதியில் பூரிசிரவஸ்ஆம், இனி சிரிப்பு தான்எனக்கூறி விடைபெறுவதும் நாவலுக்கு இனிய முடிவாக அமைந்தது.

அன்புடன்

கார்த்திக்

கிருஷ்ணன்கோவில், நாகர்கோவில் 

முந்தைய கட்டுரைநாவலெனும் கலைநிகழ்வு- வெளியீட்டுவிழா
அடுத்த கட்டுரைமொஹரம், அல் கிஸா- கடிதம்