குருதியின் முடிவில் – ரம்யா

அன்பு ஜெ,

நேற்றிரவு குருதிச்சாரல் முடித்தேன். இளைய யாதவன் இதற்கு மேல் இரந்து நிற்க முடியாது என்ற கணம் சோர்வடையச் செய்திருந்தது. மானுடத்திற்கு முன் இரந்து நின்ற இயேசுவை, காந்தியை நேற்று முழுவதும் நினைத்துக் கொண்டிருந்தேன். மானுடத்தின் எந்த இழிவடைந்த ஒன்று அதை நோக்கிய ஏளனப்பார்வையை வீசுகிறது என்று சிந்தித்திருந்தேன்.

குருதிச்சாரலில் நாயகனாக எழுந்து நின்ற துரியன் கலியின் கையில் தன்னை முழுவதும் ஒப்புக் கொடுத்த தருணமும், கர்ணனிடம் துரியன் உணர்வுப்பூர்வமாக நட்பை வெளிப்படுத்திய தருணமும், இளைய யாதவன் இரந்து நின்றதும், வேதமுடிவு பற்றிய அவனின் உரையும் உச்சமாக அமைந்திருந்தது. பொதுவாக ஒவ்வொரு நாவல் வரிசை முடித்ததும் ஒரு வாரமாவது தொகுத்துக் கொள்ள நேரம் ஒதுக்குவேன். ஆனால் இமைக்கணத்தை நெருங்குவது தரும் பதற்றத்தை குருதிச்சாரல் தொடங்கும்போதே அடைந்துவிட்டேன்.

கீதா முகூர்த்த தருணம் என்பார்கள். அதை பல முக்கிய தருணங்கள், மனிதர்களை சந்திப்பதிலும் இருக்கிறது என்று நினைப்பதுண்டு. யாவற்றிற்கும் ஒரு தொடக்கமும், பயணமும், முடிவும், விலகலும் அமைதலும் உண்டு. விஷ்ணுபுரம் முடித்தபோது இப்பயணம் இன்னும் முடியவில்லை என்று நினைத்திருந்தேன். வெண்முரசு என்ற இருபத்தியாறு நாவல் வரிசையை நீங்கள் எழுதியிருப்பது தெரிந்து மகிழ்ச்சியடைந்தேன். நீண்ட பயணம் இருக்கிறது என்ற உவகை இருந்தது. வெண்முரசின் பயணத்தின் மையம் கீதைத்தருணம் என எங்கோ ஒரு புள்ளியில் உணர்ந்தேன். இதற்கிடையில் கீதைத் தருணம் பற்றி உங்கள் கட்டுரைகள் வாசித்து விட்டு தனியாக கீதையைப் படிக்கலாம் என முயற்சி செய்தேன். முடியவில்லை. அதனால் வெண்முரசின் கீதைத் தருணத்திற்காக காத்து நின்றேன்.

வெண்முரசின் இந்த பதினேழாவது நூலுக்கு முன் நின்று இந்தப்பயணத்தை திரும்பிப்பார்க்கிறேன். மிக மிக நீண்ட அகப்பயணங்கள், அலைக்கழிதல்கள், அதற்கு இணையாகவே புறத்திலும் வெண்முரசுடன் ஏதோவகையில் வாழ்க்கை தொடர்பிலிருந்ததை உணர்கிறேன். இன்று அதிகாலை எழுந்து இமைக்கணம் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதிகாலையில் அதை உணர்ந்த போது மேலும் சுருண்டு கண்களை இறுக்கிக் கொண்டு படுத்துக் கொண்டேன். மிகப்பெரிய ஒன்றை நெருங்குவதன் பயம். அது தீர்ந்துவிடும் என்பது தரும் பதற்றம் இருந்தது.

தூரத்துப் பனிமலையும்
நெருங்கியபின் சுடுகல்லாகும்
கடந்தாலோ
ரத்தம் சவமாகிக் கரைந்த
செம்புழுதி

என்ற அபியின் வரிகளை வாசித்திருந்தேன். உங்களுக்கு எழுதிவிட்டால் ஆரம்பித்துவிடலாம் என்று தோன்றியது ஜெ. இமைக்கணத்திற்காகவும் அது அளிக்கப்போகும் அனுபவத்திற்காகவும் நன்றி.

பிரேமையுடன்

ரம்யா.

வெண்முரசு மின்னூல்கள் வாங்க

வெண்முரசு நூல்கள் வாங்க

முந்தைய கட்டுரைதமிழ் விக்கி -தூரன் விருதுவிழா இன்று மாலை
அடுத்த கட்டுரைமுருகபூபதி