மாபெரும் மர்மத்தின் கதை

வெண்முரசு மின்னூல்கள் வாங்க

வெண்முரசு நூல்கள் வாங்க

வணக்கம் ஜெயமோகன் அவர்களே,

முதலில் இப்படியொரு படைப்பை புதுப்பித்து சாமானியரையும் வெண்முரசு நாவல் வடிவில் மகாபாரதம் வழியாக பயணம் செய்ய வைத்ததற்கு மிக்க நன்றி.

மகாபாரதம் போன்ற இதிகாசங்களை கையாளும் போது அதன் உண்மைத் தன்மையை இழந்து அந்நியனாக அந்த கதாப்பாத்திரத்தை எழுதியவர்களே இங்கு அதிகம்.என் பள்ளி காலங்களில் எனது தாய் வழி தாத்தா தான் இராஜாஜி ன் வியாசர் விருந்து புத்தகத்தை அறிமுகம் செய்தார்.நாங்கள் சிறு வயதிலிருந்தே வைணவத்தின் பால் ஈர்ப்பு கொண்டவர்கள் எங்கள் தந்தை வழி தாத்தா சாத்யகி போல் தொழும்பன் குறியிடாமல் கிருஷ்ணர்,இராமானுஜர் மீது காதல் கொண்டவர்.

அதனாலே என்னவோ சிறுவயதிலேயே வியாசர் விருந்து மனப்பாடம், பிறகு ஒவ்வொரு முறையும் படிக்கும் போதோ யாராவது உபன்யாசம் செய்யும் போதோ ஒவ்வொரு முறையும் புதிய கதாப்பாத்திரங்கள் அறிமுகமாகும். கிட்டத்தட்ட 2015 லிருந்து வெண்முரசு வாசிக்கிறேன்.அப்படித்தான் பீஷ்மர், பரசுராமர், திருதராஷ்டிரர், காந்தாரி, சிகண்டி, துருபதன், துரோணர், பாண்டு, வியாசர், விதுரன், பலராமன், துரியோதனன்,துச்சாதனன், கர்ணன்,ருக்மி,ஜெயத்ரதன், சாத்யகி, திருஷ்டத்யும்னன், சிசுபாலன், ஜராசந்தன், கம்சன், திரௌபதி, கீசகன்,உத்தரன், கிருபர், சிசுபாலன், அஸ்வத்தாமன், சகுனி,பூரிசிரவஸ், அபிமன்யு , சுபத்திரை என நீளும் வரிசையில் பல ஆச்சரியங்கள், ஆற்றாமை, துயரம், காதல், நட்பு, வீரம்,புத்தி சாதுர்யம், சூழ்ச்சி, வஞ்சகம், சுயநலம்,பொறையுடைமை, செஞ்சோற்று கடன் என் பல சந்தர்ப்பங்களில் மானுட தரிசனத்தை மாமழையாக வாசகர்களுக்கு அளித்துள்ளீர்.

உங்களை முதன் முதலில் செங்கல்பட்டு புத்தகக் கண்காட்சியில் காணும் வாய்ப்பு கிடைத்தது அவர் தான் இவர் தான் என உங்களை யாரோ அறிமுகப்படுத்தியதை தூரத்தில் இருந்து பார்த்தேன்.

வெண்முரசில் எனக்கு பிடித்த கதாப்பாத்திரம் சிகண்டி, விஸ்வசேனர்.பீஷ்மரைப் போல மாறியவர்கள் ஒருவர் உருவத்தால் மற்றொருவர் குரோதத்தால்.அக்னிவேசர் சிகண்டி உரையாடல் , கிருபி சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்ல வேண்டிய நேரத்தில் துரோணர் மற்றும் அஸ்வத்தாமன் எடுத்துரைப்பது திருஷ்டத்யும்னன்துரோணர்துருபதன் மனப் போராட்டம் அருமை.திருஷ்டத்யும்னன்சாத்யகி, பூரிசிரவஸ்சாத்யகி அணுகியும் அணுகாமலும் மலர்ந்த நட்பு.குந்திகர்ணன்சல்லியர் பாசத் தவிப்பு. கிருஷ்ணர்சகுணிகணிகர்விதுரர்குந்தி துல்லியமான துலாமுள்.

மற்றபடி மாவீரர்கள் பீஷ்மர், பரசுராமர், கர்ணன் , பலராமன் , துரோணர் நம் மண்ணின் நம் சமகால கால்படாத தெய்வங்கள். எங்கோ கிருஷ்ணனை வர்ணிக்க தெய்வம் மண்ணில் இறங்கிய மானுடர் என கூறியிருப்பீர் கள். வலிமையிருந்தும் வீழ்ந்தவர்கள்.துரியோதனன்கர்ணன்துச்சாதனன் நிழலோடு ஒன்றுதல்.      

நன்றி

இப்படிக்கு,

ராம்குமார் லக்ஷ்மிரங்கன்

பொறியாளர்

சூரியனார் கோவில்.

கும்பகோணம்.

அன்புள்ள லக்ஷ்மிரங்கன் அவர்களுக்கு,

நன்றி.

வெண்முரசுக்கு வந்துகொண்டிருக்கும் வாசிப்புகள் வழியாக நானே அதை மீண்டும் கண்டடைந்துகொண்டிருக்கிறேன். அதன் பிரம்மாண்டமான அளவே ஒவ்வொரு கதைமாந்தருக்கும் அவர்களுக்குரிய விரிந்த வெளியை உருவாக்கி அளிக்கிறது என இப்போது படுகிறது. வேதாந்தஞானியாகிய, வேதாந்தம் தன்னைக் கடந்து செல்லும் தருணமென ஆகிய கிருஷ்ணனை ஓரளவேனும் எழுதிவிட்டதாக உணர்கிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைதமிழ்விக்கி- தூரன் விருது விழா இன்று தொடக்கம்!
அடுத்த கட்டுரைஅல் கிஸா உரையாடல்