சங்கம், காதல்,காமம்

 

அன்புள்ள ஜெ

சங்க இலக்கியத்தில் காதல் சொல்லடைவு

பார்க்க : காதல் சொல்லடைவு

ராஜரத்தினம்

சங்கசித்திரங்கள் நூல் வாங்க

சங்கசித்திரங்கள் மின்னூல் வாங்க

அன்புள்ள ராஜரத்தினம்

நன்றி, நான் எப்போதும் பார்க்கும் ஓர் இணையப்பக்கம் அது. அச்சுவடிவிலும் என்னிடம் பல சொல்லடைவுகள் உள்ளன.

சங்க இலக்கியம் என்பது இங்கே பாடமாக பலகாலமாக இருந்துள்ளது. பாடமாக இருக்கும் ஒன்றின்மேல் ஒரு பாடக்கல்வி வாசிப்பு நிகழ ஆரம்பிக்கிறது. நெடுங்காலம் அது நிகழ்ந்து நிகழ்ந்து ஓர் ஆழமான தடமாக ஆகிவிடுகிறது. பட்டியலிடுதல், வகைப்படுத்துதல், மனப்பாடம் செய்தல் என்றே அவ்வாசிப்பு செல்கிறது. அதில் எந்த வகையான அகத்திறப்புக்கும் இடமளிக்காததாக அது மாற்றப்பட்டுவிடுகிறது. அதை கல்வியாளர் ஒருவகையான அர்த்தமற்ற சொற்குவையாக ஆக்கிவிடுவார்கள்.

அந்தச் செயல்பாட்டுக்கு எதிரான ஒன்றாகவே நவீன இலக்கியம் சார்ந்த வாசிப்பு இருக்கவேண்டும் என்பதே என் எண்ணம். சங்கசித்திரங்கள் முதல் நான் எழுதி- பேசி வருவது இதைத்தான். ஒன்று வாழ்க்கையுடன் இணைந்த ரசனை. இரண்டு, பிறதுறை அறிதல்களை இணைத்துக்கொண்டு நிகழ்த்தும் மொத்தச் சித்திரம். மூன்று, பலவகையான ஊகங்களையும் வாசிப்புகளையும் நிகழ்த்திப்பார்க்கும் சுதந்திரம். நான் நவீன வாசகர்களிடம் எதிர்பார்ப்பது அதைத்தான்.

காதல் அல்லது காதலன் என்னும் சொல் சங்கப்பாடலில் உண்டு என்று தெரியாத அளவுக்கு நான் சங்கப்பாடல்களில் வாசிப்பற்றவன் என ஒருவர் நம்புவாரென்றால் அவருடைய அறிவுத்திறனை எண்ணி வியப்பதையன்றி நான் எதைச் சொல்லமுடியும்? என் பேச்சை கேட்டதுமே ஒருவருக்கு காதல் எனும் சொல் சங்கப்பாடல்களில் உண்டு என்று கண்டுபிடிக்க மட்டுமே தோன்றுகிறது என்றால் அவருடைய சங்கப்பாடல் வாசிப்பைப் பற்றி என்ன சொல்ல?

காதல் பற்றிய அச்சொல்லடைவையே நீங்கள் கவனிக்கலாம்.முதல் வரியே ‘காதல் அம்சிறார்’ , அது அன்புக்குரிய குழந்தைகள் என பொருள் வருகிறது. மலைநாடன் காதல் மகளே என்னும் சொல்லாட்சியில் அது அன்புக்குரிய மகள். மகள் உறவு, மைந்தர் உறவு, ஆசிரியருடனான உறவு என அனைத்துக்கும் உரிய சொல்லாகவே சங்கப்பாடல்களில் காதல் உள்ளது. தந்தைக்கு மகள்மேல் காதல் என்றும், தாய்க்கு மகன்மேல் காதல் என்றும் அன்று சொல்லமுடியும். இன்று எதை காதல் என்கிறோமோ அதற்கான சொல் அன்று காமம் என்பதே. அதையே அவ்வுரையில் சொல்கிறேன்.

சங்கப்பாடல்களில் உயர்காதல் இல்லை, உடல்சார் காதல் அல்லது காமம் ஓங்கி நிற்கிறது என்னும் மதிப்பீடு நான் முன்வைப்பது அல்ல. அதற்கு ஒரு நூற்றாண்டு வரலாறு உண்டு. அவர்கள் இலட்சியக்காதலை, உன்னதக் காதலை அதாவது தெய்வீகக் காதலை முன்வைக்கும் பிற்கால காவியங்களை விதந்தோதுபவர்கள். அவர்களின் ஆதர்சநூல் கம்பராமாயணம். எஸ்.வையாபுரிப்பிள்ளை, டி.கே.சி முதல் புதுமைப்பித்தன் வரை ஒரு மரபு அது.

அவர்களுக்குப் பதிலாக, பிற்கால தெய்வீகக்காதல் சார்ந்தவை வெறும் இலட்சிய உருவகங்கள், அந்தரத்தில் நிற்கும் அணிகள் மட்டுமே என்று வாதிடும் ஒரு தரப்பு உண்டு. சங்கப்பாடல்களிலுள்ள மண்சார்ந்த தன்மை, வாழ்வோடியைந்த தன்மை அதன் அழகும் மேன்மையும் ஆகும் என்று அவர்கள் வாதிடுவார்கள்.

என் உரையை நீங்கள் கேட்கலாம். அதில் நான் என் ஆசிரியரின் அத்தரப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்றே சொல்கிறேன். ஆனால் என்னால் அவரிடம் மறுக்கமுடியாது என்கிறேன். இன்று நாம் காமம்  – காதல் என்னும் பிரிவினையைச் செய்கிறோம். காதலை காமம் அற்ற ஓர் இலட்சிய உருவகமாக எண்ணுகிறோம். காதல் என்னும் சொல்லை அந்த இலட்சிய உறவுக்கு மட்டுமே பயன்படுத்துகிறோம். இந்தப் பொருளில் சங்ககாலத்தில் அச்சொல் இல்லை. ஆண்பெண் உறவுக்கு மட்டுமான சொல்லாக காமம் என்பதே உள்ளது என்று அவ்வுரையில் சொல்கிறேன்.

ஆனால் சங்கப்பாடல்களில் அது உடல்சார் உணர்வு மட்டுமாக இல்லை என்றும், அது அந்த உணர்வை நுண்மையாக்கி, அழகுருவகமாக ஆக்கி உயர்நிலைக்குக் கொண்டுசெல்கிறது என்றும் சொல்கிறேன். அதையே சப்ளைம் என்கிறேன். அந்தச் செயல்பாடு சங்ககாலத்திற்கு நெடுங்காலம் முன்னர் குகையோவியங்களிலெயே தொடங்கியது என்றும், சங்ககாலம் அதை உச்சநிலையில் நிகழ்த்துகிறது என்றும், காமம் அதன் தூய அழகுருவை சங்ககாலத்திலேயே அடைந்துவிட்டது என்றும், அதன் நீட்சியே பின்னர் கற்பனாவாதக் காலகட்டத்திலும் அதற்குப்பின் பக்திக்காலகட்டத்திலும் வெளிப்பட்டது என்றும் சொல்கிறேன். அந்த அதிநுண்ணுருவ காமத்தின், ஆண்பெண் உறவின் உயர்நிலையின் அழகிய படிமம்தான் யானையை தீண்டும் வாழைக்குருத்து. அந்த உரை நிறைவடைவதே அதில்தான்.

ஓர் அரங்கில் வந்தமர்ந்த எளிய வாசகர்களுக்குக் கூட தெளிவாகச் சென்று சேர்ந்த இந்தக் கருத்து ஏன் தங்களை சங்க இலக்கியம் அறிந்தவர்கள் என்று நம்புகிறவர்களுக்கு பிடிகிடைக்கவில்லை? அதுதான் நம்முடைய தேங்கிப்போன கல்வி அளிக்கும் தடை. அதை உடைப்பது பற்றியே பேசிக்கொண்டிருக்கிறேன். அந்த ஒற்றைப்படைப் பார்வையை கடக்காமல் சங்கக் கவிதையை அல்ல, எந்தக் கவிதையையும் புரிந்துகொள்ள முடியாது. இக்காரணத்தால்தான் புதுக்கவிதைகூட கல்லூரிகளில் நுழைய முடியாமலிருக்கிறது. அங்கே கவிதையை பாடமாக வைத்தால் உடனே அகராதிச்சொற்பொருள் கொண்டு, அட்டவணைப்படுத்தி அதை சீரழிப்பவர்கள் இவர்கள்தான். 

ஜெ

கைவிடு பசுங்கழை 1

கைவிடு பசுங்கழை -2

பூவிடைப்படுதல்-1

பூவிடைப்படுதல் 2

பூவிடைப்படுதல் 3

பூவிடைப்படுதல் 4

பூவிடைப்படுதல் 5

சங்க இலக்கிய வாசிப்பு

முந்தைய கட்டுரைசிந்து
அடுத்த கட்டுரைநூறு நாற்காலிகள், அமெரிக்கா