கிருத்திகா நூல்கள் மறுபதிப்பு

கிருத்திகா- தமிழ் விக்கி

அன்புள்ள ஜெ,

கோவைப் புத்தகக் கண்காட்சியில் நேற்று ஸீரோ டிகிரி அரங்கத்துக்கு நீங்கள் வந்திருந்தபோது கிருத்திகாவின் படைப்புகளை நாங்கள் வெளியிட்டிருப்பதைக் கண்டு அவரைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தீர்கள். ஆனால் பலர் தொடர்ச்சியாக உங்களிடம் பேச வந்ததால் உங்கள் பேச்சு தடைபட்டுப்போயிற்று. மேலோட்டமாக அவர் யார் என்பது தெரிந்தாலும் அவருடைய படைப்புகளைப் பற்றி உங்கள் கருத்துகளை தெரிந்து கொள்ள ஆசை.

நன்றி!

காயத்ரி ஆர்.

*

அன்புள்ள காயத்ரி

கிருத்திகா என்னும் மதுரம் பூதலிங்கம் நாகர்கோயில்காரர். அவருடைய கணவர் பூதலிங்கம் ஐசிஎஸ் அதிகாரி. இந்திய ஐந்தாண்டுத் திட்டங்களில் பணியாற்றியவர். அவர் மகள் மீனா சுவாமிநாதன் புகழ்பெற்ற அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதனின் மனைவி.

கிருத்திகாவுக்கு டெல்லி உயர்குடிச் சூழல் மிக நன்றாக அறிமுகமானது. அவர் தமிழில் அச்சூழல் பற்றி எழுதிய படைப்புகள் அவ்வகையில் மிக முக்கியமானவை. தமிழ் நவீன இலக்கியத்தில் அவ்வாறு உயர்தளத்து அரசியலை எழுதிய இன்னொருவர் இல்லை. என்ன காரணம் என்றால் தமிழிலக்கியமே பொதுவாக நடுத்தரவர்க்கத்தினரால் எழுதி வாசிக்கப்படுவது. உயர்வர்க்கத்தவர் தமிழில் பேசுவதோ, எழுதுவதோ, வாசிப்பதோ இல்லை. அவர்களில் பெரும்பாலானவர்களுக்குத் தமிழ் மொழியே தெரியாது — தமிழ் தமிழ் என மேடையில்பேசும் அரசியல்வாதிகளின் வீடுகளிலும் அப்படித்தான். அவர்கள் தமிழ் இலக்கியம் என ஒன்று இருப்பதையே அறிந்திருக்க மாட்டார்கள். அவ்வகையில் ஒரே விதிவிலக்கு கிருத்திகா.

கிருத்திகாவின் தர்கக்ஷேத்ரே, புகைநடுவில், புதிய கோணங்கி போன்ற நாவல்கள் ஒரு வகையான விசித்திரக் கலவைகள். டெல்லி அரசியல்சூழலில் மகாபாரத உருவகங்கள் ஊடுருவுகின்றன. உயர்ந்த இலட்சியக்கனவுகளுடன் ஊடாக நையாண்டியும் அங்கதமும் கலக்கின்றன. வாஸவேச்வரம் வேறுபட்ட படைப்பு. குமரிமாவட்டத்திலுள்ள திருப்பதிச்சாரம் (திருவெண்பரிசாரம்) அதை கதைக்களம். கிருத்திகா இளமையைக் கழித்த ஊர். அந்தச் சிற்றூர் விதிகளின் படியல்ல, விதிமீறல்களின்படி இயங்குகிறது என்பதன் சித்திரம் அது. பாலியல் விதிகள் உட்பட.

எழுதப்பட்ட காலத்தில் தீவிர வாசகர் சிலர் அன்றி அதிகம்பேரால் அவருடைய நாவல்கள் கவனிக்கப்படவில்லை. பெண் எழுத்தின் தனித்தன்மைகள் அடையாளம் காணப்படும் இன்றைய சூழலில் கிருத்திகா மேலும் கூர்ந்து வாசிக்கப்படக்கூடும்,

கிருத்திகாவின் எல்லா நாவல்களையும் ஸீரோ டிகிரி பதிப்பகம் புதிய பதிப்புகளாக வெளியிட்டுள்ளது. நீண்ட இடைவேளைக்குப்பின் அவை மறுபதிப்பாகின்றன

ஜெ

முந்தைய கட்டுரைபெருந்தேன் நட்பு- வெளியீட்டு விழா உரை
அடுத்த கட்டுரைஞானியரின் உலகம்