எய்டனின் முகம்

இன்றுதான் வெள்ளையானையை கடந்து வந்தேன். முன்னுரை படித்ததுமே இது வேற மாதிரியான அசாதரண சூழல் நிறைந்த கதை என புரிந்துவிட்டது.

பல பக்கங்களை எளிதாக படித்து விடமுடியவில்லை. இனி சென்னையிலிருந்து செங்கல்பட்டு வழியாக செல்லும்போதெல்லாம் அந்த கருப்பு புகையினையும், தொர தொர என்ற கூப்பாடையும் எப்படி கடக்கப்போகிறேனோ..,

கனத்த இதயத்துடன் கடைசிப்பக்கத்தை மூடி வைத்தேன்பின்பு இந்த சம்பவங்களை இணையதளத்தில் தேடினேன். எங்கும் இந்த சம்பவம் பதிவாகவில்லை அயோத்திதாசர் வாழ்க்கை குறிப்பிலும்கூட இல்லை.

ஏய்டனைத் தேடி தேடி அலைந்தேன் என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஏய்டன் உண்மை கதாப்பாத்திரமா? இல்லை கற்பனையா? ஒருவேளை உண்மையென்றால் ஏய்டனின் முகத்தை பாரத்திட துடிக்கிறது மனது. அந்த வெள்ளை உண்மையை காணவேண்டும். புகைப்படம் இருந்தில் பகிரவும் ஐயா.

நன்றி

ராகுல் நகுல்

அன்புள்ள ராகுல்

வரலாற்றை நினைவுகூர்வதென்பது பலவகையான கலாச்சாரஅரசியல் தாக்குதல்கள் மற்றும் சுரண்டல்களில் இருந்து தப்புவதற்கான ஆயுதம். அரசியல்வாதிகள் நம்மிடம் அவர்களின் அதிகாரத்திற்கான புனைவையே அளிக்கிறார்கள். அதில் முக்கியமானது இன்றைய காலகட்டம்தான் வரலாற்றில் கொடியது என்பது. நேற்று ஒரு பொற்காலம் இருந்தது என்பது இன்னொன்று. நாம் எவற்றின் வழியாகவெல்லாம் கடந்துவந்தோம் என்பதே நாம் உண்மையில் உணரவேண்டியது. அது எவரெல்லாம் அதற்குப் பங்களிப்பாற்றினர் என நமக்குக் காட்டும். வரலாற்றை உணர்வுபூர்வமாக அறிவதற்கு இலக்கியமே சிறந்த வழி.

ஏய்டன் ஒரு புனைவுக்கதாபாத்திரம். பஞ்சமி நிலவுரிமைமுறையை தொடங்கி வைத்த  த்ரெண்மீர் அக்கதாபாத்திரத்தின் முன்வடிவம் என்று சொல்லலாம்

ஜெ

முந்தைய கட்டுரையோகம், கடிதம்
அடுத்த கட்டுரைசாம்ராஜின் ’ஜார் ஒழிக’