குகை ஓவியங்கள், கடிதம்

தேன்வரந்தை- தென்னக பிம்பேத்கா

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம். இணையத்தில்தேன்வரந்தைதென்னக பிம்பேத்காகட்டுரை வாசித்தேன். சுவாரஸ்யமாக இருந்தது. ‘ஜெயமோகன் எழுதியது வேறு எப்படி இருக்க முடியும்!’ என்று என் தோள் பின்னே நின்று  இக்கடிதத்தின் முதல் இரு வரிகளை படித்து விட்டு என் மனைவி சொன்னதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் கிடையாது.

உலகம் முழுவதும் உள்ள குகை ஓவியங்களில் பல பொதுத்தன்மைகள் உண்டு என்ற தங்களின் கருத்தே என்னை இதை எழுதத் தூண்டியது. கிழக்கு டுடே வில்இயற்கையின் மரணம்என்ற தொடர் எழுதி வருகிறேன் (பருவநிலை மாற்றங்கள் மனித வரலாற்றை செதுக்குவதில் ஒரு முக்கிய பங்கு வகுத்திருக்கிறது என்பதே தொடரின் கரு). அதன் ஒரு பகுதி குகை ஓவியங்கள் பற்றியது, குறிப்பாக ஐரோப்பாவில் கண்டெடுக்கப்பட்ட ஓவியங்கள். இவை  உருவாகுவதற்கு பல காரணங்கள் கற்பிக்கப்பட்டாலும், டேவிட் வில்லியம்ஸ் போன்ற ஆராய்ச்சியாளர்கள் இந்த ஓவியங்களில் காணப்படும் பல குறியீடுகளை தொல் மாந்திரீகத்தோடு (Shamanism) தொடர்புடையவை என்று கருதுகிறார்கள். மனிதனின் அகம் கொண்ட மலர்ச்சியின் ஒரு முக்கிய அங்கமாக இந்த ஓவியங்கள் பார்க்கப்படுகின்றன. ‘குகை ஓவியங்கள் பற்றி நம்மால் செய்யப்படும் எந்த ஊகமும் என்றும் ஊகமாகவே நிலைகொள்ளுமே ஒழிய கொள்கையென நிரூபிக்கவே முடியாதுஎன்று நீங்கள் கூறுவது சரியே என்றாலும் இந்தத் தொடருக்கான ஆராய்ச்சியில்  இது போன்ற சில கருதுகோள்களை கண்டடைந்தது மகிழ்ச்சியை தந்தது.

நேரத்தை தங்கக் காசு போல செலவழிபவர்கள் நீங்கள் என்று தங்கள் வலைப்பூவின் நெடு நாள் வாசகனாகிய நான் அறிவேன். இருந்தாலும், ஒரு நப்பாசை. எப்பொழுதாவது  நேரம் கிடைத்தால் இந்தப் பகுதியை படியுங்கள்https://kizhakkutoday.in/iyarkaiyin-maranam-11/

உங்களின் கருத்தோ, விமர்சனமோ தமிழில் எழுத முயற்சிக்கும் புதியவனான எனக்கு மிகுந்த ஊக்கத்தை அளிக்கும்.

நன்றி

ரகு

முந்தைய கட்டுரைஆலயக்கலை – கடிதம்
அடுத்த கட்டுரைஅழுகையர் தொழுகையர் துவள்கையர் ஒருபால்