ஈரோடு ராஜ் மகால் திருமண மண்டபத்தில் இன்று நிகழும் தமிழ் விக்கி – தூரன் விருதுவிழாவில் வாசகர்களுடன் உரையாடுபவர்கள்
தியடோர் பாஸ்கரன் தமிழ் விக்கி
தமிழில் சூழியல் எழுத்தின் முன்னோடி என மா.கிருஷ்ணனைச் சொல்லலாம். தமிழில் சூழியல் எழுத்தை நிலைநிறுத்திய சாதனையாளர் சு.தியடோர் பாஸ்கரன். அதன்பொருட்டு இயல் விருது பெற்றவர். திரைப்பட ஆய்வு அவருடைய இன்னொரு களம்.மௌனப்படங்கள் பற்றியும் தமிழ் திரைப்படங்களில் விடுதலைப்போராட்டம் மற்றும் திராவிட இயக்க அரசியல் பேசப்பட்டது பற்றியும் விரிவான ஆய்வுநூல்களை எழுதியிருக்கிறார்.
பி.கே.ராஜசேகரன் தமிழ் விக்கி
மலையாளச் சிந்தனையாளர், விமர்சகர் பி.கே.ராஜசேகரன் இதழாளராக இருந்து முழுநேர ஆய்வாளராக ஆனவர். மலையாளத்தின் முதல்நாவலான இந்துலேகா (ஒ.சந்துமேனன்) வில் பெண் விடுதலை சார்ந்த கருத்துக்கள் வெட்டப்பட்டே முதல்பதிப்புக்குப் பின் வந்தவை வெளியிடப்பட்டன என்பதை ஆராய்ந்து கண்டுபிடித்து நிறுவியவர். (தமிழில் கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலில் பறையர்கள் ஆதிதிராவிடர்கள் என்று விவாதிக்கும் பகுதி வெட்டப்பட்டு பின்னர் வந்த பதிப்புகள் வெளியாயின. அதை வேதசகாயகுமார் கண்டடைந்து விவாதமாக்கினார்) கேரளத்துப் பின் நவீனத்துவச் சூழல் பற்றி விரிவாக எழுதியவர்
மு.இளங்கோவன்
தமிழ்விக்கி -தூரன் விருது பெறும் மு.இளங்கோவன் தமிழியக்க ஆர்வலர். தமிழிசை நாட்டாரிசையில் பயிற்சி கொண்டவர். தமிழறிஞர்களின் வாழ்க்கைக்குறிப்புகளை தேடித்தொகுத்தவர். கணினித்தமிழுக்காக பெரும்பணியாற்றியவர். விபுலானந்தர் உள்ளிட்ட இசையறிஞர்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தியவர்