சங்கம், காதல், கடிதம்

அன்புள்ள ஜெ

சங்க இலக்கியம் பற்றிய உரை கேட்டேன். சங்க இலக்கியம் பற்றிய பலவகையான பேச்சுக்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. திரும்பத் திரும்ப சங்க இலக்கியம் அக்கால மக்கள் எவ்வளவு பெருமைமிக்க வாழ்க்கையை வாழ்ந்தார்கள் என்னும் பேச்சு மட்டும்தான். அல்லது விரிவான ஆராய்ச்சிகள் வழியாக சங்க காலச் சமூக வாழ்க்கையையும் அரசியலையும் பற்றிய கருத்துக்களை உருவாக்கிக் கொள்வது. இலக்கிய ஆய்வுகள் என்றால்கூட பெரும்பாலும் காதில் விழுவது திணை போன்ற உருவகங்களைப் பற்றி மேலைநாட்டு ஆய்வாளர்கள் எழுதியதை ஒட்டிய பேச்சுகள். உங்கள் உரை முக்கியமான சில அவதானிப்புகளை முன்வைக்கிறது. குறிப்பாக சப்ளைம். சப்ளைம் என்பது கற்பனாவாதம், அங்கிருந்து பக்தி நோக்கி வளர்ந்தது என்னும் கருத்து யோசிக்கத்தக்கது. மதநூல்களை வாசிப்பதுபோலவே இங்கே தமிழிலக்கியங்களையும் வாசிக்கும் மனநிலை உள்ளது. அதை இனரீதியாக உரிமை கொண்டாடுவது, தங்களுடைய புரிதல் தவிர எல்லாமே தப்பு என்னும் மிகைவெறி எல்லாம் உள்ளது. இச்சூழலில் இந்த பேச்சு மிக முக்கியமான ஒரு தொடக்கமென நினைக்கிறேன். அடுத்த தலைமுறை யோசிக்கவேண்டிய உரை. நன்றி

செல்வக்குமார். எம்.

அன்புள்ள செல்வக்குமார்,

சங்க இலக்கியம் மட்டுமல்ல கம்பன் உள்ளிட்ட பண்டைய இலக்கியங்களனைத்தையுமே நவீன எழுத்தாளர்கள், இன்று அவர்கள் எழுதும் அழகியலை ஒட்டி, வாசிக்கவும் விவாதிக்கவும் வேண்டும் என நினைக்கிறேன். அதற்கு தடையாக உள்ளது பழையபாணி இலக்கணம் சார்ந்த வாசிப்பு, வெவ்வேறு வகையிலான ஆய்வு சார்ந்த வாசிப்பு. தேவையாக இருப்பது ரசனை சார்ந்த வாசிப்பு, அழகியல் வாசிப்பு. பழையபாணி மனங்களுக்கு அதைப் புரிந்துகொள்ள முடியாது. ஆகவே திகைப்பும் சீற்றமும்கூட உருவாகலாம். அவர்கள் நீங்கள் சொல்வதுபோல ஒரு மதநூலுக்குரிய பக்தியுடன் அவற்றை மேலோட்டமாக வாசிப்பவர்கள்.

நவீன இலக்கிய அழகியல் சார்ந்த வாசிப்பென்பது அறுதியிட்டுச் சொல்வது அல்ல. ‘இப்படி பார்க்கலாமே’ என்று சொல்வது மட்டுமே. மரபான பழகிப்போன பாதையில் இருந்து விலகிச்செல்வதற்கான சுதந்திரம் அதன் அடிப்படை. நான் அவ்வுரையில் அப்போது உருவான ஒரு சிந்தனையை என் முன் அமர்ந்திருந்த என் வாசகர்களுடன் பகிர்கிறேன். மிகத்தொன்மையான பழங்குடி வாழ்வில் இருந்து உருவாகி தொடர்ந்து வளர்ந்து வரும் ஒரு மானுடக் கனவு சங்க இலக்கியத்தில் எப்படி ஒரு செவ்வியல்தன்மையை அடைந்து, சப்ளைம் நோக்கி நகர்ந்து, அடுத்தடுத்த காலகட்டங்களில் தூய கருத்துருவங்களாக மலர்கிறது என்பதே என் உரையின் மையம். அதை என்னைப்போலவே சிந்தித்துச் செல்லும் என் வாசகர்களுக்காக முன்வைத்தேன். அதை அவர்கள் மேலும் யோசிக்கலாம். ஏற்போ மறுப்போ அடையலாம். ஆனால் அவ்வகையில்தான் நாம் எல்லா பேரிலக்கியங்களையும் வாசித்து வருகிறோம் இல்லையா?

சங்கப்பாடல்களை வாசிக்கையில் அவற்றிலுள்ள காமம் எப்படி மென்மைப்பட்டபடியே வந்து ஒரு கட்டத்தில் காதல் என்னும் ‘தெய்வீக விழுமியமாக’ மாறி பின்னர் இறையனுபவத்தின் பதிலியாக நின்றிருக்கும் ஒன்றாக உருக்கொள்கிறது என்பதை ஒட்டி நம் அகப்பாடல்களை மிக விரிவான ஓர் வாசிப்புக்கு ஆளாக்க முடியும்.

ஜெ

முந்தைய கட்டுரைபாலை மலர்ந்தது -1
அடுத்த கட்டுரைதொடர்- கடிதம்